ஆதர்ச நாயகன் அர்னால்ட்!!(மருத்துவம்)
கட்டுமஸ்தான உடலை விரும்புகிறவர்களின் கதாநாயகனாக இன்றும் இருப்பவர் அவர்தான். உடற்பயிற்சி செய்ய விரும்புகிறவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்காக, உடற்பயிற்சி நிலையங்களில் இடம்பெற்றிருக்கும் புகைப்படமும் அவராகத்தான் இருக்கும். சினிமாவில் டெர்மினேட்டராக கலக்கியவர், அரசியலில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் அவதாரம் எடுத்து அதிரடி காட்டினார். ஆனாலும், அந்த உடல்கட்டமைப்பை விட்டுக் கொடுக்காமல் இன்றும் பராமரித்து வரும் அர்னால்ட் ஸ்வாஸ்நேகரின் ரகசியம்தான் என்ன?!
மிகவும் உறுதியான மரம் என்று சொல்லப்படும் ஓக் மரத்தை அர்னால்டின் உடலுடன் செல்லமாக ஒப்பிடுவதுண்டு. இத்தகைய உடலைத் தயார் செய்வதற்காக அர்னால்ட் கொடுக்கும் உழைப்பு அபாரமானது. இன்றைய தலைமுறையினர் ஒரு குழந்தையைப் பெற்ற பின்னரோ அல்லது 40 வயதைக் கடந்த நிலையில், முதுமை தோற்றத்தினை அடைந்து, உடல் செயல்பாடுகள் குறைந்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும், பலவிதமான நோய்களால், அவதிப்படுகின்றனர்.
ஆனால், இளம் வயதில் செய்யத் தொடங்கிய உடற்பயிற்சிகளை 71 வயதைக் கடந்த பிறகும் அதே உத்வேகத்துடன் அன்றாடம் செய்து வருகிறார் அர்னால்டு. 1947-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி ஆஸ்திரியாவில் பிறந்தவர் அர்னால்ட். 1.88 மீட்டர் உயரமும், 235 LBS(Libra Was Balance Or Scales) உடல் எடையும் கொண்ட அர்னால்ட், தன்னுடைய 15-வது வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.
மிகவும் இளம்வயதிலேயே (20 வயது) மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று, உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். 1970 முதல் 1975 வரையிலும் மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை வென்று அசத்திய இந்த பாடி பில்டரின் மார்பு அளவு 57 இன்ச், ஹார்ம்ஸ் 22 இன்ச் என பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு உடல் பகுதிகளுக்கான பயிற்சியாக திட்டமிட்டு செய்வது அவரது ஃபிட்னஸ் ஸ்டைல்.
வாரத்தின் 6 நாட்களை மார்பு, பின்பக்கம், தோள் பகுதி, ஹார்ம்ஸ், கால்கள், பின்பக்கத்தின் கீழ்பகுதி போன்ற உறுப்புக்களைப் பலப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளைச் செய்வதற்காக ஒதுக்கியுள்ளார். இவற்றில் முதல் மற்றும் நான்காம் நாள் ஆகியவை மார்பு மற்றும் பின்பக்கத்திற்காகவும், இரண்டு மற்றும் ஐந்தாம் நாள் தோள் பகுதி, ஹார்ம்ஸ் ஆகியவற்றிற்கும், மூன்று மற்றும் ஆறாம் நாளை கால்கள் மற்றும் பின்பக்கத்தின் கீழ்பகுதியை திடகாத்திரமாக வைப்பதற்கான பயிற்சிகளைச் செய்வதற்காக ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த 6 நாட்களில், தாம் செய்கிற ஒவ்வொரு உடற்பயிற்சியையும் 5 செட்டுகளாகப் பிரித்துக் கொள்கிறார். உதாரணத்துக்கு, ஹார்ம்ஸ் அளவைப் பெருக்குவதற்கான தம்புல்ஸ்ஃப்ளைஸ் மற்றும் தம்புல்ஸ் புல் ஓவர் என்ற உடற்பயிற்சியை 60 நிமிடங்கள் முதல் 75 நிமிடங்கள் வரை மேற்கொள்கிறார்.
ஒவ்வொரு செட்டுக்கும் நடுவில், 45 விநாடிகள் ஓய்வு எடுக்கிறார். வாரத்தின் கடைசி நாள் அன்று எந்த உடற்பயிற்சிகளையும் செய்யாமல் முழு ஓய்வு எடுக்கிறார். ‘வாரத்தின் ஒரு நாள் ஓய்வெடுத்தால்தான் மீண்டும் இடைவிடாமல் உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும்’ என்று இதற்கான காரணம் பற்றியும் பதில் சொல்லியிருக்கிறார். அர்னால்டுக்கு ஒருநாளில் 5 அல்லது 6 முறை உணவு சாப்பிடும் பழக்கம் உண்டு.
இதில் காலையில் 4 முட்டைகள், 2 துண்டு Bacon என்கிற பன்றி இறைச்சி, சர்க்கரை இல்லாத தானியத்தால் தயாரிக்கப்பட்ட Ezekial பிரெட் 2 காலையில் எடுத்துக் கொள்கிறார். இரண்டாம் கட்டமாக 10 அவுன்ஸ் அளவுக்கு க்ரில்டு மீன் இறைச்சி, ஒரு கப் காய்கறிகள் சேர்த்துக் கொள்கிறார். பாலுடன் புரோட்டீன் ஷேக்கும் மூன்றாம் உணவுத்திட்டமாக அருந்துகிறார்.
நான்காம் கட்டமாக காய்கறி சாலட்டும், ஐந்தாம் கட்டமாக பிரௌன் ரைஸ் 2 கப் சாதம், கொழுப்பு நிறைந்த சீஸ் 2, பாதாம் மற்றும் முந்திரி போன்றவற்றை 3 அவுன்ஸ் அளவிலும் சாப்பிடுகிறார். இந்த வகையில் ஒரு நாளில் 4000 கலோரி, 250 கிராம் புரதம் இருக்குமாறு பார்த்து கொள்கிறார். சராசரியாக ஒருவருக்கு 1400 முதல் 2400 கலோரிகள் வரையிலான அளவே போதுமானது.
எதுவுமே எளிதாக வருவதில்லை என்பார்கள். அர்னால்டின் உடற்கட்டமைப்பும் எளிதாகவோ, தானாகவோ வரவில்லை என்பதையும் இதில் புரிந்துகொள்ளலாம். அதேநேரத்தில் அர்னால்டைப் போல உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் தெளிவான திட்டமும், உழைப்பும் இருந்தால் நாமும் அர்னால்டைப் போல கட்டான உடலைப் பெற முடியும்!
Average Rating