இயற்கை விவசாயம் செய்யும் பெண்கள்!!(மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 34 Second

விவசாயி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஆண்கள்தான். ஆனால் எப்போதுமே பெண் விவசாயிகள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றாலும் பொதுபுத்தியில் அவர்கள் எப்போதும் நினைவுக்கு வருவதில்லை. உணவு சமைப்பது தொடங்கி குடும்பங்களுக்கு வழங்குவது வரை பெண்களின் பங்குதான் முதன்மையானதாக இருக்கிறது. இந்தியா நகரமயமாகி வந்தாலும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்திக்கு கிராமங்களையே இன்றளவும் நம்பியுள்ளோம்.

ஆனால் விவசாயிகளை கடனாளிகளாக்கி தற்கொலை வரை தள்ளியுள்ளது. கருவில் வளரும் சிசுக்களுக்கு தாயின் தொப்புள்கொடி வழியாக நஞ்சை அள்ளித் தரும் உணவுகள் தலைமுறை தலைமுறையாக நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் விஷம் கணக்கிட முடியாது. இளம் வயதில் தாக்கும் சர்க்கரை நோய், மலட்டுத் தன்மை, இதய நோய், உயிர்க்கொல்லியான புற்று நோயும் இயற்கையின் பக்கம் திரும்பியாக வேண்டும் என்ற நெருக்கடியை நமக்கு ஏற்படுத்தியுள்ளது.

தாய்வழிச் சமூகமாக இருந்த காலத்தில் இயற்கையோடு இணைந் திருந்த நம் வாழ்வியல் தந்தை வழிச் சமூகமாக மாற்றப்பட்ட பின் லாபத்தின் பின்னால் ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தோலுரித்துக் காட்டிய பின்பே வேளாண்மையில் நடக்கும் தவறுகள் நம்மிடையே விழிப்புணர்வுக் கருவியானது. சுனாமி பாதித்த நாகப்பட்டினம் நிலத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்தியது, கரூரில் ஒரு கரட்டுப் பகுதியைத் தேர்வு செய்து வானகமாக அமைத்து பயிற்சியிடமாக மாற்றியது என நம்மாழ்வார் சொல்வதோடு நிற்காமல் செய்தும் காட்டினார்.

அவரது வேளாண் முறையில் ஈர்க்கப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்ட பெண்கள் தமிழக அளவில் தங்களது விவசாய நிலங்களில் இயற்கை வேளாண்மை முறையை செயல்படுத்தி வருகின்றனர். பணப்பயிர்களையும், அரசு கொடுக்கும் உரங்களையும் நம்பி விவசாயம் பார்க்கும் ஆண்களே அரசிடம் சலுகை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர். கடன்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடியில் சிக்குகின்றனர். பெண்ணுக்கு நிலமும் வீடும் இருந்தால் போதும். அவர்கள் தங்களது குடும்பத்துக்கு தன்னிறைவு வாழ்வை வழங்க முடியும் என்கிறார் தமிழ்நாடு விவசாயப் பெண்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்பனா.

கல்பனா கூறுகை யில், ‘‘தமிழ்நாடு ஃபெடரேஷன் ஆஃப் விமன் ஃபார்மர் ரைட்ஸ் அமைப்பு தமிழக அளவில் கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்திய ஆய்வில் இந்திய அளவில் நடக்கும் உணவு உற்பத்தியில் 65.5 சதவீதம் பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.

இதில் விவசாயப் பணியில் மட்டுமே 80 சதவீதம் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 சதவீதம் பெண்கள் மட்டுமே நில உரிமையாளர்களாக உள்ளனர். விவசாய நிலத்தில் பெரும்பகுதியாக உழைக்கும் பெண்களுக்கு விவசாயிகள் என்ற அடையாளமும் இல்லை. அவர்கள் கையில் நிலமும் இல்லை. ஆண்கள் விவசாயத்தையும் தொழிலாகப் பார்த்துச் செய்வதால் லாப நோக்கத்துக்கான பயிர்களையே விளைவிக்கின்றனர். ஆணைச் சார்ந்து விவசாயப் பணியில் ஈடுபடும் பெண்கள் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.

தன்னம்பிக்கை மிக்க பெண் விவசாயிகள் தற்சார்பு வேளாண்மை முறையை செயல்படுத்தி வருகின்றனர். இயற்கை வேளாண்மை முறையில் உணவு உற்பத்தி மற்றும் சந்தையிடுதல் என பல தளங்களிலும் பெண்களின் உழைப்பு முக்கியமானதாக உள்ளது. நிலம் பெண் கையில் இருந்தால் அந்த இடத்தில் தான் வாழ்வதற்கான வீட்டையும், விவசாயத்தையும் பார்த்துக் கொள்வார்கள். ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் கூடப் போதும். ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி நிலம் முதலாளிகளின் கையில் உள்ளது. அந்த நிலங்களில் உணவு உற்பத்தி குறைவாகவே நடக்கிறது.

தமிழக அளவில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங் களில் தரிசாகக் கிடந்த பொது நிலங்களை பெண்கள் கையகப்படுத்தி தற்சார்பு வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். குழுவாக இருக்கும் பெண்கள் மட்டுமே இது போன்ற முயற்சிகளில் இறங்க முடிகிறது. நில உரிமை என்பது விவசாயப் பெண்களின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அரசிடம் தலித் பெண்கள் மற்றும் விவசாயப் பெண்களுக்கு நிலம் ஒதுக்கித் தரும்படி கேட்கிறோம். இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை இணைத்து விதைப் பரிமாற்றத்துக்கான வேலைகளையும் தொடங்கியிருக்கிறோம். விவசாய முறை மாறியதால் பாரம்பரிய விதைகளைப் பெரும்பகுதி இழந்து விட்டோம்.

‘வேர்கள்’ என்ற அமைப்பின் மூலமாக பெண்களுக்குள் பாரம்பரிய விதைகளைக் கொடுத்து வாங்கும் முறை உள்ளது. விவசாயத்தில் நீர் மேலாண்மை பற்றியும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக மழை பெய்யும் நாட்களில் நீரைச் சேமிப்பது, வறட்சி காலங்களில் அவற்றைப் பயன்படுத்துவது, மிகக் குறைந்த தண்ணீரைக் கொண்டு வேளாண்மை செய்வது, மல்டி கிராப் முறையில் வீட்டின் உணவுத் தேவைக்கான காய், பழம், தானியம் அனைத்தையும் ஒரே இடத்தில் விளைவிப்பது என பல விதமான முயற்சிகளை பெண்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

வெற்றி பெற்ற பெண்களை இணைத்து நஞ்சில்லா உணவு, உழவில்லா வேளாண்மை என விவசாயப் பெண்களின் பயணம் தொடர்கிறது. பெண்கள் தன்னிறைவான வாழ்வுக்கான பணிகளைச் செய்து வருகின்றனர். விவசாயத்தின் வருங்காலம் பெண்கள் கையில் தான் இருக்கிறது. வேர்கள் அமைப்பு மூலமாக விவசாயப் பெண்களுக்கு பயிற்சிகள் கொடுக்கும் திட்டம் உள்ளது. பாரம்பரிய வேளாண்மைக் கல்வி வழங்குவது, விதைப் பரிமாற்றம், நீர் மேலாண்மை போன்ற பயிற்சிகள் இதில் அடக்கம்’’ என்கிறார் கல்பனா.

தற்சார்பு வேளாண்மையை தனது தோட்டத்தில் கரூரைச் சேர்ந்த சரோஜா செயல்படுத்தி வருகிறார். சமைப்பதும் கூட இயற்கைக்கு எதிரானது என்னும் இவர் மேலும் கூறுகையில், ‘‘நான் பிறந்த வீடு, புகுந்த வீடு ரெண்டுமே விவசாயக் குடும்பம். நான் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தில் கோல்டு மெடல் வாங்கினேன். திருமணம், குழந்தைகள்னு என் வாழ்க்கை போய்க்கிட்டிருந்தது. அடுத்தடுத்து உறவினர்கள், நண்பர்கள்னு பலரோட நோயும் மரணமும் என்னை மாற்றி யோசிக்க வெச்சது. மருத்துவர்கள் உனக்கு நோய் இருந்தா உன் குழந்தைக்கும் வரும்னு பயமுறுத்தி அனுப்பினாங்க. நிறைய புத்தகங்கள் படிக்கிற பழக்கம் இயல்பாவே இருந்தது.

நோய்க்கான காரணம் தேடிப் படிச்சிட்டிருந்த காலத்தில் நம்மாழ்வார் உணவில் இருக்கிற விஷத்தன்மையைப் பற்றி பேசிட்டிருந்தார். உணவை மாற்றினா நோய்ல இருந்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியும்ற நம்பிக்கை கிடைச்சது. நம்மாழ்வாரோட வானகத்துல விவசாயப் பயிற்சியை முடிச்சிட்டு எங்க நிலத்துல கொஞ்சம் கொஞ்சமா இயற்கை வேளாண் மையை நடைமுறைப் படுத்தினேன்.

காய்கள், பழ மரங்கள், தானியங்கள் கலவையா பயிர் பண்ணினேன். விளைஞ்சது போக களை யெல்லாம் உரமாக்கினேன். என்னோட உணவு முறையும் மாறுச்சு. நம்மை சுத்தியிருக்கிற இலை தழைகள் தான் நமக்கு மருந்தாகுதுன்றதையும் கண்டு பிடிச்சேன். கொத்தமல்லிச் சாறு, கறிவேப்பிலைச் சாறு குடிச்சி நம் உடம்புல இருக்கிற நச்சுக்களை வெளியேற்ற முடியும். அப்படி சின்னச் சின்ன முயற்சிகள்ல பல நோய்கள் குணமாகியிருக்கு. டாக்டரை கைவிட்டவங்க கூட கொத்தமல்லிச் சாறு குடிச்சு நலமா இருக்காங்க.

ஒரு காலத்துல விளைஞ்சதை அப்படியே சாப்பிட்டிருந்தோம். சமைக்கிறதே இயற்கைக்கு எதிரானதுன்னு நினைக்கிறேன். சமையல் வேலைக்காக பெண்ணோட வாழ்க்கைல பாதி வீணாயிடுது. சமைக்காமல் சாப்பிடறது தான் என்னோட அடுத்த முயற்சி. என் தோட்டத்துல பசு, காளை எல்லாமே வளர்க்கிறேன். முழுக்க முழுக்க வாழ்க்கைய இயற்கை முறைக்கு மாற்றுவது தான் இந்த நோய்கள்ல இருந்து விடுபடறதுக்கான வழியா இருக்கும். இயற்கை வேளாண்மை செய்ய விரும்புற பெண்களுக்கு நான் உற்பத்தி செய்ற பாரம்பரிய விதைகள கொடுக்கறேன். இயற்கை வேளாண்மை முறை பற்றி தெரிஞ்சிக்கவும் பெண்கள் என்னை அணுகுறாங்க.

என்னளவில் நான் இயற்கை விவசாயத்துல பண்ணின முயற்சிகள் இப்போ பல பெண்களுக்கும் பாடமா மாறியிருக்கு. இயற்கை வேளாண்மை முறையில் நம் உடம்பு, மனசு ரெண்டும் ஆரோக்கியமா இருக்க உதவுது. பெண்கள் நம்பிக்கையோட இயற்கை வேளாண்மைக்கு வரலாம். நம்மோட பாரம்பரிய விதைகளைக் காத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டிய பொறுப்பு இன்றைய பெண்களுக்கு இருக்கு’’ என்கிறார் சரோஜா.

சென்னையைச் சேர்ந்த மேனகா திலக் 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்புக் கூட்டும் பொருட்களாக மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்கிறார். ‘மண்வாசனை’ என்ற அமைப்பின் மூலம் இயற்கை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்த திலக்ராஜனின் மனைவி மேனகா. தன் கணவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்கிறார். இழப்பின் வலியையும் தாண்டி தன் கணவரின் லட்சியத்தை நிறைவேற்றுவதே என் நோக்கம் என ஓடிக் கொண்டிருக்கும் மேனகா, ‘‘எங்களோட குழந்தைகளுக்கு நோயில்லாத வாழ்வைக் கொடுக்கணும்ற தேடல் தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பக்கம் எங்களைத் திருப்பியது. கைக்குத்தல் அரிசியில அவ்வளவு சத்துக்கள் இருக்கு. ஒரு சில அரிசி வகைகள் உடலுக்கு வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் தருது.

வெள்ளையா நாம சாப்பிடுற சாதத்துல இதெல்லாம் இல்லை. பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிற அரிசி வகைகள்ல வைட்டமின் சத்துக்கள் நிறைய இருக்கு. நெல் ஜெயராமன் அய்யாவோட நெல் திருவிழா மூலமா பாரம்பரிய நெல் ரகங்கள சேமிக்க ஆரம்பிச்சோம். அந்த நெல் விளைவிக்கிற விவசாயிகள் கிட்டருந்து நேரடியாக பாரம்பரிய அரிசியை வாங்கி விற்பனை செய்தோம். முதல்ல எங்க முயற்சிக்கு பெரிசா வரவேற்பு கிடைக்கல. ஒரு சில அரிசி வகைகளை எட்டு மணி நேரம் ஊற வெச்சு சமைக்கணும். இன்னைக்கு இருக்கிற வாழ்க்கை முறைல அது சாத்தியம் இல்ல.

அதனால பாரம்பரிய அரிசிகள் மற்றும் தானியங்கள்ல மதிப்புக் கூட்டும் பொருட்கள் தயாரிக்க ஆரம்பிச்சேன். கஞ்சி, இட்லி, தோசை, பணியாரம், இடியாப்பம் செய்ய ரெடி மிக்ஸ் பண்ணிக் கொடுத்தேன். பாரம்பரிய உணவு முறை பக்கமா மக்கள் மனசு திரும்ப ஆரம்பிச்சிருக்கு. இப்போ எங்கள் தயாரிப்புகளை இயற்கை அங்காடிகள் வாங்கி விற்பனை செய்றாங்க. பாரம்பரிய அரிசி விளைவிக்கிற விவசாயிகளுக்கும் என்னோட முயற்சியும், வளர்ச்சியும் பக்கபலமா மாறியிருக்கு.

நம்ம குழந்தைகள் நலனுக்காக நாம பாரம்பரிய உணவுக்கு மாறினா மருத்துவத்துக்கு செலவழிக்கிற பெரிய தொகையை கட்டுப்படுத்த முடியும். சமையல் அறையில் மாற்றத்தைக் கொண்டு வர பெண்கள் நினைச்சா முடியும்’’ என்கிறார் மேனகா. இயற்கை விவசாயத்தை உயிர்ப்பிப்பதோடு பாரம்பரிய விதைகளை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாக்கும் பெண்கள் முயற்சியைப் பாராட்டு வோம். நிலத்தில் உழைக்கும் பெண்களுக்கு விவசாயி என்ற அடையாளம் கிடைக்கட்டும். நோயற்ற வாழ்வுக்கும், அடிமைச் சிந்தனை அழிப்புக்கும் பாரம் பரிய வேளாண்மைக்கு பெண்கள் அதிகம் வரவேண்டும். வாழ்த்துவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் மரண தண்டனை ரத்து – பிரதமர் எச்சரிக்கை !!(உலக செய்தி)
Next post ஆபாசமாக Dubsmash செய்யும் பெண்கள் !!(வீடியோ)