பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாட்டோம்!!(உலக செய்தி)
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே, இவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லீட்டருக்கு தலா ரூ. 2.50 குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இவ்வாறு விலை குறைக்கப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு வரக்கூடிய லாபத்தில் பெரும் பகுதி குறைந்தது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் பங்குச்சந்தை விலையில் சரிவு ஏற்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை 10 சதவீதம் சரிவு ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 16 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் 25 சதவீதமும், பாரத் பெட்ரோல் நிறுவனத்தில் 21 சதவீதமும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்தன.
மேலும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனங்களில் மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அதிக அளவில் பங்குகளை வாங்கி இருந்தது. அந்த நிறுவனத்துக்கும் இழப்பு ஏற்பட்டது. பங்குச்சந்தை வீழ்ச்சி எண்ணெய் நிறுவனங்களை பெரும் கவலை அடைய செய்தது.
இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இது சம்பந்தமாக சில தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை இனியும் தளர்த்த மாட்டோம். பெட்ரோல், டீசல் விலையில் பொது மக்களுக்கு இனி ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படாது. அதாவது ஊக்கத்தொகை ரீதியாக இனி விலையை குறைக்க முடியாது. மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வரியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதை ஏற்று வரியை குறைத்து இருக்கிறார்கள். ஆனால், பல மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், கூட்டணி தலைவர்களும் பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துவிட்டது, பண வீக்கம் அதிகமாகிவிட்டது என்று கூக்குரல் விடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஏன் இவற்றின் விலையை குறைத்து மக்களுக்கு பயனடைய செய்யக்கூடாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே மாநிலங்களுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைத்து வருகிறது. அதை ஏன் மக்களுக்கு விட்டு தரக்கூடாது. சராசரியாக மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வெட் வரி 29 சதவீதமாக உள்ளது. நாங்கள் பெட்ரோ, டீசல் மூலம் பெறுகிற வரியில் 42 சதவீதம் வரை மாநிலங்களுக்குதான் பகிர்ந்து கொடுக்கிறோம். அப்படி இருக்கும் போது, மாநில அரசுகளும் தனது பங்குக்கு வரியை குறைத்து இருக்க வேண்டும்.
மத்திய அரசு ஆரோக்கியமான முறையில் வரிகளை வசூலித்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறோம்.
ஜி.எஸ்.டி.யில் 334 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதன் மூலம் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மக்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரியில் ரூ.97 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டு வரி செலுத்துவோருக்கு சலுகை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating