நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்!!(மகளிர் பக்கம்)
முன்னோடிகள் இருக்கும் துறையில் முன்னேறுவதற்கே பெண்களுக்கு மூச்சுத் திணறிப் போகும். இன்று எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால் கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன் கணினியே சரியாக மக்களுக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் புதுமையான ஒரு துறையான தமிழில் சாஃப்ட்வேர் தயாரிக்கும் பிசினஸை ஆரம்பித்து அதில் இன்று பெரிய அளவில் வெற்றிக்கண்டிருக்கிறார் காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ காம்கேர் புவனேஸ்வரி. தனது வெற்றிப்பயணம் குறித்து அவரது வார்த்தைகள் நமக்காக…
“நான் பிறந்தது கும்பகோணம். பெற்றோர் இருவரும் தொலைபேசித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அதனால் பணி இட மாற்றம் காரணமாக பல ஊர்களில் தங்கிப் படிக்க வேண்டி வந்தது. எம்.எஸ்.ஸி முடித்துவிட்டு, எம்.பி.ஏ படித்தேன். படிப்பு முடித்தவுடன் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் எதாவது தொழில் துவங்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி தான் இந்த காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் துவங்கும் எண்ணம் எனக்குத் தோன்றியது. 1992ம் ஆண்டு காம்கேர் நிறுவனத்தைத் தோற்றுவித்தேன்.
கம்ப்யூட்டர்கேர் என்பதன் சுருக்கம்தான் காம்கேர். ஆங்கிலம் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் யுகத்தில் முதன் முதலில் தமிழையும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தையும் இணைத்து சாஃப்ட்வேர்களை தயார் செய்த பெருமை காம்கேருக்கு உண்டு. முதன் முதலில் தமிழ் சாஃப்ட்வேர்களை கொண்டு வந்தபோது அமோக வரவேற்பு கிட்டியது. ஆரம்பத்தில் வங்கிகள், பள்ளிகள், மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப் என நம்மைச் சுற்றியுள்ள நிறுவனங்களுக்கான சாஃப்ட்வேர் தயாரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.
தேவைப்படுபவர்களுக்கு தமிழிலும் அவை இயங்குமாறு வடிவமைத்துக்கொடுத்தோம். என் உடன் பிறந்தவர்களும் எனக்கு கொஞ்சம் உதவியாக இருந்தனர். முதல் தலைமுறையாக இந்த பிசினஸை செய்யும் பெண் என்பதால் எனக்கு வெகுஜன இதழ்கள் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. என் நிறுவன தயாரிப்புகளான சாஃப்ட்வேர்கள் குறித்து முன்னணிப் பத்திரிகைகளில் எழுதினேன். இதன் மூலம் எங்கள் தொழில்நுட்பம் மிக எளிதாக
சாமானியர்களையும் சென்றடைந்தது.
தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்- இது தமிழில் வெளியான என் முதல் தொழில்நுட்பப் புத்தகம். ‘An Easy Way To Learn C language’ இந்த புத்தகம் வெளியானபோது என் வயது 25. நிறுவனம் தொடங்கி 25 ஆண்டுகளாகிவிட்டன. இன்று என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன், கார்ட்டூன் சிடிக்கள் வடிவமைத்தல், ஆவணப்படங்கள் வெளியிடுதல், புத்தக வடிவமைப்பு என நான்கு துறைகள் இயங்கி வருகின்றன. சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நேரம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா-பாட்டி கதைகள்’ சிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும், நல்ல தரமான தயாரிப்பாக இருந்ததாலும் அந்த வருடப்
புத்தகக் கண்காட்சியில் எங்கள் சிடிக்கள் விற்பனையில் சாதனை படைத்தன.
இந்த அனிமேஷன் படைப்புக்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்தி பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன் கதைகள், மழலை முத்துக்கள், மழலை சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் விதத்தில் நாங்கள் உருவாக்கி யிருந்த மல்டிமீடியா படைப்பான திருக்குறள், திருவாசகம் போன்றவை எங்கள் நிறுவனத்தின் அடையாளமாகிப் போனது. மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறை படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.
இதை அடுத்து ஆவணப்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். எங்கள் அப்பா-அம்மாவின் தன் வரலாறுதான் முதல் ஆவணப்படம். அதை அடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தேவைப்பட்டால் தனிநபர்களுக்கும் எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளுக்காகவும் ஆவணப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினோம். அம்மா நிறைய படிப்பார். அதனால் எனக்கும் வாசிப்பு, எழுத்து இவற்றில் அதிக ஆர்வம் உண்டானது. அதனால் பிசினஸில் பிஸியாக இருந்த போது அதற்கிடையில் புத்தகங்களும் எழுத ஆரம்பித்தேன். சூரியன் பதிப்பகம் வாயிலாக நான் எழுதியுள்ள ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’, ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ போன்றவை தமிழ் பதிப்பக உலகில் தமிழில் வெளியான முதல் மொபைலுக்கான புத்தகங்கள். ஏராளமான விளக்கப்படங்களுடன் செயல்முறை வழிகாட்டுதல்களோடு மல்டிமீடியா புத்தகம் போல எழுதுவதே என் எழுத்தின் அடையாளம்.
‘மனதை பார்மேட் செய்யுங்கள்’, ‘குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’, ‘திறமையை பட்டைத் தீட்டுங்கள்’, ‘இப்படிக்கு அன்புடன் மனசு’, ‘படித்த வேலையா, பிடித்த வேலையா?’ என மனித மனங்களை ஆராய்ந்து வாழ்வியல் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளேன். ஒவ்வொரு துறை மூலமும் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகிறேன். அச்சுப் புத்தகங்களை தொடர்ந்து இ-புத்தகங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
பார்வையற்றவர் மற்றவர்கள் உதவியின்றி தாங்களாகவே ஸ்கிரீன் ரீடிங் தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் ஸ்க்ரைப் சாஃப்ட்வேரை நாங்கள் உருவாக்கி யுள்ளோம். தற்போது மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறேன். மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம். விரைவில் அந்த முயற்சியும் வெற்றியடையும்.
என் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி நினைவாக ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு இந்த அறக்கட்டளை சார்பாக உதவி செய்து வருகிறோம். வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோருக்கு ‘பத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம். தோல்விகளையும் சவால்களையும் நான் தனியாக பிரித்துப் பார்ப்பதில்லை. அவற்றையும் என் தொழில் பயணத்தின் ஓர் அங்கமாக கருதுகிறேன். நான் பிசினஸ் தொடங்கிய போது கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் குறித்து அவ்வளவாக தெரியாது என்பதால் நான் மக்களுக்கு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இருந்தது.
செய்யும் வேலையில் நேர்மை, நேரம் தவறாமை இவை எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான முக்கியக் காரணங்கள். கயிற்றின் மேல் நடக்கும் சிறுமி கீழே விழுந்து விடாமல் இருக்க எத்தனை பிரயத்தனம் செய்ய வேண்டிஉள்ளது. அவள் கவனம் ழுழுவதும் கயிற்றின் மீதும் பாதையின் மீதும் தான் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அந்தச் சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை ஒரு நொடி பார்த்து விட்டாலோ அல்லது கைதட்டலுக்கு ஒரு நிமிடம் காது கொடுத்து கேட்டு பூரிப்படைந்து விட்டாலோ என்ன ஆகும் அவள் கதி?
அது போலதான் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். யாருடனும் போட்டி போட நான் என்றுமே விரும்பியதில்லை. உடன் ஓடுபவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் எந்த அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இதுதான் என் வெற்றியின் ரகசியம். பெண்கள் அவர்கள் திறமையால் மதிக்கப்பட வேண்டும். அப்படி மதிக்கப்படுவதை பெருமையாக நினைக்க வேண்டும். எந்த பிசினஸ் செய்தாலும் தங்களுக்கென ஒரு கொள்கையை வரையறை செய்து கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சுயத்தை இழக்காமல் வாழ்க்கையிலும் பிசினஸிலும் ஜெயிக்க முடியும். நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.”
Average Rating