முதல் தகவல் அறிக்கை!(மருத்துவம்)
மனித உடலில் ஏற்படுகிற ஒருவிதமான ஹார்மோன் குறைபாடுதான் சர்க்கரை நோய். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பின் ஏற்றத்தாழ்வு காரணமாக உண்டாகிற பிரச்னை இது. ஒருவருடைய உடலில்(ரத்தத்தில்) குளுக்கோஸ் அளவு 120 மில்லி கிராம்/ டெ.லி அளவுதான் இருக்க வேண்டும். இந்த அளவைவிட ஒரு கிராம் கூடினாலும் அவரின் செல்களில் வளர்சிதை மாற்றப்பணிகள்(Metabolic Functions) பாதிப்புக்கு உள்ளாகும். இதன் காரணமாக, அவரது உடலில் ஏற்படும் பல வகையான மாற்றங்களின் நிலைமைதான் சர்க்கரை நோய்(Diabetic) என குறிப்பிடப்படுகிறது.
நீரிழிவுக்கு ‘மதுமேகம்’ என்ற பெயரும் உண்டு. அலோபதி மருத்துவத்தில் டயாபட்டீஸ் மெலிட்டஸ்(Diabetes Mellitus) என்று டெக்னிக்கலாக குறிப்பிடுகிறார்கள். தொற்று மூலமாகவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடுவதன் காரணமாகவும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய் இது(Non communiable disease). ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் உலகில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிற நோய்களில் இந்நோய் முக்கிய இடம் வகிக்கிறது.
2014-ம் ஆண்டு திரட்டப்பட்ட புள்ளி விபரம் ஒன்றின் அடிப்படையில், உலகில் ஏறக்குறைய 20 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இத்தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேரும், தமிழகத்தில் தோராயமாக, 90 லட்சம் மக்களும் இந்நோயால் அவதிப்படுவது தெரிய வந்துள்ளது. மாவுச்சத்து(Carbohydrate) குளுக்கோஸாக மாற்றம் பெற்ற பின் அது உயிரணுக்களுக்குள் தங்கு தடையின்றி செல்ல உதவுவது இன்சுலின். இந்த ஹார்மோன் அமினோ அமிலம் என்கிற புரத மூலக்கூறுகளால் ஆனது.
சராசரியாக ஒரு நாளில் மனித உடலில் 40 யூனிட்டில் இருந்து 50 யூனிட் வரை இன்சுலின் சுரக்கும். இதன் மூலம்தான் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள முடியும். விளையாட்டு, இலக்கியம், மருத்துவம், அறிவியல் என எந்தத் துறையாக இருந்தாலும், தலைசிறந்து விளங்கும் நபர் அல்லது நாடுகளை, டாப் டென் என வகைப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகள், ‘டாப் டென்’ என வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அவ்வரிசையில், முதலாவதாக சீனாவும், இரண்டாவதாக இந்தியாவும், அமெரிக்கா மூன்றாவதாகவும் இடம் பெற்றுள்ளன.
நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான தகுந்த சிகிச்சைகளை உரிய நேரத்தில், நீரிழிவு சிறப்பு மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் நம்முடைய இதயம், மூளை, சிறுநீரகம், கண், ரத்தக்குழாய் முதலான உறுப்புகள் கெட்டுப் போகும். நாம் உட்கொள்ளும் சாப்பாட்டில் மாவு, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், நார் மற்றும் தாதுச்சத்துகள் என பலவகையான சத்துகள் காணப்படுகின்றன. இவற்றில், முதலாவதாக இடம் பெற்றுள்ள மாவுச்சத்து(Carbohydrate) மட்டும்தான் குளூக்கோஸாக மாற்றப்படுகிறது.
அதாவது, சிறுகுடலைச் சென்றடைந்த உணவுப்பொருட்கள் அரைக்கப்பட்டு செரிமானம் ஆகும்போது அவற்றில் உள்ள மாவுச்சத்துகள், சில என்ஸைம்களால் சர்க்கரையாக உருமாற்றம் அடைகிறது. மாவுச்சத்து குளுக்கோஸாக மாற்றப்பட்டபின் நேரடியாகவோ, தானாகவோ செல்களுக்குள் போக முடியாது. இதற்குக் கணையம் என்ற உறுப்பின் துணை அவசியம். இந்த உறுப்பில் இருந்து சுரக்கிற இன்சுலின் மூலமாகத்தான் மாவுச்சத்து செல்களுக்குள் எவ்வித சிரமமும் இல்லாமல் நுழைய முடியும்.
கணையத்தில் உள்ள செல்கள் ஆல்ஃபா, பீட்டா, டெல்ட்டா என மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த 3 செல்களில், பீட்டா செல்கள்(Beta Cells) மட்டும்தான் மாவுச்சத்து உயிரணுக்களுக்குள் செல்ல உதவும் இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. மாவுச்சத்தினை உயிரணுக்களுக்குள் எடுத்துச் செல்ல உதவும் இன்சுலினை கணையம் 2 கட்டங்களாக சுரக்கிறது. முதலாவதாக, உணவு சாப்பிட்ட பின்னர் ரத்தத்தில் அதிகரிக்கிற சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதற்கான இன்சுலினைச் சுரப்பது ஒரு கட்டம்.
இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்னர் குருதியில் உள்ள குளுக்கோஸை சக்தியாக மாற்றுவதற்கு தேவையான இன்சுலினை உற்பத்தி செய்வது வேறொரு கட்டம். இவற்றில், முதலாவது கட்டம் ‘உணவுத் தூண்டல் இன்சுலின்’(Meal Stimulated Insulin) எனவும், இரண்டாவது கட்டம், ‘அடிப்படை இன்சுலின்’(Basal Insulin) எனவும் குறிப்பிடப்படுகின்றன. நமது உடலில் காணப்படுகிற சுரப்பிகளில் மிகப் பெரியதும், ஆபத்தான நேரங்களில் குளுக்கோஸைத் தயாரிக்கும் இன்றியமையாதப் பணியைச் செய்வதும் கல்லீரலின் பொறுப்பில் உள்ளது.
இந்த உறுப்பு, நமக்குத் தேவையான சர்க்கரையை உற்பத்தி செய்வதோடு தேவைக்குப் போக மீதமாகும் குளுக்கோஸைக் கிளைக்கோஜன்(Glycogen) எனும் பொருளாகவும் சேமித்து வைக்கவும் செய்கிறது. இந்தப் பணிகளைக் கல்லீரல் தடையின்றி செய்வதற்கும் இன்சுலின்தான் உதவுகிறது. கல்லீரல் தான் சேமித்த கிளைக்கோஜனை மீண்டும் குளுக்கோஸாக மாற்றி ரத்தத்துக்கு அனுப்புகிறது. இச்செயல்பாட்டினை நீரிழிவு மருத்துவர்கள் ‘கல்லீரல்-குளுக்கோஸ் வெளிப்பாடு (Hepatic Glucose Output) எனக் குறிப்பிடுகின்றனர்.
Average Rating