நரம்புகளை பலப்படுத்தும் வன்னி இலை!!(மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில், வயல்வெளியில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைச்சுற்றலை போக்க கூடியதும், மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை சரிசெய்யவல்லதும், நரம்புகளை பலப்படுத்த கூடியதும், மாதவிலக்கு பிரச்னைக்கு மருந்தாக விளங்குவதுமான வன்னி மரத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வன்னி மரம். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது. தலைசுற்றலை போக்குகிறது. வன்னி இலைகளை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னி இலை, தனியா, சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விடவும். இதனுடன் வன்னி இலைகளை சேர்க்கவும். தனியா, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த தேனீரை வடிகட்டி குடித்துவர நரம்புகள் பலப்படும். நரம்பு மண்டலத்துக்கு பலம் தரும் உள்மருந்தாகிறது.
காது, மூக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சியால் தலைசுற்றல் உண்டாகும். கழுத்து எலும்புகளில் அழுத்தம், இறுக்கத்தால் மயக்கம் ஏற்படுகிறது. இந்த தேனீர் மயக்கத்தை போக்குகிறது. வன்னியின் இலைகள் தொட்டாசிணுங்கி போன்று சிறிய உருவத்தை கொண்டது. இதன் காய்கள் தட்டையாக காணப்படும். இது அற்புத மருந்தாகிறது. வன்னிமர பட்டையை கொண்டு மூட்டு வலி, வீக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னிமர பட்டை, சுக்கு, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். நசுக்கி வைத்திருக்கும் வன்னி மரப்பட்டை, சுக்குப்பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். முடக்கு வாதம், மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ளவர்கள் இந்த தேனீரை குடித்துவர பிரச்னைகள் தீரும்.
மூட்டுவாதம், எலும்புகள் பலவீனத்தால் ஏற்படும் வீக்கம், வலியை போக்குகிறது. வன்னிமர பட்டையை பொடி செய்தும் வைத்துக்கொள்ளலாம். ஒருமுறை தேனீருக்கு அரை ஸ்பூன் எடுத்து பயன்படுத்தலாம். வன்னிமர பூக்களை பயன்படுத்தி, மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னிமர பூக்கள், திரிபலா சூரணம், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதில், வன்னி மர பூக்களை நசுக்கி போடவும். திரிபலா சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஈறுகளில், மூக்கில் ரத்தம் வடிதல், மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரபோக்கு போன்றவற்றை சரிசெய்யும். வன்னி பூக்கள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். உடலில் கொழுப்பு சத்தை குறைப்பது இதயத்துக்கு நல்லது. இஞ்சி சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு ஆகியவை தலா ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து குடித்துவர கொழுப்பு சத்து கரையும். உடல் எடை குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
Average Rating