செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்!!(மருத்துவம்)
உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி, மலச்சிக்கல் நீங்கி வாழ்ந்தாலே மனிதன் ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பலருக்கும் இந்த செரிமானமும், மலச்சிக்கலும்தான் பெரிய பிரச்னையே! இந்த இரண்டு பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க சில யோகாசனங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம்…
*வஜ்ராசனம்
தரையில் கால்களை மடக்கி உட்கார வேண்டும். பாதங்கள் இரண்டும் இடுப்புக்குக் கீழ் மடங்கிய நிலையில் ஒன்றையொன்று தொட்டவாறு இருக்க வேண்டும். முதுகு, தலை நேராக நிமிர்ந்த நிலையில் கண்களை மூடியவாறு அமர வேண்டும். முழுங்கால்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டவாறு இருத்தல் வேண்டும். கைகள் இரண்டையும் முழங்கால்களில் படியுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூக்கு துவாரங்களின் வழியாக சாதாரணமாக மூச்சை இழுத்து விட வேண்டும். இந்த வஜ்ராசனத்தை காலை, மதிய உணவுக்குப்பின் 5 நிமிடங்கள் செய்வதன் மூலம் சாப்பிட்ட உணவு நன்றாக செரிக்கும். ஆரம்ப நிலையில் 5 நிமிடங்களிலிருந்து போகப்போக 30 நிமிடங்கள் வரை அதிகரித்துக் கொண்டு செல்லலாம்.
பலன்கள்: மனதை அமைதிப்படுத்தி, ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வருகிறது. மலச்சிக்கல், அசிடிட்டி பிரச்னைகளை போக்கி செரிமானத்தை தூண்டுகிறது. வாயுத்தொல்லை இருப்பவர்கள் சாப்பிட்டவுடன் இந்த வஜ்ராசனத்தை செய்வதன் மூலம் விடுபடலாம். வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்கிறது. சிறுநீர் பிரச்னைகள் குணமாகின்றன. பாலியல் உறுப்புகளை வலுப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. உடல் பருமன் பிரச்னைக்கும் உதவுகிறது. தொடை தசைகளை வலுவூட்டுகிறது. மூட்டு வலி பிரச்னை உள்ளவர்களுக்கு இயற்கையான வலிநிவாரணமாக செயல்படுகிறது.
*பவனமுக்தாசனம்
மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களை நேராக தூக்க வேண்டும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்தவாறே கால்களை மடக்க வேண்டும். இப்போது இரண்டு முட்டிகளையும் மார்புக்கு நேராக கொண்டு சென்று தொடைப்பகுதி வயிற்றை அழுத்தியவாறு வைத்துக் கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் கோர்த்து கால்களை அணைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முழங்காலால் மூக்கின் நுனியைத் தொட வேண்டும். இதே நிலையில் 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். போகப்போக நேரத்தை ஒரு நிமிடம் வரை அதிகப்படுத்தலாம். இப்போது மூச்சை வெளியே விட்டவாறே பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல் 3 முதல் 5 முறை செய்யலாம்.
பலன்கள்: நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயிற்சி செய்து வரும் பொழுது உணவுக்குழாய், இரைப்பை, குடல் பிரச்னைகள் சீராகும். அமிலத்தன்மை, வாயு பிரச்னைகள், மூட்டுவலி, இதயப் பிரச்னைகள் மற்றும் இடுப்பு வலி ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் பெறலாம். முதுகுத்தசையை வலுப்படுத்துவதால் முதுகுவலியிலிருந்து குணமடையலாம். வயிற்று கொழுப்பு நீங்கி தட்டையான வயிறைப் பெறலாம். இனப்பெருக்க உறுப்பின் வேலையை சீராக்குகிறது. மேலும் மாதவிடாய் குறைபாடுகளையும் சரி செய்கிறது.
*கபால்பதி பிராணாயாமம்
முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
பலன்கள்: மூச்சை இழுத்துவிடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது. செரிமானத்தை தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. அனைத்து குடல் பிரச்னைகளையும்
குணப்படுத்துகிறது. கண்களில் உள்ள அழுத்தத்தை குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறைவதுடன் மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.
*புஜங்காசனம்
விரிப்பில் வயிறு பதியுமாறு குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களும் தொடுமாறு இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டையும் தரையில் ஊன்றியவாறும், முழங்கைகள் நேர் கோட்டிலும் இருக்க வேண்டும். மேல் உடலை நேராக நிமிர்த்தி, தலை, மார்பு, கழுத்து, தோள்பட்டை நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் உடல் எடை முழுவதும் உங்கள் கைகளாலும், தொடைகளாலும் தாங்கிக் கொள்கிறது. இப்போது தலையை பின்பக்கமாக முடிந்த வரை சாய்த்து, மூச்சை ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். இதே நிலையில் சில நிமிடங்களுக்கு மூச்சை நிறுத்த வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறே தோள், கழுத்து, தலையை தரையை நோக்கி கொண்டு வரவேண்டும். இதே போல் 4 அல்லது 5 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றெரிச்சல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை சரி செய்கிறது. கல்லீரல், சிறுநீரகம், கணையம் மற்றும் பித்தப்பை செயல்பாட்டை அதிகரிக்கிறது. முதுகுவலி, ஸ்பான்டிலைடிஸ் மற்றும் மூட்டு பிறழ்வுகளுக்கு நல்ல குணமளிக்கிறது. கைகள் மற்றும் தோள்களுக்கு வலு கிடைக்கிறது.
மார்புப்பகுதி விரிவடையவும், வயிற்று சதையை குறைக்கவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரித்து கருப்பை கோளாறுகளை சரிசெய்கிறது. முதுகு தண்டுவடத்துக்கு நல்ல வலு கிடைப்பதால் முதுகுவலி, இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம். நுரையீரல் பிரச்னைகள், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இது நல்ல தீர்வு.
*உத்தன்பாதாசனம்
அர்த்த பந்தாசனம் போலவே விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3 லிருந்து 5 முறை செய்யலாம்.
பலன்கள்: அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாக்குகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலியை போக்குகிறது. முதுகு வலியை போக்குகிறது. கணையச்சுரப்பியின் வேலையைத் தூண்டுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
செரிமான உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. இரைப்பையில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுகிறது. தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி!
*அர்த்த ஹலாசனம்
‘அர்த்த’ என்றால் பாதி, ‘ஹல’ என்றால் கலப்பை. அதனால் இந்த ஆசனம் அர்த்த ஹலாசனம் என்று வழங்கப்படுகிறது. வயிற்று தொந்தரவுகளை போக்கக்கூடிய இந்த ஆசனம் செய்வதற்கு விரிப்பில் நேராக படுத்துக் கொண்டு மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை மேலே தூக்க வேண்டும். மல்லாந்து படுத்த நிலையில் கால்கள் இரண்டையும் 90 டிகிரி நேர்கோட்டில் மேலே தூக்க வேண்டும். அதே நிலையில் மூச்சை நிலைநிறுத்தியவாறு 5 நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு கால்களை தரையில் நீட்ட வேண்டும். இதை 3 அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: சிக்ஸ் பேக் உடல் வடிவத்துக்கு செய்ய வேண்டிய சிறந்த ஆசனம். உடலில் செரிமானத்தை சரி செய்து, பசியைத் தூண்டுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் குறைபாடுகளை சரிசெய்கிறது. அடிவயிற்று உறுப்புகளின் வேலையை சீராக்குகிறது. வயிற்று வலிக்கு சிறந்த ஆசனம். செரிமானத்தை தூண்டி, வாயுத்தொல்லையை நீக்குகிறது. குடலிறக்கத்தால் கஷ்டப்படுபவர்களுக்கும் இது நல்ல ஆசனம். தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவடையச் செய்கிறது. கீல்வாதம் மற்றும் இடுப்பு எலும்பு பிறழ்வுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கிறது.
Average Rating