பேரம் பேசுதலும் சோரம் போதலும்!!(கட்டுரை)
வாய்ப்புகளுக்காகவும் தக்க தருணங்களுக்காகவும் ஏனைய சமூகங்கள் காத்துக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில், வாய்ப்புகள் கிடைப்பதே, அரிதாக நிகழ்கின்ற அரசியல் சமூகப் பின்னணியில், கிடைக்கின்ற நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம், தவறவிட்டுவிட்ட பஸ்ஸுக்காக, ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்தும் கைகாட்டுகின்ற சமூகமாக, முஸ்லிம்கள் இருப்பதைக் கண்டு, மனம் விசனப்படுகிறது.
நாம், என்னதான் சொன்னாலும், இலங்கை என்பது, சிங்கள மொழியைப் பெரும்பான்மையாகப் பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பதை, மாற்ற முடியாது என்ற வகையில், பெரும்பான்மைச் சமூகத்தின் அபிலாஷைகள், இயல்பாகவே ஆட்சியாளர்களாால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதேபோல், முதலாவது சிறுபான்மை இனமான தமிழர்கள், தம்முடைய அபிலாஷையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, கடந்த 50 வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள்.
இன்று, தமிழ்க் கட்சிகள் பல அணிகளில் முரண்பட்டு நிற்பதென்னவோ உண்மைதான். ஆனாலும், மக்களின் பிரச்சினை என்று வரும்போது, அவர்கள், பொதுவானதொரு புள்ளியில் ஒன்றுகூடுகின்றனர்; பொதுவான அபிலாஷைக்காக, கூட்டாகக் குரல்கொடுக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நினைத்திருந்தால், இந்த அரசாங்கத்தில் பெரிய பதவி ஒன்றைப் பெற்றிருக்கலாம்; வேறு சிலர் அமைச்சர்களாகி இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.
அதற்கு, மறைமுகக் காரணங்களும் இருக்கலாம் என்பது ஒருபுறமிருக்க, வெளிப்படையான காரணம், ‘நக்குண்டு நாவிழந்து விடக் கூடாது’ என்பதாகும். இன்னும் விளங்கும்படி கூறினால், முஸ்லிம்களின் அரசியலால், அந்தச் சமூகத்துக்கு ஏற்பட்ட நிலை, தமிழர்களுக்கும் வந்துவிடக் கூடாது என்பதாகும்.
அதற்காக, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறவில்லை. குறிப்பிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம்களுக்கு அபிவிருத்திசார் சேவைகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படையான விடயம்.
அவ்வாறே, ‘அத்தி பூத்தாற்போல்’ எப்போதாவது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தும் இருக்கின்றார்கள் என்பதை மறைத்து, இப்பத்தியை எழுத முடியாது. ஆனால், உருப்படியாகச் சொல்லிக் கொள்ளும்படி, எந்த அபிலாஷைகளையும் கடந்த 25 வருடங்களில், முஸ்லிம் அரசியல் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதைச் சொல்லாமல் விடவும் முடியாது.
இணக்க அரசியலையே முஸ்லிம் அரசியல்வாதிகள் பெரும்பாலும் இப்போது கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், இதைவிடவும் இறுக்கமான அரசியல் கோட்பாட்டில் நின்றுகொண்டே கலாநிதி பதியுதீன் மஹ்மூத், சேர் ராசிக் பரீத், பாக்கீர் மாக்கார், டி.பி. ஜாயா போன்றோர், இந்நாட்டு முஸ்லிம்களுக்கு, நீண்டகால அடிப்படையில் நன்மை பயக்கும், பல சேவைகளைச் செய்தார்கள்.
அவர்கள், தனிக்கட்சி வைத்திருக்கவில்லை; முஸ்லிம்களின் ‘தேசியத் தலைவர்’ என்று, அவர்கள் தம்மைச் சுயபிரகடனம் செய்யவும் இல்லை.
இன்று, முஸ்லிம் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்படும் வெற்றுக் கோஷங்களை எழுப்பி, வாக்குகளை அவர்கள் சூறையாடியதாகவும் கூற முடியாது.
ஆனால், பெரும்பான்மைக் கட்சிகளுக்குள் இருந்து கொண்டே, முஸ்லிம்களுக்கான, பெரும் பெரும் சேவைகளை மிகநுட்பமான முறையில் செய்தார்கள் என்பதை, யாராவது மறுக்க முடியுமா?
குறிப்பாக, முஸ்லிம்களின் கல்வி, சமூக மேம்பாடு, சட்டவாக்கங்களில் முஸ்லிம்களுக்குரிய பங்கு உறுதிப்படுத்தப்படுவதற்கு, இவர்கள் செய்தது போன்ற பங்களிப்பை, அதன்பிறகு வேறு யாரும் செய்யவில்லை.
அந்தவரிசையில், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அடுத்த மக்கள் தலைவராக மிளிர்கின்றார். இதனை, கலாநிதி பதியுதீன் மஹ்மூதே, தனது கடைசிக் காலத்தில் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு, அந்த வெற்றிடம் இன்றுவரை நிரப்பப்படவில்லை என்பதை, பின்னோக்கிப் பார்க்கின்றபோது உணர முடிகின்றது.
அஷ்ரபின் மரணத்துக்கு உடனடுத்ததாக, மேற்கொள்ளப்பட்ட நோர்வே உடன்படிக்கை தொடக்கம், அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல்முறை மாற்றம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசமைப்பு மறுசீராக்கம் வரை, அந்தப்போக்கு, தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
பதியுதீன் மஹ்மூதும், சேர் ராசிக் பரீதும் முஸ்லிம்களின் கல்விக்காகப் போராடினார்கள் என்றும், அஷ்ரப் முஸ்லிம்களுக்கான வெட்டுப்புள்ளியைக் குறைத்தார் என்றும், பல்கலைக்கழகத்தை, துறைமுகத்தை, பெரும் அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு வந்தார் என்றுமே, இன்னும் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றோம்.
இதைதவிர, கடந்த இரண்டு தசாப்தங்களில் இவ்வாறான ஒரு சாதனையையாவது முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் தளபதிகளும் சாதித்திருப்பதற்கான எந்த அத்தாட்சிகளையும் உணர முடியாத நிலைமை காணப்படுகின்றது.
அமைச்சர் இருவர், கிழக்கில் அபிவிருத்திசார் சேவைகளைச் செய்தார்கள்; வடக்கில், அரசியல்வாதிகள் ஓரிருவர் அவ்வாறான பணிகளை முன்னெடுத்தனர். ஆனால், மேற்குறிப்பிட்ட முன்னைய அரசியல்வாதிகள் மேற்கொண்டது போல, முஸ்லிம்களுக்கு நீண்டகால அடிப்படையில் பயன்தரக் கூடிய பெரும் சேவைகளை வடக்கு, கிழக்கிலோ அதற்கு வெளியிலோ, இப்போதிருக்கின்ற எந்த முஸ்லிம் அரசியல்வாதி செய்திருக்கின்றார்?
துருக்கித் தொப்பிக்காக போராடிய இந்தச் சமூகம், ஹபாயாவுக்காக, ஹலாலுக்காக, பள்ளிவாசல்களுக்காக, இனவாதத்துக்கு எதிராக, தாம் விரும்பிய மாட்டிறைச்சி போன்ற உணவுகளை உண்பதற்காகக் கூட, போராட முடியாத, கையாலாகாத சமூகமாக ஆக்கப்பட்டதற்கு, யாரெல்லாம் காரணம்?
வடக்கில் இருந்து, 1990ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இன்னும் பூர்த்தியடையவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற இலட்சக்கணக்கான ஏக்கர் காணிசார் பிரச்சினைகள், தீர்த்து வைக்கப்படவிலலை. அரசமைப்பு மறுசீரமைப்புக்கான உத்தேச வரைவில், முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புகள், சரியாகப் பிரதிபலிக்கப்படவில்லை.
யுத்தகாலத்தில், மோதலில் ஈடுபட்ட இருதரப்பாலும், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு, நீதி விசாரணை இடம்பெறவில்லை. தொல்பொருள் இடங்கள் எனச் சொல்லியும் வனம் எனக் குறிப்பிட்டும் முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை.
பேருவளை, திகன, அம்பாறை போன்ற இடங்களில், நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரங்களுக்கு எதிராக, அரசாங்கம் திருப்திகரமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு, முஸ்லிம்களுக்கு முழுமையான இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை.
அதுமாத்திமன்றி, “இனவாத ஒடுக்குமுறை இனி இருக்காது” என்ற எந்த உத்தரவாதத்தையும் முஸ்லிம் தலைமைகள் பெற்றுத்தரவில்லை. ஆகக் குறைந்தது, சிங்களப் பிரதேசங்களை நோக்கி நகரும் அரச அலுவலகங்களைத் தடுக்கவோ, அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் சவூதி அரேபியாவால் கட்டப்பட்ட வீடுகளைப் பகிர்ந்தளிக்கவோ முடியவில்லை.
மேற்சொன்னதும் சொல்லப்படாததுமான ‘இல்லை’கள் எல்லாவற்றுக்குமான பொறுப்பை, கடந்த 20 வருடங்களில் கட்சித் தலைவர்களாக, அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, எம்.பிக்களாக, மாகாண முதலமைச்சர்களாக, மாகாணசபை உறுப்பினர்களாக இருந்தவர்களும் தற்போது அப்பதவிகளில் இருக்கின்ற எல்லா அரசியல்வாதிகளும்தான் ஏற்க வேண்டும்.
இணக்க அரசியலில், புதியதோர் உத்தியை, மர்ஹூம் அஷ்ரப் கையாண்டார். பேரம்பேசும் ஆற்றல் என்பதற்கு அதுதான் பாதை. அதாவது, அரசாங்கத்துக்கு முஸ்லிம் கட்சியின், மக்களின் ஆதரவு தேவையென்ற இக்கட்டான நிலையொன்று வரும்போது, அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்திடம் இருந்து, முஸ்லிம்களுக்குத் தேவையான ஓர் உரிமையை, அபிலாஷையை நிறைவேற்றிப் பெறுவது என்று இதைச் சொல்லலாம்.
ஆனால், “மர்ஹூம் அஷ்ரப் அப்படிச் செய்தார், இப்படிச் செய்தார்” என்று சொல்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், அந்தப் பேரம்பேசும் சக்தியை வைத்து, எதையும் சாதிக்காமல், பதவிகளுக்காகவும் வேறு வெகுமதிகளுக்காகவும் சோரம் போனமைக்காக வெட்கப்பட வேண்டும்.
மர்ஹூம் அஷ்ரபின் கடைசிக் காலத்தில் இருந்து, இன்றுவரையான 20 வருட கால இடைவௌயில், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், முட்டாள்தனமாக, சுயஇலாபத்துக்காக, அவை தவறவிடப்பட்டுள்ளன.
2000, 2005, 2010, 2015இல் ஆட்சி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இக்காலப் பகுதிகளில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன; நம்பிக்கையில்லாப் பிரேரரணைகள் கொண்டுவரப்பட்டன; வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன; ஆட்சியமைப்பதற்கான ஆதரவு முஸ்லிம்களிடம் இருந்து கோரப்பட்டது.
இப்படி இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பேரம்பேசும் ஆற்றலை, மிகச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குள் ஒன்றிரண்டைத்தானும் தீர்த்திருக்க முடியும். ஆனால், நடந்ததோ வேறு மாதிரியாக இருக்கின்றது.
தேர்தல் காலத்தில், அல்லது ஆட்சி மாற்றக் காலத்திலேயே முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அரசியல்வாதிகளும் எந்த பெருந்தேசியக் கட்சிக்கு, தலைவருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தையோ, அன்றேல் கட்சிமாறும் முடிவையோ தைரியமாக எடுக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு, அரசாங்கங்கள் அநீதியிழைத்த போது, உரிமைகள் வழங்கப்படாத போது, இனவாதம் போன்ற நெருக்குவாரங்கள் மேலெழுகின்ற சந்தர்ப்பத்தில், தமது பதவியை இராஜினாமா செய்வது போன்ற ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்து, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வரலாறு கிடையாது.
ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர், இன்னுமோர் அரசியல்வாதிக்கு ‘இந்த அந்தஸ்தை வழங்கக் கூடாது’ என்று பேரம் பேசினாராம் என்று, அப்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இது, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு’ மட்டுமே. இப்படிப் பல உதாரணங்களை, முஸ்லிம் அரசியலில் காணக் கூடியதாக இருக்கின்றது.
ஒவ்வொரு முஸ்லிம் அரசியல் கட்சிக்கும், தமது கட்சியை வளர்க்க வேண்டிய, போட்டி அரசியல் சூழல் காணப்படுகின்றது. முஸ்லிம் கட்சிகளிலும் பெரும்பான்மைக் கட்சிகளிலும் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, தம்முடைய கதிரையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
முஸ்லிம் மக்களும், பதவி, அதிகாரம் உள்ள அரசியல்வாதிகளுக்குப் பின்னால் போகவே விரும்புகின்றார்கள். கொள்கைக்கார அரசியல்வாதி ஒருவர், பதவி இல்லாதிருந்தால், அவருக்குப் பின்னால், முஸ்லிம் மக்கள் போவதில்லை. அந்த வகையில், இந்தச் சீரழிவுக்கு, மக்களும் ஒருவிதத்தில் காரணமாகின்றனர்.
எனவே, மக்கள் இந்த மனநிலையில் இருக்கின்றமையால், வெற்றி பெறுகின்ற பக்கமே தாம் இருக்க வேண்டும்; அனைத்து வளங்களும் தம்வசம் இருக்க வேண்டும் என்று, நாட்டில் அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.
இல்லாவிட்டால், மக்கள் தம்மை விட்டுப் போய்விடுவார்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். மக்களை, இவ்வாறு பதவிக்குப் பின்னால் போகின்ற கூட்டமாக, ஒரு நச்சுவட்டத்தை உருவாக்கி விட்டவர்கள் தாங்களே என்பதை, அரசியல்வாதிகள் வசதியாக மறந்து விடுகின்றார்கள்.
எனவே, அமைச்சு, பிரதி அமைச்சுப் பதவிகளும், தேசியப் பட்டியல் எம்.பி பதவியும் முன்னிலைப்படுத்தப்படுகின்ற போது, குறிப்பிட்ட அரசியல்வாதியின் வருமானமும் குடும்ப நலனும் முன்னுக்கு நிற்கும் போது, பேரம் பேசும் சக்தி என்பது கொஞ்சமும் எடுபடாது.
மாறாக, மக்களைக் காரணங்காட்டி, கிட்டத்தட்ட நாடகம் ஒன்றை நடித்து, முஸ்லிம் அரசியல் தலைமைகள், இணக்க அரசியலுக்குள் ஐக்கியமாகிப் போவதைக் காண்கின்றோம்.
முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளிக்கும் போது, ஆதரவை வாபஸ் பெறும்போது, சமூகத்துக்காகவே அதைச் செய்வதாகச் சொல்வார்கள். அவ்வாறே, முஸ்லிம்களின் அபிலாஷைகள் விடயத்திலான உடன்பாட்டின் அடிப்படையிலேயே, அந்த முடிவை எடுத்தாகவும் வியாக்கியானம் சொல்வதும் வழமை.
ஆனால், பேரம்பேசுதல் அடிப்படையில், அவ்விதம் உடன்பட்ட எந்த விடயங்களை, அவர்கள் இதுவரை பெற்றுத் தந்திருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு, அவர்களிடமே விடையிருக்காது.
ஏனெனில், மக்களுக்காகவே முடிவெடுத்தாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் சொல்வது, பெரும்பாலும் வெறும் கண்துடைப்பு நாடகங்களாகும். இப்படித்தான், இந்தப் பேரம் பேசும் அரசியல் பாழாக்கப்பட்டது.
இந்தக் காரணத்தாலேயே, எதிர்க்கட்சியில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சாதிக்கின்ற விடயங்களைக் கூட, ஆளும் கட்சியில் அடைக்கலம் புகுந்திருக்கின்ற முஸ்லிம் கட்சிகளாலும் ஏனைய முஸ்லிம் எம்.பிக்களாலும் இத்தனை வருடங்களாக, ஓர் இம்மியளவும் சாதிக்க முடியாதிருக்கின்றது.
இந்த நிலை மாற வேண்டும். இதுவரை தவறவிட்ட சந்தர்ப்பங்கள் போனாலும், இனிவரும் வாய்ப்புகளையாவது பயன்படுத்த வேண்டும்.
இப்போது நாட்டில், முக்கோண அரசியல் போட்டி நிலவுகின்றது. இதில், அடுத்த அரசாங்கத்தை யார் அமைத்தாலும், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. அத்துடன், வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் இல்லாவிடினும், ஜனாதிபதி, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் 22 மாதங்களுக்குள் நடைபெறப் போகின்றன.
இப்படி இன்னும் பல வாய்ப்புகள் அடுத்தடுத்ததாக, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கவுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை இம்முறையாவது, சமூகம் சார்ந்த பேரம்பேசலுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில், கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஏக்கர் காணிகளின் பிரச்சினை, வடக்கில் இருக்கின்ற ஒரு இலட்சம் ஏக்கர் காணிப் பிரச்சினை, தொல்பொருள் திணைக்களத்தாலும் வனஇலாகாவாலும் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணி விவகாரம், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இனவாதச் சூழலில் தென்னிலங்கை முஸ்லிம்களின் இருப்பு, இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு, நுரைச்சோலை வீடுகளைப் பகிர்ந்தளித்தல், அம்பாறைக்குள் இன்னுமொரு புதிய மாவட்டம் நிறுவுதல் உள்ளடங்கலாக, மிக முக்கியமான விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசல் இடம்பெற வேண்டும்.
இன்னுமொரு முறை சோரம் போய்விடக் கூடாது.
Average Rating