பசியை தூண்டும் இஞ்சி!!(மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை நாம் பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் செரிமானத்தை தூண்டக்கூடிய மருத்துவம் குறித்து பார்க்கலாம்.வயிறு சரியாக இயங்கவில்லை என்றால் பசி எடுக்காத நிலை, ரத்த சோகை, உடல் வளர்ச்சியின்மை போன்றவை ஏற்படும். உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் பல நோய்கள் ஏற்படும். எலுமிச்சை, நார்த்தங்காய் இலை, இஞ்சி ஆகியவற்றை பயன்படுத்தி பசியை தூண்டும் மருத்துவத்தை காணலாம்.
நார்த்தங்காய் இலைகளை பயன்படுத்தி பசியை தூண்டும் பொடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நார்த்தங்காய் இலைகள், வரமிளகாய், ஓமத்தூள், பெருங்காயப்பொடி, உப்பு.செய்முறை: நார்த்தங்காய் இலைகளை சுத்தப்படுத்தி காயவைத்து, இலைகளின் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு இலைகளை மட்டும் எடுக்கவும். இதனுடன் வரமிளகாய், ஓமத்தூள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து நீர்விடாமல் பொடியாக அரைத்து எடுக்கவும். தினமும் இதனுடன் நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு சாப்பிட்டுவர பசியை தூண்டும். செரிமானத்தை சீர்செய்யும் மருந்தாக விளங்குகிறது.
நார்த்தங்காய் மிகுந்த புளிப்பு சுவை உடையது. நல்ல மணத்தை கொண்ட இதை ஊறுகாயாக செய்து பயன்படுத்தலாம். நார்ச்சத்து உடையதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஈரலை பலப்படுத்தும். உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டது. குமட்டல், வாந்தியை போக்கும். இஞ்சியை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, பெருங்காயம், கடுகு, மஞ்சள் பொடி, வரமிளகாய், புளிகரைசல், உப்பு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயம், கடுகு சேர்த்து பொறிக்கவும். இதில், இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, வரமிளகாய் பொடி, புளிகரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், உப்பு சேர்க்கவும். இதனுடன் வெல்ல கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதை சாப்பிட நன்றாக பசி எடுக்கும். அறுசுவை உடைய இது, அற்புதமான உணவாகி மருந்தாகிறது. உள் உறுப்புகளை தூண்டும். செரிமானத்தை சீர் செய்கிறது. உணவை சாப்பிட தூண்டுகிறது.எலுமிச்சையை பயன்படுத்தி பசியை தூண்டும் பானம் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு எடுக்கவும். இதனுடன் இந்துப்பு, சீரகப்பொடி, வெல்லக்கரைசல் சேர்க்கவும். இதில், நீர்விட்டு கலந்து சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்து முன்பு குடித்துவர பசியை தூண்டும். இது, உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும் பானமாகும். கோடைகால வெயிலால் நீர்சத்து இழப்பு இருக்கும். இதனால் மயக்கம், நாவறட்சி, உடல் சோர்வு ஏற்படும். இப்பிரச்னைகளை இந்த பானம் தீர்க்கும். செரிமானத்தை சீர் செய்யும்.பசி இல்லாத நிலையில் பலம் குறையும். பசியை தூண்டுவதற்கும், சாப்பிட்ட உணவை செரிமானம் செய்வதற்கும் மேற்கண்டவற்றை பயன்படுத்தி உடல் நலம் பெறலாம். வறட்டு இருமலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு மாதுளை, தேன் மருந்தாகிறது. மாதுளை பிஞ்சுகளை காயவைத்து பொடித்து தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட வறட்டு இருமல் சரியாகும்.
Average Rating