கடலோடிகளின் கண்ணீர் கதை!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 39 Second

ஆண்டு 2017 நவம்பர் இறுதியில் வட இந்தியப் பெருங்கடலில் இலங்கை அருகே ஒக்கி புயல் உருவானது. இது இலங்கை, லட்சத்தீவு, தென் இந்தியா, மற்றும் மாலத்தீவில் பெரும் சேதத்தை ஏற்படுத்த, கூடவே ஏராளமான தமிழக மீனவர்களின் உயிர்களைக் காவு வாங்கிச் சென்றது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

அரசு உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கையில் இறங்காததால், தமிழக கேரள மீனவர்கள் மொத்தம் சேர்த்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தோராயமாகக் கூறப்பட்டாலும், அரசின் மிதமிஞ்சிய மெத்தன நடவடிக்கையால் கொத்துக் கொத்தாக மீனவர்கள் மீன்களுக்கு இரையாகினர். மீன் வேட்டைக்குச் சென்றவர்களை பெருங்கடலா வேட்டையாடியது? பொறுப்பற்ற இந்த அரசே வேட்டையாடியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட 194 மரணங்களுக்கும், கிடைக்காத உடல்களுக்கும் சேர்த்து, கிடைக்கப்பெறாத நீதிக்காக `ஒக்கி’ புயலின் தாக்கத்தை, அதன் சீற்றத்திலிருந்து மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய-மாநில அரசுகளின் மெத்தனத்தையும், அதன் விளைவாய் நேர்ந்த உயிர்ப்பலிகளையும் ஆவணப்படுத்தியிருக்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அருள் எழிலனின் இயக்கத்தில் உருவான ‘பெருங்கடல் வேட்டத்து’ மற்றும் வழக்கறிஞரும், ஆவணப்பட இயக்குனருமான திவ்யா பாரதி உருவாக்கிய ‘ஒருத்தரும் வரலே’ ஆவணப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மீனவர்களின் துயரத்தை வெளிச்சமிட்டும் காட்டி நம் மனங்களைக் கனக்கச் செய்தன.

பெருங்கடல் வேட்டத்து

கடற்கரையோர மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து துயருற்று நின்றார்கள். புயல் ஓய்ந்த மறுநாளோ அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ கடலின் ஐம்பது நாட்டிக்கல் மைலுக்கு அந்தப் பக்கம் கப்பல் மூலம் தேடியிருந்தால்கூட இன்றைய தேதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

உங்கள் பிள்ளைகள் அனைவரும் காப்பாற்றப்பட்டு விடுவார்கள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் நம்பிக்கை கொடுத்தார்களே, எங்கே எங்கள் பிள்ளைகள்? என ஒரு தாய் கண்ணீரோடு அழுது அறற்றிக்கொண்டிருந்தார்.கடல் கொண்ட மரண ஓலங்களின் சாட்சியாய், நாலைந்து நாட்கள் வரையிலும் ஆர்ப்பரித்த கடலுக்குள் மூச்சைப் பிடித்துப் போராடி, சிறுநீரைக் குடித்து, காப்பாற்ற ஒருத்தரும் வராத நிலையில், தாக்குப் பிடிக்க முடியாமல், நுரையீரல்களில் உப்புநீர் ஏறி, துடிக்க துடிக்கச் செத்துப் போனவர்களின் கதைகளை உடன் இருந்து பார்த்து அந்த உடல்களை கரை சேர்க்க முடியாமல் கரை சேர்ந்தவர்கள் சாட்சியாகிப் பேசினார்கள்.

இனிமேல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை என முடிவுக்கு வந்த மக்கள், அவர்களே படகுகளை எடுத்துக்கொண்டு உடல்களைத் தேடி கடலுக்குள் சென்ற நிலையில், கடலில் கண்ட காட்சிகளாய் விவரிக்கும் அவர்களின் துயரம் நம்மை கலங்கடிக்கிறது. ஒக்கி புயல் வீசியபோது அரசின் மீட்பு நடவடிக்கைகளில் காட்டப்பட்ட மெத்தனம் பல நூறு மீனவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்திருந்தது.

இழந்த அத்தனை உயிர்களுக்கும் அரசு இழப்பீடாக அறிவித்த 20 லட்ச ரூபாய்தான் விலை மதிப்பா? என்ற அவர்களின் ஒற்றைக் கேள்வியில் நம் மனம் பதறுகிறது. இந்தியப் பொருளாதாரத்துக்காக ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய்வரை வருவாயாக ஈட்டித் தரும் மீனவர்களாகிய எங்களுக்கே இந்த நிலை என்றால் மற்ற மக்களின் பாதுகாப்பு? என்ற அந்த மக்களின் கேள்விகள் படம் நெடுகிழும் மத்திய மாநில அரசை நோக்கி கேள்விகளால் தொலைக்கின்றது.

காலநிலை தெரியாமல் எப்போதும் கடலுக்குள் போவதில்லை மீனவர்கள். அவர்களுக்கு முறையாக அறிவிப்பதற்கென்றே புயல் எச்சரிக்கைக் கூண்டுகளும், வானொலி போன்ற ஊடகங்களின் வாயிலாய் அறிவிக்கும் நடைமுறைகள் வழக்கில் இருக்கின்றன. புயல் எச்சரிக்கையையும் தாண்டி தங்கள் உயிரை மீனவர்கள் கண்டிப்பாக பணயம் வைக்கமாட்டார்கள்.

நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மட்டும் நீடிப்பதாகச் சொல்லி வந்த வானிலை ஆய்வு மையம், திடீரென ஒக்கி புயல் அறிவிப்பை வெளியிடுகிறது. இது குறித்த தகவல் எதுவும் முன்கூட்டியே தெரிவிக்கப்படாமையால் ஏற்கனவே கடலுக்குள் சென்றுவிட்ட மீனவர்கள் புயலில் அகப்பட்டு சிக்கிச் சிதைந்து அலைக்கழிக்கப் பட்டுள்ளனர். நடுக்கடலில் உயிருக்காய் மரணப் போராட்டம் நடத்தி தத்தளித்துள்ளனர்.

சிலர் கடலில் புயலின்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு குஜராத்தில் படகோடு உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு கரையொதுங்கியுள்ளனர். சிலர் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிலை என்னாயிற்று என்று தெரியாமல் நீடித்த நிலையில், மத்திய மாநில அரசு சரியான தகவல்களைக் கொடுக்காமல் உயிர்களோடு விளையாடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தன எனக் கதறுகின்றனர் மீனவ மக்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் அருள் எழிலன், “நான் அவர்களின் அகத்திலிருந்து பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். நன்னீரும் கடல் நீரும் கலக்கும் உயிர்ச்சூழல் போல இந்த ஆவணப்படத்தை என்னளவில் உருவாக்கியிருக்கிறேன். நான் சுதந்திரமானவன். சுயாதீனமான கலைஞன். என்னளவில் நான் எழுதியும் பேசியும் வருகிறவைகளில் இதுவும் ஒன்று. வாழ்வும், கொண்டாட்டங்களும், துயரங்களும் நிறைந்த இந்த மக்களின் வாழ்வை நீங்களும் பாருங்கள்” என்றார்.

ஒருத்தரும் வரேல…

ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள் துயரை அறிந்து கொள்ள நேரடியாக அவர்களை சந்தித்து ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்தை இயக்கிய திவ்யா பாரதியின் ஆவணப்படம் டிரைலர் வெளியான போதே காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். இந்நிலையில் அவரின் ஆவணப்படம் இணையத்தில் வெளியானது.

கடலோர மீன்பிடிப்பு மட்டுமல்லாமல் அலைகடல் தாண்டி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் சிறப்பு குமரி மாவட்டத்து பாரம்பரிய மீனவர்களுக்குண்டு. ஏறத்தாழ 40000 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்போர். மீன்பிடித் தொழில் மீனவர்களுக்கான வாழ்வாதாரம் மட்டுமல்ல, ரூ.60000 கோடி அந்நியச் செலாவணியை அள்ளித் தந்து இந்தியப் பொருளாதாரத்தினையும் தூக்கிப் பிடிக்கிறது.

இலங்கை போன்ற சிறிய நாடுகளே தங்களின் மீனவர்களுக்காக அங்கே சேட்டிலைட் வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறது. வளர்ந்திருக்கும் அறிவியல் தொழில் நுட்பத்தின் துணையோடும், செயற்கைக் கோள்களின் உதவியுடனும், நொடிக்கு நொடி கால நிலை மாற்றத்தை அறிந்து சொல்ல, தனியார் வானிலை ஆய்வாளர்களாலே முடிகிறது. ஆனால் இந்த அரசு? மனிதர்களைத்தான் மீட்டுத் தரவில்லை.

மனித உடல்களையுமா? இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாதது வருத்தமளிக்கிறது என கதறினர் மக்கள். நவம்பர் 30ம் தேதி வரை காற்றழுத்த தாழ்வுநிலை என்றே சொல்லி வந்த அரசாங்கம் , புயல் வந்ததை மதியம் 12.30க்கு அறிவிக்கிறது. அந்த நேரத்தில் புயல் தாக்கியேவிட்டது. ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கு மிகவும் அலட்சியமாக அந்த அளவு தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார்கள்.

ஆனால் புயலை முன்கூட்டியே அறிந்துகொள்ள டாப்ளர் ரேடார் வாங்க அரசு 20 கோடி செலவிட்டிருக்கிறது. “100 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு தகவல் சொல்ல முடியவில்லை என்கிறார்கள். ஆனால் மீனவர்களோ, 500 நாட்டிக்கல் மைல்வரை சங்கிலித்தொடராக “சாவுச்செய்தி” அனுப்பி மாலைக்குள் வீடு திரும்பும் கதைகளை வரிசையாகச் சொல்கிறார்கள்.

கடற்கரைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமாக்கி பாரம்பரிய மீனவர்களை அழிப்பது. அவர்களோடு கடற்கரையையும் கபளீகரம் செய்வது. தமிழகம் மட்டுமின்றி இந்திய கடற்கரை முழுதும் வளர்ச்சி என்கிற பெயரால் சாகர் மாலா போன்ற அழிவு திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக எவ்வாறு நம் கடல் வளத்தை சூறையாடுகிறார்கள் போன்றவற்றை தொடர்ந்து அப்பகுதி மக்கள் விவரிக்கின்றனர்.

தரையில் புயலும் கடலில் புயலும் ஒன்றல்ல. தரையில் அடிக்கும் புயலில் தென்னைமரங்கள் தலைசாய்ந்ததுபோல் காற்றடிக்கும் காட்சிகள் நம் கண்முன் விரியலாம். வீசி அடிக்கும் சுழற் காற்றில் வாகனங்கள் தூக்கி வீசப்படலாம், ஆனால் கடலில் புயல் என்றால்? சுற்றிச்சுழன்றடிக்கும் காற்றில் வானுக்கும் கடலுக்கும் பிரம்மாண்ட கறுப்புநிற கயிற்றால் கட்டி கடலுக்குள் இழுப்பதுபோல் உடைந்த படகுகளும் பொருட்களும், நீரும், சில சமயத்தில் மனித உடல்களும், பிய்த்தெறியப்பட்ட உடல் பாகங்களும் பறந்ததையும்,

திடீரென்று கண் முன் பனைமர உயரத்தில் மேலெழும்பி படகை விழுங்கிச் செரிக்கும் கடலலையையும், திக்கறியா கடலில் வெறும் கேன்களைக் கட்டிக்கொண்டு நம்பிக்கையற்று மிதந்ததையும், உடன்வந்த மீனவன் உடலையாவது மீட்டு அவன் குடும்பத்திடம் சேர்த்ததையும், “என்னால இனியும் முடியாது, நீங்களாவது கரை சேருங்க” என்றபடி காலுக்கடியில் கொஞ்சகொஞ்சமாக மூழ்கிய நண்பனின் இழப்பையும், கலவரம் மாறாத கண்களோடு விவரிக்கும் மீனவர்களைப் பார்த்து அந்த பயம் நமக்குள்ளும் ஒட்டிக்கொள்கிறது.

படம் முடிவடைந்த நிலையிலும், “அந்த பொணத்தையாச்சும் குடுங்களேன், நாங்க ஒருமுறை கட்டிப்புடிச்சு அழுதுக்கறோம்” என்று அழுகையால் அரற்றும் பெண்ணும், “அய்யோ என் மோனே… இந்த கன்னத்த மீனு கடிச்சுதோ.. இந்த வாய மீனு கடிச்சுதோ.. இந்த கண்ண மீனு கடிச்சுதோ” என்று கையை உதறி உதறி அரற்றி அழும் தாய்.. நம் கண்களை விட்டு நீங்கவில்லை.‘ஒருத்தரும் வரல.. ஒருத்தரும் வரல.. உசுர கொடுத்த கடலம்மா, எங்க உடலயாச்சும் கொடு’ என்ற கவிஞர் தனிக்கொடியின் பாடல் வரிகள் நம் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு!!(கட்டுரை)
Next post Medical Trends!!(மருத்துவம்)