இளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…!!(மருத்துவம்)

Read Time:12 Minute, 41 Second

ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் போலவே ஹேர் டையும் இப்போது கூந்தலின் பராமரிப்பிற்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. வயதான பின்பு உண்டாகும் நரைமுடிக்கு ‘டை’ அடித்து கூந்தலைப் பராமரித்தால் பரவாயில்லைதான். ஆனால், இன்றைய இளைய சமுதாயம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிக இளம் வயதிலேயே ஸ்டைலுக்காக கலர் கலராக ‘டை’ அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது சரிதானா? இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? சரியான ஹேர் டையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? பார்க்கலாம்…

இளம் வயதிலேயே நரை வந்தால் அதற்கு என்ன தீர்வு? முதலில் எதை இளம் நரை என்று தெரிந்து கொள்வோம். நம் சருமத்தின் நிறம் எவ்வாறு மெலனோசைட்களால் நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் முடியின் நிறமும் அந்த செல்களால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. சருமத்தில் பொதுவாக ஒரு மெலனோசைட் 36 தோல் செல்களோடு தொடர்பில் இருக்கும். ஆனால், தலைமுடியில் மட்டும் ஒரு மெலனோசைட் 5 முடிகளின் செல்களோடு மட்டும்தான் தொடர்பில் இருக்கும். அந்த முடிகளின் நிறத்திற்கு அந்த செல்தான் பொறுப்பு.

ஒரு முடி விழுவதற்கு முன்பே அந்த மெலனோசைட் அதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். அதேபோல் ஒரு முடி வளரும் பருவத்திற்கு(Anagen Phase) வந்த பின்புதான் மெலனோசைட் நிறத்தைக் கொடுக்கும். அதனால்தான் புழுவெட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு முடி திரும்பவும் வளரும்போது முதலில் வெள்ளை முடியாக வந்துதான் கருமை நிறத்தை அடையும். இளநரை ஒருசில குடும்பத்தில் தொடர்ச்சியாக பாதிக்கும். அதாவது பாட்டி, அம்மா, பேத்தி எல்லாருக்குமே சின்ன வயதிலேயே நரை வந்ததாகச் சொல்வார்கள்.

இது அவர்களுடைய மரபணுக்களில் உள்ள ஒரு சின்ன குறைபாடு. அவர்களுடைய மெலனோசைட்கள் 30 முதல் 40 வயது வரை சுறுசுறுப்பாக வேலை செய்யாமல் 20 வயதிலேயே சோர்ந்து வேலை செய்வதை நிறுத்தி விடுவதால் இளநரை உண்டாகிறது. அவர்களுடைய செல்கள் திரும்பவும் எழுச்சி பெற்று வேலை பார்க்கவும் முடியாமல் போகிறது. சுற்றுப்புறச்சூழல், மன அழற்சி மற்றும் பல காரணங்கள் இதை இன்னும் அவர்களுக்கு பலப்படுத்துகிறது. சிலருக்கு இளநரையானது மற்ற சுய எதிர்ப்பு நோய்களோடு சேர்ந்தும் வரலாம்.

ஒரு சிலருக்கு ரத்த சோகையினால் கூட ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு, செம்புச்சத்து குறைபாடு(Copper), புரதச்சத்து குறைபாடுகளும் முடியை வெள்ளையாக்கலாம். இவ்வாறு சத்து குறைபாட்டினால் வரும் வெள்ளை முடியானது, அந்த சத்துகளை நாம் கொடுக்கும்போது கருப்பாக மாறும். சில வகை மாத்திரைகளை உட்கொள்வதும் முடியை வெள்ளையாக்கலாம். (எ.கா: Chloroquine, Phenylthiourea, Triparanol போன்ற மருந்து வகைகள்.) புகைப்பிடிப்பதாலும் சிலருக்கு இளநரை ஏற்பட காரணமாக இருக்கலாம்.

இளநரை தோன்றிவிட்டதால் மட்டும் அவர்களுக்கு மொத்த முடியும் சீக்கிரம் நரைத்துவிடும் என்பதில்லை. Paba, Calcium Pantothenate போன்ற மாத்திரைகள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவற்றைக் கொண்டு சத்துக்குறைபாட்டினால் வரும் நரைத்த முடிக்கு சிகிச்சை செய்யலாம். ஆனால், 50 வயதுக்குமேல் எல்லோருக்குமே கொஞ்சம் வேகமாக நரைக்கத் தொடங்கும். சிகிச்சையினால் குணப்படுத்த முடியாத இளநரைக்கும் மற்றும் வயதானால் இயற்கையாக ஏற்படும் நரைத்த முடிக்கும் ஹேர் டை உபயோகத்தை தவிர்க்க முடியாத கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

ஹேர் டையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் முன் அவற்றை வகைப்படுத்தி இனம் கண்டுகொள்வது அவசியம். Gradual Hair Dyes, Temporary Hair Dyes, Semi-Permanent Hair Dyes, Demi – Permanent Hair Dyes, Permanent Hair Dyes.

Gradual hair dyes

இவ்வகை டை, வீட்டிலேயே உபயோகிக்க ஏதுவாக தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பல நாட்கள் தொடர்ந்து உபயோகித்த பின் தேவையான நிறம் கிடைக்கும். அதன் பின்னர் உபயோகத்தை நிறுத்திக்கொள்ளலாம். பின்பு கலர் குறைந்த பிறகு திரும்பவும் முன்புபோல உபயோகிக்க வேண்டியிருக்கும். இது பொதுவாக உலோக உப்புகளால் திரவ நிலையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.

எ.கா: Lead, Silver, Bismuth அதை தலையில் தடவியபின் Sulfides, Suboxides மற்றும் Oxides-களாக மாறி நிறத்தைக் கொடுக்கும். இவ்வகை டை போடுவதற்கு அவ்வளவு எளிதாக இருக்காது. அதிக நேரம் தடவி வைத்திருக்க வேண்டியிருக்கும். சரியான நிறம் கிடைக்காது. ஆனால், PPD அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்த டை உகந்தது.

PPD என்றால் என்ன?

Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD. டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே.

2002ல் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் 1-64% சதவீதம் வரை ஹேர் டைகளில் PPD இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் விலை மலிவான, தரமில்லாத டையை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

Temporary hair dye

இது தற்போதிருக்கும் முடியின் நிறத்தை கொஞ்சம் அதிகப்படுத்திக் காட்டும். ஆனால், இது பொதுவாக ஒரே தடவை ஷாம்பு போட்டால்கூட போய்
விடும். துணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் டையை இதில் உபயோகிப்பார்கள். Silver Shampoo என்று விற்கப்படுவதுகூட ஒரு Temporary Hair Dye-தான்.

Semi- Permenent hair dyes

இது தண்ணீரில் கரையக்கூடிய அயனி அல்லாத எடை குறைவான முன்பே உருவாகிய(Preformed) டையைக் கொண்டது. Anthraquinone அல்லது Aromatic Amines போன்றவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும். இதை பொதுவாக ஷாம்பூ போட்டு நன்கு உலர்ந்த முடியில் 20 நிமிடம் தடவி வைத்து பின்பு கழுவிய பின் ஒரு கண்டிஷனரும் உபயோகிக்க வேண்டியிருக்கும். 6-8 தடவை ஷாம்பு போட்டு கழுவும் வரை, இவ்வகை ‘டை’ தலைமுடியில் இருக்கும். ஆனால், இவ்வகை ‘டை’ உபயோகிக்கும் முன் Patch Test செய்துகொள்வது அவசியம்.

Demi – Permenent hair colors

இதில் அமோனியா கிடையாது. Hydrogen Peroxide 2% இருக்கும். இது நிரந்தர டையைவிட குறைவான தோல் எரிச்சலையும் முடி சேதத்தையும் கொடுப்பதாக இருக்கும்.

Permenent hair dyes

இந்த நிரந்தர ஹேர் டைதான் மிக அதிகமான உபயோகத்தில் உள்ளது. உபயோகிக்க எளிதாக இருப்பதாலும், நிறைய நாட்கள் தலைமுடியில் இருப்பதாலும், பல நிறங்களில் கிடைப்பதாலும் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருக்கும் Para Dyes என்பது Para Phenylene diamine, Pra toluene diamine, Para amino phenol எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவைகளை Primary Intermediaries என்று அழைப்பார்க்ள். இது ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் சேர்ந்து `O2’ வை ரிலீஸ் செய்யும் செயல் முடியின் ‘கார்டெக்ஸ்’ உள்ளே நடக்கும்.

இது கார்டெக்ஸ் உள்ளே நுழைவதற்கு உதவி செய்வது அமோனியா(Ammonia). அமோனியா அல்லாத டையில் அதனுடைய வேலையைச் செய்வது Sodium carbonate மற்றும் Ethanolamine. Para dye-களின் அளவு சிறியதாக இருப்பதால் அவைகளால் க்யூட்டிகளின் ஊடே செல்ல முடியும். கார்டெக்ஸின் உள்ளே சென்றபின் அனிலீன் டைகளோடு (Aniline Dyes) சேர்ந்து தேவையான நிறத்தை கொடுக்கும்.

மார்க்கெட்டில் கிடைக்கும் Black Henna என்பதில் PPD- தான் சேர்க்கப்பட்டிருக்கும். PPD அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இவ்வகை நிரந்தர டைகள் Liquids, Gels மற்றும் Cream வடிவங்களில் கிடைக்கிறது. வீட்டில் உபயோகிக்க ஏதுவாக உள்ள ஒரு வகையில் Hydrogen Peroxide ஒரு பாட்டிலிலும், Primary Intermediaries கண்டிஷனரோடு சேர்ந்து மற்றொரு பாட்டிலிலும் இருக்கும் இரண்டையும் சம அளவில் எடுத்து உபயோகிக்க வேண்டியிருக்கும். இதை கலந்த உடனேயே உபயோகித்துவிட வேண்டும். மீதம் இருப்பதை பின்பு உபயோகிக்கக் கூடாது.

Patch test எப்படி செய்ய வேண்டும்?

காதுக்கு பின்பு அல்லது முன்னங்கையில் இந்த ‘டை’ கலவையை பஞ்சினால் கொஞ்சமாக தடவி விட்டு காய விட வேண்டும். 2-3 நாட்கள் வரை எந்தவித பக்கவிளைவும் ஏற்படாவிட்டால் பின்பு அந்த ‘டையை’ தலையில் தைரியமாக உபயோகப்படுத்தலாம்.

ஆயுர்வேதிக் டைகள்

இந்தியா முழுவதும் பல்வேறு ஹெர்பல் மற்றும் ஆயுர்வேதிக் டைகள் விற்கப்படுகின்றன. Para dyes அலர்ஜி உள்ளவர்களுக்கு இது உதவும். இவை மருதாணி இலையை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. 2- Hydroxy 4-Napthaquinone என்னும் வேதிப்பொருட்கள் மருதாணியில் உள்ளது. அதுதான் நமக்கு நிறத்தை கொடுக்கிறது.

இவ்வகை பவுடர்களோடு டீ டிகாஷன் அல்லது காபி டிகாஷன் கலந்து 2-3 மணி நேரம் ஊற வைக்கும்போது ஒரு கருஞ்சிவப்பு நிறம் கிடைக்கிறது. அதனை தலையில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். இது செய்வது கொஞ்சம் சிரமம். மற்றும் ஸ்ட்ராங்கான வாசனை சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது. டை-அலர்ஜி இருப்பவர்கள், அதை தவிர்த்துவிட்டு இந்த மருதாணி இலை துகள்களை (ஹென்னா) பயன்படுத்திக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி!!(உலக செய்தி)
Next post பித்த வெடிப்பும் விளக்கெண்ணெயும்!!( மகளிர் பக்கம்)