கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் கதை!!(மருத்துவம்)

Read Time:21 Minute, 46 Second

உலகை அச்சுறுத்தும் நோயாக புற்றுநோய் உருவாகிக் கொண்டிருந்தாலும், அதனை எதிர்கொண்டு வெற்றிகொள்ளும் அளவுக்கு சிறந்த மருத்துவமனைகளும், சிகிச்சைகளும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மருத்துவமனையாக அடையாறு புற்றுநோய் மையம் கடந்த 64 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. மருத்துவமனையின் தலைவரான சாந்தாவிடம் மருத்துவமனை பற்றிப் பேசினோம்…

‘‘இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்தான் இங்கு புற்றுநோய் மருத்துவமனையை ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம். 1923-ம் ஆண்டில் அவருடைய தங்கை ஒருவர் எதிர்பாராதவிதமாக புற்றுநோயால் உயிரிழந்தார். அப்போது பொதுவாக உலகளவிலேயே புற்றுநோய் பற்றி யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. தகுந்த மருந்து, மாத்திரை வசதிகளும் கிடையாது.

இந்தியாவில் அதைவிட மோசமான நிலைமைதான் இருந்தது. மருத்துவத் துறையில் வசதி வாய்ப்புகளும் குறைவுதான். அந்த சமயத்தில் நம்மை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். தன்னுடைய தங்கை இறந்ததைப் பார்த்த முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவில், புற்றுநோய்க்காக மருத்துவமனை ஒன்று தொடங்க வேண்டுமெனவும், இந்த நோய்க்கான மருந்துகள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட வேண்டுமெனவும் கனவு கண்டார்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் அது. இந்த முயற்சியை முன்னெடுக்கும் விதமாக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வைக் கொண்டு வரும் வகையில் மேயர்கள் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார் டாக்டர் முத்துலட்சுமி. அதில் கலந்துகொண்ட அமைச்சர் ஒருவர் அம்மையாரிடம் ‘புற்றுநோய்ன்னா என்ன? எல்லோரும் செத்துத்தானே போகிறார்கள்! இதுக்கு ஏன் ஹாஸ்பிட்டல்? இது ரொம்ப வேஸ்ட்.

நம்மிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை’ என கிண்டல் தொனியில் கேட்டுள்ளார். அதற்கு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் வருத்தம் தோய்ந்த குரலில், ‘இந்நோய் பற்றி உங்களுக்கே தெரியவில்லை. எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் இதைப்பற்றி தெரிந்து பேசவில்லை. அறியாமை உங்களைப் பேச வைக்கிறது’ என மிகுந்த மனவருத்தத்துடன் பதில் சொன்னார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, நாமே ஏன் அதற்கான மருத்துவ விழிப்புணர்வையும், சிறப்பு மருத்துவமனையையும் தொடங்கக் கூடாது என்று முடிவெடுத்து Womens Indian Association என்ற அமைப்பை ஏற்படுத்தினார். புற்றுநோய்க்காக ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என Cancer Relief Fund ஆரம்பித்து சிறுகசிறுக பணம் சேகரிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு கஷ்டப்பட்டு 1952 வரை ஒரு லட்சம் வரை சேர்த்தார். மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதற்காக தன்னுடைய இரண்டு மகன்களில் ஒருவரான டாக்டர் சுந்தரம் கிருஷ்ணமூர்த்தியை அமெரிக்காவிற்கு அனுப்பி மருத்துவம் படிக்கவும் வைத்தார். 1954-ல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டைக் கட்டுவதற்கான பணிகளை ஆரம்பித்தார். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருதான் இதற்கு அடிக்கல் நாட்டினார்.

அதே ஆண்டில் நிதியமைச்சர் தேஷ்முக் இதைத் தொடங்கி வைத்தார். 12 படுக்கைகள், 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள் ஆகியோருடன் இந்த இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கப்பட்டது. எங்களால் ‘அம்மா’ என அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்பட்ட அம்மையார் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ‘அவ்வை இல்லம்’ என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 2 செவிலியர்கள்தான் இங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். 1954-ல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, அம்மையாரின் மகன் டாக்டர் சுந்தரம் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து இங்குதான் பணியாற்றி வருகிறேன். 2010-ம் ஆண்டில் டாக்டர் சுந்தரம் கிருஷ்ணமூர்த்தி மறைந்து விட்டார். ஆனாலும், அந்த பொறுப்பை ஏற்று இந்த வயதிலும் என்னால் முடிந்த அளவில் சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.

தற்போது எங்களிடம் 550 படுக்கை வசதிகள் உள்ளன. விரைவில் அவை 625 என அதிகரிக்க உள்ளது. புதிதாக ஒரு கட்டடம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடங்கவும் உள்ளோம். ஆரம்பத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என 12 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இன்ஸ்டிட்யூட்டில் தற்போது 700-க்கும் மேற்பட்டோர் சேவை செய்து வருகின்றனர்’’என்றவரிடம் கட்டணம் பற்றிய விபரங்களைக் கேட்டோம்…

‘‘படுக்கைகளில் 40 சதவீதத்திற்குத்தான் கட்டணம் வசூலிக்கிறோம். பொது சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு இடம், உணவு இலவசமாக தருகிறோம். 30 சதவீத நோயாளிகளிடம் எந்த கட்டணமும் வாங்குவது கிடையாது. 10 சதவிகித நோயாளிகள் அவர்கள் விருப்பப்பட்டதைக் கொடுப்பார்கள். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்கள், அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றில் இருந்தும் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

ஒரு வருடத்தில் 2 ஆயிரம் பேர் புதிதாக சிகிச்சை பெற வருகின்றனர். பழைய நோயாளிகளாக ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முன்னாள் முதல் அமைச்சரான பேரறிஞர் சி.என். அண்ணாதுரை அவர்களும் எங்களிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்’’ என்கிற டாக்டர் சாந்தா, புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

‘‘தற்போது அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் புற்றுநோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்காக பிற மாநிலங்களுக்கோ, வெளியூர்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கனடா மற்றும் இங்கிலாந்தில் மட்டும் இருந்த கதிர்வீச்சு சிகிச்சை, இந்தியாவிலேயே முதல்முறையாக இங்குதான் கொண்டு வரப்பட்டது.

1954-லிருந்து 1960, 65 வரை எங்களிடம் புற்றுநோய் சிகிச்சையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால், 1970-லிருந்து குறிப்பிடத்தக்க வகையில் அதிநவீன சிகிச்சைகளை வழங்கத் தொடங்கினோம். 1950-களில் குணப்படுத்தவே முடியாது என்று இருந்த புற்றுநோய்களை 60 சதவீதம் குணப்படுத்த முடியும் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளோம். புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக இந்தியாவுக்கும் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சிதான் இதற்கு முக்கிய காரணம்.

முந்தைய காலத்தில் எக்ஸ்-ரே மட்டும்தான் இருந்தது. தற்போது சிடி மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெட் ஸ்கேன், கேலியம் ஸ்கேன்(Gallium Scan), கேமா கேமரா(Gamma Camera) என பலவிதமான ஸ்கேன்கள் உள்ளன. தன்னார்வலர்கள் முயற்சியால் இந்த இன்ஸ்டிட்யூட் உருவானது. புதுப்புது வசதிகளை நாங்கள் முதல் தடவையாய் கொண்டு வந்தபோது, மற்றவர்கள் இது எப்படி சாத்தியம் என ஆச்சரியப்பட்டார்கள். இதற்கு அர்ப்பணிப்பும், லட்சிய உணர்வும்தான் முக்கிய காரணம்.

முத்துலட்சுமி அம்மையாருடன் நாங்கள் பணியாற்றியபோது இவற்றை சொல்லித்தான் எங்களை ஊக்கப்படுத்துவார். புற்றுநோயில் ரத்தப் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என பல வகைகள் உள்ளன. இவற்றைக் குணப்படுத்த சர்ஜரி, கதிர்வீச்சு(Radio Therapy), கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகளைக் கையாள்கிறோம்.

பல வருடங்களாக நாம் புற்றுநோயைக் குணப்படுத்த சர்ஜரி மற்றும் ரேடியோதெரபியைத்தான் பயன்படுத்தி வந்தோம். 1970-க்குப் பிறகுதான் மருந்து, மாத்திரைகளால் இந்நோயைச் சரி செய்கிற கீமோதெரபி முறை அறிமுகமானது. இதன் பின்னர் ரத்தப்புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் குணப்படுத்துவது எளிதானது.

மேலே சொன்ன 3 சிகிச்சை முறைகளையும் ஒன்றாக கலந்து Multi Modality Treatment தந்தால் ரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் முதலானவற்றை ஆரம்ப நிலையில் 90% சரி செய்யலாம். நோய் சிறிது முற்றிய நிலையில் வந்தால் 100 பேரில் 60, 70 பேரைக் குணப்படுத்தலாம். Targeted Therapy, Immuno Therapy போன்ற சிகிச்சை முறைகளும் அதற்கான மருத்துவர்களும் உள்ளனர்.

புற்றுநோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே வந்தால் 100 பேரில் 95 பேரைக் குணப்படுத்தலாம். ஆனால், மக்களிடம் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனவே, பொதுமக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக Preventive Oncology Department என தனியாக ஒரு துறை வைத்துள்ளோம். இதன்மூலம், 6 மாவட்டங்களில் விழிப்புணர்வு மையம் ஏற்படுத்தி உள்ளோம். எதிர்வரும் காலங்களில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதனை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம்’’ என்கிறார்.

கூடுதல் இயக்குனரான டாக்டர் செல்வ லஷ்மி மருத்துவமனை பற்றிப் பேசுகிறார்.

‘‘முன்னரெல்லாம் ரேடியேஷன் சிகிச்சை என்றாலே பயப்படுவார்கள். இதனால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். உடலில் கதிர்வீச்சு தரப்பட்ட இடம் பார்ப்பதற்கே ஒருமாதிரியாக இருக்கும். தற்போது குறைவான அளவில் பக்க விளைவுகள் உண்டாகும் அளவுக்கு இத்துறை வளர்ந்துள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு 1980-களில் Internal Radiation சிகிச்சை பல மணி நேரம் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.

தற்போது சில நிமிடங்களிலேயே இச்சிகிச்சை முடிந்து விடுகிறது. இவை போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் நோயாளி தரப்பிற்கு மன நிறைவை தரக்கூடியதாக உள்ளன. ஏனெனில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டது போன்ற மனநிலையுடன்தான் இங்கு வருகின்றனர். அந்த நிலையில் இருந்து அவர்கள் மீண்டு போகும்போது, அவர்களுடைய முகத்தில் ஒரு சந்தோஷ களை தென்படும்.

எங்களுக்கு அதுதான் மனநிறைவைத் தரக்கூடிய மிகப்பெரிய விஷயம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையில் கண்டறிந்து தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு அதிகம்; செலவும் குறைவு. முக்கியமாக Cancer Biology என்பது முக்கியம். ஏனெனில் எல்லா புற்றுநோயும் ஒரே மாதிரி இருக்காது’’ என்கிறார்.

திருமதி. தங்கம் சாமிநாதன் (தனியார் பள்ளி ஆசிரியை, மாதவரம்)

‘‘கடந்த 2010-ல் கர்ப்ப பையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அதற்காக, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கிருந்த டாக்டர்கள்தான், ‘அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போங்க, நல்லாப் பார்த்துக்குவாங்க’ என்றார்கள். அதன்படி இங்கே வந்தேன். டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சைகளாலும், ஆதரவாலும் இப்போது குணமாகி வருகிறேன். வருடத்துக்கு ஒரு முறை செக்கப் பண்ண சொல்லி இருக்கிறார்கள். அதன்படி தவறாமல் செய்வதால் நன்றாக இருக்கிறேன்’’ என்கிறார்.

திருமதி. இந்து(கேரளா)

‘‘எனக்கு 18 வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அடையார் புற்றுநோய் மையத்தில் குணப்படுத்தி விடுவார்கள் என கேள்விப்பட்டு இங்கு வந்தேன். மருந்து, மாத்திரைகள் எதுவும் இல்லாமல் கதிர்வீச்சு மூலமாக, அதை சரி செய்தார்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிதுதான் என்பதை பலரிடமும் பெருமையோடு இப்போது சொல்லி வருகிறேன்’’ என்கிறார்.

நோய் ஆரம்ப நிலை கண்டறிதல் மற்றும் நோய் தடுப்பு மையத்தின் மருத்துவர் மல்லிகா, ‘‘இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புகையிலை சார்ந்த புற்றுநோய் போன்றவற்றுக்கு முறையான பரிசோதனை செய்யப்படுகிறது. நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் இதே மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. ரத்த பரிசோதனை, மார்பக மேமோகிராம், அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகிறது.

பரிசோதனை செய்துகொள்பவரின் பொருளாதார நிலை அறிந்து குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவரோடு சேர்த்து செவிலியர் பணியாளர்கள் என 16 பேர் கொண்ட குழு பணியாற்றுகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு நோய் வராமல் இருக்க அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், சுய பரிசோதனை முறைகள் போன்றவை சொல்லி கொடுக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையை மையமாக வைத்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று அங்கு உள்ள ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இலவச புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு 53 பேர் கொண்ட மருத்துவ குழு செயல்படுகிறது.’’

ஜானகி (செவிலியர்)

‘‘இந்த மருத்துவமனையில் 246 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். இங்கு பணியாற்றும் செவிலியர்களுக்கு புற்றுநோயாளிகளை கவனித்துக் கொள்வதற்குரிய பயிற்சிகள் முறைப்படி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு புற்றுநோய் நோயாளிகள் மனரீதியாக பலவீனமாகவும், ஒருவித அச்சத்துடனும் காணப்படுவார்கள். அதனால் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து அவர்களை இந்த நோயிலிருந்து சீக்கிரம் குணமடைவதற்கான பணிகளை செய்கிறோம்.

தினமும் நோயாளிகளுக்கு உணவு சரியான நேரத்தில் கொடுக்கப்படுகிறது, அவர்களுடைய படுக்கை தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. மருத்துவர் தந்த மருந்து அவர்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக புற்றுநோயாளிகளை பொறுத்தளவில் அவர்களுக்கு தரப்படும் மருந்துகள் கொடுக்கப்படும் நேரம் ரொம்பவும் முக்கியம். அதை கவனத்தில் கொண்டும் செவிலியர்கள் செயல்படுகிறார்கள். ஒரு புற்றுநோயாளியை காப்பாற்றுவதற்கு செவிலியரின் பங்கு இன்றியமையானது.’’

குழந்தை புற்றுநோய் மருத்துவர் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன்…

‘‘150 வகையான புற்றுநோய்கள் மனிதர்களுக்கு வருகிறது. இதில் குறிப்பாக குழந்தைகளுக்கு ரத்தப்புற்றுநோய், மூளை புற்றுநோய், சிறுநீரக, எலும்பு புற்றுநோய் போன்றவை குழந்தைகளை பாதிக்கிற புற்றுநோயாக இருக்கிறது. பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்களுக்கு உரிய கிசிச்சை அளிக்கப்படுகிறது. அதிகபட்சம் 6 வாரம் வரை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன்பிறகு தேவையை பொறுத்து குழந்தைக்கு வீ்ட்டிலிருந்து வரச்சொல்லி அவர்களுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கிறோம். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு போன குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் அவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

முக்கியமாக, இது சம்பந்தமான விழிப்புணர்வு வரவில்லை. புற்றுநோய் சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடிகிற நோய்தான். இதை வெளியில் சொல்ல வெட்கப்படவோ, பயப்படவோ தேவையில்லை. இது முறையான மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடியதுதான்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்புக்கு மிளகாய் பொடி – மும்தாஜ் அதிரடி!!!(சினிமா செய்தி)
Next post உச்சி முதல் பாதம் வரை!!(மகளிர் பக்கம்)