இராணுவத்தின் 69 வருடகாலச் சேவையின் மைல்கல்!!(கட்டுரை)
இலங்கை இராணுவத்தின் 69ஆவது வருடப் பூர்த்தியையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இலங்கை இராணுவமானது, பண்டைய காலந்தொட்டு, எமது தேசத்தின் நிலைப்புக்காக, இராணுவ ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவமாகக் காணப்படுகின்றது.
1949ஆம் ஆண்டில், இன்றைய போன்றதொரு நாளில் (ஒக்டோபர் 10) ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவமானது, பிரித்தானியக் காலனித்துவத்தினருடன், 1947ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் படி, சிலோன் இராணுவமாக உருப்பெற்றதாகும்.
பண்டையகால இராணுவம்
இந்தியாவிலிருந்து, விஜய மன்னனும் அவருடைய 700 தோழர்களும் வருகை தந்தபோது, இராட்சதக் குலத்துப் பெண் குவேனியை அவர்கள் அழைத்துச் சென்றதும் அப்பெண்ணை அவர்கள் கொலை செய்ய முயற்சித்த போது, அவள் அவர்களுடன் யுத்தம் செய்த விதத்தைக் கொண்டு, இலங்கையில் இராணுவத்தின் ஆதிக்கம் இருந்துள்ளமையை, வரலாறு எடுத்தியம்புகிறது.
மேலும், கி.பி 544ஆம் நூற்றாண்டில், அநுராதபுரம் இராஜதானியை உருவாக்க நடவடிக்கை எடுத்த பண்டுகாபய மன்னனின் ஆட்சிக் காலத்தில், இந்தியாவிலிருந்து வருகை தந்த சோழ மன்னனை, மீண்டும் அந்நாட்டுக்கே விரட்டியடிப்பதற்கும், இலங்கையில் மிகப் பலமிக்கதாகக் காணப்பட்ட இராணுவமே துணை நின்றதென, வரலாறு கூறுகின்றது.
அத்துடன், துட்டகைமுனு மன்னன், கி.பி 200ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், சுமார் 11ஆயிரம் இராணுவத்தினரின் உதவியுடனேயே, எல்லாளனை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதுவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகவும், வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
15ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், இந்நாடு காலனித்துவ ஆட்சிக்கு உட்படுவதற்கு முன்னர், கஜபாகு, தாதுசேனன், விஜயபாகு, மகா பராக்கிரமபாகு, 6ஆம் பராக்கிரமபாகு போன்ற மன்னர்களால், இந்நாடு பாதுகாக்கப்பட்டதாகவும் இவர்களிடம், மிகவும் பலமிக்க இராணுவப் படை காணப்பட்டதாகவும், வரலாறு கூறுகின்றது.
காலனித்துவ ஆட்சி
இதேபோன்று, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலங்களின் போதும், அவர்களுடைய போர்த் தலைவர்களால் பலப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சி முறையும், இலங்கையில் நடைமுறையில் காணப்பட்டமையை, வரலாறுகள் எடுத்தியம்புகின்றன.
இந்தக் காலத்தின் போது, எதிரிகளுக்கு எதிராகப் போர்த் தொடுப்பதற்காக, தங்களுக்கென்றே ஆயுதங்கள், பொதுமக்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வில், அம்பு, வாள்கள் மற்றும் ஈட்டிகள் என்பன, இங்கு உற்பத்தி செய்யப்பட்டதோடு வெடிக்கும் தன்மையுடைய சிறு உருண்டைகளும் உருவாக்கப்பட்டதாக, வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
சிகிரியா, அநுராதபுரம், பொலன்னறுவை, கோட்டை போன்ற நகரங்களில், பலமிக்க கோட்டைகளை உருவாக்கிக் கொள்வதற்காக, சிங்கள மன்னர்களால், பல கோட்டைகள் உருவாக்கப்பட்டதாகவும் இதற்காக, அதிசிறந்த பொறியியலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
1802ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், பிரித்தானிய ஆணையிடும் கட்டளை அதிகாரியினால் கட்டளையிடப்பட்டதற்கமைய, இலங்கை ரெஜிமண்ட் உருவாக்கப்பட்டதோடு, அதற்கு, பிரித்தானிய அதிகாரிகளின் பல்வேறு போர் முறைமைகள் மற்றும் விசேடப் போர்ப் பயிற்சிகள் என்பன பயிற்றுவிக்கப்பட்டன. மேலும், 1803ஆம் ஆண்டில் இடம்பெற்ற மத்திய மலைநாட்டு யுத்தங்களின் போது, 2ஆவது மற்றும் 3ஆவது ரெஜிமண்டுகள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ரெஜிமண்டுகளில், அதிகளவான சிங்களவர்கள், மலேயர்கள் மற்றும் ஆபிரிக்கர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் இந்த பிரித்தானிய இராணுவத்தைக் கொண்டு, இலங்கையின் வீதிகள், பாலங்கள் மற்றும் பிரதான வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்தப் பிரித்தானிய ரெஜிமண்ட், 1817ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், லங்கா ரைஃபல் ரெஜிமண்ட் என்று பெயர் மாற்றம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், வீரபுரன் அப்புவின் மாத்தளைக் கிளர்ச்சி, பிரித்தானியர்களுக்கு, மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்ததோடு, அதனால் சிங்களவர்களை, பிரித்தானிய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் பணி முன்னெடுக்கப்பட்டது. பின்னர், 1874ஆம் ஆண்டில், லங்கா ரைஃபல் ரெஜிமண்ட் கலைக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட ஐயப்பாடு காரணமாக, இலங்கை இராணுவத்துக்குப் பதிலாக, தன்னார்வப் படையொன்று உருவானது.
பல வருடங்களுக்குப் பின்னர், பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மனுக்களை முன்வைத்த மனுதாரர்களுக்காக, “லங்கா தன்னார்வக் காலாட்படை” (CLIV) உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், 1914 மற்றும் 1939 – 1945ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, இலங்கைக் கடற்பரப்பை, உலக நாடுகள் தமது போக்குவரத்துப் பாதையாகப் பயன்படுத்தியமையால், இலங்கையில் பாதுகாப்புக் கொள்கையொன்றைத் தயாரிக்கவேண்டிய கடப்பாட்டுக்கு, இலங்கை தள்ளப்பட்டது.
இலங்கை இராணுவம்
பொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமை நாடு என்ற ரீதியில், தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதோடு, அப்போதைய அரசியல் தலைவர்களின் அழுத்தங்களுக்கமைய, 1949ஆம் ஆண்டில், இலங்கை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, 1950ஆம் ஆண்டில் கடற்படையும் 1951ஆம் ஆண்டில், விமானப் படையும், சட்டரீதியாக உருவாக்கப்பட்டன.
எவ்வாறாயினும், நாட்டுக்குள் புதிய இராணுவமொன்று உருவாக்கப் பட்டமையானது, புதிய அனுபவமாக இருந்த போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் பயிற்சியின் மூலம் முன்னோக்கி நகர வேண்டிய தேவையின் நிமித்தம், 1949ஆம் ஆண்டு 17ஆம் இலக்க இராணுவக் கட்டளைச் சட்டமொன்று உருவாக்கப்பட்டு, இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டது.
இவ்வாறாக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முதலாவது இராணுவத் தளபதியாக, பிரிகேடியர் ரொட்ரிக் சிங்லேயார் நியமிக்கப்பட்டார். அந்த வகையில், 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதியன்று உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவம், வரலாற்றுக்கு உரிமை கோரும் முறையானதும் சட்டபூர்வமானதுமான இராணுவமாக அங்கிகாரம் பெற்றது.
இதன்படி, முதலாவது கெடெட் அதிகாரிகள் குழு, 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதியன்று, இங்கிலாந்துக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டதோடு, அவ்வாறு பயிற்சி பெற்ற கெடெட் அதிகாரிகள் குழுவின் இருவர், பிற்காலத்தில் இராணுவத் தளபதிகளாகவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான வரலாற்றைக் கொண்டமைந்த இலங்கை இராணுவம், 1952ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹர்த்தாலின் போதும் 1959இல் இடம்பெற்ற முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளின் போதும், 1971இல் இடம்பெற்ற ஜே.வி.பி கலவரத்தின் போதும், நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணியில், தமது முழுப் பங்களிப்பை நல்கியது.
அத்துடன், 1983ஆம் ஆண்டில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, யாழ்ப்பாணத்தில் வைத்து, 13 இராணுவத்தினர் படுகொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கின் பாதுகாப்பு விடயத்தில், இராணுவத்தினரால் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியற்ற நிலைமைகளைத் தொடர்ந்து, அதாவது 1965 முதல் 2005ஆம் ஆண்டுக் காலப்பகுதி வரையில், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், இராணுவத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது.
வடக்கு, கிழக்கில் வலுப்பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில், இலங்கை இராணுவம் வெற்றிகண்டதைத் தொடர்ந்து, அவ்வியக்கத்தைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் பேர், இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.
யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டின் பல பிரதேசங்கள், விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை, தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக எதிர்கொண்டிருந்த அழிவுகளிலிருந்து மீட்டெடுக்கும் பணியில், இராணுவத்தினர் ஈடுபடலாகினர். இராணுவத்தின் பங்களிப்புடன், அங்கு வாழும் மக்களின் சாதாரண வாழ்க்கை முறையைக் கட்டியெழுப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக முன்வந்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், இராணுவத்தின் பங்களிப்பு செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல்கள் தோன்றாதிருக்கும் வகையில், உடல் மற்றும் தொழில்நுட்பத் திறனைக் கொண்டு, விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சர்வதேச ரீதியில், இலங்கை இராணுவத்துக்கு பாரிய வரவேற்பு கிட்டியுள்ளது. தேசத்தின் இறைமை, பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், இலங்கை இராணுவம் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating