சதுரங்க வேட்டை!!( மகளிர் பக்கம்)
ரீனா… செஸ் விளையாட்டில் நீலகிரி மாவட்டத்தின் டாப்பர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அந்த மாவட்டத்தின் நம்பர் ஒன் செஸ் சாம்பியன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு 2014ல் இருந்து தனக்கான முதலிடத்தை தக்கவைத்திருக்கிறார். படிப்பிலும் படு சுட்டி. நீலகிரி மாவட்டம் அரவேணுவில் உள்ள கேசலாடா அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ரீனா, ஷோனல், டிஸ்டிக், இன்டர் ஷோன், ஸ்டேட், தற்போது நேஷனல் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு காய் நகர்த்தி தன் சதுரங்க வேட்டையை வெற்றிகரமானதாக மாற்றியிருக்கிறார். இத்தனை சாதனைகளையும் வறுமை என்னும் சோதனையைக் கடந்தே சாதித்துக்கொண்டிருக்கிறார்.
பனிபடர்ந்த நீலகிரி மாவட்டத்தில், ஓங்கி வளர்ந்த யூக்கலிப்டஸ் மற்றும் சில்வர் ஓக் மரங்களுக்கு இடையே, தேயிலைத் தோட்டங்கள் மலைச் சரிவுகளில் பரவிக் கிடக்க, அழகும் குளுமையும் சில்லென சிலிர்த்திட, நம்பர் ஒன் பள்ளி என்கிற பெயரோடு, லட்சங்களில் பணம் கட்டிப் படிக்கும் வசதிபடைத்த குழந்தைகள் வலம் வரும் பள்ளி வளாகங்களுக்குள் அங்கிருக்கும் ஜாம்பவான் பயிற்சியாளர்கள், மற்றைய போட்டியாளர்கள் மிரட்டி நிற்க, அசால்டாய், பதட்டமின்றி, இலக்கோடு காய்களை நகர்த்துகிறார். சோதனைகளை சாதனைகளாக்கி சாம்பி யன் பட்டங்களைத் தட்டி வருகிறார். பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கும் அப்பள்ளி வளாகங்களுக்குள், ரீனாவை அழைத்துச் செல்லும் எங்களுக்கே கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கும் எனப் பேசத் தொடங்கினார் நீலகிரி மாவட்டம் அரவேணுவில் உள்ள கேசலாடா அரசுப் பள்ளி தலைமையாசிரியரான ஜெயசீலன். ரீனாவுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வத்தை தூண்டியவர்.
“நீலகிரி, கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர் எனச் சென்ற இடங்களில் எல்லாம் ரீனா தொடர் வெற்றிகளைச் சுவைத்திருக்கிறார். எல்லா மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து போட்டியில் கலந்து கொள்வார்கள். அவர்களிடத்தில் விலை உயர்ந்த மரத்தால் அல்லது கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பெரிய அளவு செஸ் போர்டு கைகளில் பளபளப்பாய் இருக்கும். ஆனால் ரீனா பயிற்சி எடுத்துக் கொண்டு கையில் வைத்திருப்பதோ மிகவும் சாதாரணமாக கடைகளில் நூறு ரூபாய்க்குள் கிடைக்கும் செஸ் போர்டுதான். அதில் பயிற்சி எடுத்தபடிதான் இந்தத் தொடர் சாதனைகளைச் செய்து வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் பதினோறு வயதுக்குட்பட்டோர் பிரிவில் மூன்று முறை முதலிடத்தையும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தொடர்ந்து முதலிடத்தையும், மாவட்ட தொடர் சாம்பியன் பட்டங்கள் என தனக்கான முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டேயிருக்கிறார். அரசுப் பள்ளிகளில் நடக்கும் போட்டிகள் தவிர சில தனியார் நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளிலும் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளார். ரீனாவிற்கு அப்பா இல்லை. அவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நோயில் இறந்து போனார்.
வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள். தற்போது ரீனா எட்டாம் வகுப்பும் அவரின் தங்கை நான்காம் வகுப்பும் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். ரீனாவின் அம்மா தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியில் இருக்கிறார். தினக்கூலி வருமானம் மிகமிகக் குறைவு என்பதால் ரீனாவின் அசுர வளர்ச்சிக்கு பொருளாதாரம் மிகப்பெரும் தடையாய் உள்ளது. சின்ன வயதில் பள்ளியில் செஸ் விளையாடத் தொடங்கியவர், ஆர்வம் மேலிட மிகவும் சிறப்பாக ஆர்வம் காட்டி விளையாடத் துவங்கினார். மண்டல, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். அவரது சிறிய வீட்டின் அறை முழுவதும் சான்றிதழ்கள், மெடல்கள், கோப்பைகளுமாய் குவித்து வைத்திருக்கிறார்.
அவர் துவக்க கட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, மாவட்ட அளவில் விளையாடுவதற்கு நானே அவருக்கு பயிற்சி கொடுத்தேன். செஸ் போட்டிகளில் பங்கேற்கச் செல்வதாக இருந்தால், இரண்டு நாட்களுக்கு முன்பே என் வீட்டிற்கு வந்து தங்கிவிடுவார். அந்த நாட்களில் என் மனைவி அவரை தன் மகளைப் போலவே கவனிப்பார். எங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் செஸ் விளையாட்டை ஆன்லைன் மூலமாக டவுன்லோடு செய்தே பெரும்பாலும் பயிற்சி எடுப்பார். போட்டி நடைபெறும் பள்ளிகளுக்கு ரீனாவை நானே அழைத்துச் செல்வேன். என்னால் முடியாத நேரங்களில் ரீனாவின் அம்மா அழைத்துச் செல்வார்.
தற்போது மாநில மற்றும் நேஷனல் அளவில் விளையாட சரியான பயிற்சி மையங்கள் நீலகிரி மாவட்டத்தில் இல்லை. ஒவ்வொரு வார இறுதியிலும் பயிற்சிக்காக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம்வரை அவரை அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. இதற்கு வாரம் ஆயிரம் செலவாகிறது. நல்ல பயிற்சியாளர்கள் சி.பி.எஸ்.சி. மாணவர்கள் பயிலும் பள்ளியில் மட்டுமே இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் கிடையாது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மாநில அளவில் நிகழும் போட்டிகளை எதிர்கொள்ள பயிற்சி எடுப்பது சிரமமாகவே உள்ளது. பெண் குழந்தைகளை ஊர் விட்டு ஊர் அழைத்துச் செல்வது சவுகரியமானதாகவும் எங்களுக்கில்லை. மேலும் முதலிடத்தை தக்க வைக்கும் குழந்தைகள் நேஷனல், இன்டர் நேஷனல் விளையாட்டின் காய்நகர்த்துதலை கற்பதற்கான பயிற்சி, தொடர்ந்து அவர்களுக்குத் தேவைப்படுகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் பணம் கட்டிப் பயில முடியும்.
ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை? நல்ல பயிற்சியாளர்களைக் கொண்டு முறையான பயிற்சி இருந்தால்தான் இன்னும் சிறப்பாக அவர்களால் விளையாட முடியும். போட்டிகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும். மேலும் வறுமையில் எதிர் நீச்சல் போடும் ரீனா போன்ற திறமைசாலிகளுக்கு கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினி, நல்ல தரமான செஸ் போர்டு, டைம் செட் செய்து விளையாட டைமர் போன்றவை தேவைப்படுகிறது. முறையான பயிற்சிதானே சிறந்த சாம்பியன்களை உருவாக்கும்.சென்னை போன்ற பெரிய நகரங்களில் நடைபெறுகிற போட்டிகளில் விளையாட அவருக்கு அழைப்பு வந்தாலும், அழைத்துச்செல்ல பொருளாதார வசதி தடையாகவே இருக்கிறது. மேலும் பெண் குழந்தை என்பதால் பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை. அவர் கலந்து கொள்ளாமைக்கு பொருளாதாரமே மிகப் பெரும் காரணம்.
இனி அதையும் முயற்சிக்க எண்ணியுள்ளோம். ஆசிரியர்களாகிய எங்களின் ஒத்துழைப்பு காரணமாகவே நீலகிரி மாவட்டத்தில் அவர் இந்த அளவு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மாநில அளவில் விளையாடச் செல்ல இன்னும் அவருக்கு நிறைய பயிற்சி தேவைப்படுகிறது. இனி அவரது வெற்றிகள் தொடரவும், நேஷனல் மற்றும் இன்டர் நேஷனல் அளவில் விளையாடவும் முறையான பயிற்சி தரக்கூடிய நல்ல பயிற்சியாளர்கள் ரீனாவிற்குத் தேவை” என முடித்தார். தொடர்ந்து பேசிய ரீனா, “நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் தலைமை ஆசிரியர், யாருக்கு செஸ் விளையாடுவதில் ஆர்வம் இருக்கிறதோ பெயர் கொடுக்கலாம் என்றார்.
நான் கை தூக்கிவிட்டு முன் வந்தேன். செஸ் விளையாடுவதில் நான் காட்டும் ஆர்வத்தைப் பார்த்த தலைமை ஆசிரியர், என் குடும்பச் சூழல் அறிந்து அவராகவே முன்வந்து பயிற்சிகளை நிறைய வழங்கினார். நீலகிரி மாவட்டத்தை சுற்றி உள்ள பள்ளிகளில் மாவட்ட, மாநில அளவில் நிகழும் போட்டிகளுக்கு அவரே செலவு செய்து என்னை அழைத்துச் சென்று பங்குபெற வைத்தார். போட்டி நடைபெறும் நேரங்களில் தலைமையாசிரியர் வீட்டிலேயே தங்கி, அவர் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்தி விளையாட்டை டவுன்லோட் செய்து பயிற்சி எடுப்பேன். என்னுடன் விளையாடும் போட்டியாளர்கள் அத்தனைபேரும் மிகப் பெரிய சைஸ் செஸ் போர்டுகளை கைகளில் வைத்திருப்பார்கள்.
ஆனால் என்னிடம் இருப்பதோ மிகச் சாதாரணமான போர்டு. நேஷனல் அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற சரியான பயிற்சியாளர்கள், பயிற்சி மையங்கள் எங்கள் மாவட்டத்தில் இல்லை. ஒவ்வொரு வாரமும் எனது பயிற்சிக்காக ஆகும் செலவினை அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. தேயிலை தோட்டத்தில் அம்மாவின் தினக் கூலி 200 மட்டுமே. அம்மா வேலை செய்துதான் என்னையும் தங்கையையும் படிக்க வைக்கிறார். நான் இருக்கும் அரவேணு பகுதியில் இருந்து மேட்டுப் பாளையம்வரை சென்று பயிற்சி எடுத்துவர எனக்கும் அம்மாவிற்கும் தேவைப்படும் போக்குவரத்துச் செலவே வாரத்திற்கு 500 வரை ஆகிறது. மாதத்திற்கு நான்கு வாரமும் ஏற்படும் செலவை அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. போட்டிகளில் பங்கேற்க ஏற்படும் செலவை என் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் உதவுவதன் மூலமே சமாளிக்கிறோம்” என்றார் ரீனா.
ரீனாவின் அம்மா சுசீலா பேசிய போது…“எங்கு செஸ் விளையாடச் சென்றாலும் ரீனாதான் முதலாவதாக வருவாள். வீட்டிற்கு வரும்போது கைகளில் கப், மெடல், சர்டிஃபிக்கேட்டோடுதான் திரும்புவாள். படிப்பிலும் ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறாள். அவள் நன்றாக வருவாள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. ஆனால் எங்கள் பொருளாதார நிலைதான் அவளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.நாங்கள் நீலகிரி மலையில் வாழும் படுகர் இன மக்கள். தற்போது எனக்கு வயது 36. எனது கணவர் இறந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இரண்டு வருடம் தொடர்ந்து அவருக்கு மருத்துவம் பார்த்தும் எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தில்தான் என் பெண் பிள்ளைகள் இருவரையும் படிக்க வைக்கிறேன்.
பள்ளி ஆசிரியர்களின் ஊக்கத்தாலும், தலைமையாசிரியரின் வழிகாட்டுதலாலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை ரீனா தக்க வைத்துக் கொண்டே இருக்கிறாள். நீலகிரி மாவட்டத்தை சுற்றி எங்கு செஸ் போட்டிகள் நடந்தாலும் தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர் யாராவது அவளை அழைத்துச் செல்வார்கள். தொடர்ந்து இந்த விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்து அவளை மேம்படுத்திக் கொண்டு செல்ல எனக்கிருக்கும் பொருளாதார வசதியில் சுத்தமாக என்னால் முடியவில்லை. வீட்டையும் கவனித்து, இவர்களையும் படிக்க வைத்து, ரீனாவின் செஸ் ஆர்வத்தையும் பூர்த்தி செய்ய ரொம்பவே திணறுகிறேன். வாராவாரம் பயிற்சிக்காக மேட்டுப்பாளையம்வரை அழைத்துச் செல்லவே 500ல் இருந்து 700 செலவாகிறது. ரீனாவின் பயிற்சிக்காக என் கூலியை செலவு செய்து விட்டாள். வீட்டைக் கவனிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது” என முடித்தார்.வெற்றியாளர்கள் பிறப்பதில்லை.. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்…
Average Rating