சபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு!!(கட்டுரை)
கேரள மாநிலத்தின் ‘சபரிமலை’ இன்றைக்குப் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது.
பக்தி என்ற அடிப்படையில் உரிமைகளை நிலைநாட்டப் பெண்களும் அந்த உரிமைகளைப் பெண்களுக்கு அளிக்க முடியாது என்று சில அமைப்புகளும் செய்யும் இந்தப் போராட்டம், கேரள மாநிலத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஷ்ரா, ஓய்வு பெறுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, வழங்கிய தீர்ப்புதான், கேரளாவை இப்போது போராட்டக் களமாக மாற்றியிருக்கிறது.
10 வயதுக்கு மேலும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க செல்லக்கூடாது என்று திருவாங்கூர் சமஸ்தானம் சார்பில் போடப்பட்டுள்ள நிபந்தனை, கேரள அரசாங்கத்தின் சார்பில், 1965களில் உருவாக்கப்பட்டுள்ள விதி ஆகியன, அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமை, அனைவரும் சமம், மத சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், பொது நல மனு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே, இது போன்றதொரு வழக்கு, கேரள உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டு, அதில், ‘10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள், சபரிமலைக்குச் செல்ல விதித்த தடை செல்லும்; அது மதச் சம்பிரதாயங்கள், சடங்குகளுக்கு உட்பட்டது. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விடயத்தை, இந்திய இளம் வழக்கறிஞர் சங்கம், உச்சநீதிமன்றத்துக்கு பொது நல மனுவாக எடுத்துச் சென்றது.
உச்சநீதிமன்ற விவாதத்தின் போது, பல வினோதங்கள் நடந்தன. கேரள மாநில அரசாங்கத்தின் சார்பில் மூன்று ‘பல்டி’ அடிக்கப்பட்டது.
முதலில், 2007இல் தாக்கல் செய்த சத்தியக்கடதாசி மூலம், “இந்தத் தடையை நீக்க வேண்டும். ஆனால், அதை அரசாங்கம் செய்ய முடியாது. இது மத சம்பிரதாயங்கள் குறித்தது என்பதால், ஓர் ஆணைக்குழுவை அமைத்து ஆலோசனை பெறலாம்’ என்று முதலில் சொன்னது.
பிறகு 2016இல், “இந்தத் தடையை விலக்க முடியாது என்று, கேரள உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. 10 முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களைச் சபரிமலைக்கு அனுமதிக்கக் கூடாது என்பது இந்த கோவிலில் காலாகாலமாகக் கடைப்பிடிக்கப்படும் மத சம்பிரதாயம், பழக்க வழக்கம். ஆகவே, மத சம்பிரதாயம், சடங்குகளில் கேரள அரசாங்கம் தலையிட்டு உத்தரவு போட முடியாது. ஆகவே, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது” என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
பிறகு, மீண்டும் இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, “மனுதாரரின் கோரிக்கைக்கு ஆதரவாக 2007இல் தாக்கல் செய்யப்பட்ட சத்தியக்கடதாசியை நாங்கள் ஏற்கிறோம். அதாவது, 10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கலாம்” என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்திடம் சொன்னது.
ஆகவே, கேரள அரசாங்கம், சபரிமலை ஐயப்பன் கோவில் விடயத்தில், மூன்று நிலைப்பாட்டை, கடந்த 11 வருடங்களுக்குள் எடுத்துள்ளது. இறுதியாக எடுத்த முடிவின் படி, பெண்களை வயது வித்தியாசமின்றி, ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்பதாகும்.
அதாவது, கொம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சராக இருந்த அச்சுதானந்தன் “அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்குள் செல்லும் உரிமை பற்றி, கேரள அரசாங்கம் உத்தரவிட முடியாது. ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்” என்றார்.
பிறகு வந்த காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன் சான்டி, “மனுதாரர்களின் கோரிக்கையை ஆதரிக்க முடியாது” என்று வாதிட்டார்.
இப்போது இருக்கும், கொம்யூனிஸ்ட் கட்சியின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “மனுதாரரின் கோரிக்கையை ஏற்கிறோம்” என்றார். ஆக காங்கிரஸும், பா.ஜ.கவும் “கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லக் கூடாது. மதரீதியாக இருக்கும் சடங்குகளை மதிக்க வேண்டும்” என்கின்றன.
ஆனால், கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் அச்சுதானந்தனுக்கும், பினராயி விஜயனுக்கும் இடையிலே இந்த விடயத்தில் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. ஒருமித்த கருத்து இல்லை.
இதுபோன்ற சூழ்நிலையில்தான், கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, “10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்” என்று தீர்ப்பளித்தது. அந்த ஐந்து நீதிபதிகளில், ஒரேயொரு பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அந்த மாறுபட்ட தீர்ப்பில், “மத உணர்வுகள், நம்பிக்கைகள் குறித்துப் பொதுநலன் வழக்கு தொடர அனுமதித்தால், இந்தியாவின் மதசார்பின்மைக்கும் அரசியல் சட்டத்துக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். 10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள், சபரிமலைக்குப் போகக்கூடாது என்பது, நியாயமான, மதரீதியாகத் தேவையான சம்பிரதாயம் மட்டுமல்ல; தேவையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சம்பிரதாயமுமாகும்.
கேரளாவில் உள்ள, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்பன் கோவில்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இருக்கிறார். அதனால், அனுமதிக்கப்படுவதில்லை. இதை, அரசியல் சட்டத்தின், அடிப்படை உரிமைக்கு எதிரான தடை என்று கூற முடியாது. ஆகவே, ஐயப்ப பக்தர்களாக இல்லாத இளம் வழக்கறிஞர்கள் தொடுத்துள்ள பொது நல வழக்கை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று 75 பக்கங்களில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார், உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா.
இதற்கு ஆதாரமாகத் தமிழகத்தில் தீட்சிதர்கள் குறித்து டொக்டர் சுப்ரமணியன்சுவாமி போட்ட வழக்கின் தீர்ப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வழக்கு போன்றவற்றை எடுத்துக் கொண்டார் நீதிபதி.
அந்த மாறுபட்ட தீர்ப்பு, இன்றைக்கு மக்களின் போராட்டமாகக் கேரளாவில் மாறியிருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், ஒரே நேர்கோட்டில் நின்று “10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களை, சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது” என்று போராட்டம் நடத்துகிறார்கள்.
சபரிமலைக்குச் செல்லும் முன்பு புனித நீராடும் பம்பை நதிக்கரையில் பொலிஸ் தடியடி நடக்கிறது. பெண் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். விரதம் இருந்து சென்ற ஒரு சில பெண்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டுள்ளார்கள். சபரிமலை சன்னிதானத்திலேயே, போராட்டம் நடக்கும் அளவுக்கு இந்தப் பெண்ணுரிமை விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த கேரள அரசு, இன்றைக்கு சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த முடியாமல், திணறி நிற்கிறது.
கேரள அரசியல், காங்கிரஸுக்கும் கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றிருந்த நிலை, மாறி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வளர்ச்சி, அக்கட்சிக்குக் கேரளாவில் எதிர்காலம் உண்டு என்ற புதிய சகாப்தத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே, ‘சபரிமலைக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் கேரள அரசாங்கத்தின் முடிவை எதிர்த்துப் போராடுகிறோம்’ என்று போராட்டம் நடைபெறுகிறது. ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கிறோம்’ என்று சொல்லாமல், கேரள அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கிறோம் என்று கூறி, பெண்கள் பேரணிகளும் போராட்டங்களும் பா.ஜ.கவின் துணை அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.
பொதுவாக, 10 வயதுக்கும் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரி மலைக்குச் செல்லக்கூடாது என்ற வழக்கம், காலம் காலமாக இருந்து வருவதால், பெண்கள் மத்தியில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு இல்லை. அதேசமயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் பெண்கள் அனைவரும் எதிர்க்கவில்லை.
கேரள முதலமைச்சர், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த முடியாமல் தவித்து நிற்கிறார். சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு விட்டால், பெரிய தலைவலியாகி விடும் என்று நினைக்கிறார்.
அது மட்டுமின்றி, காங்கிரஸும் பா.ஜ.கவும் கைகோர்த்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, கேரளாவின் அரசியல் களத்தை கொம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக்கி விடுமோ என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது.
ஏனென்றால், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், கேரளாவில் அதிக எம்.பிகளை, சபரிமலை விவகாரத்தை வைத்துப் பெற்று விட வேண்டும் என்று, காங்கிரஸும், பா.ஜ.கவும் நினைக்கின்றன. ஆனால், கேரள வெள்ளப் பேரிடரில், தேர்தல் இலாபத்தை இழந்திருக்கும் கொம்யூனிஸ்ட் கட்சி, சபரிமலை விவகாரத்திலும் சிக்கிக் கொள்ள வேண்டுமா என்ற தயக்கமும் இருக்கிறது.
ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தி, அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை ஏற அனுமதிப்பது, இப்போது கொம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கிய கேள்வி அல்ல. யாராவது உச்சநீதிமன்றம் சென்று, இந்தத் தீர்ப்புக்குத் தடை வாங்கி விட மாட்டார்களா என்பதுதான், இப்போதைக்கு கேரள அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது.
Average Rating