எதிலும் அக்கறை காட்டாத முஸ்லிம் சமூகம்!!(கட்டுரை)

Read Time:21 Minute, 21 Second

நாட்டின் முக்கியமான ஆட்சியாளர் ஒருவரைச் சந்தித்து, முஸ்லிம்களின் உரிமை சம்பந்தமாகப் பேசும் பொறுப்பை ஏற்று, வாடகைக்கு வாகனத்தை அமர்த்திக் கொண்டு, கொழும்புக்கு வந்த பிரமுகர்கள், கொழும்பில் ‘எந்தத் திரையரங்கில் என்ன திரைப்படம் பார்ப்பது?’ என்று முரண்பட்டுக் கொண்டு, நேரத்தை வீணடித்தார்களாம்.

அதேபோலத்தான், இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, முக்கியத்துவம் கொடுக்காமல், சின்னச்சின்ன இன்பங்களில், முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூகமும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

பெருந்தேசிய அரசியல் கட்சிகள், முக்கோண நகர்வொன்றை மேற்கொண்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் இணைந்து பயணிப்பதற்கான, நிகழ்தகவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

மைத்திரி தரப்புடனான உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க, பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, பகிரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. சமகாலத்தில், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் வேற்றுமையிலும் ஒற்றுமைகண்டு, தமது சமூகத்தின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக, கனகச்சிதமாக முன்னகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, உலகளாவியரீதியில் மேற்குலகம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற, முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக, தென்னாசியப் பிராந்தியத்தில், குறிப்பாக இலங்கையில், பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, இருவகையான கடும்போக்கு வாதங்களும் உள்நாட்டில் உள்ள இனவாதத்துடன் கைகோர்த்து, திரைக்குப் பின்னாலும் பகிரங்கமாகவும் செயற்படுவதைச் சில சம்பவங்கள் நிரூபணம் செய்கின்றன.

நாட்டில் இத்தனை களேபரங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலொன்றில், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்களும் முக்கியமான, பெரிய விடயங்களில் கவனம் செலுத்தாமல், வீதியைச் செப்பனிடுதல், அரச அலுவலகங்களை ஓர் ஊரிலிருந்து இன்னுமோர் ஊருக்கு இடம்மாற்றுதல், அன்றாடப் பாவனைப் பொருட்களை வழங்குதல், தொழில்தருவதாக வாக்குறுதி வழங்குதல், தமது சொந்த வங்கிக் கணக்குகளைப் பலப்படுத்தும் வியாபாரங்களை நடத்துதல்,அனுமதிப் பத்திரங்களில் (பேர்மிட்) ஈடுபாடு காட்டுதல் என்று, அற்பத்தனமான, சுயலாப அரசியலில் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் சிஷ்யர்களாகப் பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள், தங்களை சுயபிரகடனம் செய்து கொண்டாலும், நடப்பு நிலைவரங்களைப் பார்க்கின்ற போது, அஷ்ரபிடம் இருந்து இவர்கள், அபிவிருத்தி அரசியலையும் கற்றுக் கொள்ளவில்லை; உரிமை அரசியலையும் கற்றுத் தேறவில்லை என்பது புலனாகின்றது.

உண்மையில், மறைந்த தலைவரின் வகுப்பறையில் கற்றதற்கான எந்த அறிகுறிகளையும் 99 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காணக் கிடைக்கவில்லை. எனவே, அஷ்ரபின் வகுப்பறையில் இவர்களில் பெரும்பாலானோர், ‘நிபந்தனையின் அடிப்படையில்’ வகுப்பு ஏற்றப்பட்டு இருக்கின்றார்கள் என்றே கருத வேண்டியிருக்கின்றது.

முதலாவதாக, இலங்கையில் அரசமைப்பு மறுசீரமைப்பை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, முஸ்லிம்களுக்குப் பாதகமான பல முன்மொழிவுகள் அதிலிருப்பதைக் கண்டுகொண்டோம்.

முஸ்லிம்கள், தாமாக இதில் அக்கறை செலுத்தாத வரையில் அரசாங்கமோ, தமிழ்த்தரப்போ அரசமைப்பு மறுசீரமைப்பில் முஸ்லிம்களுக்கான முன்மொழிவுகளை உள்ளடக்குவதற்கு, முன்னுரிமை கொடுக்கப் போவதில்லை என்பதை, சிறுபிள்ளைகள் கூட அறிவார்கள்.

ஆனால், அரசமைப்பு மறுசீரமைப்புக்காகச் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்வாங்கி, மெதுமெதுவாக மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், முஸ்லிம் சமூகம் அதில் பாராமுகமாக இருக்கின்றது.

அடுத்ததாக, மாகாணங்களுக்குள் உள்ளடங்கும் தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. “எல்லை நிர்ணயக் குழுவின் சிபாரிசுகளின் படி, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையப் போகின்றது” என்று, அக்குழுவில் அங்கம் வகித்த பேராசிரியர் மர்ஹூம் எஸ்.எச்.ஹஸ்புல்லா, தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார். பலஅங்கத்தவர் தொகுதிகளும் முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளும் சிபாரிசு செய்யப்படாமையால், இந்த அறிக்கை முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையும் என்று அவர் சொன்னார்.

அப்போது, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தத் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை, சரியாகப் பயன்படுத்தத் தவறிய முஸ்லிம் அரசியல்வாதிகள், கடைசித் தருணத்தில் இதன் உள்ளார்ந்த ஆபத்தை உணர்ந்தோ என்னவோ, எல்லை மீள்நிர்ணய அறிக்கையைத் தோற்கடிப்பதற்காக வாக்களித்தார்கள்.

அப்படியென்றால், அதன்பிறகு என்ன செய்திருக்க வேண்டும்? அந்த மீள்நிர்ணய அறிக்கையில் உள்ள, முஸ்லிம்களுக்குப் பாதகமான விடயங்களைத் திருத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடந்த மாதிரித் தெரியவில்லை.

அரசியல்வாதிகள் அதைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் சமூகம் இருப்பதுடன், எல்லை மீள்நிர்ணய அறிக்கையை, மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய குழு, அந்தப் பணியை மேற்கொள்ளும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்று, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நினைத்துக் கொண்டிருப்பது போலவே, அவர்களது பாராமுகமான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

உண்மையாகவே, தற்போது நியமிக்கப்பட்டுள்ள மீளாய்வுக் குழுவின் பணி என்பது, பழைய தேர்தல் முறையைச் சிபாரிசு செய்வதோ, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் பிரத்தியேக கவனம் செலுத்துவதோ அல்ல.

பழைய விகிதாசாரத் தேர்தல் முறைமைதான் முஸ்லிம்களுக்குச் சாதகமானது எனக் கருதப்படுமிடத்து, மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்கு, அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வேறுவிடயம்.

ஆனால், முன்னர் மேற்கொள்ளப்படும் எல்லை மீள்நிர்ணயம் தவறு என்றால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதற்கான மாற்று முன்மொழிவுகள், ஏற்பாடுகளை முஸ்லிம்களும் அவர்களது அரசியல் மேய்ப்பர்களுமே முன்வைத்தாக வேண்டும்.

ஆனால், நிஜத்தில் என்ன நடக்கின்றது? “எல்லை மீள்நிர்ணய அறிக்கை மீதான, மீளாய்வு விடயத்தில், முஸ்லிம்களுக்கு அக்கறையே இல்லை” என்று, மீளாய்வுக் குழுவில், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஏ.எஸ்.எம்.நௌபல், பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார்.

முஸ்லிம் சமூகம், தமக்கு வேண்டிய தொகுதிகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்ற எவ்வித காத்திரமான முன்மொழிவையும் முன்வைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் தேசியத் தலைவர்கள், தளபதிகள், மக்களின் வாக்குகளால் கிடைத்த பதவிகளை வைத்துக் கொண்டும், சுகபோகங்களையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டும் இருக்கின்ற அரசியல் பேர்வழிகள், தமது தார்மீகக் கடமையை நிறைவேற்றவில்லை. மீளவும் கிடைத்திருக்கின்ற வாய்ப்பைக் கூட, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதை விட, அன்றாடம் பொழுதைக் கழிக்கும் புதினங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதையுமே இந்தப் போக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.

அடுத்த விடயம், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பிலும் முஸ்லிம்களுக்கு இடையிலேயே ஓர் இணக்கப்பாடு வரவில்லை என்பதாகும். முஸ்லிம்களுக்காக இலங்கையில் அமுலில் இருக்கின்ற பிரத்தியேக சட்டமான, முஸ்லிம் தனியார் சட்டம் சில விடயங்களைத் திருத்துவதில் பொதுவான உடன்பாடு காணப்படுகின்ற போதிலும், வேறு சில திருத்தங்களில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளின் காரணமாக, இரு தரப்பினர் இரண்டு வெவ்வேறு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் நிலையேற்பட்டது.

இதனால், யாருடைய அறிக்கையை ஏற்றுக் கொண்டு, எவ்வகையான திருத்தத்தை மேற்கொள்வது என்ற இக்கட்டான நிலைக்கு, நீதியமைச்சு தள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அண்மையில் கூறினார்.

முஸ்லிம் தரப்புகள் இவ்விடயத்திலும் இவ்விதம் முரண்பட்டு நிற்பதால், வேறு இனக் குழுமங்களைச் சேர்ந்த சக்திகள், இதற்குள் மூக்கை நுழைத்துக் கொண்டு, நாட்டாமை வேலை பார்க்கத் தலைப்படுவதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி உரிமைக்கான சட்டபூர்வ ஆவணங்களை வைத்துள்ளவர்களுக்கு, காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அண்மையில் அறிவித்திருக்கின்றார். இது விடயத்திலும் முஸ்லிம்கள் அதீத அக்கறை செலுத்த வேண்டிய காலமிது.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், காணிப்பிரச்சினை என்பது தலையாய முக்கியத்துவமிக்க விவகாரமாகும். வடக்கில் தங்களது சொந்த இடங்களில் இருந்து, ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள், இன்னும் முழுமையாகத் தங்கள் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தப்படவில்லை.

அவர்களுக்கான காணி உரிமைகளைப் பெறுவதில், வடக்கின் அரசியல் அதிகாரம் முட்டுக்கட்டை இடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, வடக்கில் முஸ்லிம்களுக்கு உரித்தான காணிகளை விடுவித்துப் பெறுவதற்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள கால எல்லையான டிசெம்பர் 31க்கு முதல், முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

கிழக்கில் முஸ்லிம்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன. இதில், காணி சுவீகரிக்கப்பட்ட விவகாரம், தொல்பொருள் திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட விவகாரம், காணி முரண்பாடுகள் எனப் பலவகைப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.

இவற்றுக்குப் புறம்பாக, காணி உரிமைக்கான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்கின்ற முஸ்லிம்களே, அக் காணிகளை உரிமை கொண்டாட முடியாத நிலைமையும் பல இடங்களில் காணப்படுகின்றது.

எனவே, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள் அதன் உரித்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆயினும், இதுவரை முஸ்லிம் சமூகம், இவ்விவகாரத்தில் அக்கறையெடுத்து, ஓர் அடியையாவது முன்நோக்கி வைத்திருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறான ஆளுகைசார், சமூக நெருக்குவாரங்களுக்குள் முஸ்லிம்கள் சிக்கித்தவிக்கின்ற ஒரு காலப் பகுதியில், முஸ்லிம்களை இனவாத அடிப்படையில் இலக்கு வைக்கும் சதித்திட்டங்களும், முஸ்லிம்களை ஏனைய இனங்களுடன் முரண்படச் செய்வதற்கான கைங்கரியங்களும் புதுப்புது ‘டிசைன்’களில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபர் எனவும், ஊழலுக்கு எதிரான செயலணியின் தலைவர் எனவும் அறியப்படுகின்ற நாமல் குமார, அண்மையில் தொலைக்காட்சிகளுக்குத் தெரிவித்த கருத்துகள் அடங்கிய ஒளிப்படங்கள், அவ்வாறான திட்டமொன்றை அம்பலப்படுத்தி உள்ளன.

கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓரிருவர் கலந்து கொள்ளும் கூட்டத்தில், தாக்குதல் நடத்துவது தொடர்பாக, பிரான்ஸில் வசிக்கும் துஷார பீரிஸ் என்பவருடன், தான் மேற்கொண்ட உரையாடல் ஒலிப்பதிவை, நாமல் குமார வெளியிட்டுள்ளார். இதை, மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தும் முறைமை தொடர்பாக, அவர்கள் உரையாடியதும் அத்தாட்சியாக வெளிவந்துள்ளது.

இவ்வாறு, இலக்கு வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதியின் பெயர் தணிக்கை செய்யப்பட்டிருந்தாலும், இலக்கு வைக்கப்பட்டுள்ள அந்த முஸ்லிம் அரசியல்வாதி / அரசியல்வாதிகள் யார் என்பது, பாதுகாப்புத் தரப்புக்குத் தெரியும்.

ஆனால், இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் தெரிவித்துள்ள போதிலும், முஸ்லிம் அமைச்சர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கவில்லை.

அத்துடன், தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவை நாசப்படுத்துகின்ற ஒரு சதித்திட்டமாக, இது தோன்றுகின்ற சூழ்நிலையிலும், நல்லிணக்கம் பற்றி அதிகமதிகம் பேசுகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள், இது குறித்துக் கவனம் செலுத்தாமல் இருப்பது, கவலையளிக்கின்றது.

மிக முக்கியமாக, முஸ்லிம்களை, முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தாக்குவதற்கு, திட்டமிடப்பட்டிருப்பதாக நாமல் குமார சொல்கின்ற போதிலும், முஸ்லிம் சமூகம், இது விடயத்தில் எந்த உருப்படியான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக, முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அங்குமிங்குமாகச் சிலர் அறிக்கை விட்டுள்ளனர். ஆனால், பத்திரிகைகளில் பெருநாள் வாழ்த்துத் தெரிவிக்க முண்டியடிக்கும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், தேவையற்ற விடயங்களுக்காக கருத்தால் மோதும் முஸ்லிம் அமைப்புகளும் வாயைத் திறந்து பேசக் கூடவில்லை என்பது கவனிப்புக்குரியது.

ஆக, இன்று கிழக்கிலும் வடமேல் மாகாணத்திலும் அக்குரணையிலும் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் தொடக்கம், நாட்டில் தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியத்துவமிக்க சட்டவாக்க ஏற்பாடுகள், அரசியல், சமூகச் சவால்கள், இனத்துவ மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள், முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் என, எந்த விடயத்திலும் திருப்திகரமான அக்கறையை முஸ்லிம் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர்.

வாக்குரிமை ஊடாகத் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரியாக நிறைவேற்றாத மக்களும், தம்மீது மக்கள் சுமத்தியிருக்கின்ற உண்மையான பொறுப்பு என்ன என்பதை உணராத அரசியல்வாதிகளும், வாழ்கின்ற சமூகத்தின் நிலை என்றே இதைக் கருத வேண்டியிருக்கின்றது.

இந்நிலைமை இப்படியே தொடர்ந்தால், அது நீண்டகால அடிப்படையில் பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உச்சி முதல் பாதம் வரை!!(மகளிர் பக்கம்)
Next post அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய்யுடன் நடித்த நடிகைகள்!!(வீடியோ)