காணாமல் போன இன்டர்போல் தலைவர் எங்கே? (உலக செய்தி)
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போலின் தலைவரை தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
சில சட்டங்களை மீறிவிட்டதால் அவரிடம் சீனாவின் ஊழல் எதிர்ப்புத் துறை விசாரணை செய்து வருகிறது என அந்நாடு தெரிவித்துள்ளது.
சீனாவின் பொது பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராக இருக்கும் மெங், செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி அன்று இண்டர்போல் அமைந்திருக்கும் பிரான்ஸின் லியான் நகரில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
அவசர நடவடிக்கையாக தலைமையிடத்தில் இருந்து அவரின் ராஜினாமா கடிதம் வந்ததாக இண்டர்போல் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை ஊழியர்கள் ஊழல் உட்பட அனைத்து ஊழல் விவகாரங்களை கவனித்து வரும் சீனாவின் தேசிய மேற்பார்வைக் குழு மெங்கை தாங்கள்தான் பிடித்து வைத்திருப்பதாக தங்களின் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
பல உயர் மட்ட அரசு அதிகாரிகள், பில்லியனியர்கள், மேல்நிலை நட்சத்திரங்கள் என பலர் சமீபத்தில் சீனாவில் காணமல் போயுள்ளனர் அந்த வரிசையில் மெங்கும் சேர்ந்துள்ளார்.
ஜூலை மாதம் காணாமல் போன சீனாவின் புகழ்பெற்ற நடிகை பான் பிங்பிங், இந்த வார தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டார் பின் அவருக்கு வரி ஏய்ப்பு செய்ததற்காக 883 மில்லியன் சீன யான்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.
இன்டர்போல் தனது வலைதளத்தில், அவசர நடவடிக்கையாக மெங்கின் ராஜினாமா கடிதத்தை பெற்றதாக தெரிவித்துள்ளது.
அதன் விதிகளுக்கு உட்பட்டு தென் கொரியாவை சேர்ந்த மூத்த துணைத் தலைவரை செயல் தலைவராக நியமித்துள்ளது.
அடுத்த மாதம் டுபாயில் நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்தில் மெங்கின் பதவிக்காலத்தில் மிஞ்சி இருக்கும் இரண்டு வருட காலத்திற்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மேலும் சனிக்கிழமை அன்று மெங்கின் நிலை குறித்து தெரியப்படுத்த வேண்டும் என சீனாவை இன்டர் போல் கேட்டுக்கொண்டது.
இதுகுறித்த விசாரணையை பிரான்ஸ் தொடங்கியது ஆனால் மேற்கொண்டு தகவல்கள் ஏதும் தெரியவில்லை என தெரிவித்தது.
சீனா மெங்கை பிடித்து வைத்திருப்பது குறித்து உறுதிப்படுத்துவதற்கு சற்று முன்னதாக பேசிய மெங்கின் மனைவி கிரேஸ் மெங், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அவரது கணவரை கண்டுபிடிக்க சர்வதேச உதவியையும் கோரியிருந்தார்.
அவர் காணாமல் போன நாளன்று தனது அழைப்புக்காக காத்திருக்குமாறு க்ரேஸ் மெங்கிற்கு சமூக வலைதளத்தில் செய்தி அனுப்பியதாகவும், பின்பு ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில் கத்தி போன்ற எமோஜியை அனுப்பிதாகவும் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இன்டர்போலின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீனர் இவராவர். மேலும் இவரின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு வரை உள்ளது.
பொது விதிகளையும், வழிகாட்டுதலையும் வழங்கக்கூடிய இன்டர்போலின் நிர்வாகக் குழுவின் தலைவராக மெங் செயல்பட்டார்.
குற்றவியல் துறையில் மெங்கிற்கு 40 வருட அனுபவங்கள் உள்ளன குறிப்பாக போதைப் பொருள், பயங்கரவாத தடுப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவில் சிறந்த அனுபவங்களை பெற்றவர்.
மெங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது, சீனாவைவிட்டு தப்பிய அரசியல் எதிரிகளை பிடிக்க உதவும் என மனித உரிமை அமைப்புகள் கவலைத் தெரிவித்திருந்தன.
தனது நாடுகளில் காணாமல்போனவர்களை தேடும் பணியை ஒருங்கிணைக்கும் இன்டர்போல் காணாமல் போனவர்களுக்கு மஞ்சள் அறிக்கையும், தேடப்படும் நபர்களுக்கு சிவப்பு அறிக்கையும் வழங்கும்.
ஆனாலும் ஒரு நாட்டிற்கு ஆட்களை அனுப்பி தனிநபர்களை கைது செய்யவோ பிடியாணை கொடுக்கும் அதிகாரமோ அந்த அமைப்பிற்கு இல்லை.
பெயர் அளவிலான ஒரு தலைவர் இன்டர்போல் அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதன் தலைமைச் செயலகமே அதன் உறுப்பு நாடுகளான 192 நாடுகளின் அன்றாட பணிகளை மேற்பார்வையிடும்.
Average Rating