பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் நீக்கம்? (உலக செய்தி)
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ´மீ டூ´ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ´மீ டூ´ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். தனி மனிதரின் ஒழுக்கத்துக்கு சவால் விடும் வகையில் இந்த ´மீடூ´ தகவல்கள் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளன.
மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு சிக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர். தற்போது இவர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர் சபையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் ´மீடூ´ இந்தியா ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரியாரமணி என்ற பத்திரிகையாளர் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார்.
பல நாளிதழ்களில் பணிபுரிந்துள்ள பிரியாரமணி கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட பதிவில், “நான் பத்திரிகை பணிக்கு சேருவதற்காக சென்றபோது அவர் (அக்பர்) என்னை அருகில் உள்ள கட்டிலில் அமர சொன்னார். நான் மறுத்து விட்டேன். அவரின் இச்சைக்கு பலியான பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் இதுபற்றி பேசுவார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து நிறைய பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். ஒரு பெண் பத்திரிகையாளர் அக்பர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் பணியில் இருந்து நின்று விட்டதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
இதை அடுத்து எம்.ஜே. அக்பரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் எம்.ஜே. அக்பருக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் எந்த முடிவையும் வெளியிடவில்லை.
இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:-
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவரை எப்படி மந்திரியாக தொடர அனுமதிக்க முடியும். அவர் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பெண் பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டி இருப்பதால் இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய உளவுத்துறை மூலம் அக்பர் தொடர்பான பல்வேறு தகவல்கள் பிரதமர் அலுவலகம் கேட்டு பெற்றுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள பெண் பத்திரிகையாளர்கள் யார்-யார்? அவர்கள் அக்பர் மீது எத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். எந்த காலக்கட்டத்தில் இந்த பாலியல் அத்துமீறல்கள் நடந்தன என்பன போன்ற தகவல்களை உளவுத்துறை சேகரித்து பிரதமர் அலுவலகத்தில் அளித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் சபையில் இருந்து எம்.ஜே.அக்பரை நீக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி நேரடியாக அக்பரை தொடர்பு கொண்டு பதவி விலக சொல்வார் என்று தெரிகிறது.
இல்லையெனில் அக்பரை பதவி நீக்கம் செய்து மோடி நடவடிக்கை எடுப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. எம்.ஜே. அக்பர் தற்போது வணிகம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நைஜீரியா நாட்டுக்கு சென்று இருக்கிறார்.
அவர் திரும்பி வந்ததும் அவர் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
Average Rating