மேற்குலகின் மையம் !!(மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 0 Second

சிகாகோ குழந்தைகள் மியூசியத்திற்கு ஒரு ‘டே டூர்’ மாதிரி கிளம்பினோம். வழி நெடுகிலும் ‘சிகாகோ’ கட்டட அமைப்புகளைப் பற்றி எங்கள் மகன் விவரித்துக்கொண்டே வந்தான். கட்டடங்கள் வெகு பிரம்மாண்டமாய் இருந்தன. ஒவ்வொரு கட்டடமும், நிபுணர்களின் கலைத்திறனை வெளிக் காட்டின. இருமருங்கிலும் அகண்ட தோட்டங்களும், பிரம்மாண்ட கட்டடங்களும் வரிசையாக ‘என்னைப் பார்’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பது போல் உணர்ந்தேன்.

இந்த ‘குழந்தைகள் மியூசியம்’ சிகாகோவின் ‘நேவி பியர்’ (Navy pier) என்ற இடத்தில் இருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். எங்களுக்கும் அந்த நேரம் சரியாக அமைந்தது. அதற்கான ‘சிட்டிபாஸ்’ தனியே உண்டு. நிறைய ‘பாஸ்’ வகைகள் உண்டு. நமக்கு வேண்டிய இடங்கள் அதாவது பார்க்க விரும்பும் இடங்களை நாமே கூட தேர்ந்தெடுக்கலாம். 24 மணி நேர அனுமதி பாஸ் ஃபீல்ட் மியூசியம், கலைநிகழ்ச்சிகளுக்கான ‘தீம் டூர்’, ‘பைக்’ ஓட்டுவதற்கான டூர், கண்காட்சிகள், இசை போன்ற நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கான டூர் மற்றும் தண்ணீர் விளையாட்டுக்களுக்கான டூர் என்று இப்படி பலப்பல இதில் அடங்கும்.

இப்படி ஒரு பிரம்மாண்ட குழந்தைகள் மியூசியத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. அப்படியொரு சூழல். இது வெறும் பொழுதுபோக்கு மியூசியம் மட்டும் கிடையாது. பொழுதுபோக்குடன் கலந்த கல்விக் கலைக்கூடம் என்று சொல்லலாம். விளையாட்டின் மூலம் எப்படி கல்வி கற்க முடியும் எனக் கேட்டால், இத்தகைய இடமே அதற்கு சாட்சி என்று சொல்லலாம். இங்கே குழந்தைகள் கல்வி கற்பதுடன் மட்டுமல்லாமல், கற்பனை சக்தியையும், யோசிக்கும் திறனையும் அதிக அளவில் பெறுகிறார்கள்.

விளையாட்டிற்கும் கல்விக்கும் உண்டான தொடர்பை இதன் மூலம் அறிய முடிகிறது. புத்தகப் படிப்பைத் தராமல், விளையாட்டின் மூலம் செயல்திறனை வெளிக்கொணரவும் வழி வகுக்கிறது. பெற்றோர்களும் குழந்தைகளோடு சேர்ந்து அனுபவித்து, அதன் மூலம் செயல்திறனை வளர்த்துக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவுகிறது. மிகப்பெரிய மூன்று மாடி உயரங்களைக் கொண்டதாக இருந்தது அந்த கட்டிடம். என்னென்ன விதமான காட்சியகங்கள்? சொல்ல முடியாத அளவுக்கு அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

அறிவியல், கணிதம், கலை, ஆரோக்கியம் போன்ற அனைத்தும் காட்சியகங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்கிறோம். நிறையப் பேர் ‘டைனோசர்’ ஆராய்ச்சியிலும், கண்டு களிப்பதிலும் கூடுகிறார்கள். டைனோசர் ஆராய்ச்சியைப்பற்றி குழந்தைகளால் கூட யோசிக்க முடியும், அறிந்து கொள்ள முடியுமென்றால், அது இளம் தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதம் தான். அத்தகைய விதத்தில் மாணவர்களை உருவாக்குவதே இந்த ‘மியூசி’யத்தின் ‘ஸ்பெஷல்’ என்று கூட சொல்லலாம்.

இங்கேயே ‘வாட்டர் வேஸ்’ (water ways) என்ற தனிப்பகுதி உண்டு. நீர் ஓட்டம், நீச்சல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகள் தனிப்பகுதியாக அழகுற அமைந்துள்ளது. நிறைய குழந்தைகள் இவற்றைப் பார்க்க போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். பள்ளிக்குப் போக ஆரம்பிக்காத வயதினருக்குக் கூட மகிழ்ச்சியை தரக்கூடிய இடம். அவர்களுக்கேற்ற தனித்தனி விளையாட்டுக்கள் இங்கே உண்டு. வயதிற்கேற்றபடி நம் திறமையை வளர்க்கும் தனித்தனியான காட்சிக் கூடங்களும் உண்டு. மொத்தத்தில் இந்த குழந்தைகள் மியூசியம் லாபநோக்கில் செயல்படுவதில்லை.

நகரத்தின் மிக அழகான குழந்தைகள் மியூசியமாகவும், குழந்தைகளை கவரும் விதமான மியூசியமாகவும் இருப்பதாக இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். அதிகம் பேர் கண்டுகளித்துள்ள இடங்களில் இரண்டாவது இடத்தை இந்த இடம் பிடித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். வருடத்திற்கு சுமார் நான்கு லட்சம் பேர் வந்து செல்கிறார்களாம். ‘சிகாகோ பப்ளிக் லைப்ரரி’ மற்றும் ‘கல்சுரல் சென்டர்’ முழுவதும் பல வண்ணங்களாலும், விளக்குகளாலும் ஜொலிக்கும் காட்சி கண்ணைப் பறித்தது.

கட்டடத்தின் கலை நுணுக்கம் அப்படியொரு அற்புதம்! அதிலும் அதன் உருவமான ‘பறவையின் கண்’ போன்ற நுணுக்கம், கலையை ரசிப்பவர்களின் கண்களுக்கு விருந்து என்றுதான் சொல்ல வேண்டும். ‘மிலியனியம் பார்க்’கின் கிரீடம் போன்ற நீர்வீழ்ச்சி பிரமாதமான காட்சி. அந்த ஜொலிக்கும் விளக்கின் ஒளியில் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்ததில் பசி கூட போய் விட்டது. இடையிடையே கிடைக்கும் பழம், காபி போன்றவற்றில் எங்கள் வயிற்றுப் பசியை போக்கிக் கொண்டோம். பார்க்க பார்க்க கண்களுக்குத்தான் எத்தனை விருந்து!

எத்தனையோ பூங்காக்கள் இருந்தாலும், குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக, மனிதவளத்துறை ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காகவே இதனை சிபாரிசு செய்திருக்கிறார்கள். உலகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புக் கொண்ட ‘அக்வேரியம்’ முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நீர் வாழ் உயிரினங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இன்னும் எத்தனை எத்தனையோ காட்சியகங்களை இவ்விடம் அடக்கியுள்ளது. கலைக்கல்லூரி கட்டட நுணுக்கங்களை அண்ணார்ந்து பார்க்க வைத்தது. ‘பக்கிங்காம்’ நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம் மற்றும் பிரமாதம்.

சொல்லியே ஆக வேண்டிய இடங்கள் இவை. இதற்கு மேல் ‘லிங்கான் பார்க் மிருகக்காட்சி சாலை’ குழந்தைகள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய பல உயிரினங்களைப் பற்றி விரிவாகக் காட்டுகிறது. இவ்வளவும் ஒரு நாள் பார்த்தால் போதாது. தங்கி ஓய்வெடுத்து கூட மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்கலாம். மிகப்பெரிய ஹோட்டல்கள் முதல் சாதாரண ரெஸ்டாரண்டு வரை அனைத்து தங்கும் வசதிகளும் அருகிலேயே கிடைக்கும்.

முழுவதும் குழந்தைகளின் மனவளர்ச்சிக்காக, அவர்களின் ஏக்கம், கோபம், மந்தத் தன்மை இவற்றையெல்லாம் அடியோடு அகற்றும் பொருட்டு சிறந்த நிபுணர்களால், கலை வல்லுநர்களால், தலை முதல் பாதம் வரை என்பார்களே, அது போல் அவர்கள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய விளையாட்டுக்கள் அத்தனையும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதுமே இங்கே திருவிழாக் கோலம் தான். வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய வகையில் பிள்ளைகளின் விளையாட்டுக்கள் அமைந்துள்ளதால், பாகுபாடின்றி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.

இவற்றைப் பார்த்த நாங்களும் சில விளையாட்டுக்களில் ஈடுபட்டோம். எங்களின் வயதைக் கூட மறந்து போனோம். மொழி, இலக்கியம் மற்றும் கேள்வித்திறன், படிக்க, எழுத, அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் என அனைத்துத் துறையிலும் வினோதமான விளையாட்டுக்கள். குழந்தைகளோடு குழந்தைகளாக நாங்களும் ஐக்கியமாகி விட்டோம். குழந்தைகளோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்க மிகச் சிறந்த இடம். நமக்குப் பிடித்தவர்களோடு எங்கு சென்றாலும் நாம் சந்தோஷமாகத்தான் இருப்போம்.

இது போன்ற குழந்தைகள் நிரம்பி வழியும் இடமென்றால் கேட்க வேண்டுமா, என்ன? ஒரு பக்கம் பிறந்த நாள் விழா, மறுபக்கம் சிலர் நண்பர்களுடன் டூர் என்று எங்கு பார்த்தாலும் ஒரே குதூகலம் தான். பலப்பல மொழிகளை காதால் கேட்க முடிந்தது. இதற்கிடையில் தினமும் பல பள்ளிகளிலிருந்தும், தனியார் பள்ளிகளிலிருந்தும் உல்லாச யாத்திரை வந்து கொண்டேயிருப்பதையும் பார்த்து மகிழ்ந்தோம். ‘அட்லர் பிளானிட்டோரியம்’ சூரிய குடும்பத்தை விவரிக்கும் தியேட்டர் வசதிகள் கொண்டது.

அங்கு எங்களால் அவ்வளவு நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும் அனைத்தையும் ஒரு தடவை மேலோட்டமாக பார்க்க முடிந்தது. விளையாட்டுப் பிரியர்களாகயிருந்ததால், விளையாட்டுத் திடல்களும் பிரமாதம்! எதைச் சொல்வது எதை விடுப்பது என்று சொல்லும் அளவிற்கு இங்கு பார்க்க இடங்கள் ஏராளம் உண்டு. பொழுதுபோக்கிற்காக மட்டும் செல்லும் இடங்கள் அவ்வளவாக மனதில் நிற்காது. ஆனால் இந்த அற்புதமான ‘சிகாகோ சில்ரன் மியூசியம்’ என்றுமே மனதை விட்டு நீங்காது. இனி ஒவ்வொரு முறையும் இதை பார்க்கத் தவறக் கூடாது என்று நினைத்தேன். இப்பொழுது அங்கு செல்பவர்களுக்கும் இதை சிபாரிசு செய்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யலாமா?!(மருத்துவம்)
Next post சம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்!!(கட்டுரை)