வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’!!(கட்டுரை)

Read Time:14 Minute, 0 Second

உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது.

போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதே முக்கியமானது என்பது ஒரு பக்கமாகவிருக்க, உலகம் முழுவதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பில் இப்போது எழுந்திருக்கும் கவனத்துக்கு மத்தியில், முக்கியமான அங்கிகாரமாக, இந்த விருது அமைந்திருக்கிறது. ஆனால், மறுபக்கமாகப் பார்க்கப் போனால், ஏற்கெனவே மிகப்பெரிய இயக்கமாக மாறியிருக்கும் இவ்விடயத்தில், நொபெல் பரிசும் இணைந்திருக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

காலாகாலமாக, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகிவந்த பெண் சமூகம், பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த ஆண்டாக, 2017ஆம் ஆண்டை, அதாவது கடந்தாண்டை, குறிப்பிட முடியும்.

உலகளவில், #MeToo என்ற இயக்கம் உருவானது. “நானும் பாதிக்கப்பட்டேன்” என்ற அர்த்தத்திலான அந்த இயக்கம், உலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரின் மறுபக்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தது.

இந்த #நானும் என்கின்ற இயக்கத்தின் பயணம், மேற்கத்தேய நாடுகளிலேயே பெரும்பாலும் ஆரம்பத்தில் தங்கியிருந்தாலும், கீழைத்தேய நாடுகளையும் இப்போது பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், இப்போது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்ற பிரபலம் யார் தெரியுமா? கவிப்பேரரசு வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து, தமிழ் சினிமாவிலும் இலக்கியத்திலும் முக்கியமான ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விமர்சனங்கள், எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன. தன்முனைப்புக் கொண்ட ஒருவர் என்ற விமர்சனம், எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அந்தத் தன்முனைப்பை, வித்துவச் செருக்கு என்ற வகைக்குள்ளும் அடக்க முடியும் என்ற அடிப்படையில், அவரது கலையை இரசிப்பதை அவ்விமர்சனங்கள் தடுத்து நிறுத்தியதில்லை.

ஆனால், இப்போது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள், தன்முனைப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகள் கிடையாது. பாலியல் குற்றச்சாட்டுகள். அதுவும், ஒருவர், இருவரால் அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. ஏராளமான பெண்கள், அக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள். அவர்களில், பிரபல பாடகியான சின்மயியும் ஒருவர். சின்மயி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, 2005ஆம் அல்லது 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பானது என்று அவர் குறிப்பிடுகிறார். அதிலும், ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட இசைத்தட்டுக்கான வெளியீட்டு விழாவின் போது தான், முகவர் மூலமாக, வைரமுத்து தன்னை அணுகினார் என்றும், மறுத்த பின்னர் தனது இசை வாழ்க்கை முடிக்கப்பட்டுவிடும் என எச்சரிக்கப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டுகிறார். இது நடக்கும் போது, வைரமுத்துக்கு, 51 அல்லது 52 வயது இருந்திருக்கும்.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அண்மைய சில நாள்களில் சிக்கிய முதலாவது பிரபலம், வைரமுத்துவல்லர். இந்த #MeToo அல்லது #நானும், இந்திய அளவில், அண்மைய சில நாள்களில் பல குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின், வெளிவிவகாரத்துக்கான இராஜாங்க அமைச்சர் தொடக்கம், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த நகைச்சுவையாளர்கள் வரை, இக்குற்றச்சாட்டுகள் பாதித்திருக்கின்றன.

மறுபக்கமாக, ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதியரசராக, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனோ மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை, அண்மைக்காலத்தில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில், கவனோவின் நியமனம் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், பெரியளவு கலந்துரையாடல்களை எழுப்பியிருந்தன.

இவ்வாறு, பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, “குற்றச்சாட்டு முன்வைக்கும் போதெல்லாம் அனைவரையும் நம்பினால், ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்ற வழக்கமான நிலைப்பாடு எங்கே போனது?” என்ற கேள்வி எழுப்பப்படும். ஒரு வகையில் பார்க்கப் போனால், நியாயமான கேள்வியாகத் தான் இருக்கிறது.

ஆனால், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையெல்லாம், அப்படியே நம்பிவிடுங்கள் என்பது, இங்கிருக்கும் நிலைப்பாடு கிடையாது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, நிரபராதியாகக் கருதப்படுவதில் பெரிதாகப் பிரச்சினைகள் இல்லை. ஆனால், ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத பல பெண்கள், தனித்தனியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், குற்றஞ்சாட்டப்படுபவரை “நிரபராதி” என்று கருதுவதில் பிரச்சினைகள் உள்ளன. ஏனென்றால், நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகள் வேறானவை. ஆனால், பொதுமக்களின் மட்டத்தில், ஒருவர் மீதான குற்றச்சாட்டு, நம்பத்தகுந்ததாக எழுப்பப்பட்டால், அவர் மீது சந்தேகப் பார்வை எழுவது வழக்கமானது.

“எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இவர், எமது வீட்டிலிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்” என்று யாராவது குற்றஞ்சாட்டினால், குற்றஞ்சாட்டப்படும் நபர் மீது, எமது சந்தேகம் விழும் தானே? அவர் தான் குற்றவாளி, அவருக்குச் சிறைத்தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என்று, நீதி அடிப்படையிலான எண்ணங்களில்லாமல், “இச்செயலை இவர் செய்திருப்பார்” என்று, குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை வைத்து எடைபோடுகிறோம், இல்லையா? அப்படியானால், பாலியல் குற்றச்சாட்டுகளின் போது மாத்திரம், அதே பாணியிலான எண்ணத்தை நாம் கொண்டிருப்பதில்லை?

அதற்கு, முக்கியமானதொரு விடயம் இருக்கிறது. ஏனைய விடயங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, குற்றச்சாட்டை முன்வைப்பவரை, “பொய் சொல்கிறார். இவர் பொய்யர்” என்ற அடிப்படையுடன், முற்சார்பு எண்ணத்துடன் எதிர்கொள்வதில்லை. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போரை மாத்திரம், மேற்படி முற்சார்பு எண்ணத்துடன் தான் அணுகுகிறோம்.

ஆகவே, “பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் அனைவரையும் நம்ப வேண்டுமா?” என்ற கேள்விக்கான பதிலாக, “பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும், அப்படியே நம்பத் தேவையில்லை. ஆனால், குற்றச்சாட்டை முன்வைப்பவர் பொய்யர் என்ற முற்சார்பு எண்ணத்துடன் அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதை நிறுத்துவோம்” என்பது தான் அமையும்.
அதேபோல், “பிரபலமாகுவதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்ற, அடிப்படையற்ற வாதத்தையும் நிறுத்த வேண்டியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்லது நிரூபிக்கப்பட்ட பிரபலங்கள் சிலரின் பெயர்கள் இவை: லாரி நாசர், பில் கொஸ்பி, பில் ஓ ரைலி, ஹார்வி வைன்ஸ்டீன், மோர்கன் ஃபிறீமன், சார்ளி றோஸ், அஸிஸ் அன்சாரி, மற் லவெர், றிச்சர்ட் பென்ஸன், அல் ஃபிராங்ளின், லூயிஸ் சி.கே, றோய் மோர், ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பென் அஃப்ளெக்.

இவர்களில் அநேகமாக எல்லோரின் பெயரையும், சர்வதேச ரீதியில் செய்திகள் பற்றிய அக்கறை கொண்டோர் அறிந்திருப்பர். ஆகக் குறைந்தது, இந்தப் பட்டியலில் காணப்பட்டோரில் சிலரின் பெயரையாவது, அறிந்திருப்பர்.

ஆனால், இவர்கள் மீது குற்றஞ்சாட்டிய பெண்களில் எத்தனை பேரைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள்? சர்வதேசச் செய்திகளை ஆழமாக வாசிப்பவர்களாலேயே, இவர்கள் மீது குற்றஞ்சாட்டிய பெண்களில் ஒருவரின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாது. அப்படியிருக்கும் போது, பிரபலமாகுவதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்பது, எந்த விதத்தில் நியாயமான விமர்சனமாக அமையக்கூடும்?

கவிஞர் வைரமுத்துத் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, நடிகரும் அண்மைக்காலத் தமிழ்த் திரையரங்கில் முற்போக்குச் சிந்தனை கொண்டவராகக் கருதப்படுபவருமான சித்தார்த், முக்கியமான கருத்தை வெளியிட்டிருந்தார்: “குற்றஞ்சாட்டுபவர் தனது பெயரை வெளியிட்டால், பிரபலத்துக்காகச் செய்கிறார் என்கிறீர்கள். குற்றஞ்சாட்டுபவர் அநாமதேயமாக இருந்தால், அவரின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறீர்கள்” என்று அவர் தெரிவித்திருந்தார். நியாயமான கருத்தாகவே அது அமைந்திருந்தது. “என்ன செய்தாலும் குற்றஞ்சாட்டுபவரை நம்பமாட்டோம்” என்ற வீராப்பில் இருப்பவர்கள் தான், இப்படி இரு பக்கங்களையும் கேள்விக்குட்படுத்துகிறார்கள்.

இன்றைக்கு வைரமுத்து மீதும் ஏனைய இந்தியர்கள் மீதும் எழுந்திருக்கின்ற இக்குற்றச்சாட்டுகள், நாளைக்கு இலங்கையையும் வந்தடையக்கூடும். ஏனென்றால், இலங்கையிலும் நிறைய வைரமுத்துகள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எனவே, நாம் தயாராக இருக்கிறோமோ?

ஆனால், இதில் இலகுவான விடயம் என்னவென்றால், நாங்கள் பெரிதான மாற்றங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, நம்பிக்கையுடன் அவற்றைச் செவிமடுப்பது தான், நாங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கையாக இருக்கிறது. செய்வோமோ?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!(அவ்வப்போது கிளாமர்)
Next post AR Rahman தங்கை அதிரடி ! வைரமுத்து *** அப்படி தான் ! சின்மயிக்கு வாய்ப்பில்லை ! Vairamuthu Chinmayi!!(வீடியோ)