எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு: முஸ்லிம்களின் முன்னுள்ள கடப்பாடு!!(கட்டுரை)

Read Time:21 Minute, 53 Second

அதிகார எல்லைகளை, விஸ்தரித்துக் கொள்வதற்காக, பன்னெடுங்காலமாக உலகில், நாடுகளுக்கிடையில் நிலம்சார் யுத்தங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தனிமனிதனும் கூட, காணிகளை உரிமையாக்கிக் கொள்வதில், அதீத அக்கறை எடுத்துச் செயற்படுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால், இலங்கை முஸ்லிம்கள், மாகாணங்களின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும், அதனது மீளாய்வு குறித்தும் முனைப்புக் காட்டாமல் இருப்பதை, நன்றாகவே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

‘விகிதாசாரத்துக்குள் தொகுதி’ எனச் சொல்லப்படும், கலப்புத் தேர்தல் முறையொன்று, நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனாலும், மாகாண எல்லைகளின் மீள் நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே, அறிக்கை தோற்கடிக்கப்பட்டு விட்டதால், இனிதே எல்லாம் நடைபெற்று விடும் என்றும், மீளாய்வுக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாகத் தொகுதி நிர்ணயம் முஸ்லிம்களுக்குச் சாதகமாக மேற்கொள்ளப்படும், பழைய தேர்தல் முறைமைக்குத் திரும்பி விடுவோம் என்று கண்மூடித்தனமாக, முஸ்லிம் சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிகின்றது.

தொகுதிகளை மய்யப்படுத்திய தேர்தல் முறையொன்று, அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளமையால், மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு முன்னோடியாக, மாகாணங்களுக்குள் உள்ளடங்கும் தொகுதிகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

அதன்படி, 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11)பிரிவினைத் திருத்திய 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, எல்லை மீள்நிர்ணய உயர்மட்டக் குழுவை ஜனாதிபதி நியமித்திருந்தார். கே. தவலிங்கம் தலைமையிலான இக்குழுவில், இரு தமிழர்களும் இரு சிங்களவர்களும் உட்பட, ஒரு முஸ்லிமாக, புவியியல் துறை பேராசிரியர் மர்ஹூம் எஸ்.எச். ஹஸ்புல்லாவும் உள்ளடங்கியிருந்தார்.

இந்தக் குழுவால், சிபாரிசு செய்யப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் கணிப்பிட்டால், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் வாய்ப்பிருந்தது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளை, அதிகமாக வரையறை செய்தல், பல அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குதல் போன்ற முக்கிய பரிந்துரைகளை, புவியியல் துறை பேராசியரான ஹஸ்புல்லாஹ் முன்மொழிந்திருந்தார்.

ஆனால், அவர் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன்வைத்த முன்மொழிவுகள், சில காரண காரியங்களின் அடிப்படையில், புறக்கணிக்கப்பட்டன.

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை, உறுதிப்படுத்தாத விதத்தில், எல்லை மீள்நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வறிக்கையில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் உள்ளடங்கவில்லை என்பதால், தனியான ஒரு சிபாரிசு அறிக்கையை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம், பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் சமர்ப்பித்ததன் மூலம், அவர் மீது, இந்தச் சமூகம் சுமத்திய பொறுப்பை நிறைவேற்றி இருந்தார்.

அதுமட்மன்றி, எல்லை மீள்நிர்ணயக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், புதிதாகத் தொகுதிகள் மீள் வரையறை செய்யப்படுமாயின், நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்களின் (மாகாண சபை) அரசியல் பிரதிநிதித்துவம் 16 இனை விடவும் குறையும் என்பதை, அவர் வெளியுலகுக்குக் கொண்டு வந்தார்.

அத்துடன், எல்லை மீள்நிர்ணய அறிக்கையைத் தோற்கடிப்பதன் மூலம், அவ்வறிக்கையை மீளாய்வு ஒன்றுக்கு உட்படுத்தி, அதில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதே, அதற்கு இருக்கின்ற ஒரே வழி என்பது, பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் போன்றோரின் நிலைப்பாடாக இருந்தது.

முன்னதாக, மாகாண சபைத் தேர்தலுக்காக 50:50 என்ற புதிய முறைமையை அரசாங்கம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்க வேண்டாம் என்று, முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், முஸ்லிம் சமூகம் கேட்டுக் கொண்டது. ஆனால், அது தொடர்பாக, போதிய விளக்கமில்லாத காரணத்தாலோ, அரசாங்கத்துக்கு விசுவாசத்தைக் காட்டும் விதமாகவோ, முஸ்லிம் கட்சிகளும் எம்.பிக்கள் பலரும், இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதற்கிடையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, இந்தக் கலப்புத் தேர்தல் முறைமைச் சூத்திரத்தின் சூட்சுமத்தை, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நன்கு உணர வைத்துள்ளது. அந்த அனுபவத்தின் அடிப்படையில், ‘புதிய தேர்தல் முறைமை நமக்கு சரிப்பட்டு வராது’ என்ற நிலைப்பாட்டுக்கு, முஸ்லிம் கட்சிகள் தற்போது வந்திருக்கின்றன.

புதிய தேர்தல் முறைமையானது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்காது என்கின்ற ஒரு சூழலில், தொகுதிகளின் எல்லைகளும் பாதகமான முறையில் நிர்ணயிக்கப்பட்டால் நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கடைசித் தருணத்திலேயே உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். எல்லை மீள்நிர்ணய அறிக்கையை, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க முன்னின்றமைக்கு அதுவே காரணமாகும்.

சிறுபான்மை மக்களுக்கு அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இந்த மீள்நிர்ணயம் பாதகமானது என்ற அடிப்படையில், பெரும்பான்மைக் கட்சிகளையும் இதற்கெதிராக வாக்களிக்குமாறு ஒரு சில முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் கோரியிருந்தனர்.

ஆனால், மக்கள் விடுதலை முன்னணி, புதிய தேர்தல் முறைமைக்கும் இவ்வறிக்கைக்கும் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது.

இப்பின்புலத்தோடு, எல்லை மீள்நிர்ணய அறிக்கை, கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்காக விடப்பட்ட போது, 139 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

சபையில், வாக்கெடுப்பு நேரத்தில் பிரசன்னமாகியிருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அறிக்கையைத் தோற்கடிப்பதற்காக வாக்களித்தனர். ம.வி.மு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த அறிக்கை சரியானது என்றும், முஸ்லிம்களுக்கு இதில் பாதிப்புகள் இல்லை என்றும் கூறிவந்தவரும், அறிக்கையைச் சபையில் சமர்ப்பித்த அமைச்சருமான பைசர் முஸ்தபா, அவ்வறிக்கைக்கு எதிராகவே, தனது வாக்கை அளித்திருந்தார்.

எல்லை மீள் நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டது, முஸ்லிம்களுக்கு ஆறுதலான விடயமே. ஆனால், முஸ்லிம் கட்சிகளே தோற்கடித்தன என்று கூறுவது, சற்று மிகைப்படுத்தப்பட்டதாகும்.

ஏனெனில், முஸ்லிம் கட்சிகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று சபைக்கு வந்திருந்து, இவ்வறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் 118 வாக்குகளால் அறிக்கையை, ஏனையோர் தோற்கடித்தே இருப்பர். ஆனாலும், கடைசித் தருணத்திலாவது முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஏனைய அரசியல்வாதிகளும் இதற்கு எதிர்த்து வாக்களித்தார்கள் என்பது, பாராட்டுதலுக்குரியது.

எல்லை மீள்நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதும், எல்லாம் வெற்றியடைந்து விட்டது போல், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், எம்.பிக்களும் செயற்பாட்டாளர்களும் வாழாவிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த அலட்சியம், மிகவும் மோசமானதும் கேடுகெட்டதும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

எல்லை மீள் நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, ஓகஸ்ட் 28ஆம் திகதி சபாநாயகர், மீளாய்வுக் குழுவொன்றை நியமித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இக்குழுவில் சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த தலா இருவரும், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கலாநிதி ஏ.எஸ்.எம்.நௌபலும் உள்ளடங்குகின்றனர்.

எனவே, முதலாவதாக சமர்ப்பிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் உள்ளடக்கங்கள், முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்பதற்காகவே, அது தோற்கடிக்கப்பட்டது என்றால், அதில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு, முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது, கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்றோரினது கடமை மட்டுமல்ல, முஸ்லிம்களின் வாக்குகளை நம்பியிருக்கின்ற, முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்கின்ற, எல்லா அரசியல்வாதிகளினதும் தார்மீகப் பொறுப்பாகும்.

அவர்கள், எந்தக் கட்சியில் அங்கம் வகித்தாலும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை, மீளாய்வு அறிக்கையில் உட்புகுத்த முன்னிற்க வேண்டும்.

முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை தொடர்பாக, பேராசிரியர் மர்ஹும் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் கொண்டிருந்த நிலைப்பாட்டை, தற்போதைய மீளாய்வுக் குழுவின் உறுப்பினர் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபலும் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

“எல்லை மீள்நிர்ணய அறிக்கையில், சிறுபான்மையினருக்குக் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு, பாதகமான முன்மொழிவுகள் இருக்கின்றன” என்று அவர் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கின்றார். எனவே இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் பராமுகமாக இருக்க முடியாது.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்குவதோ, பழைய தேர்தல் முறைமையைச் சிபாரிசு செய்வதோ, முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதோ இந்த மீளாய்வுக் குழுவின் உத்தியோகபூர்வ பணிகளாக இருக்க வாய்ப்பில்லை.

இக்குழுவின் பிரதான பணி, ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரை செய்வதாக அமைந்துள்ளது என்றே சொல்லப்படுகின்றது.

அண்மையில், சமர்ப்பிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணயத்தின் படி, தேர்தல் நடைபெற்றால், இன ரீதியாக வாக்குகள் பிரிவடையும் சூழல் நாட்டில் இருக்கின்றமையால், ஒரு தொகுதியில் எந்த இனம் பெரும்பான்மையாக வாழ்கின்றதோ அந்த இனத்தின் பிரதிநிதித்துவமே நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும். ஆகவே, 50 சதவீத பட்டியல் மூலம் முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கும் தானே என்று அசட்டுத்தனமாக நம்பியிருக்க முடியாது.

உத்தேச மீள்நிர்ணயத்தின் மூலம், வடக்கு, கிழக்குக்கு வெளியே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகின்ற அதேநேரத்தில், இன்னுமொரு மாற்றுக் கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

அதாவது, வடக்கு, கிழக்குக்கு வெளியில் பல இடங்களில் சிங்கள மக்களின் வாக்குகளையே முஸ்லிம் அரசியல்வாதிகள் கணிசமாக நம்பியிருக்கின்றனர். எனவே, தொகுதி எப்படி வரையறுக்கப்பட்டாலும் அது பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகின்றது.

ஆனால், இந்த ஆதரவு எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று கூற முடியாது. இந்தத் தலைமுறையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்குகின்ற ஆதரவை, சிங்கள மக்கள், அடுத்த தலைமுறை முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் வழங்குவார்கள் என்று சொல்லவும் முடியாது.

எனவே, நிலையான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில், பல அங்கத்தவர் தொகுதிகளை, அன்றேல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, அதிக தொகுதிகளை உருவாக்குவது, இதற்கான தீர்வாக அமையக் கூடும்.

இரட்டை வாக்குச் சீட்டு முறைமை அமுலுக்கு வருமாயின், அதுவும் சில இடங்களில் முஸ்லிம்களுக்குக் கைகொடுக்கும் கருவியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எனவே, இவ்வாறான மாற்றங்களை மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்குவதற்கான வாய்ப்புகளை, முஸ்லிம் சமூகம் தேட வேண்டியுள்ளது.

ஆனால், என்னதான் மீளாய்வுக் குழு மீளாய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தாலும், நடைமுறை யதார்த்தத்தின் படி, முஸ்லிம்களுக்கு சாதகமான சட்ட ஏற்பாடுகள் உருவாகும் வாய்ப்புகள் மிகக் குறைவாகும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே, பழைய விகிதாசாரத் தேர்தல் முறைமைக்கு, மீளத் திரும்ப வேண்டும் என்று, முஸ்லிம் அரசியல் தலைமைகள், மேலோட்டமாகக் கூறி வருகின்றனர்.

மீளாய்வுக் குழு, தனது பணிகளை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது. இக்குழு அரசியல் கட்சி தலைவர்களையும் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியது. தமக்கு வழங்கப்பட்ட இரண்டு மாத கால அவகாசத்தை, நான்கு மாதங்களாக நீடித்துத் தருமாறு, சபாநாகருக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்தக் காலநீடிப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில், இரண்டு மாதங்களிலேயே நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவும் கூடும். எனவே, விரைந்து செயற்பட வேண்டியுள்ளது.

பழைய தேர்தல் முறைக்குத் திரும்புவதாயின் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மை தேவை எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால், அது அரசமைப்பைத் திருத்தும் சட்டம் இல்லை என்பதால். சாதாரண பெரும்பான்மையுடனே சட்டத்தைத் திருத்தலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

எது எவ்வாறாயினும், முன்பிருந்த கலப்புத் தேர்தல் முறைமை தேவையில்லை என்ற கருதுகோளின் அடிப்படையில், நீண்டகாலமாக ஆய்வுகள், கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டே, புதிய கலப்பு முறைமை கொண்டு வரப்பட்டது.

இப்படியிருக்க, மீண்டும் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு பழைய முறைக்கு சென்றால், பரவலாக வெறுக்கப்பட்ட விருப்பு வாக்கு முறைமையை, மீண்டும் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், சர்வதேச அழுத்தங்களுடன் ஏற்படுத்தப்பட்ட குறித்த வீதாசார அடிப்படையிலான பெண்கள் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்த முடியாது போகும்.

இவ்வாறான விடயங்களை வைத்து நோக்கும் போது, பழைய தேர்தல் முறைக்கு மீளத் திரும்புவது அவ்வளவு எளிதில் நடந்து விடக் கூடிய காரியமல்ல என்று தோன்றுகின்றது.

எனவே, முஸ்லிம்கள் இப்போது மீளாய்வுக் குழுவிலேயே கவனம் செலுத்த வேண்டும். அதுவே நம்முன்னுள்ள கடப்பாடாகும். அதனூடாக, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான, மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் முன்னிற்க வேண்டும்.

ஒருவேளை மீளாய்வு அறிக்கையும் முஸ்லிம்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றால், அவ்வறிக்கையையும் நிராகரித்து, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை மீளத் திருத்துவதன் மூலம், பழைய தேர்தல் முறைக்குச் செல்வதைத் தவிர, முஸ்லிம்களுக்கு வேறு தெரிவுகள் இருக்க மாட்டாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்ம வெய்ட்டு…!!(மருத்துவம்)
Next post லேட்டா சாப்பிடுறவங்களுக்கு கேன்ஸர் அபாயம்!!(மருத்துவம்)