தமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்!!(கட்டுரை)

Read Time:13 Minute, 56 Second

தமிழக அரசியலில் பாரதிய ஜனதாக் கட்சி, திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போல், அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, அதன் தேசிய செயலாளர், எச். ராஜாவின் பேச்சுகள் அக்கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கும், குறைந்தபட்ச செல்வாக்கையும் சூறையாடுவது போல் அமைந்திருக்கிறது.

தேசியக் கட்சிகளின் மாநிலப் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பிரச்சினைகளை முன் வைத்துத்தான், அரசியல் செய்வார்கள். காவிரி என்று வரும் போது, கர்நாடகாவில் உள்ள மாநில பா.ஜ.க, அம்மாநில காவிரி உரிமை பற்றித்தான் பேசுகிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை என்று உருவாகும் போது, அம்மாநிலத்தில் உள்ள பா.ஜ.க, கேரள நலனை முன்னிறுத்தித்தான் கருத்துத் தெரிவிக்கிறது.

ஏன்? ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழர்களைச் சுட்டுக் கொன்ற போதும், அம்மாநில பா.ஜ.க தலைவர்கள், ஆந்திர மாநில நலனை முன்னிறுத்தியே கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் மட்டும்தான், மாநில நலன் பற்றிய பிரச்சினைகளில், பெரும்பாலும் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கையில் எடுத்து, தமிழக மக்களிடம் செல்வாக்கு இழந்து நிற்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க தலைவர்களில், இராஜ்ய சபை உறுப்பினராக இருக்கும் இல கணேசன், மத்திய பா.ஜ.க அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டாலும், மாநில நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் பேசுகிறார்.

ஆனால், அவர் தமிழக பா.ஜ.கவில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இப்போதைக்கு, தமிழக பா.ஜ.கவில் முன்னிலைப்படுத்தப்படுபவர் தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் தான்; இன்னொருவர் மத்திய அமைச்சராக இருக்கும், பொன் ராதாகிருஷ்ணன்.

மத்திய அமைச்சருக்கு, மத்திய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டிலிருந்து விலகிச் சென்று, கருத்துத் தெரிவிக்க இயலாத சூழல் இருக்கலாம். ஏனென்றால், அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. அதில் தமிழக மாணவர்கள் நலனைப் பாதிக்கும் வகையில் ‘நீட் தேர்வு’ அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போன்றோரால் மாற்றுக் கருத்து சொல்ல முடியாமல் இருக்கலாம்.

ஆனால், மாநில பா.ஜ.கவின் தலைவராக இருப்பவர், முதலில் மாநில நலனுக்குத் தேவையான கருத்துகளைச் சொல்ல வேண்டும். அதற்குப் பதில், மத்திய அரசாங்கத்தின் கருத்துடனேயே அவர், இணக்கமாகப் போய்க் கருத்துச் சொல்வதால், தமிழக மக்கள் மத்தியில், பா.ஜ.க ஏதோ ஒரு தமிழக விரோத கட்சி என்ற இமேஜ் உருவாக்கப்பட்டு விட்டது.

ஏறக்குறைய காங்கிரஸ் கட்சியை, ஒரு காலத்தில், குறிப்பாக இலங்கையில் உச்சகட்டப் போர் நடைபெற்ற நேரத்தில், எப்படித் தமிழக மக்கள் வெறுப்புடன் பார்த்தார்களோ, அந்த வெறுப்பு, இப்போது பா.ஜ.க மீது தமிழகத்தில் இருக்கிறது.

அதனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ஆகியோர், தலைமையிலான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள, தி.மு.கவும் அ.தி.மு.கவும் போட்டி போட்டுக் கொண்ட நிலை மாறி, இன்றைக்குச் சிறிய கட்சிகள் கூட, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அஞ்சி, ஒதுங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முழுக் காரணம், தமிழகத்தில் உள்ள பா.ஜ.கவின் மாநிலத் தலைவர்கள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஏனென்றால், 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, இதே தமிழகத்தில்தான் மோடி தலைமையிலான கூட்டணிக்கு, 18 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. அது, கூட்டணிக் கட்சிளுடன் இணைந்த வாக்கு வங்கி என்றாலும், பா.ஜ.கவுக்கு, குறிப்பாக மோடியின் தலைமைத்துவத்துக்குக் கிடைத்த வாக்குகள், அந்த 18 சதவீதத்தில் அதிகம் என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில், காங்கிரஸின் மீது இருந்த வெறுப்பு, பா.ஜ.கவின் ஒட்டு மொத்த மூலதனமாக, தமிழகத்தில் அப்போது மாறியது. அதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வியூகத்தை, அகில இந்தியத் தலைமைக்கு சொல்லாமல், அனைத்து வாக்குகளுமே பிரதமர் மோடிக்குக் கிடைத்தது போன்ற ஓர் அரசியலை, தமிழக பா.ஜ.க செய்தது.

அதன் விளைவு, அன்று கூடி வந்த கட்சிகள், இன்று விலகி நிற்கின்றன. அதன் பிறகு, இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு மேலாகியும் பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு, எவ்வித வெள்ளோட்டத்தையும் தமிழக பா.ஜ.கவும் முன்னெடுத்துச் செல்லவில்லை.

ஆனால், தமிழக கூட்டணிக் களம் பா.ஜ.கவை விட்டு வெகு வேகமாக விலகிச் சென்று விட்ட நிலைதான், இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘நீட்’ தேர்வு, ‘ஹைட்ரோ காபன்’ திட்டம், சேலம் எட்டு வழிச்சாலை, காவிரிப் பிரச்சினை என அனைத்திலுமே மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன், கண்ணை மூடிக் கொண்டு இணங்கிச் சென்று, தமிழகத்தில் உள்ள கட்சிகளை வசைபாடுவதில் மட்டுமே, மாநில பா.ஜ.க தலைவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

“பாசிச பா.ஜ.க அரசாங்கம்” என்று கூறினார் என்பதற்காக, சோபியா என்ற மாணவியின் மீது புகார் கொடுத்து, அவரைக் கைது செய்ய வைத்தார் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.

அந்த வெறுப்பு மறைவதற்குள், இப்போது இந்துக்கள் என்ற முழக்கத்தை முன் வைத்து, எச். ராஜா, புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் மீதும், தமிழ்நாடு பொலிஸ் அதிகாரிகள் மீதும் நிகழ்த்திய அசிங்கமான ‘அர்ச்சனை’, அதைத் தொடர்ந்து, திருக்கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்கள் மீதான அருவருப்பான விமர்சனம் என்பவற்றைத் தொடர்ந்து, இப்போது தமிழகம் முழுவதும், பல்வேறு பொலிஸ் நிலையங்களில் அவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அருண்மொழித்தேவன், “இப்படி மத ஒற்றுமையைக் கெடுக்கும் விதத்தில், ராஜா பேசிக்கொண்டிருந்தால், அவர் தமிழகத்துக்குள் நடமாட முடியாது” என்று எச்சரிக்கை விடும் அளவுக்கு, நிலைமை முற்றிப் போய் விட்டது.

பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள எச். ராஜாவின் பேச்சை, பா.ஜ.கவின் அகில இந்தியத் தலைவர்களின் பேச்சுப் போல், தமிழக மக்கள் பார்க்கிறார்கள். அதனால், ராஜாவின் பேச்சால் வரும் கோபம் எல்லாம், பா.ஜ.க மீதுதான் திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலைமை, அகில இந்திய பா.ஜ.கவுக்குப் போய் சேரவில்லை; இங்குள்ள மாநில பா.ஜ.கவினருக்கும் கள நிலவரம் முழுமையாகப் புரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் தமிழகத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கிவிட வேண்டிய நெருக்கடி, பா.ஜ.கவுக்கு இருக்கிறது. சென்ற முறை வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதிகளில், பெரும்பான்மை எண்ணிக்கை வட மாநிலங்களில் கிடைத்த வெற்றியாகும்.

இந்த முறை, அந்த வெற்றி வட மாநிலங்களில் கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. வட மாநிலங்களில் எதிர்பார்க்கப்படும் எம்.பிக்கள் நஷ்டத்தை ஈடு கட்ட, பா.ஜ.கவுக்குத் தமிழ்நாடு மிக முக்கியம்.

அதுவும், தமிழ்நாட்டில் வெற்றி பெறக்கூடிய ஒரு கூட்டணி, அதை விட முக்கியம். ஏனென்றால், கடந்த காலங்களில் பா.ஜ.கவோ, காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி அமைத்த நேரங்களில் எல்லாம், மத்தியில் ஆட்சி அமைத்துள்ளன.

ஆனால், அப்படியொரு கூட்டணி கிடைப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எதையும் உருவாக்காமல், 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அன்றைய பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இருந்த செல்வாக்குக்குப் பங்கம் விளைவிப்பது போல், தமிழக பா.ஜ.க தலைவர்கள் நடந்து கொண்டிருப்பது, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.கவை மிகப்பெரிய நெருக்கடியில் கொண்டு போய் விடப் போகிறது என்பதே இப்போதைய நிலைமை.

பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைக்க முன் வரவில்லை என்பது வேறு விடயம். ஆனால், மத்திய அரசாங்கத்தின் தயவில், ஆட்சி செய்து கொண்டிருக்கும்

அ.தி.மு.கவும் பா.ஜ.கவின் கட்டுப்பாட்டை மீறிக் கைநழுவிச் சென்று கொண்டிருப்பதுதான், பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.

ஒரு முறை அல்ல, பல முறை அ.தி.மு.கவின் சார்பில் மக்களவைத் துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை, “நாங்கள் பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு அலையவில்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார். இது தவிர சூப்பர் ஸ்டார் ரஜினி, ‘வருவாரா மாட்டாரா’ என்பது, இன்னும் ‘பூவா, தலையா’ போட்டுப் பார்க்கும் நிலையில் இருக்கிறது.

நடிகர் கமலோ, “மதவாத அரசியல்” என்று கூறி, பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டை ஏற்கெனவே எடுத்து விட்டார். ஆகவே, இன்றைக்குத் தமிழகத்தில் பா.ஜ.கவுக்குக் கூட்டணியும் இல்லை; அப்படியொரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள தலைவர்கள், கூட்டணிக் களத்தை ஏற்படுத்தவும் இல்லை.

இந்தநிலையில் தான், தென் மாநிலங்களில் இருந்து, அதிக எம்.பிக்களைப் பெறுவது பா.ஜ.கவுக்கு, குதிரைக் கொம்பாக இருக்கப் போகிறது. அது, அக்கட்சியின் 2019 நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தில், மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே, தற்போதையை நிலைமை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிச்சன் டிப்ஸ்!!( மகளிர் பக்கம்)
Next post டேட்டிங் ஏன் எப்படி?(அவ்வப்போது கிளாமர்)