வெற்றிகரமான பிசினஸ் வுமன்!!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 54 Second

ஸ்பார்க் மற்றும் IISM நிறுவனங்களின் சிஇஓவாக இருப்பவர் சுஜாதா புகழேந்தி. மிக இளம் வயதில் ஒரு சிறு நிறுவனமாக இவர் ஆரம்பித்த ஸ்பார்க் எனும் நிறுவனம் இந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவெங்கும் 14 கிளைகளைப் பரப்பி வெற்றிகரமான நிறுவனமாக சிறந்து விளங்க காரணம் இவரது புதுமையான சிந்தனையும் செயல் திறனும் தான். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்குமளவு வளர்ந்திருக்கும் இவர் தன் வெற்றியின் ரகசியத்தை தோழி வாசகிகளுக்காக இங்கே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

“நான் சென்னையைச் சேர்ந்த சாதாரண குடும்பத்துப் பெண்தான். அம்மா மட்டும் சிங்கிள் பேரண்டா இருந்து என்னை சிரமப்பட்டு வளர்த்தாங்க. படிக்கும்போதே 17 வயதிலிருந்தே நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன் வேலை என்பது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொண்டேன். கூட வேலை செய்றவங்க படற கஷ்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு நாள் நானும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும், நல்லபடியா அவங்க நிம்மதியா வேலை செய்ய வழிவகை செய்யணும்னு நினைச்சதுண்டு.

பள்ளிப் படிப்பு முடித்தவுடன் பத்திரிகைத்துறைக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அம்மா சொல்படி பிஸியோதெரபி சேர்ந்து படித்தேன். நாலரை ஆண்டுகள் முடிந்தவுடன் எனக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் இண்டன்ஷிப் போட்டிருந்தார்கள். அங்கே சென்ற போது தான் பிரபல ஸ்போர்ட்ஸ் பிஸிஷியன் கண்ணன் புகழேந்தி அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. அங்கு அவர் கிளினிக் வெச்சிருந்தார். எங்கள் நட்பு பின்னர் காதலாகி 2006ல் திருமணமும் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பிறகு நானும் அவருடன் இணைந்து அவரது கிளினிக்கைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். நிறைய நோயாளிகள் அவரிடம் வருவாங்க. அப்போது தான் ஸ்பார்க் எனும் இந்த நிறுவனத்தை துவங்கும் ஐடியா எனக்கு வந்தது. இவருடைய இந்த சேவையை ஏன் நாம் பெரிய அளவில் கொண்டு போகக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.

என் குடும்பத்தில் யாரும் பிஸினஸ் செய்தது இல்லை. இருந்தாலும் இதைச் செய்ய ணும்னு தீர்மானமா முடிவெடுத்தேன்.2009ல் முழுக்க முழுக்க ஸ்பார்க் (Sparrc- Sports Performance Assessment Rehabilitation Research Institute) நிறுவனத்தைத் துவங்கி நடத்த ஆரம்பித்தேன். We are Just a Spark, You Have to fire என்ற அர்த்தத்தில் தான் இந்த பெயர் வைத்தேன்.போயஸ் கார்டனில்தான் முதலில் இந்நிறுவனத்தை சிறு அளவில் ஆரம்பித்தேன். 4 பிஸியோதெரபிஸ்டுடன் என் கிளினிக் செயல்பட்டது. இன்று நூற்றுக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இந்தியா முழுவதும் மொத்தம் 14 கிளைகள் உள்ளன. சென்னையில் மட்டும் ஏழு கிளைகள். அது தவிர கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும் எங்கள் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.

நடிகர்கள், அரசியல்வாதிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள் போன்ற பல பிரபலங்கள் எங்கள் நிறுவனத்தின் கஸ்டமர்களாக இருக்கின்றனர். இந்நிறுவனத்தில் உடற்பயிற்சி மூலமாக உடல் வலிகளைக் குறைக்கிறோம். எல்லா இடங்களிலும் போன் அண்ட் ஜாயின்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நாங்க தசைநார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஸ்போர்ட்ஸ் மெடிசன் டாக்டர்கள் கன்சல்ட்ன்ட் பண்ணுவாங்க. வலி எங்கிருந்து வருது என முதலில் புரிந்து கொள்வோம். வலியுடன் வருபவர்களுக்கு மற்ற இடங்களில் வலி குறைய பத்து நாட்கள் ஆகும் என்றால் நாங்கள் மூன்று நாளில் வலியைக் குறைப்போம். டிரிக்கர் பாயின்ட் தெரபி மூலம் வலியைக் குறைக்கிறோம்.

உடனடியாக வலி குறைவதனால்தான் இங்கே நிறைய கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. வலி குறைய எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று சொல்லித்தருவோம். வலி குறைந்தவுடன் தசைகளை வலுவாக்க தொடர்ந்து உடற்பயிற்சிக்காக சிலர் இங்கே வருகிறார்கள். எனக்கு நிறையத் தோழிகள் இருக்கிறார்கள். சுஜாதா இதை செய்றாங்கன்னு ஒவ்வொருத்தரா சொல்லி நிறைய பேர் வர ஆரம்பிச்சாங்க. இந்த நிறுவனத்தில் நிறைய பெண்கள் தான் வேலை செய்றாங்க.IISM –Indian institute of Sports medicine என்ற நிறுவனத்தையும் நடத்துகிறோம். ஸ்போர்ட்ஸ் மெடிசன், ஃபிட்னஸ் மெடிசன், பி.எஸ்.ஸி. ஃபிட்னஸ் அண்டு ஃலைப் ஸ்டைல் மாடிஃபிகேஷன் போன்ற கோர்ஸ்களை அதில் கற்றுத் தருகிறோம். எனவே எங்களிடம் படித்த சில டாக்டர்களும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.

ஒரு தொழில்னு இறங்கிட்டாலே தைரியமான முடிவுகள் எடுக்க தெரிஞ்சுக்கணும். தன்னம்பிக்கை இருக்கணும். நான் விரலுக்குத் தகுந்த வீக்கம் என்ற அடிப்படையில்தான் இந்த தொழிலை செய்து வந்தேன். இவ்வளவுதான் முடியும் என்று நினைத்தால் அந்த அளவில்தான் செயல்படுத்துவேன். லோன் எதுவும் எடுக்கவில்லை. என்ன சம்பாதித்தேனே அதை இந்த தொழிலில் போட்டேன். எனக்கு வந்த லாபத்தை மறுபடி மறுபடி இதிலே முதலீடு செய்தேன். கடுமையா உழைச்சேன். அதனால் என் தொழில் நன்றாக வளர ஆரம்பித்தது. எல்லாரிடமும் தோழமையோடு இருப்பேன். எனக்கு ஒரு மகன். பதினோரு வயது. அவனது தேவைகள் வீட்டுத் தேவைகளை முடிச்சிட்டு வேலைக்கு வந்துவிட்டால் மன நிம்மதியுடன் முழு கவனத்தையும் வேலையில் ஈடுபடுத்துவேன். என்னோட வெற்றிக்குக் காரணம் என்னவென்றால் எங்கள் நிறுவனத்தின் அடிமட்ட வேலையாட்கள் வரை அனைவரிடமும் உரையாடுவதுதான். ஏதாவது பிரச்னை என்றால் நேரடியாக கூப்பிட்டுப் பேசுவேன். அவர்கள் குறித்து தெரிந்திருந்து வைத்திருப்பேன்.

முதலில், ‘சிறிய அளவில் இருந்தபோது கடைமட்ட ஊழியரிடம் கூட பேசுவீர்கள். நிறுவனம் வளர்ந்தால் என்ன செய்வீர்கள்’ என்று சிலர் கேட்டதுண்டு. ஆனால் இப்போதும் அதே மாதிரி தான் இருக்கிறேன். ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்களின் கஷ்டங்களை புரிந்துகொள்கிறேன். நானும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்திருப்பதனால் மற்றவர்களின் கஷ்டங்களை என்னால் நன்கு உணர முடியும். நம் தொழிலை நம்பி நிறைய பேர் வருகிறார்கள் என்றால் தான் நம்மால் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். நோயாளிகளிடம் நிறைய பேசுவோம். முதலில் எங்களோட தனித்துவமான இந்த மருத்துவ முறையை அவர்களுக்குப் புரிய வைக்கணும். அதற்கு நிறைய கவுன்சிலிங் கொடுக்கணும். ஒரு சிந்தனை புதிதாக இருக்கும்போது எல்லாருக்கும் பிடிக்கும். அது மாதிரி எங்களுடைய ஐடியா தனித்துவமானது.

ஒரிஜினல் திருநெல்வேலி அல்வாவை அங்கேதானே போய் வாங்க முடியும்? அது போல எங்களுடைய டீரிட்மெண்ட் மெத்தாடலாஜி எங்களிடம்தான் கிடைக்கும். நாங்கள் வலி என்று வருபவர்களிடம் தேவைப்பட்டால் ஒழிய பரிசோதனைகள் செய்யச் சொல்வதில்லை. எனவே எங்கள் மீதான நம்பிக்கை மக்களிடம் இருந்ததால் எங்கள் தொழில் வெற்றி அடைந்தது. தொழில் துவங்கும்போது நம்பிக்கை வலுவாக இருக்கணும். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாதுன்னு தெளிவு இருக்கணும். இந்த நிறுவனத்தைத் துவங்கும்போது அடுத்த பத்து வருஷத்துக்கு இதை வெற்றிகரமாக நடத்த முடியுமான்னு எல்லாம் எனக்கு அப்போது தெரியாது.

ஆனா அடுத்த ஆறு மாசத்துக்கு வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதாவது எப்போதுமே குறுகிய காலத் திட்டங்கள் அல்லது ஒரு முறை திட்டம் என்பதுதான் என் ஐடியாவாக இருந்தது. அகலக்கால் வைக்க நான் விரும்பியதில்லை. ஒரே நாளில் ஸ்பார்க் நிறுவனம் 14 கிளைகளை பரப்பவில்லை. ஒவ்வொரு கட்டமாக நான் பார்த்து பார்த்து இப்படி அடி எடுத்து வைத்தால் இந்த வெற்றி கிடைக்கும் என்று திட்டமிட்டு அடி எடுத்து வைத்து செய்ததால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நம் தொழில் குறித்து உள்ளூர ஒரு கணிப்பு இருக்கணும். அந்த கணிப்புத்தான் அந்தச் செயலுக்குத் தூண்டுதல். ஒரு நிறுவனம் துவங்கினால் இத்தனை பேர் இங்கே வேலை செய்யலாம், இதை இப்படிப் பண்ணலாம், இதில் இவ்வளவு வருமானம் வரும் என்று கணக்குப் போட்டு சுயமாக செய்யத் தெரிய வேண்டும். வெளியே இருந்து யாராவது சொல்லிக் கொடுத்துட்டு செய்து கொண்டு இருந்தால் அது நன்றாக வராது.

பிஸினஸ் செய்ய வரும் பெண்களுக்கு தேவையில்லாத பயம் இருக்கக்கூடாது. எப்படி ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அவர்கள் அடைய வேண்டிய இலக்கின் மீது மட்டும் கவனம் இருக்குமோ அது போல வெற்றியை நோக்கி மட்டும் நம் கவனம் இருக்கணும். போட்டி உணர்வு இருக்கக்கூடாது. ஆனால் ஒவ்வொரு நிமிஷமும் விழிப்புணர்வுடன் இருக்கணும். சீக்கிரமே வளர்ந்துடணும்னு நினைக்கக்கூடாது. நிதானம், பொறுமை அவசியம். கம்யூனிகேஷன் திறமை இருக்கணும். நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை எப்படி மற்றவர்களிடம் வெளிப்படுத்துகிறீர்கள் எனும் உரையாடும் கலை தேவையான ஒரு விஷயம்.

சரியான திட்டமிடல் இருக்கணும். அதை செயல்படுத்தக்கூடிய திறமையும் இருக்கணும். திட்டமிட்டு நகர்வுகளை செய்யணும். தடைகள், கவனச் சிதறல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நேர்மறையான அணுகுமுறைகளின் மூலம் அவற்றைத் தகர்க்க முடியும். உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக வலிமையாக இருக்கவேண்டும். உணர்வுசார் நுண்ணறிவு இருக்கணும். அதற்கு உடற்பயிற்சிகள், மனப்பயிற்சிகள் செய்து முதலில் நம் உடலையும் மனதையும் புத்துணர்வோடு வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் இருக்குமாயின் கட்டாயம் வெற்றி நிச்சயம்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் வினோதம்….. டிரம்ப் மீதான எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய வாலிபர்!!(உலக செய்தி)
Next post சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்!!(கட்டுரை)