நீராலானது இவ்வுலகு!!(மகளிர் பக்கம்)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- எல்லா உயிர்களையும் சமமாகக் கருதும் மரபைக் கொண்டது தமிழ்ச் சமூகம். உலகின் பல தொன்மைக் குடிகள் இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ளது. பல அரசியல் கருத்தியல்களிலும் அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் அறிவியல் மனப்பாங்கோடு, எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் முன்னெடுத்தவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இன்றைய நிலையில் சமூகநீதியோடு சூழல் நீதியையும் பேச வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். நீர், நிலம் மீதான உரிமை என்பது சமூக நீதியும், சூழல் நீதியும் நிலை பெறுகின்றபோதே சாத்தியமாகும்.
இயற்கை அறிவே பகுத்தறிவு
பெரியார் மிகப் பெரிய மானுடப் பற்றாளர். சமூக, பாலின சமத்துவத்தை முன்வைக்கும் சமூக நீதியை இயக்கத்தின் கொள்கையாக அறிவித்தவர். அதற்காக காலம் முழுவதும் போராடினார். பகுத்தறிவு கொண்டு சமூக இழிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்கப் போராடினார். பகுத்தறிவு என்பது அறிவியல் மனப்பான்மைதான். அதாவது அறிவியல் அடிப்படையில் சிந்திப்பதே பகுத்தறிவாகும். பகுத்தறிவு என்பது இயற்கையை அறிவதன் மூலம் வளர்ச்சி பெற்றது. அறிவியல் என்பது இயற்கையை அறிதலே.
இயற்கையை புரிந்து கொள்வதையே பகுத்தறிவு என்று பெரியார் கூறுகிறார்: “அறிவையோ, புத்தியையோ, ஞானத்தையோ கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள் என்ற சொல்லே தென்படுவதற்கில்லாமல் போய்விடுகிறது. ஞானிக்குக் கடவுள் இல்லை என்பது மாத்திரமல்லாமல், துறவிக்குக் கடவுள் இல்லை என்று சொல்லப்படுகிறதல்லவா? அதன் பொருள் என்ன? துறவி என்றால் – ஆசையற்றவன், பற்று அற்றவன் என்பதுதான் பொருள்.
துறவிக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றுமில்லை. அவனுக்கு எதைப் பற்றியும் ஆசையில்லை. ஆனதால், அவனுக்குக் கடவுளைப் பற்றிய கவலை இல்லை என்பதோடு, அவனுக்குக் கடவுள் தேவையு மில்லை; இயற்கையோடு இயைந்து கொள்ளுகிறான். எனவே, இயற்கையை நல்லவண்ணம் உணர்ந்துகொள்வதும், அதற்கேற்பதான வாழ்வை அமைத்துக் கொள்ளுவதுமான அறிவுதான் முன் குறிப்பிட்ட ஞானமாகும்” என்கிறார்.
சமூகநீதியும் சூழல் நீதியும்
எப்படி மனித மாண்போடு வாழ சமூகநீதி அவசியமானதோ, அதுபோலவே ஆரோக்கியமான பூமியில் வாழ சூழலியல் நீதியும் அவசியமானது. சாதி, மத, மொழி, இனம், பாலினம் அடிப்படையிலான வேறுபாடு எப்படி மனிதநேயத்திற்கு எதிரானதோ, உயிரினங்களில் மனித இனம் மட்டுமே மேலானது, பிற உயிரினங்கள் மனித இனத்திற்கு கட்டுப்பட்டதே என்று எண்ணுவதும் இயற்கைக்கு எதிரானதே. இந்து துவத்தின் தூய்மைவாதத்தையும், வர்ண கோட்பாட்டின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை, பெரியாரியம் மறுக்கிறது.
தூய்மைவாதம், ஏற்றத் தாழ்வு கற்பிதங்கள் போன்றவை இயற்கைக்கு முரணானவையாகும். எல்லா உயிரினங்களையும் இயற்கையின் அங்கம் என்னும் புரிதலே சூழலியலாகும். நவீனத்துவம் வளர்ச்சி பெற்ற காலகட்டத்தில் அறிவியல் துணை கொண்டு இயற்கையை மனிதனால் வென்று விட முடியும் என்னும் மனித மைய வாதம் உருவானது. மனித ஆணவத்தை பெரியாரியம் மறுக்கிறது.
“மனித இனம் உயர்வானதா?” என்னும் தலைப்பில் பெரியாரின் கட்டுரையை கவனியுங்கள்: “உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளைப் போலவே மனித வர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒரு மனிதனும், ஒரு யானையும், ஒரு எறும்பும், ஒரு சிறு பேனும், பூதக் கண்ணாடி மூலம் பார்த்தறியத்தக்க அதிநுட்பமான ஒரு கிருமியும் எல்லாம் ஒரே தத்துவத்தைக்கொண்ட ஜீவராசிகளேயாகும்.”
உற்பத்தி முறை
தற்போதை சுரண்டல் உற்பத்தி முறையில் இயற்கை மீதான தாக்கத்தை அறிவியல் அடிப்படையில் விமர்சிப்பதே சூழலியல் அரசியலாகும்.
பெரியார் கூறுகிறார்: “பகுத்தறிவுவாதிகள் அந்தப் படிக்கில்லாமல் அனுபவத்தையும், தங்கள் கண்களில் தென்படும் காட்சிகளையும், வஸ்துக்களின் குணங்களையும், அவற்றின் மாறுதல்களையும், இயற்கையின் வழித் தன்மைகளையும் அவற்றால் கண்டுபிடிக்கப்பட்டுவரும் புதுமை அதிசயங்களையும், மனிதனுக்கு முன்காலத்தில் இருந்து வந்த அறிவாற்றலையும் சிந்தித்து – இன்று உள்ள அறிவையும், ஆற்றலையும், இனி ஏற்படும் அறிவாற்றலையும், சாதனங்களையும் மற்றும் இவை போன்றவைகளையும் ஆராய்ச்சிக் கண்களோடு நடுநிலையில் இருந்து பார்ப்பவர்களாவார்கள்.”
நாம் புரிந்து கொள்ள வேண்டியது, அறிவியலை மதமாக பெரியார் கருதவில்லை. அப்படி யாரும் நினைத்தால் அது பெரியாரியலுக்கு எதிரானது. அறிவியல் மாறக் கூடியது . மாற்றம் என்பதும் அறிவியல். எனவே எதிர்காலத்திற்கு உண்டான சாதகபாதகத் தன்மையோடு எல்லா அறிவியல் தொழில்நுட்பங்களையும் ஆராய்வதே பகுத்தறிவாகும். “இயந்திரம் மனிதனுக்கு அவசியம் என்றும், சவுகரியமானதென்றும், ஜீவகாருண்யமுடையதென்றும், முற்போக்குக்கும் நாகரிகத்திற்கும் ஏற்றதென்றும், இயற்கையுணர்ச்சியில் பட்டதென்றும், அறிவு ஆராய்ச்சியின் பயனென்றும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்” என்று கூறும் பெரியார்… அறிவியல் – தொழில்நுட்பங்கள் பின் உள்ள அரசியலையும் சுட்டிக் காட்டுகிறார்.
அவரின் இந்த கேள்வியை கவனியுங்கள்: “மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் நலம் அல்லது தேவையின் அவசியம் என்பதற்காகவா? அல்லது முதலாளி, மிராசுதாரன் ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம்பாதிக்கவோ, பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத்திற்காகவா?”மேலும் பெரியார் கூறுகிறார்: “இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே-பிறருக்கு அடிமையாய் உழைப்பதற்காகவே பிறந்திருக்கிறானேயொழிய சுகப் படுவதில்லை என்றும், ஆதலால் அவன் வேலை செய்வதற்காக ஒரு தொழில் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டும் என்றும்தான் ஏற்படுகிறது.
இதுவும் தன் வயிற்றுக்கு வேண்டிய அளவுகூடக் கிடைக்க முடியாத கூலிக்கு முழு நேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படுகிறது. இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்க்கையைவிட மிக மோசமான வாழ்வேயாகும். எப்படியெனில், அவற்றிற்காவது உத்தரவாதம் இருக்கின்றது. அதாவது, அதன் எஜமான் அதற்கு வயிறு நிறைய ஆகாரம் போடக் கட்டுப்பட்டிருக்கிறான். மனித வேலைக்காரனுக்கோ உத்தரவாதமே கிடையாது. இன்னும் பட்சிகள், காட்டு மிருகங்கள் ஆகியவைகளில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சவுகரியமிருக்கிறது.
”அதாவது முதலாளித்துவ சமூக உற்பத்தி மனித சமூகத்தை எப்படி கட்டமைத்து வைத்துள்ளது என்பதை பெரியார் விளக்குகிறார். அந்த உற்பத்தி முறையோடு உள்ள அறிவியல்-தொழில்நுட்பங்கள் எப்படி மனித சமூகத்தை ஏற்றத் தாழ்வு உள்ள சமூகமாக கட்டமைக்க பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறை மனிதனை மனிதனிடம் இருந்தும், சமூகத்திடம் இருந்தும், இயற்கையிடம் இருந்தும் அந்நியமாக்குகிறது என்று மார்க்ஸ் கூறினார். பெரியார் கூறுவதும் அதுவே.
சர்வதேசவாதி பெரியார்
தேச, மொழி, இனப் பற்றுகளை மறுத்தவர் பெரியார். மானுடத்தை எல்லாவற்றுக்கும் மேலாக முன்வைத்தவர். சூழலியல் சர்வதேசத்தன்மை கொண்டது. சூழலியல் பிரச்சனைகளும் சர்வதேசத் தன்மை கொண்டது. அதன் தீர்வுகளும் சர்வதேசத் தன்மை கொண்டது. காற்றுக்கு, நீருக்கு, நிலத்திற்கு – இப்படியான இயற்கையின் எதற்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகள் அனைத்தும் மனித சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களே. இப்படியான எல்லா கற்பிதங்களையும் கட்டுடைத்தவர் பெரியார். பெரியாரின் பார்வை விரிவானது.
அவரின் தத்துவங்கள், கொள்கைகள் விவாதிக்கப்பட வேண்டும். சூழலியல் அரசியலும், பெரியாரியலும் சேர்ந்து பயணிக்க வேண்டிய காலகட்டம் இது. சூழலியல் மரபு அறிவின் தேவையை கூறுகிறது. பெரியார் முற்றிலும் மரபு கருத்துகளை மறுத்ததில்லை. மூடநம்பிக்கைகள் வேறு, பல காலகட்டங்களைக் கடந்து வந்திருக்கும் மனித அனுபவத்தின் மூலம் இயற்கையை அறிந்து உருவாக்கப்பட்ட மரபு அறிவு என்பது வேறு. நமக்குத் தேவையான மரபு அறிவுகளை எடுத்துக் கொண்டு, அறிவியலுக்கு எதிரான அம்சங்களை புறக்கணிப்பதே அறிவியலாக இருக்க முடியும்.
பெரியாரின் இந்தக் கூற்றை கவனியுங்கள்: “பழையவைகளை – ஏற்ற அளவுக்கும் நற்பயன் தரவேண்டிய அளவுக்கும், உபயோகித்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின்வாங்கமாட்டோம். ஆனால், புதியவற்றிலேயே முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில், அவற்றினால்தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு, புதியவற்றைக் கண்டுபிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்.”
Average Rating