பாப்பாவுக்கு எத்தனை மார்க்?!(மருத்துவம் )
பிரசவம் முடிந்து குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டால், ‘அப்பாடா’ என்று எல்லோரும் பெருமூச்சு விடுவார்கள். ஆனால், அத்துடன் நம் வேலை முடிந்துவிடுவதில்லை. பிறந்திருக்கும் குழந்தையின் ஆரோக்கிய அளவைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’’ என்கிறார் பச்சிளம் குழந்தைகள் மருத்துவரான மாதுரி பிரபு.
என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?
‘‘குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றால், அந்தப் பிரச்னை ஒரே நாளில் வந்ததாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதேகூட ஏற்பட்டிருக்கலாம். இதயக் கோளாறு, குடலிறக்கம், எடை அதிகம், எடை குறைவு போன்ற பிரச்னைகள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கு இருந்திருக்கலாம்.
அம்மாவுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்திருந்தால் அம்மாவின் உடல்நிலையைப் பொறுத்து, அது குழந்தையின் ஆரோக்கியத்திலும் வெளிப்படலாம். அடுத்து, குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும்போது, தலை திரும்பாமல் இருப்பது, நஞ்சுக் கொடி பிரிதல், கழுத்தில் நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்வது மற்றும் குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகமாதல் அல்லது குறைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். இதற்கு அவசரமாக ஆக்ஸிஜன் தேவைப்படலாம்.
தாயின் பிறப்புறுப்பு சிறிதாயிருந்து, குழந்தையின் தலை பெரியதாக இருக்கும்போது Forceps என்று சொல்லப்படும் ஆயுதம் மூலம் குழந்தையின் தலையை வெளியே கொண்டு வரவேண்டிய சூழ்நிலையும் இருக்கும். இத்தனை பிரச்னைகளிலிருந்தும் பிறக்கும் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத்தான், பிரசவ நேரத்தில், பச்சிளம் குழந்தை நிபுணர் ஒருவரும் உடனிருப்பது வழக்கம்.’’
Apgar Score என்கிறார்களே…
அது என்ன?
‘‘குழந்தை பிறந்தவுடன் கூடுதல் பராமரிப்பு அல்லது அவசர கவனிப்பு தேவைப்படுகிறதா என்பதை கணிப்பதற்காக, இதயத்துடிப்பு, உடலின் நிறம் மற்றும் பிற அறிகுறிகளை வைத்து ஒரு சோதனை நடத்துவோம். Apgar Score என்று பெயர். இந்த சோதனையை பிறந்த ஒரு நிமிடத்திலும், 5 நிமிடங்களுக்குப் பின்னாலும் இரண்டு முறை செய்வோம்.’’
APGAR என்பதன் விளக்கம் என்ன?
A – Appearance தோற்றம், P – Pulse நாடித்துடிப்பு, G – Grimace – உணர்வு பிரதிபலிப்பு, A – Activity அசைவுகள், R – Respiration மூச்சு. இவை ஐந்தும் இந்த சோதனையில் எடுத்துக் கொள்ளும் முக்கிய விஷயங்கள். அதாவது, குழந்தையுடைய சருமத்தின் நிறம், இதயத்துடிப்பு, அழுகை, கை, கால்களை நன்கு உதைத்துக் கொள்வது, மூச்சு விடுதல் என 5 விஷயங்கள் நார்மலாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து, ஒரு விஷயத்துக்கு தலா 2 மார்க் வீதம் 10 மார்க்குகளை மருத்துவர்கள் கொடுப்பார்கள்.’’
இந்த மார்க் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
‘‘சருமத்தின் நிறம் பிங்க்-காக இருந்தால் 2 மார்க். உடல் முழுக்க பிங்க் நிறம்; ஆனால், கை, கால்களில் மட்டும் நீல நிறம் இருந்தால் 1 மார்க். உடல் முழுக்க நீல நிறம் இருந்தால் 0 மார்க். இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 100 துடிப்புகளுக்கு மேலே இருந்தால் 2 மார்க், 100க்கு குறைவாக இருந்தால் 1 மார்க், துடிப்பு இல்லையென்றால் 0. சத்தமாக அழுதால் 2 மார்க், சத்தமில்லாமல் முகத்தை மட்டும் சுருக்கினால் 1 மார்க், அழுகையோ அல்லது எந்த உணர்ச்சியும் இல்லையென்றால் 0 மார்க்.
கை, கால்களை நன்கு உதைத்துக் கொண்டால் 2 மார்க், பலவீனமாக அசைத்தால் 1 மார்க், கை, காலை அசைக்கவில்லையென்றால் 0 மார்க். சத்தமாக அழுகிற பிள்ளை மூச்சு விடுவதிலும் 2 மார்க் வாங்கி விடும். பலவீனமாக அழுகிற குழந்தையின் மூச்சும் பலவீனமாகத்தான் இருக்கும். அப்போது 1 மார்க்தான் கொடுக்க முடியும்.
மூச்சில்லையென்றால் 0 மார்க்.
இதில் குறைந்தபட்சம் 8 மார்க் வாங்கிவிட்டால் பாப்பா ‘பாஸ்’ மார்க் வாங்கிவிடும். இதற்கும் மேல் 9 அல்லது 10 என்றால் டாப்பர் லிஸ்ட்டில் இருக்கும். ஆனால், இந்த APGAR மார்க் பரீட்சையில், முதல் நிமிடத்தில் 10 மார்க் வாங்கிவிட்டு, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 8-க்கும் குறைவாக இருக்கிறது என்றால், குழந்தைக்கு பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.
இதுவே முதல் நிமிடத்தில் 8-க்கும் குறைவாக வாங்கிவிட்டு, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 10 மார்க் வாங்கினால், அந்தக் குழந்தையை தாய்ப்பால் குடிக்க வைப்போம். அது நார்மல்தான்.’’
குறைவான மதிப்பெண் வாங்கிய
குழந்தைக்கு என்ன சிகிச்சை?
‘‘தொடர்ந்து குழந்தை 5 அல்லது 6 மார்க்கிலேயே இருந்தால் உடனே
ஏதாவது செய்து குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்று அர்த்தம். இந்த மதிப்பெண் கொடுப்பதின் அடிப்படை, குழந்தையின் உடனடி மருத்துவத் தேவையை தீர்மானித்து உடனடி பராமரிப்பை வழங்குவதன் மூலம் குழந்தையின் ஒட்டுமொத்த உடல்நல சீர்குலைவை
தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.
மற்றபடி இதைப்பற்றி அதிகம் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக கொடுக்கப்படும் சிகிச்சைக்குப்பின் சில குழந்தைகள் நார்மலாகிவிடுவார்கள். இவற்றுடன் இன்னும் 5 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.’’
அது என்ன 5 விஷயங்கள்?
* குழந்தையின் தலையுச்சி நன்றாக மூடியிருக்கிறதா?.
* பிறந்த குழந்தை ஆண் அல்லது பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பு சரியாக இருக்கிறதா?
* மலத்துவாரம் இருக்கிறதா?
* ஓசைகளுக்கு, பதில் சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறதா?
* உடலில் இருக்கும் முக்கிய எலும்புகளான இடுப்பெலும்பு, கால்மூட்டு, பாதம், முதுகெலும்பு, தோள்பட்டை எலும்பு போன்றவை சரியாக
இருக்கின்றனவா என்பதையும் மருத்துவர்கள் சரி பார்க்க வேண்டும்.’’
சிசேரியனில் மூலம் பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள். என்ன?
‘‘சிசேரியன் மூலம் பிறக்கிற குழந்தைகளில் ஒரு சிலருக்கு, நுரையீரலில் நீர் தேங்கி, மூச்சுவிட சிரமப்படுவார்கள். ஆனால், இது 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் சரியாகிவிடும்.’’
கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
‘‘நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ, பிறந்த 48 மணி நேரத்துக்குள் குழந்தை கருப்பாக முதல் மலம் கழிக்க வேண்டும். இதுதான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அப்படி இல்லாவிட்டால் மலத்துவாரம் இருக்கிறதா என்று கவனியுங்கள். அடுத்தது, உங்கள் உடல்சூட்டிலேயே குழந்தையை வைத்திருங்கள்.
ஒரு மணி நேரத்திற்குள் ‘சீம்பால்’ என்று சொல்லப்படும் முதல்பால் கொடுப்பதை மறந்து விடாதீர்கள். பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால் பிள்ளையின் தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.’’
வீட்டிற்கு கொண்டு சென்றபிறகு என்ன செய்ய வேண்டும்?
‘‘குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், எவ்வளவு இடைவெளிகளில் தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை மருத்துவமனைகளிலேயே சொல்லிக் கொடுத்து அனுப்புவார்கள். இதுதவிர, பச்சிளம் பாப்பா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
குழந்தையை குளிப்பாட்டும் போது பூப்போல கையாள வேண்டும். எண்ணெய் மசாஜ் செய்கிறேன் என்று தலையை தட்டுவது, மூக்கு, காதில் துணியால் சுத்தம் செய்வது, கண்களில் எண்ணெய் வைப்பது போன்ற தவறுகளை செய்யக் கூடாது.
குழந்தையின் உடல் முழுவதும் பவுடரைக் கொட்டினால், தொடை இடுக்குகளில் தங்கி மேலும் அழுக்கை அதிகரிக்கும். இதனால் அங்கு புண் வரலாம். அடுத்து குழந்தை மருத்துவர் பரிந்துரைப்படி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக அவசியம்.”
Average Rating