பிரபலங்கள் அமெரிக்காவில் எந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்கிறார்கள்?!(மருத்துவம்)
அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்வது பற்றி செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அது என்ன மருத்துவமனை என்பது பற்றியோ, அங்கு என்ன சிறப்பு காரணங்கள் இருக்கின்றன என்பது பற்றியோ பெரும்பாலும் தெரிவதில்லை. சமீபத்தில் இந்த அமெரிக்க ரகசியம் வெளியாகி இருக்கிறது.
அண்மையில் கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சல் பரவி 17 பேர் உயிரிழந்தனர். இந்த நோய்த் தாக்குதலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைப் பாராட்டி அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள Institute of human virology என்ற அமைப்பு விருது வழங்கியது.
இந்த விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள மயோ கிளினிக் என்கிற பிரபல மருத்துவமனையில் அவர் முதற்கட்டமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். தற்போது அதன் அடுத்த கட்டமாக அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்திலுள்ள ரோசெஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
அப்படி மயோ கிளினிக்கில் என்ன ஸ்பெஷல்?!
மயோ கிளினிக் சர்வதேச தரத்தின் அடிப்படையில் நவீன வசதிகளைக் கொண்டது. நீரிழிவு நோய், நரம்பியல் கோளாறு, சிறுநீரக பிரச்னை, இதய நோய், புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி புராஸ்ட்டேட் பிரச்னைக்காக இங்கே சிகிச்சை பெற்றார். அதுபோல கேரளாவின் முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயன் கல்லீரல் சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் கேரள நடிகை மம்தா மோகன்தாஸ் இங்கே புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரபலங்களின் பட்டியல் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலானது. இன்னும் அங்கு என்னென்ன பிரபலங்கள் சென்று வருகிறார்கள் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர் வில்லியம் வோரல்மயோ மற்றும் அவரது மகன்கள் வில்லியம் ஜே.மயோ, சார்லஸ் ஜே.மயோ ஆகியோரின் கூட்டு முயற்சியில் 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில் மயோ கிளினிக் (Mayo Clinic) உருவாகியது.
ரோசெஸ்டரில் சுறுசுறுப்பாக நடைபெற்ற இவர்களுடைய மருத்துவ தொழிலுக்கு அதிகத் தேவை ஏற்பட்டதால், மயோ சகோதரர்கள் பிற மருத்துவர்களைத் தங்களுடன் இணையுமாறு அழைத்து அவர்களை ஒன்றிணைத்து, தற்போது தனியார் துறை மருத்துவப் பணியில் முன்னோடியாக மாறியுள்ளனர். இன்று இந்த மருத்துவமனையின் கிளைகள் அமெரிக்காவிலுள்ள ரோசெஸ்டர், ஜாக்சன்வில்லே, ஸ்காட்ஸ்டேல் ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் வட்டார சமுதாய அடிப்படையில் அமைந்த உடல்நலப் பராமரிப்புத் தொழிற்பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
4000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இங்கே பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனை விரிவான நோயறிதல், துல்லியமான முடிவுகள் மற்றும் திறமையான சிகிச்சைகள் வழங்குவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் மருத்துவப் பராமரிப்பு அளிக்கப்படுகிறது. மேலும் வட்டார சமுதாய அடிப்படையில் அமைந்த உடல்நலப் பராமரிப்புகளும் நடைபெற்று வருகின்றன.
Average Rating