வளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்!!( மகளிர் பக்கம்)
திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் ஆரத்தித் தட்டுகள் முக்கிய பங்கு வகிப்பதுண்டு. இந்நிகழ்ச்சிகளில் முன்பெல்லாம் சீர்வரிசையாக ஆரத்திக்கு எத்தனை தட்டுகள் வந்திருக்கின்றன என்பதுதான் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால், இன்றைய நிலைமையோ வேறு. ஆரத்தித் தட்டுகள் எப்படியெல்லாம் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்.
அந்தளவுக்கு ஆரத்தித் தட்டுகளில் புதுமையும், கலைநயமும் புகுத்தப்பட்டு இருக்கின்றன. மதுரையில் உள்ள தாசில்தார் நகரில் சிநேகிரி ஆரத்தித் தட்டுகள் என்ற பெயரில் அலங்கார சீர்வரிசை தட்டுகள் மற்றும் அலங்கார ஆரத்தித் தட்டுகள் தயாரிப்பில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ரமாவிடம் பேசியபோது…
“10 ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் மாப்பிள்ளையை வரவேற்க பெண் வீட்டார் தாங்களே காய்கறி, தானியம், மலர், மெழுகுவர்த்தி, உணவுப் பொருட்களைக் கொண்டு ஆரத்தி செய்து வரவேற்பார்கள். திருமண பரபரப்புக்கிடையில் இன்று அதைச் செய்ய யாருக்கும் நேரமில்லை. எனவே இன்றைய திருமண சுப நிகழ்வுகளில் ஆரத்தித் தட்டு தயாரிப்பு ஒரு சிறந்த தொழிலாக வளர்ச்சியும் வரவேற்பும் பெற்றுள்ளது.
ஆரத்தித் தட்டுகள் திருமணம் தவிர்த்து, வரவேற்பு, வளைகாப்பு, பெயர் சூட்டும் விழா, சீர்வரிசையை அலங்கரிக்க வைக்க என அனைத்து நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்று அழகூட்டுகிறது. சொந்தமாக சீர்வரிசைத் தட்டு கேட்பவர்களுக்கு அவர் களின் விருப்பம் அறிந்து செய்து கொடுப்பதுடன், வாடகைக்கு கேட்பவர்களுக்கும் கொடுக்கிறோம். சிலர் தீம் ஐடியாக்களைக் கொடுத்துச் செய்யச் சொல்வார்கள்.
வாடிக்கையாளர் விருப்பம் அறிந்து செய்யும்போது நமது கற்பனை சக்தி மேலும் அதிகரிக்கும். அதன் மூலமாக வருமானமும் அதிகமாகக் கிடைக்கும். சிலர் தங்களுக்கு இதேபோல்தான் வேண்டும் என புகைப்படங்களைக் கொண்டுவந்து காட்டி செய்யச் சொல்வார்கள். ஆரத்தித் தட்டுகள் மற்றும் சீர்வரிசை தட்டுகளை வாடகைக்கு எனவும், அவர் களுக்கே சொந்தமாகவும் செய்து கொடுக்கிறேன்.
ஒரு தட்டில் இருந்து எத்தனை தட்டு வேண்டுமானாலும் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஆர்டர் கொடுக்கலாம். ரூ.250 முதல் ரூ.2500 வரை எங்களிடம் தட்டுகள் கிடைக்கும். சொந்தமாக 21 தட்டுகள் வேண்டும் என்றால் அதற்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை விலை நிர்ணயம் செய்கிறோம். வாடகைக்கு 11 தட்டுகள் வேண்டும் என்றால் ரூ.2500. 21 தட்டுகள் வேண்டும் என்றால் ரூ.5000ம் வாங்குகிறேன்.
பணத்தின் மதிப்பை பொறுத்து உபயோகிக்கும் பொருள் அமையும். சீர்வரிசை தட்டுகளில் இடம்பெற வேண்டிய பூ, பழங்கள், உணவுப் பொருட்களை வாடிக்கையாளர் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அவற்றை தட்டுகளில் அசைவின்றி அழகாய் இடம்பெற வைத்து, மேலும் கூடுதல் அழகூட்டிக் கொடுப்போம். வருடத்தில் 9 மாதங்களும் முகூர்த்த தினங்களில் தொடர்ந்து இதற்கு ஆர்டர் கிடைக்கும்.
எப்படியும் 3ல் இருந்து 7 ஆர்டர்கள் வரை கிடைத்துவிடும். ஒரு ஆர்டருக்கு தயாரிப்பிற்கு ஏற்படும் செலவு போக இதில் நல்ல வருமானம் உண்டு. தோராயமாக மாதம் 15,000 வரை லாபம் பார்க்கலாம். சில மாதங்களில் முகூர்த்தம் அமைவதைப் பொறுத்து கூடுதலாகவும் கிடைக்கும். பெரும்பாலும் திருமண முகூர்த்த மாதங்களில் நல்ல வருமானம் கொடுக்கும் தொழில் இது.
மற்ற மாதங்களில் சடங்கு, வளைகாப்பு, கொலு போன்ற விசேஷங்களின் ஆர்டர்களும் கிடைக்கும். பெரும்பாலும் இந்த ஆரத்தித் தட்டுகளை கற்கள், ஜிமிக்கி, லேஸ், சில்பகர் கிளே, செயின்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பூக்கள், பெவிக்கிரில் கலர்கள் மற்றும் 3டி லைனர், நியான் கலர்கள் கொண்டு அலங்கரிக்கிறேன். வாடகைக்குவிடும் ஆரத்தித் தட்டுகளை அலங்கரிக்க சில்வர் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள், வுட் செட்டிங்குகள், தெர்மாகோல் போன்றவற்றை பயன்படுத்துகிறேன்.
தயாரிக் கப்பட்ட ஆரத்தித் தட்டுகளை பராமரிப்பது மிகவும் முக்கிய மானது. வாடகைக்குச் சென்று வந்தவுடன் தட்டுகளை சுத்தம் செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். மதுரையில் நடக்கும் அநேக திருமண வரவேற்பில் என்னுடைய ஆரத்தித் தட்டு களின் பங்களிப்பு அதிகம் இடம்பெறும். வாடிக்கையாளர் ஆர்டரில் குறிப்பிடும் நாள் அன்று, நிகழ்ச்சி நடக்கும் ஹாலின் முன்னுள்ள வரவேற்பறையில், தட்டுகளை அழகாக அடுக்கி வைத்து காண்பவர்கள் ரசிக்கும்படி செய்துவிடுவேன்.
மணமக்கள் திருமண நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்குள் நுழையும்போது ஆரத்தி எடுக்கச் செல்பவர்களுக்கு துணையாகவும் இருந்து உதவுவேன். நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கும்போது பலதரப்பட்ட மனிதர்களின் விருப்பத்தை அறியும் அனுபவமும் கிடைக்கிறது. அதன் மூலம் நட்பு வட்டமும் விரிவடையும். தொழில் ரீதியாகவும் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும்.
கல்லூரி மாணவிகளுக்கும், ஒருசில தொண்டு நிறுவனங்களுக்கும் ஆரத்தித் தட்டுகளை எவ்வாறு செய்வது, அதில் எவ்வாறு லாபம் காண்பது என்பது குறித்த பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறேன். சுயமாக தொழில் செய்ய நினைப்பவர்களும், வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களும் இந்த ஆரத்தித் தட்டு தயாரிப்புத் தொழிலை முறையாகக் கற்றுக் கொண்டு செய்தால் நிறைவான வருமானத்தை இதன் மூலம் பெறலாம்.”
Average Rating