ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!!(மருத்துவம்)
‘உடலின் வெப்பம் காரணமாக வெளியேறும் நீர்ச்சத்து’ என்றுதான் வியர்வையைப் பற்றி புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி வியர்வைக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. ஒருவரின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்ற அறிகுறியாகவும் அதனை உணர்ந்துகொள்ளலாம். வியர்வை பற்றி நாம் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டிய பல முக்கிய விஷயங்கள் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
மனிதர்களின் உடலில் கிட்டத்தட்ட 4 மில்லியன் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வை சுரப்பிகளை Eccrine glands, Apocrine glands மற்றும் Apoeccrine glands என பிரிக்கலாம். உண்மையில், வியர்வை சுரப்பிகளிலிருந்து வரும் வியர்வையானது எந்தவித வாசமும் இல்லாத, தூய்மையான நீரைப் போன்றுதான் இருக்கும். உடலின் பாக்டீரியாக்களே அதன் வாசனையைத் தீர்மானிக்கின்றன.
வியர்வை உருவாகி பின்பு வெளியேறுவதற்கு முன், அதிலிருந்து சோடியம் உறிஞ்சப்பட்டு அதன்பின்னரே அது வெளியேற்றப்படும். இவ்விதம் சோடியம் உறிஞ்சப்படுவதால், நமக்குத் தேவையான சோடியம் விரயமாவது தடுக்கப்படுகிறது. Apocrine glands என்பது அக்குள் மற்றும் அந்தரங்க இடங்களில் இருப்பவை.
அதிலிருந்து வரக்கூடிய திரவமானது கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். அதன்மீது பாக்டீரியாக்கள் வேலை செய்து அந்த திரவத்தை துர்நாற்றம் உடையதாக மாற்றிவிடுகின்றன. Apoeccrine glands அக்குள் மற்றும் ஆசனவாய் பகுதிகளில் நிறைய இருக்கும். அவை சாதாரண வியர்வை சுரப்பியான Ecrine glands-களைவிட ஏழு மடங்கு அதிக வியர்வையை சுரப்பவை.
வியர்வை சுரப்பு ஏன் அவசியம்?
வியர்வை என்பது உடலின் தேவையற்ற ஒரு செயல் அல்ல. அதற்கு நிறைய காரண, காரியங்கள் இருக்கின்றன. இதனை கொஞ்சம் நுட்பமாகப் பார்ப்போம். நம் மூளையில் உள்ள ஹைப்போதாலாமஸ்(Hypothalamus) பகுதியில் நம் உடலின் வெப்பநிலையை ஒழுங்கு முறைப்படுத்தக்கூடிய Thermoregulatorry Center என்ற பகுதி ஒன்று உள்ளது. நம்முடைய உடலின் வெப்பநிலை அதிகமாகும்போது வியர்வை சுரப்பு, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தியும் மற்றும் அதை கட்டுக்குள் வைக்கும் முக்கியமான வேலையையும் Thermoregulatorry Center செய்கிறது.
ஆகையால், நாம் ஓடியாடி விளையாடும்போது நம் உடலின் உள்ளே உள்ள Core Temperature அதிகமாகும்போதும், காய்ச்சல் உண்டாகும்போதும், ஹார்மோன் சுரப்பிற்கு ஏற்ற மாதிரியும் மற்றும் நம்முடைய மன உணர்வுகளுக்கு தகுந்தவாறும் வியர்வை சுரந்து நம் உடலின் தட்ப வெப்ப அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
ஆனால், சிலருக்கு வியர்வை சுரப்பானது அதிகமாக உண்டாகி அவர்கள் வேலை செய்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதை ஆங்கிலத்தில் Hyperhidrosis என்று அழைப்பார்கள். உணர்வுகளின் தூண்டுதலால் உண்டாகும் வியர்வை பொதுவாக உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் உண்டாகும். இதனை ‘Palmoplantar Hyperhidrosis’ என்று சொல்வார்கள்.
ஒரு சிலருக்கு அக்குளிலும் இதைப்போன்று ஏற்படலாம். அதை ‘Axillary Hyperhidrosis’ என்று அழைப்பார்கள். இதுபோன்ற அதிக வியர்வை சுரப்பை அதன் தீவிரத்தை பொறுத்து நான்கு விதமாக வகைப்படுத்தலாம். இதை ‘Hyperhidrosis Disease Severity Scale’ என்பர்.
Grade 1: வியர்வை எப்பொழுதுமே கவனிக்கத்தக்கதாக இருக்காது மற்றும் என்னுடைய தினசரி வேலையில் எப்போதும் தொந்தரவு செய்யாது.
Grade 2: வியர்வையானதுபொறுத்துக்கொள்ளக்கூடிய அளவு இருக்கும். ஆனால் சில நேரங்களில் என்னுடைய தினசரி வேலையைத் தொந்தரவு செய்யும்.
Grade 3: வியர்வை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் மற்றும் அடிக்கடி என் தினசரி வேலையை தொந்தரவு செய்யும்.
Grade 4: வியர்வை எப்போதுமே பொறுத்துக்கொள்ள முடியாத அளவு இருக்கும் மற்றும் என் தினசரி வேலையை செய்ய முடியாத அளவு எப்போதுமே தொந்தரவு செய்யும்.
இதைப்படித்துவிட்டு வியர்வை சுரப்பு அதிகமாக இல்லாதவர்கள் இதுவெல்லாம் ஒரு விஷயமா என்று நினைக்கக்கூடும். ஆனால், அதிக வியர்வை சுரப்பிற்கு உள்ளானவர்கள் படும் வேதனை மற்ற நோயால் வேதனைப்படுபவர்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. பள்ளி செல்லும் குழந்தைகள் பரீட்சை எழுத மிகவும் சிரமப்படுவார்கள்.
வேலை தேடுபவர்கள் ஒவ்வொரு நேர்காணலுக்கு முன்பும் இந்த அதீத வியர்வையால் மேலும் பதட்டமடைவார்கள். பதட்டம் அடையும்போது அதிக வியர்வை சுரப்பு என்பது எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுவது என்பதை அறிந்திருப்பீர்கள்.
ஆகையால் ஒருவருக்கு வியர்வை சுரப்பு அதீதமாக இருக்கிறது என்பதற்கு பின்வரும் கோட்பாடுகளில் அது பொருந்த வேண்டும். அதிக வியர்வை ஒருவருக்கு குறைந்தது ஆறு மாதங்களாவது இருந்து எந்த ஒரு காரணத்தாலும் அது வராமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பின்வரும் காரணங்களில் ஏதேனும் இரண்டு விஷயமாவது இருக்க வேண்டும்.
* அவர்களுடைய தினசரி வேலையைச் செய்ய முடியாத அளவு அது அவர்களை சிரமப்படுத்த வேண்டும்.
* உடலின் இருதரப்பிலும் சமச்சீராக அதிக வியர்வை வாரம் ஒரு முறையாவது ஏற்பட வேண்டும். இத்தொந்தரவு ஆரம்பித்த வயது 25-க்குள் இருக்க வேண்டும்.
*தூக்கத்தில் வியர்வை ஏற்படும் இடங்களில் வியர்வை வராமல் இருக்க வேண்டும்.
*வீட்டில் யாராவது ஒருவர் இதுபோல் அதிக வியர்வையால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது மரபியல் காரணங்களாக இருக்கக் கூடும். இதையெல்லாம் ‘Primary Hyperhidrosis’ என்று சொல்வார்கள்.இதற்கு அடுத்த நிலையாக Secondary Hyperhidrosis இருக்கிறது. பின்வரும் ஏதாவது ஒரு காரணத்தால் அதிக வியர்வை ஏற்படுவதே Secondary Hyperhidrosis.
* மருந்துகளால் உண்டாகும் வியர்வை. Eg: Setraline
* ரசாயன நச்சுத்தன்மை காரணமாக இருப்பது (Toxins) Eg: Acrylamide
* உடலின் பல உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் ஏற்படும் அதிவியர்வை. உதாரணம் : நாளமில்லா சுரப்பிகளிலுள்ள பிரச்னைகள், புற்றுநோய், தண்டுவடக் கோளாறு போன்றவை.
* பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகள்.
* உடலின் ஏதாவது ஒரு பிரச்னையை ஈடு செய்வதற்காக ஏற்படும் வியர்வை. ஏதாவது காயத்தினாலோ அல்லது அறுவை சிகிச்சையில் நரம்புகள் பாதிக்கப்படும்போதோ அதனை ஈடு செய்ய ஆரோக்கியமாக உள்ள நரம்புகளின் பக்கம் அதிகமாக வியர்ப்பது.
இந்த பிரச்னைகளை சரி செய்யும் வழி என்ன ?
முதல்கட்டமாக மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் சரி செய்யலாம். வியர்வையைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் உபயோகப்படுத்தும்போது வாய் உலர்ந்துபோதல், பார்வைக் கோளாறு போன்றவைகள் வரலாம். அதிகமாக பதட்டமடைந்து, அதனால் அதிக வியர்வை ஏற்படுபவர்களுக்கு மனதை சாந்தப்படுத்தும் மாத்திரைகள் கொடுக்கலாம். அதிகமாக வியர்க்கும் இடங்களில் தடவிக்கொள்வதற்கு சில மருந்துகள் உள்ளன.
இந்த மருந்துகளை தடவும்போது தோலில் உள்ள புரதத்தை Denaturing செய்து அல்லது உடைத்து வியர்வை துவாரங்கள் தற்காலிகமாக அடைக்கப்படும். இந்த மருந்துகள் உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்தும். சிலருக்கு இந்த மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால், மருத்துவரின் பரிந்துரை அவசியம்.
அக்குளில் உண்டாகும் அதிக வியர்வைக்கு அதை கட்டுப்படுத்தும் Antiperspirants -களை உபயோகிக்கலாம். 20% அலுமினியம் க்ளோரைடு Hexahydrate மருந்தை இரவில் அக்குள் காய்ந்து இருக்கும்போது தடவி வர வேண்டும். இம்மருந்தில் உள்ள அலுமினியம், உப்பு, புரதத்தோடு சேர்ந்து வியர்வை துவாரத்தை அடைக்கும். சிலருக்கு இம்மருந்துக்கும் ஒவ்வாமை வரலாம். அலுமினியம் க்ளோரைடுடன் Triethonalamine சேர்த்தால் எரிச்சல் சற்று குறையும்.
தற்போது புதுவிதமான Aluminium Sesquichlrohydrate நுரை வடிவில் கிடைக்கிறது. இது நன்றாக வியர்வையை கட்டுப்படுத்துவதாகவும், இதில் ஒவ்வொமையும் மிக குறைவு என பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. Iontophoresis என்பது கிரேக்க மொழியில் அயனிகளை (Ions) உட்புகுத்துவது என்று பொருள். அதாவது மிதமான மின்சாரம் மூலம் கரைக்கப்படக்கூடிய உப்பை திசுக்களுக்கள் உட்புகுத்துவது குழாய் தண்ணீரோ, அட்ரோப்பின் பெல்ஃபேட் மற்றும் க்ளைக்கோபைரோலேட் போன்றவற்றை உபயோகித்து இதை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் கால்களை 4 ப்ளாஸ்டிக் ட்ரேயில் தண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். 4 ட்ரேக்களிலும் எலக்ட்ரோட் ப்ளேட்கள் (Electrode Plates) வைக்கப்பட்டிருக்கும். மிதமான மின்சாரத்தை அவர்களால் பொறுத்துக்கொள்ளக்கூடிய அளவு வைத்து (20-30 நிமிடங்கள் வரை) செலுத்துவது சிறந்தது. சில நாட்கள் இதைச் செய்வதால், பல வாரங்கள் வரையில் அவர்களின் வியர்வை கட்டுக்குள் இருக்கும்.
இந்த சிகிச்சையில் வியர்வை துவாரத்தை அடைப்பது அல்லது வியர்வை சுரப்பதை தடை செய்வதன் மூலம் நல்ல பலன் தருவதாக கருதப்படுகிறது. ஆனால் கர்ப்பிணிகளுக்கும், பேஸ்மேக்கர் அல்லது மெட்டல் இம்ளான்ட் வைத்திருப்பவர்களுக்கும் இந்த சிகிச்சையை செய்ய முடியாது.
Botulinum Toxin
ஆம், முக சுருக்கங்களை நீக்க உபயோகப்படுத்தப்படும் அதே பொட்லினம் டாக்ஸின் இதற்கும் பயன்படுத்தப்படுத்துகிறது. ஊசியின் மூலம் கை கால்களில் தேவையான இடங்களில் செலுத்திய பின் வியர்வை சுரப்பு ஆறு மாதங்கள் வரை நன்கு கட்டுப்படும். அக்குளில் அதைவிட அதிக நாட்கள் வியர்வை கட்டுக்குள் இருக்கும். இவை எதற்குமே கட்டுப்படாத அதிவியர்வை பிரச்னைக்கு லேசர் சிகிச்சையும், அறுவை சிகிச்சையும்கூட உள்ளன.
Average Rating