Medical Trends!!(மருத்துவம்)
ஜிம்முக்குப் போய்தான் ஆகணுமா?!
ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது சாத்தியமில்லாவிட்டாலும், அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்தாலே போதுமானது என்கிறது American heart association. உடல்ரீதியான செயல்பாடு மற்றும் இறப்பு விகிதங்கள் பற்றிய தேசிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இந்த முடிவைக் கண்டுள்ளனர்.
படியேறுவது, செல்லப் பிராணிகளை வாக்கிங் கூட்டிச் செல்வது, பஸ் அல்லது ரயில் நிலையத்துக்கு நடந்து செல்வது போன்ற சின்னச் சின்ன வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களின் உடலியக்கங்கள் சிறப்பாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.
வெளியே வா பறவையே…
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் முதியவர்களைவிட, தினமும் 1 மணி நேரமாவது வெளியில் செல்பவர்கள் நீண்ட நாள் வாழ்வதாக Geriatric society நாளிதழ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 70 – 90 வயதுள்ள 3 ஆயிரத்து 375 பேரிடம், வீட்டை விட்டு வெளியில் செல்பவர்களின் சமூக மற்றும் செயல்பாட்டு நிலை மற்றும் நீண்ட கால வலி, பார்வை அல்லது கேட்கும் திறன் குறைபாடு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், அவர்களுடைய ஆயுள் நீட்டிப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் குறைந்த அளவிலான உடற்பயிற்சி செய்பவர்களாகவும், குறைவான இயக்கங்கள் கொண்டவர்களாக இருந்தபோதிலும், வீட்டிலேயே இல்லாமல் வெளியில் சென்று சமூகத்தோடு இணைவதால் மட்டுமே நீண்டநாள் வாழ்பவர்களாக இருப்பதாக முதன்மை ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
புகைப்பிடிப்பவரா நீங்கள்?!
புகைப்பிடிப்பதால் நுரையீரல் பழுதடையும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், ஆப்பிளும் தக்காளியும் அதிகமாக சாப்பிட்டால், புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் செயல்பாட்டின் சரிவை ஓரளவு குறைக்க முடிவதாக European Respiratory நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த உணவுகளில் காணப்படும் சில கூறுகள் புகையிலையால் சேதமடைந்த நுரையீரல்களுக்கு உதவக்கூடும்.
கண்ணை காக்கும் குர்குமின்!
Glaucoma எனப்படும் கண் திரவ அழுத்த நோய் நமது பார்வையைப் பறிக்கக்கூடியது. இந்த நோயால் ஏற்படுகிற அதிகளவிலான கண் அழுத்தத்தைத் தணிக்க, மஞ்சள் கிழங்கிலுள்ள குர்குமின் என்ற பொருள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது எளிதாகக் கரையாது. எனவே, கிளாகோமா நோயாளிக்கு குர்குமின் நல்ல பலன் தர வேண்டும் என்றால் தினமும் 24 மாத்திரைகள் வரை எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கும்.
ஆனால், அத்தனை மாத்திரைகள் உடலில் கலந்தால் பக்க விளைவாக வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் குர்குமினை நேரடியாக கண்ணில் விடும் சொட்டு மருந்து வடிவில் தயாரித்துள்ளனர்.
கொசுவால் கொசுவை ஒழிக்கும் நுட்பம்!
ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் கொசுக்களை ஒழிக்கும் பரிசோதனைக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதில்லை. எனவே, இனப்பெருக்கத் திறன் நீக்கப்பட்ட ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் ஏராளமாக உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
மேலும் ஆய்வகத்தில் உருவாகும் பெண் கொசுக்களிலிருந்து ஆண் கொசுக்களை மட்டும் பிரித்தெடுக்க ரோபோக்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மலடாக்கப்பட்ட ஆண் கொசுக்கள் மூலம் கொசுக்களை ஒழிக்கும் இந்தமுறை 50 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதுதான். ஆனால் ஆண் கொசுக்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமும் அவற்றை அதிக அளவில் பரப்பி வெற்றி கிடைத்திருப்பதும் இதுவே முதல் முறை.
வருகிறது… செயற்கை இதயம்!
ஹார்வர்டு மருத்துவர் குழு ஜெலாட்டின் போன்ற நுண் பொருட்களை வைத்து இதயத்தின் இடது பக்க அறையைப் போன்ற வடிவத்தை சமீபத்தில் உருவாக்கினர். அந்த வடிவத்தை சாரமாக வைத்து நிஜ மனித இதயத்திலிருந்து செல்களை ஆய்வகத்தில் வளர்த்தனர். சில வாரங்களில் அந்த ஜெலாட்டின் கரைந்து போகவே இதய செல்கள் கூட்டாக வளர்ந்து துடிக்க ஆரம்பித்தன. விரைவில் இதேபோல ஒரு செயற்கை இதயத்தைத் தயார் செய்து மருந்துகளை சோதிக்க இருப்பதாக ஹார்வர்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய மாத்திரை!.
உலகெங்கும் ஆண்டுக்கு 70 ஆயிரம் கர்ப்பிணிகள், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ரத்தப் போக்கால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க பரவலாக ஆக்சிடாசின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வெப்பத்தால் விரைவில் செயலிழந்துவிடும் தன்மையைக் கொண்டது. இதனால் மின் வசதியும், குளிர் சாதன வசதியும் தொடர்ந்து கிடைக்காத பகுதிகளில் இந்த மருந்தைப் பயன்படுத்த முடிவதில்லை.
உலக சுகாதார நிறுவனம் கர்ப்பிணிகளின் ரத்தப்போக்கைத் தணிக்க ஒரு புதிய மருந்தை சமீபத்தில் பரிசோதித்துப் பார்த்துள்ளது. 10 நாடுகளில் 30 ஆயிரம் கர்ப்பிணிகளிடம் நடத்திய பரிசோதனையில் கார்பிடோசின் என்ற புதிய மருந்து நல்ல பயனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை பராமரிக்க குளிர் சாதனம் தேவையில்லை என்பதால் பல்லாயிரம் கர்ப்பிணிகளின் உயிர் காக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மனித மனதை புரிந்து செயல்படும் ரோபோ!
மனிதனும் ஹியூமனாய்டு எனப்படும் மனித வடிவ ரோபோக்களும் சகாக்களாக சேர்ந்து வேலை செய்யும் காலம் விரைவில் வரப்போகிறது. அப்போது மனிதர்கள் சொல்வதைப் புரிந்து கொண்டு வேலை செய்யும் திறன் ரோபோக்களுக்கு அவசியம். இதற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம்.
அதன் செயற்கை நுண்ணறிவுத் துறையிலுள்ள ஆய்வாளர்கள் பாக்ஸ்டர் என்ற மனித வடிவ ரோபோவைத் தங்கள் மனதாலும் சைகையாலும்
கட்டுப்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளனர்.
புதிய இன்ஸ்யூரன்ஸ்…
தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை, மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்தத் திட்டம் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த தேசிய காப்பீட்டின் மூலம் தமிழகத்திலுள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களிலுள்ள சுமார் 2.85 கோடி பேர் இனி ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை உரிய மருத்துவமனைகளில் பெறலாம். இதற்குரிய பயனாளிகள் ஏற்கெனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கலாம். அதில் விடுபட்டவர்களையும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து புதிதாக காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டு செயல்பட உள்ளது.
புத்திசாலி கண்ணாடி!
வயது ஆக ஆக கண்களின் பார்வைத் துல்லியம் குறைகிறது. இந்தக் குறையைப் போக்க கண் கண்ணாடிகள் பெருமளவு உதவினாலும் அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன. ஒரே கண்ணாடியில் படிப்பது, கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற மூன்று வசதிகளையும் கொண்ட கண்ணாடிகள்கூட கண்களுக்கு அசதியைத் தரக்கூடியவைதான்.
இதற்கு தீர்வு கண்டிருக்கிறது அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். இந்தக் கருவியிலுள்ள ஆடிக்குள் இருக்கும் திரவத்தை மின் தூண்டல் செய்வதன் மூலம் கிட்டப் பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை வினாடியில் மாற்றிவிட முடிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்ட இந்தக் கண்ணாடியை, ஒருவர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.
ஜாக்கிரதை… ஜாக்கிரதை….
பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும், வீட்டுக்குள் நுழையும்போதும், வந்த பின்பும் மொபைல் போன், லேப்டாப்புடன்தான் இருக்கிறார்கள். மேலதிகாரிகளோடு கான்பரன்ஸ் கால், இ-மெயில்களுக்கு பதில் அனுப்புவது என வீட்டுக்கு வந்தாலும் அலுவலக வேலைகளில் மூழ்கிவிடுகிறார்கள்.
எப்போது போன் கால் வருமோ? எப்போது மெயிலுக்கு பதில் அனுப்ப வேண்டுமோ? என்று பதற்றமான மனநிலையிலேயே இருப்பதால், குடும்ப உறவுகளில் மோதல்களை ஏற்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு வைப்பதாக ‘அகாடமி ஆஃப் மேனேஜ்மென்ட்’டின் ஆய்வறிக்கை சொல்கிறது.
பலன் தராத கிருமி நாசினிகள்?!
கைகளின் சுத்தத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கிருமி நாசினிகளுக்கு டிமிக்கி கொடுக்க பாக்டீரியாக்கள் கற்றுக்கொண்டு விட்டதாக, Science Translational Medicine என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் 1997 முதல் 2015 வரை சேகரிக்கப்பட்ட ஒரு வகை பாக்டீரியாவை ஆய்வுக்கு உட்படுத்தினர் விஞ்ஞானிகள்.
சோதனைக்கு எடுக்கப்பட்ட 139 கிருமி மாதிரிகளில் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட பாக்டீரியாக்கள், ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளை சகித்துக்கொண்டு பிழைக்கப் பழகிவிட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அப்பா ஆகணுமா… குடிப்பதை நிறுத்துங்கள்
குழந்தையின்மை பிரச்னைக்கு ஆண், பெண் இருவரிடையும் இருக்கும் பல்வேறு குறைகள் காரணமாக சொல்லப்படுகிறது. பெற்றோராகும் திட்டத்தில் இருக்கும் தம்பதிகள் குறைந்தபட்சம் 3 மாதத்திற்கு முன்பாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. குழந்தையின்மைப் பிரச்னைக்கு குடிக்கும் ஆண்களின் விந்தணுக்கள் நீர்த்துப்போவதும் ஒரு காரணமாகிறது.
கழுத்தை இறுக்கும் டை வேண்டாமே…
வெள்ளைக்காரனைப் பார்த்து நாமும் டை கட்ட ஆரம்பித்து, அவர்கள் நாட்டைவிட்டு போனாலும் இன்னும் நம்மை விட்டு போகவில்லை. கழுத்தை இறுக்கி டை கட்டுவதால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் 7.5 சதவீதம் குறைவதாக எம்.ஆர்.ஐ ஸ்கேனில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘ரத்த ஓட்டம் மூளைக்குச் செல்லவில்லை என்றால், அறிவாற்றல் பாதிக்கும்’ என்கிறது நரம்பியல் கதிரியக்க மருத்துவம்.
எடையைக் குறைத்தால் புற்றுநோயைத் தவிர்க்கலாம்.
எடை இழப்பால், ஹார்மோன் சுழற்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு பெண்ணுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என ‘ஜர்னல் ஆஃப் கிளினிகல் ஆன்காலஜி’ இதழ் வெளியிட்டுள்ளது. உடல்பருமன் என்பது மார்பக புற்றுநோய் அபாயத்திற்கான ஒரு முக்கிய காரணியாகும். ஏனெனில், இந்த ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உடல் கொழுப்பு சேகரிப்பு என்ஸைம்களால் ஏற்படக்கூடும்
என்கிறது இந்த ஆய்வு.
Average Rating