சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்!!(கட்டுரை)

Read Time:19 Minute, 49 Second

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது.

மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது.

அரசாங்கங்கள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

பல ஐரோப்பிய நாடுகள், மக்கள் நலன்களை இல்லாமல் செய்கின்ற நிலையிலும் சுவீடன், நோர்வே ஆகிய ஸ்கன்டினேவிய நாடுகள், சமூக நலத்திட்டங்களைத் தொடர்ந்து பேணி வந்தன. ஆனால், இன்று நிலைமை மாறுகின்றது.

உலகின் பல்வேறு பகுதிகளுடன் ஒப்பிடும்போது, ஸ்கன்டினேவிய நாடுகளுக்கு தனித்துவமான பண்பு உண்டு. தொழிலாளர் போராட்டங்களின் நீண்ட வரலாறு, வலிமையான தொழிற்சங்கங்கள், தொடர்ச்சியான தொழிற்கட்சிகளின் ஆட்சி, சமூகநல அரசாங்கத்தின் உருவாக்கமும் அதன் நிலைபேறு தன்மையும் என்பன, அவற்றின் தனித்துவமான பண்புகள் ஆகும்.

கடந்த பத்தாண்டுகளில், இந்நாடுகளில் வலதுசாரிச் சிந்தனையும் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கும் அதிகரித்து வந்துள்ளன.

இவை, பல்வேறான தாக்கங்களை, அந்நாடுகளின் அரசியலிலும் சமூகத்திலும் பண்பாட்டு நடைமுறைகளிலும் ஏற்படுத்தியுள்ளன. உலகின் இறுதிச் சமூகநல நாடுகள் என்றழைக்கப்படும் இந்நாடுகளில், சமூகநல அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

சமூகநல அரசாங்கங்களின் கதை: சொல்லாமல் விட்டது

சமூகநல அரசாங்கம் என்ற கருத்தாக்கம், இரண்டாம் உலகப் போரின் முடிவில் மேற்குலக நாடுகளில் தோற்றம் பெற்றது. ரஷ்யப் புரட்சியின் விளைவால், விளைந்த மக்கள் நலத் திட்டங்களை, மய்யப்படுத்திய சோவியத் அரசாங்கம், இதற்கு முன்மாதிரியாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் விளைவால், ஏற்பட்ட பின்னடைவை ஈடுகட்டவும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும் சோவியத் ஒன்றியமும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மறுகட்டுமானப் பணிகளில் இறங்கின. இது மக்கள் மய்ய சமூகப் பொருளாதார நலன்களை, முன்னிறுத்துவனவாக இருந்தன.

சோவியத் ஒன்றியத்திலும் அதன் நட்பு நாடுகளிலும் ஏற்பட்ட மாற்றமும் அங்கு தொழிலாளர் வாழ்வில் ஏற்பட்ட முன்மாதிரியான மாற்றங்களும் மேற்குலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களைச் சிந்திக்க வைத்தன.

அவர்கள், தமது அரசாங்கங்கள், சமூக நலன்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினார்கள். தொடக்கத்தில், இக்கோரிக்கைகளைப் புறக்கணித்த அரசாங்கங்கள், காலப்போக்கில் தொழிற்சங்கங்களின் வலிமையான செயற்பாடுகளின் விளைவால், கலக்கமடைந்தன.

கொம்யூனிசத்தின் செல்வாக்கு, அதிகரிக்கும் அபாயத்தை இனங்கண்டு கொண்ட மேற்குலக முதலாளித்துவ நாடுகள், சமூகநலத் திட்டங்கள், சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டன.

அதேவேளை, தத்தம் நாட்டில் உள்ள கொம்யூனிஸ்டுகள், தீவிர இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். அதற்கு ‘கொம்யூனிச அபாயம்’ எனப் பெயர் சூட்டினர்.

சமூக நலத்திட்டங்களைப் பெறுவதற்காக, அந்நாட்டுத் தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்பட்டதோடு, அரசாங்கங்களுக்கு கொம்யூனிஸ்ட் அபாயத்தை ஒடுக்க உதவியும் வழங்கினர்.

அனைவருக்கும் வேலைவாய்ப்பு, வேலையில் உத்தரவாதம், அனைவருக்கும் இலவச மருத்துவம், இலவச உயர்கல்வி, முழுச் சம்பள ஓய்வூதியம், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச ஓய்வு விடுதிகள், பெண்களுக்கு நீண்ட பேறு கால விடுமுறை எனப் பலவகைப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் சோவியத் முகாமில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டன. இதன் பகுதிகள் சமூக நலன்களாக, மேற்குலக நாடுகளுக்கு வந்து சேர்ந்தன.

பல்வேறு வடிவங்களில், நாம் காணுகின்ற சமூக நலன் பேணும் முதலாளித்துவ அரசாங்கமானது, ஆளும் வர்க்கத்தின் நல்லெண்ணத்தின் விளைவானதல்ல. முதலாளித்துவ சமூகத்தில் எடுக்கப்படும் சமூக நல நடவடிக்கை ஒவ்வொன்றும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களது, தொடர்ச்சியான போராட்டங்களின், நேரடியான அல்லது மறைமுகமான விளைவேயாகும்.

முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக மாறியதும், நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் உலக மயமாதலும் மூலதனத்தின் அசைவாற்றலும் 1980களிலிருந்து, ஓர் அரசியல் சக்தியாக நவதாராளவாதம் கண்ட எழுச்சியுடன் சேர்ந்து கொண்டன. அவை, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமான அரசாங்கம், ஆற்றிய பங்குக்குக் குழி பறித்துள்ளன.

நிதிமூலதனத்தின் வளர்ச்சியும் ஏகபோகமும் அரசாங்கங்களின் மீது ஏற்படுத்தியுள்ள அழுத்தங்களின் காரணமாக, அரசாங்கங்கள் தமது சமூகப் பொறுப்பைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, அரசாங்கங்கள் வழங்கி வந்த சொற்ப சமூகப் பாதுகாப்பு நிவாரணங்கள் மட்டுமன்றி, அரசாங்கங்கள் பொறுப்பெடுத்து இருந்த கல்வி, உடல் நலன், பொதுசனப் போக்குவரத்து, நீர் வழங்கல் ஆகிய அத்தியாவசிய சேவைகள், மெல்ல மெல்லச் சிதைய விடப்பட்டுள்ளன. சில சமயங்களில் அவை ஒரே வீச்சில், வெட்டிக் குறுக்கப்பட்டோ, கைவிடப் பட்டோ உள்ளன.

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், சமூக நலத்தில் கல்வியும் பொதுச் சுகாதாரமும் பெற்ற முக்கியத்துவம், பொருளியல் வளங்களின் மீதும், உடல் வலிமையும் போதியளவு எழுத்தறிவும் கொண்ட ஓர் உழைப்பாளர் படையினது தேவை உணரப்பட்டிருப்பதன் மீதும் தங்கி இருந்தது.

அந்நிய அரசாங்கங்களிடமிருந்தும் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்தும் சர்வதேச வங்கிகளிடம் இருந்தும் கடன் வாங்கியதால், கடன்பட்ட நாட்டின் பொருளாதாரம், வெளியிலிருந்து வந்த அழுத்தங்களால் வழிநடத்தப்பட்டதுடன், வட்டியுடன் கடனை மீளச் செலுத்துவது, பொருளாதார நிகழ்ச்சி நிரலில் ஒரு பிரதான அம்சமாகியது.

அரசாங்க நிறுவனங்களை ‘மீள்கட்டமைக்குமாறும்’ ‘சீர்திருத்தங்களை’ மேற்கொள்ளும் படியும், கடன் வழங்கியோர் வற்புறுத்தியதால், சமூக சேவைகளுக்கும் பிற அரசாங்கத்தின் பொறுப்புகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி, வரிக் குறைப்பு முதலான பிற கடப்பாடுகளால் பறிக்கப்பட்டது.

மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள், பெருவாரியான தருணங்களில், சமூகப் பாதுகாப்பினது காவலனும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோனும் என்ற தமது வகிபாகத்தில் இருந்து தவறி விட்டன.

மூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தாங்கள் பரிந்துரைத்த பொருளியல் தாராளமயம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள், மீள் கட்டமைத்தல் என்பனவற்றை முற்று முழுதாக, நிறைவேற்றத் தவறியதாலேயே ஏற்படுகின்றன என்று, நவ தாராளவாதிகளும் உலக மயமாக்கலின் பிற ஆதரவாளர்களும் வற்புறுத்திக் கூறுகின்றனர். இன்று இலங்கையில் நடைபெறும் வாதப்பிரதிவாதங்களை, இதன் பின்னணியில் பொருத்திப் பார்க்கவியலும்.

சுவீடனின் தேர்தல் முடிவுகள்: மாறுங்காலங்கள்

சுவீடன் மிக நீண்டகாலமாக, சமூகநலன்பேணும் அரசா‍கவும் தொழிற்கட்சியின் ஆதிக்கத்துடன் கூடிய அரசாங்கமாகவுமே, தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது.

ஆனால், இம்மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், சுவீடனும் வலது தீவிரத் தேசியவாதத்தின் பக்கம் திரும்புவதைக் குறிகாட்டியது. முழுமையான முதலாளித்துவ நவதாரளவாதத்தை ஆதரிக்கும் வலதுசாரிக் கட்சியின் வளர்ச்சி, புறக்கணிக்கக்கூடியதல்ல. அரசாங்கத்தில், செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு அக்கட்சி வளர்ந்துள்ளது.

நவ-நாஜி, வெள்ளை மேலாதிக்கவாத இயக்கத்தில் இருந்து தோன்றி வந்ததான, சுவீடன் ஜனநாயகக் கட்சி, 17.6 சதவீத வாக்குகளுடன் 349 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில், 63 தொகுதிகளில் வென்று, மிதவாதிகளுக்குப் பிந்தைய மூன்றாவது பெரும் தனிக்கட்சியாக ஆகியிருக்கிறது.

கடந்த நூறு ஆண்டுகளின் பெரும்பகுதியில், சுவீடனை ஆட்சி செய்து வந்திருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில், அதன் மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பாரம்பரியமாக இரண்டாவது பெரிய கட்சியாக இருந்து வந்திருக்கக் கூடிய மிதவாதிகளின் கட்சியும் தனக்கான ஆதரவில் ஒரு கூர்மையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

சுவீடனில் நடந்து கொண்டிருப்பவை, முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியின் கீழ், ஐரோப்பா முழுமையிலும், உலகின் பெரும்பகுதியிலும் காணக்கூடியதாக இருக்கின்ற, பொதுவான அரசியல் பாதை வழியையே பின்பற்றிச் செல்கிறது என்பதைப் பறைசாற்றுகின்றன.

அதேவேளை, சமூகநல அரசாங்கமாகச் சொல்லிக்கொண்டாலும், நவதாராளவாதத்துடன் சமூகநலன்களைச் சமன்செய்து, முதலாளித்துவ நாடாகத் திகழ முனைந்த, ஒரு நாட்டின் கதையாக இதைச் சொல்லவியலும்.

பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்திக்கான அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development – OECD) 2015 ஆம் ஆண்டு அறிக்கையில், 1985க்கும் 2010க்கும் இடையிலான காலத்தில், அமைப்பில் அங்கம் வகிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளில், வேறெந்த நாட்டை விடவும், சுவீடனில் சமத்துவமின்மை, வேகமாய் வளர்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டள்ளது.

2014இல், மொத்த செல்வத்தில் 68 சதவீதத்துக்கும் அதிகமானவை, 10சதவீதம் பேரிடம் இருந்ததாக, ‘கிரெடிட் சுவிஸ் உலகளாவிய சொத்து அறிக்கை’ (Credit Suisse’s Global Wealth Report) கூறுகிறது.

இந்த மட்டத்திலான செல்வக் குவிப்பு, சுவிஸ்லாந்தைத் தவிர்த்து, ஐரோப்பாவிலுள்ள வேறெந்த நாட்டை விடவும் அதிகம். இதன் பின்னணியில், தொடர்ச்சியாகச் சமூகநல வெட்டுகள், கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்று வந்துள்ளன.

இவ்வெட்டுகளின் கேடுகளை, சுவீடன் மக்கள் அனுபவித்து வந்த நிலையில், அனைத்துக்கும் காரணம் அகதிகளாகவும் குடியேற்றவாசிகளாகவும் வந்திருக்கின்றவர்களே என்று, வலதுதீவிர தேசியவாதிகள் குற்றஞ்சாட்டி, ஆதரவைப் பெற்றுள்ளார்கள்.

இது, ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளிலும் நடக்கிறது. இதன் மூலம் இரண்டை இவர்கள் சாதிக்கிறார்கள்.

முதலாவது, அகதிகளுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான மனோநிலையையும் அதைக் கொள்கை வகுப்பிலும் நடைமுறைப்படுத்த, அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

இரண்டாவது, மக்கள் கட்டும் வரிப்பணம், சமூகநலத்திட்டங்களின் விளைவால் மக்களுக்குப் பயன்படாமல், அகதிகளுக்குப் பயன்படுகிறது என்ற பொய்யை, மக்கள் மத்தியில் வளர்க்கிறார்கள். இதன்மூலம், சமூகநலத்திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவைப் பெறுகிறார்கள்.

நோர்வே: சந்தையைக் கட்டியணைத்தல்

சுவீடன் மக்களிடம் இருக்கும் மனோநிலையே, நோர்வேஜியர்களிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சந்தைப் பொருளாதாரமே அனைத்துக்கும் தீர்வு என்று அவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள்.

திறந்த சந்தையும் போட்டியுமே நல்லது என்றும், மக்கள் தங்கள் வாழ்வைத் தாங்களே பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியுள்ளன.

எண்ணெய் வளத்தின் விளைவால், மிக உயர்வான சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகளை அடைந்த சமூகம் என்ற நிலையில், தனியன்களாக வாழ்வது என்பதைப் பிரதானப்படுத்தி, சமூகவாழ்வை அவர்கள் மெதுமெதுவாகத் தொலைக்கிறார்கள்.

அண்மைய கணக்கெடுப்பின்படி, ஒரு நோர்வேஜிய வீட்டில், சராசரியாக 1.21 மனிதர்களே வசிக்கிறார்கள். இது சொல்லுகிற செய்தி மிக வலியது.

சந்தைகளின் கூடாரமாக, நுகர்வின் உச்சபட்ச மய்யங்களில் ஒன்றாக, நோர்வே இருக்கிறது. உயர்வான வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்தது, சமூகநலத் திட்டங்களேயாகும்.

ஆனால் இன்று, சந்தைதான் அதைத் தக்கவைக்கும் என நம்பப்படுகிறது. கட்டற்ற சந்தைகளை, மெதுமெதுவாக அனுமதித்த தொழிற்சங்கங்கள், இன்று வெறுமையை எதிர்நோக்குகின்றன. இப்போது, அரசாங்கங்கள் தனியார் மயமாக்கலை அதிகரிக்கின்றன. சந்தைப் பொருளாதாரம், அனைத்தையும் தீர்மானிக்க அனுமதிக்கிறது.

சமூகநலன்களின் விளைவால் உருவான உயர் வாழ்க்கைத்தரம், இவர்களுக்கு உயர் நுகர்வுக்கான வாய்ப்பை வழங்கியது. நுகர்வின் பேரால், நவதாரளவாதம், சந்தை விதிகள் என அனைத்தையும் நோர்வேஜியர்கள் அனுமதித்தார்கள்.

எந்தச் சமூக நலக் கொள்கைகள், உயர்வான சம்பளம், நியாயமான வேலைநேரம், விடுமுறை, வேலைப்பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்ததோ, அவற்றை இந்தச் சந்தைவிதிகள், குழிதோண்டிப் புதைத்துள்ளன.

நிறைவாக,

இன்று, ஸ்கன்டினேவிய அனுபங்கள் மூன்றாமுலக நாடுகளுக்கு நல்ல பாடங்களைத் தருகின்றன. குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகள் எஞ்சியிருக்கின்ற மிச்ச சொச்ச, சமூகநலன்களைத் தக்கவைத்தாக வேண்டும். அதில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன பிரதானமானவை.

அனைத்தையும் தனியார்மயமாக்குவதன் மூலம் வினைத்திறனான சேவையைப் பெறமுடியும் என்பவர்கள் தனியார்மயம் எவ்வாறு இலாபவெறியையும் பொறுப்பின்மையையும் தூண்டியுள்ளது என்பதையும் நோக்க வேண்டும்.

இப்போது தேசியவாத வெறியும் அரசியல்ரீதியாக வலது நோக்கிய திருப்பமுமே சமூகநல வெட்டுகளையும் தனியார் மயத்தையும் முழுவீச்சில் நடைமுறைப்படுத்துகிறது.

பெருந்தேசியவாத அகங்காரம் அடிமடியிலேயே கைவைக்கிறது. இதைப் பலர் உணர்வதில்லை. தேசியவாதம் விடுதலையைப் பெற்றுத்தராது. அது இன்னோர் அடிமைத்தனத்தில் எங்களை ஆழ்த்திவிடும் வேலையையே செய்கிறது.

சந்தையும் நிதிமூலதனமும் வேண்டுவதைத் தேசியவாதிகள் உணர்ச்சிகர உச்சாடனங்களோடு நடத்தி முடிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெற்றிகரமான பிசினஸ் வுமன்!!(மகளிர் பக்கம்)
Next post 32 பல்…64 பிரச்னை…!!(மருத்துவம்)