விட்டு விடுதலையாகிப் பற!!! (மகளிர் பக்கம்)
மலைச்சாலைகளில் அவளது சைக்கிள் சக்கரம் மூச்சு வாங்கியது, அவள் பறவையானாள். அவள் சக்கரங்களின் காதலியானாள். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டிய சூழலில் தையல் கற்றுக் கொண்டாள். அவள் பாதங்களின் வேகத்துக்கு தையல் இயந்திரத்தின் சக்கரங்களும் சுழலத் துவங்கின. கூட்டுக்குள் அடங்க மறுத்த அவளது பாதங்கள் அடுத்தொரு பயணத்துக்குத் தயாராகின. தன் மகன் வாங்கிய பைக்கில் ஏறி வலம் வந்த போது…இன்னும் எட்டி வானம் தொட வேண்டும் என பேராவல் கொண்டாள். நின்றபடியே பைக் ஓட்டிப் பார்க்கும் அவளின் தோள்களில் இரட்டைச் சிறகுகள் ஒட்டிக்கொண்டன.
இன்று உலக சாதனையாளராக உயர்ந்து நிற்பதுடன் சமூக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வரும் அந்த சாதனைப்பறவை அவிநாசியைச் சேர்ந்த ஸ்டாண்டிங் பைக் ரைடர் சைபி மேத்யூ. மின்னலைப் போல இயங்குகிறார் சைபி. சாதிக்க வேண்டும் என்கிற தனது கனவை விடாமுயற்சியால் விரட்டிப் பிடித்திருக்கிறார். பெண்களுக்கான மேடைகளில் உதாரண மனுஷியாக அறியப்படுகிறார். எந்த வாய்ப்பும் அற்ற மிகச்சாதாரணப் பெண்ணும் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டியுள்ளார் சைபி. அன்பானவர்களைப் பார்க்கும் போது குழந்தையைப் போல உணர்ச்சிவசப்படுகிறார். இனி சைபி, “கூடலூர் பக்கத்துல இருக்கிற மண்வயல் கிராமத்துப் பொண்ணு நான்.
எங்களோடது விவசாயக் குடும்பம். படிப்போட சேர்ந்து காட்டு வேலைகளையும் சேர்ந்தே செய்வேன். மலையில பல மைல்கள் நடந்திருக்கேன். மலையின் சாலைகளில ஆண்கள் சைக்கிளில் போறதைப் பார்த்து எனக்கும் சைக்கிள் ஓட்ட ஆசை. அந்தக் காலத்துல அடம்பிடிச்சு சைக்கிள் வாங்கிட்டேன். அப்பா என்னோட ஆசைகளுக்கு ஒரு நாளும் தடை போட்டதில்லை. பள்ளிப் படிப்போட தையலும் கத்துக்கிட்டேன். குடும்ப வாழ்க்கை, ரெண்டு குழந்தைகள், அதுல ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் என்னை மொத்தமா மாத்திடுச்சு. ஒரு தையல் இயந்திரத்தோட ஓட ஆரம்பிச்சேன். இப்போ பல பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன். தனியா பயணிக்கிறப்போ பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பில்லை.
பேருந்தில் பயணிக்கிறப்போ கூட பெண்களுக்கு நிறைய சங்கடங்கள் ஏற்படுது. கொஞ்சம் சுதந்திரமாகவும், பாதுகாப்பாவும் பெண் பயணிக்க கண்டிப்பா டூ வீலர் ஓட்டக் கத்துக்கணும். பயணங்கள்ல நான் அனுபவிச்ச அது மாதிரியான தொந்தரவுகள் என்னை யோசிக்க வெச்சது. எனக்கு பைக் மேல ஒரு காதல் எப்பவும் இருந்தது. என் மகனுக்கு பைக் வாங்கிக் கொடுத்தேன். அவன்கிட்ட ஓசி வாங்கித்தான் பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன். அப்போ எனக்கு 40 வயசு. இந்த வயசுல உனக்கு எதுக்கு வேண்டாத வேலைன்னு திட்டினவங்கதான் அதிகம். அதெல்லாம் என்னை எதுவும் பண்ணலை. பெண்களுக்கு நடக்குற வன்கொடுமைகள், இயற்கைக்கு எதிராக மனிதர்கள் நடத்துற சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ரெண்டுமே எனக்கு ஒண்ணுதான்.
இதைப்பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்தணும். ஆனா சாதாரணப் பெண் சொல்றதை யாரும் கேட்க மாட்டாங்க இல்லையா? நான் என்னை ஒரு சாதனையாளரா மாத்திக்க முடிவு பண்ணிட்டேன். நான் ஒரு பைக் ரைடரா மாறினேன். என் சொந்த ஊருக்கு பைக்லயே பறக்க ஆரம்பிச்சேன். ஊரே என்னத் திரும்பிப் பார்த்தது. இதுக்கு முன்னால யாரெல்லாம் பைக் ரைடிங்ல ரெக்கார்ட் பண்ணியிருக்காங்கனு தேடினேன். ஸ்டாண்டிக் பைக் ரைடிங்ல சாதிக்கலாம்னு முடிவு பண்ணி அதற்கான பயிற்சிகள்ல இறங்கினேன். விழுப்புண்களோட ஒரு வழியா நின்னுட்டே வண்டி ஓட்டினேன்.
அவிநாசியில இருந்து சேலம் வரை ஸ்டாண்டிங் பைக் ரைடிங்ல 2017ல் யு.ஆர்.எல். வேர்ல்டு ரெக்கார்ட்ல இடம்பிடிச்சேன். அந்த சாதனைக்காக கல்கத்தால டாப் டேலண்ட் அவார்ட் கிடைச்சது. சாதனைப் பயணத்தையே விழிப்புணர்வுப் பயணமா தமிழ்நாடு முழுக்கப் போகத் திட்டமிட்டேன். பெண்கள் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு ரெண்டும் தான் தீம். போலீஸ் பர்மிஷன், ஆம்புலன்ஸ், விழிப்புணர்வு நோட்டீஸ் இப்படி நிறைய வேலைகள் இருந்தது. போலீஸ்ல இப்படியொரு பயணத்துக்கு பர்மிஷன் கேட்டப்போ நிறையக் கேள்விகள் வந்தது. என்னோட விடாமுயற்சியையும் உறுதியையும் பாத்து அவங்க அனுமதி தரவும் உற்சாகமானேன். ஸ்பான்சர்ஸ் கிடைச்சது போக சேமிப்பு, கடன் வாங்கி பயணத்துக்குத் தயாரானேன். 32 மாவட்டங்கள் 3000ம் கிலோ மீட்டர் பயணம்.
எப்படி முடிக்கப் போறேன்ற பயம் இருந்தது. நண்பர்கள் கொடுத்த உற்சாகம், போலீஸ் ஒவ்வொரு மாவட்டத்துலயும் ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க.
மரக்கன்று நட்டு, பெண்களைப் பாதுகாக்கிறதுக்காகப் பேசி ஒவ்வொரு ஊர்லயும் மக்களை சந்திச்சுப் பேசினது எனக்குள்ள பெரிய தன்னம்பிக்கையக் கொடுத்துச்சு. ஸ்டாண்டிங் பைக் ரைடிங்ல போனதால குழந்தைகள் மத்தில நான் இன்ஸ்பிரேஷனா மாறினேன். சென்னைல எனக்காக நண்பர்கள் ஒரு விழாவே ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. 13 நாள் ஸ்டாண்டிங் பைக்ரைடிங் பயணத்த முடிச்சுத் திரும்பினப்போ என்னால எதுவும் முடியும்ன்றதை உணர்ந்துட்டேன். அடுத்ததா இந்தியா முழுக்க ஸ்டாண்டிங் பைக் ரைடிங் போகணும். அதுக்கான முயற்சிகள்ல இருக்கேன்.
இப்போதைக்கு என் மகனோட பைக்ல தான் இந்த சாதனையெல்லாம் செய்திருக்கேன். மலைகள்ல பயணிக்கவும், இன்னும் வித்தியாசமான முயற்சிகள் செய்யவும் எனக்குன்னு நல்ல பைக் வாங்கணும். ஹிமாலயன் புல்லட் ஸ்டாண்டிங் பைக் ரைடிங் போக வசதியா இருக்கும். நீண்ட தூரங்கள் பயணிக்கலாம். அந்த பைக்ல போற வாய்ப்புக்கிடைச்சா சந்தோஷம். இந்தியா முழுக்க ஸ்டாண்டிங் பைக் ரைடிங் போகணும். டைலரிங் வேலைல கிடைக்கிற வருமானத்துல குடும்பம் நடத்தி, குழந்தைகளப் படிக்க வைக்கிற எனக்கு இந்த ஆசை எப்போ நிறைவேறும்னு தெரியலை” என்கிறார் சைபி மேத்யூ. ஆம். இந்த சாதனைப்பறவை ஒரு ஹிமாலயன் பைக்கில் பறக்க ஆசைப்படுகிறது. விரைவில் ஆசை அரங்கேறட்டும்.
Average Rating