புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றம்!!(மருத்துவம்)
2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத் துறைக்கான விருதை அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி. ஆலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசகு ஹான்ஜோ என்ற விஞ்ஞானி ஆகிய இருவரும் பெறுகின்றனர். புற்றுநோய் சிகிச்சையில் புதிய உத்தியை கண்டுபிடித்ததற்காக இந்த விருது இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
ஆலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். டசகு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி. இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். அதே சமயம் வேறு வேறு உத்திகளின் மூலமாக ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட புரதம்தான் நமது உடலின் நோய் எதிர்ப்பு இயக்கத்தை கட்டுப்படுத்துவதாகவும், இந்தக் கட்டுப்பாட்டை விலக்குவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்பதையும் ஆலிசன் கண்டறிந்தார்.
மேலும் நோய் எதிர்ப்பு செல்களை தூண்டிவிட்டு அதன் மூலம் இந்த தடுப்பை விடுவிக்கும் இன்னொரு வழிமுறையையும் கண்டுபிடித்துள்ளார். இது புற்றுநோய் சிகிச்சை முறையில் நல்ல பலனைக் கொடுப்பதையும் அவர் தனது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். இதை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையையும் ஆலிசன் வகுத்திருக்கிறார். மறுபக்கம் டசகு மேற்கொண்ட ஆய்வும் இதேபோலத்தான். நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஒரு புரதத்தை இவர் ஆய்வு செய்திருக்கிறார்.
இந்த புரதம்தான் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடாத வகையில் தடுப்பாக இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அதை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு செல்களை தூண்டுவிக்கும் முறையை டசகு கண்டறிந்தார். இதுவும் எதிர்பார்த்த அளவு நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இரு விஞ்ஞானிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆய்வையே மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக இருவரும் மருத்துவத்திற்கான நோபல் பரிசை இந்த ஆண்டு பகிர்ந்து கொள்கின்றனர்.
இதுவரை தடுப்பூசிகள் மூலம் உடலின் வெளியிலிருந்து தடுப்பு மருந்தை ஊசி மூலம் அனுப்பி புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று இருந்த நிலையிலிருந்து ஒரு படி மேலே சென்று, இயல்பாக நம் உடலில் இருக்கும் தடுப்பு மண்டலத்திலிருந்து குறிப்பிட்ட புரத மூலக்கூறு ஒன்றை வெளியேறச் செய்தால், அது புற்றுநோய் செல்களைச் சென்றடைந்து, அவற்றை அழித்துவிடுகிறது என்பதுதான் இவர்களின் புதிய கண்டுபிடிப்பு.
அமெரிக்க புற்றுநோய்த் தடுப்புமண்டலத் துறை அறிவியலாளர் ஆலிசன் ஒரு புரத மூலக்கூறு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்ற அடிப்படை அறிவியல் கருத்தை முதலில் கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள தியரிக்கு ‘தணிக்கைப் புள்ளி’ தியரி (Checkpoint Theory) என்று பெயர். ஜப்பான் புற்றுநோய் தடுப்புமண்டலத்துறை அறிவியலாளர் டசகு அந்த புரத மூலக்கூறை நம் தடுப்பு மண்டலத்திலேயே கண்டுபிடித்து,
அதை எவ்வாறு நம் தடுப்பு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவது என்பதையும், அது எவ்வாறு புற்று செல்கள் வளர்வதைத் தடுக்கிறது என்பதையும், மொத்தத்தில் ஒரு வகை புற்றுநோய்க் கட்டிக்கு எவ்வாறு தடுப்பணை கட்ட முடியும் என்பதையும் விளக்கம் செய்து காண்பித்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்தக் கண்டுபிடிப்புகளின் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
இதுவரை புற்றுநோய் செல்களை அழிக்க செயற்கைப் புரதங்களை அனுப்பும் வழிதான் இருந்தது. அதற்குப் பதிலாக, உடலில் இருக்கும் இயற்கையான புரதங்களைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது. அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் தனித்தனி புற்றுநோய்க்குத் தனித்தனி புரத மூலக்கூறுகளைக் கண்டுபிடிக்கவும் இப்போது வழி பிறந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பலியாகி வருகின்றனர். மனித குலத்தின் மிகப் பெரிய சவாலாக இந்நோய் உருவெடுத்துள்ளது.
நமது நோய் எதிர்ப்பு செல்களைத் தூண்டுவிப்பதன் மூலம் புற்றுநோய்க் கட்டிகளைத் தகர்த்து குணப்படுத்த முடியும் என்ற கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சை மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத புதிய முறையையும் இந்த இரு விஞ்ஞானிகளும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating