நல்ல பொழுதுபோக்குகள் நலம் தரும்!!(மருத்துவம்)

Read Time:10 Minute, 4 Second

உளவியல்

‘‘பொழுதுபோக்கு என்பது வெறுமனே நேரத்தை செலவழிப்பதற்காகவும், இன்பத்தைத் துய்ப்பதற்காகவும் மட்டுமே அல்ல. முறையாக மேற்கொள்ளப்படும் நல்ல பொழுதுபோக்குகள் பல்வேறு நன்மைகளையும் தருகிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவர் பிரிசில்லா.எந்த வகையில் நன்மைகளைத் தருகிறது என்று கேட்டோம்…

‘‘அன்றாட வாழ்வில் பொருளாதார ஈட்டுதலுக்கான வேலையை செய்யும் ஒருவர் அதிலிருந்து சற்று விலகி தனக்காகவும் தன்னுடைய மகிழ்ச்சிக்காக தனியாகவோ, நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பொழுதை கழிக்க விரும்புவது இயல்பானதுதான்.
அதுபோல பொழுதுபோக்கு என்பது ஒருவருடைய மகிழ்ச்சியைச் சார்ந்த விஷயமாகும். தன்னைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும் பொழுதுபோக்குதான்.

மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியமான பொழுதுபோக்காக அமைகிறது. இவற்றில் எது உங்களை ஆரோக்கியமாக்குகிறதோ அதுதான் நல்ல பொழுதுபோக்காக இருக்க முடியும். வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாற்று நடவடிக்கையான பொழுதுபோக்கு அம்சங்கள், நம்முடைய தேய்ந்த கவனத்தை புதுப்பிக்கவும், பழைய நிலைக்கு வரவும் தூண்டுகின்றன.

அவைகள் நம்மை உணர்வுரீதியாக வைத்திருக்க உதவி செய்கின்றன. வெளியிடங்களில் மேற்கொள்ளப்படும் பொழுதுபோக்குகள் மற்றும் சமூக தொடர்புகளில் நம்முடைய ஈடுபாடுகள், நமக்குத் தேவைப்படும் ஓய்வுகளையும், இறுக்கம் அடைந்துள்ள நமது உடல் தசைகளை தளர்த்திடவும் செய்கின்றன.

சில பொழுதுபோக்கு செயல்பாடுகள் தனிமையைப் போக்கிடவும், விரக்தியை தடுத்திடவும் உதவி செய்கின்றன. இயற்கையுடன் இணைந்த பொழுதுபோக்குகள், மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் மீண்டும் மீண்டும் அப்படிப்பட்டவைகளை மனம் விரும்புகிறது. மொத்தத்தில், பொழுதுபோக்கு மனித சமுதாயத்துக்கு விருப்பத்துடன் பருகிடும் ஊட்டம் மிகுந்த பானமாகவும், உயிர்ப்பித்திடும் திறனாகவும் அமைந்துள்ளது.

பல நேரங்களில், நாம் நமக்கான காலக்கெடுவுக்குள் முக்கியமான வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட தருணங்களில் கூட, நம் நண்பர்கள் அல்லது உறவினர்களை தொடர்பு கொள்வது மூலம் நம்மை மகிழ்வித்துக் கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக் கொள்வோம். இந்த செயல்கள், சிறிதளவு நமது மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பது தெரிந்தும்கூட நாம்செய்வதன் நோக்கம் இந்த சிறிய மாற்றங்கள் நமது ஆழ் மன தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கிறது என்பதால்தானே…

இதனால் மன ஆற்றலை நாம் பெறுவதோடு, நேர்மறைத் தன்மையும் நம்மிடம் அதிகரிக்கிறது. இதைத்தான் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் விரும்புகிறது. ஒரு மனிதர் தன்னுடைய பொழுதுபோக்கினைத் தேடுவதற்கான அடிப்படை விஷயமாக இது விளங்குகிறது.

அதுபோல ஒழுங்குடன் அமையப் பெற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவோமேயானால் சிறந்த மன ஆரோக்கியம் உத்தரவாதமாகக் கிடைக்கும். இது இன்றைய நவீன வாழ்க்கையின் அழுத்தங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.
மனதுக்கு இதம் தரும் பொழுதுபோக்கு மற்றும் உடல் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கு கொள்வது கவலைகள், மன அழுத்தம் ஆகியவைகளை குறைப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்ஸைமர் நோய்க்கான அறிகுறிகளை குறைப்பதாகவும் பொழுதுபோக்குகள் இருக்கிறது என்பது ஆச்சரியமான அறிவியல் உண்மை.

ஒரு மனிதனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய எந்த காரியமும் அது அவனுடைய பொழுதுபோக்காக இருக்கிறது. உதாரணத்துக்கு எழுதுவது, படிப்பது, பாட்டு கேட்பது, பாட்டு பாடுவது, பயணிப்பது, நண்பர்களைச் சந்திப்பது இப்படி இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சில நேரங்களில் சிலருடைய பொழுதுபோக்கு விசித்திரமாகவும்,வேடிக்கையானதாகவும்,அபாயகரமானதாகவும் கூட அமைவது உண்டு.

இது அவரவர் சூழலை பொறுத்து அமைகிறது. பெரும்பாலும் பொழுதுபோக்கு தனிநபர் சார்ந்து மட்டும் இல்லாமல் இன்னொருவரை சார்ந்தே அமைகிறது. ஒருவருடைய பொழுதுபோக்கு இன்னொரு உயிரோடு அல்லது இன்னொரு பொருளோடு சார்ந்ததாக இருக்கிறது. சக மனிதரோடு சார்ந்ததாகவும் இருக்கிறது. அதனால் பொழுதுபோக்கு என்பது சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த விஷயமாகவும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்னைக்கு காரணமாக இருப்பதற்கும் பொழுதுபோக்குக்கும் தொடர்பு உண்டு என்றால் நம்ப முடிகிறதா?
ஆமாம்… ஒருவருடைய பொழுதுபோக்கினை இன்னொருவர் புரிந்துகொள்வதில்லை. தன்னுடைய துணையின் மகிழ்ச்சி என புரிந்துகொள்ளாததால் இறுதியில் திருமண வாழ்க்கை முறிவில் வந்து நிற்கிறது.

பொழுதுபோக்கை பொறுத்தளவு மகிழ்ச்சியாக இருப்பதுதான் பிரதானமாக விஷயமாக இருக்கிறது. இதனால் பணம் இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைப்பது வேடிக்கையான விஷயமாகும். அதனால் உங்கள் பொழுதை சந்தோஷமாக கழிப்பதற்கு எதையும் தடையாக வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய வாழ்க்கை சூழல் எப்படி அமைந்தாலும் அந்த வாழ்க்கை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் வேலையை ஒரு பொழுதுபோக்காக செய்யப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் அன்றாட வாழ்வில் வழக்கமான செயல்பாட்டில் ஒரு செயலை வித்தியாசமாக செய்யப் பழகி கொள்ளுங்கள். முக்கியமாக பொழுதுபோக்கென நீங்கள் மேற்கொள்ளும் எந்த விஷயமாக இருந்தாலும் போதை பொருட்களோடு பொழுதை கழிக்க விரும்பாதீர்கள். பொழுதுபோக்கு என்பது உங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியப்படுத்த வேண்டும். அதுதான் சிறந்த பொழுதுபோக்காக இருக்க முடியும்.

நீங்கள் யாருடன் பழகினால் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ யார் உங்கள் வாழ்க்கை மீது அக்கறை கொண்டுள்ளார்களோ அவர்களோடு உங்கள் பொழுதை கழிக்க வேண்டும். உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜியை தருபவரோடு பழகுவது சிறந்தது.முக்கியமாக பொழுதுபோக்கென நீங்கள் மேற்கொள்ளும் ஒரு செயல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற பொழுதுபோக்காக இருக்க வேண்டும். உங்களுடைய சுய மதிப்பீட்டை வளர்த்துக்கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும்.

உங்கள் உடலுக்கும் , உயிருக்கும் ஆபத்து நிறைந்த பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டும். பொழுதுபோக்குவதற்கென ஒரு நாளுக்காக காத்திருக்காமல் அன்றாட வாழ்வில் நீங்கள் அதை திட்டமிடலாம். செல்போன், டிவி, இணையம் போன்றவற்றில் பொழுதை கழிப்பதற்கு விரும்பாதீர்கள். அதுபோல உங்களுடைய பொழுதுபோக்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டது என்பதையும் மறந்துவிடக் கூடாது’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 11,950 கோடி நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா!!(உலக செய்தி)
Next post மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..?(அவ்வப்போது கிளாமர்)