இனி சமையலறை இப்படித்தான் இருக்கும்!!!(மருத்துவம்)

Read Time:11 Minute, 5 Second

அம்மா Smart Knife உதவியால் காய்களை வெட்டிக் கொண்டிருப்பாள். Food Censor மூலம் மகன் தட்டில் இருக்கும் உணவில் க்ளுட்டன் இருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்து கொண்டிருப்பான். குடும்பமே 3D உணவு அச்சுப்பொறியில் தங்களுக்குப் பிடித்த பீட்ஸா, கேக் தயாரித்துக் கொண்டிருப்பார்கள். ஸ்மார்ட்ஃ ப்ரிட்ஜ், ஸ்மார்ட் ஸ்டவ் என கிச்சன் முழுக்கவே கேட்ஜட்டுகளாக நிரம்பியிருக்கும். இந்த கற்பனை காட்சி வேடிக்கையாக இருக்கிறது இல்லையா? கற்பனையல்ல ஒரு நாள் நிச்சயம் இது நிஜமாகும்.

உலகளாவிய உடல் பருமனிலிருந்து, பட்டினி பிரச்னை வரை, நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் தொழில்நுட்பங்களை எப்படி இணைக்க முடியும் என்பதற்கான தீர்வாகத்தான் இந்த கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டுமே தவிர, பாசமும், ஆரோக்கியமும் நிறைந்த நம் பாரம்பரிய சமையலை, தொழில்நுட்பம் எந்தவிதத்திலும் குறைக்காமல் புத்திசாலித்தனமாக அதை பயன்படுத்திக் கொள்வது நம் கையில் இருக்கிறது. நாம் எப்போது? எங்கே? எதை, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இனி தொழில்நுட்பமும், அறிவியலும்தான் தீர்மானிக்கும்.

ஆனாலும் பாரம்பரிய முறையோ, நவீன தொழில்நுட்பமோ, எதுவாக இருந்தாலும் உணவைப் பொறுத்தவரையில் ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்தும் பின்வரும் 3 முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்துவிட்டால் அடுத்தவர் என்ன வாங்குகிறார் என பார்த்து, நாமும் அதையே வாங்குவது பழக்கமாகிவிட்டது. உண்மையில் எந்த உணவுப்பொருளை வாங்க வேண்டும்? எதை சாப்பிடவேண்டும்? எது நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளும்? என பலருக்கும் தெரிவதேயில்லை.

அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள், அச்சடிக்கப்பட்டிருந்தாலும், அது ஆரோக்கியமானதா? குறைந்தபட்சம் நம் உடலின் செரிமான சக்திக்கு ஏற்றதா என்பதைப்பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. இதனாலேயே இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை ஃபுட் அலர்ஜி, ஃபுட் பாய்சன் போன்றவற்றால் பாதிக்கப்படுவது சகஜமாகிவிட்டது. சாப்பிட வேண்டிய உணவின் அளவு, அந்த உணவில் உள்ள கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவு, மற்றும் அதிலிருக்கும் நச்சுத்தன்மை, ஒவ்வாமை போன்றவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதற்கான தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் Food Scanner.எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கேனரை, கைக்கடிகாரம் போல் கையில் அணிந்து கொள்ளலாம். இதில் உள்ள சென்சார், உங்கள் தட்டில் உள்ள உணவை இரண்டே நொடிகளில் துல்லியமாக சோதனை செய்து, குளூட்டன் கலப்பு, சர்க்கரை அளவு, ஊட்டச்சத்து அளவு, நச்சுப்பொருள் கலந்துள்ளதா? போன்ற தகவல்களை உங்களின் மொபைல் அப்ளிகேஷனுக்கு அனுப்பிவிடும்.

அதைப்பொருத்து சாப்பிடலாமா? வேண்டாமா? என நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமா? இதன் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற மளிகை சாமான்களை மொத்தக் கொள்முதல் செய்வதாக இருந்தால், அதன் மாதிரியை சோதனை செய்து வாங்கலாம்.

எதை சாப்பிட வேண்டும்?

சரி… ஃபுட் ஸ்கேனர் மூலம் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று தெரிந்து கொண்டோம். அடுத்த நிலை என்ன? எதைச் சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரிய வேண்டும். இப்போது உணவு சம்பந்தமாக ஏகப்பட்ட ஆய்வறிக்கைகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த வாரம் விலங்குகளின் பால் மனிதனுக்கு தீங்கானது என்கிறார்கள்.

அடுத்த வாரம் இல்லை நல்லது என்பார்கள். ஒருவர் கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளை உணவு வகைகளை சாப்பிடக்கூடாது என்பார், மற்றொருவர் எல்லா வண்ணங்களும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பார். இதனால் மக்கள் எதைத்தான் சாப்பிடுவது? என்ற பீதியிலேயே இருக்கிறார்கள். உங்கள் உடலின் தனிப்பட்ட தேவையை அறிந்து சாப்பிடுவதை வலியுறுத்தும் வகையில் இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது Nutrigenomics.

அதாவது உங்களின் தனிப்பட்ட மரபணுத் தன்மைக்கேற்ற உணவை சாப்பிடலாம். மரபியல் மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் இணைந்த ஒரு புதிய துறையே இந்த நியூட்ரிஜினோமிக்ஸ். ஒருவரின் மரபணு சோதனை மூலம், அவரின் உயிரின தேவைகளைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற உணவு முறையைப் பின்பற்றும்போது நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதே நியூட்ரி ஜினோமிக்ஸின் பின்னாலிருக்கும் அடிப்படை யோசனை. இதற்கு முதலில் உங்களுடைய ரத்த மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி டி.என்.ஏ பரிசோதனை தகவல்களை பெற வேண்டும்.

பின்னர், உயரம், எடை, டி.என்.ஏ சோதனையின் தகவல்கள் போன்றவற்றை மொபைலின் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் பதிவு செய்துவிட வேண்டும். பிறகு பாருங்கள்! ஒரு ஹோட்டலுக்கு போய் ஆா்டர் செய்யும் போது இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது? போன்ற தகவல்களை தானாகவே அறிவிப்புகளாக தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு கஃபைன் ஒத்துக் கொள்ளாது என்றால், நீங்கள் காஃபி ஆர்டர் செய்த உடனேயே, காஃபி சாப்பிடாதே என்று அறிவித்துவிடும்.

குறிப்பிட்ட ஒரு மருந்து உங்கள் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் என்ற தகவலையும் ஒரு மருந்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போதே உங்களுக்கு தகவல் வந்துவிடும். நமது உடலின் தனிப்பட்ட உயிரியல், நாம் எடுக்கும் உணவோடு எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும், ஒரு உணவு நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை எவ்விதம் பாதிக்கிறது என்பதையும் இந்த நியூட்ரிஜினோமிக்ஸின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். கண்மூடித்தனமாக புதுப்புது உணவு முறைகளைப் பின்பற்றுவதை தவிர்த்து, நம் மரபணுக்கேற்ற உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள முடியும்.

எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்?

ஒரு சிலர் சிறு வயதிலிருந்தே குறித்த நேரத்தில் உண்ணும் பழக்கத்தை பிசகாமல் கடைபிடிப்பவராக இருப்பார்கள். சிலரோ, எப்போதெல்லாம் பசிக்கிறதோ? எங்கெல்லாம் பிடித்த உணவை பார்க்கிறார்களோ? நேரம் காலம் இல்லாமல் சாப்பிடுபவராக இருப்பார்கள். ஒரு குரூப் 3 வேளைகள் மட்டும் வயிறு நிறைய சாப்பிடுபவர்களாகவும், இன்னொரு குரூப் சிறிது, சிறிதாக உணவை 6 வேளைகளாக பிரித்து சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இதில் யாருக்கு எது நல்லது? என்பதில் பெரும் குழப்பம்.

இந்த மர்மங்களைப் போக்க, புது தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள சமையல் உபகரணங்கள் சந்தைக்கு வந்துவிட்டது. எப்படி உணவை ரசித்து, ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதை Smart Spoon சொல்லிக் கொடுக்கிறது. வேகமாக சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு, அதுவே உடல்பருமனையும் ஏற்படுத்திவிடும். இந்த ஸ்மார்ட் ஸ்பூனால் நீங்கள் வேக வேகமாக சாப்பிட முடியாது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலைப்பற்றிய தகவல்களை ஆன்லைனில் அப் லோட் செய்துவிட்டால் போதும்.

ப்ளூ டூத் மூலம் தகவல்கள் உங்கள் மொபைலுக்கு வந்துவிடும். தவிர, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், நடுக்கு வாதம் மற்றும் விபத்துகளால் கைகளை இழந்தவர்கள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இந்த ஸ்மார்ட் ஸ்பூன் இவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். மேலும் எளிதில் அப்புறப்படுத்தக்கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத, காய்கறி பழங்களால் ஆன மற்றும் மக்கும் கிண்ணங்கள், தட்டுகள் என சமையல் பாத்திரங்கள் வரிசையாக சந்தைக்கு வந்துவிட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ!!
Next post சபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் !!(வீடியோ)