எலும்பு மஜ்ஜையையும் தானம் அளிக்கலாம்!( மருத்துவம்)
எலும்புக்குள் ஸ்பாஞ்ச் வடிவத்தில் இருக்கும் ஒரு முக்கியப் பகுதிதான் மஜ்ஜை எனப்படுகிறது. ரத்த செல்களை உற்பத்தி செய்யும் மிக முக்கியப் பணியினை இந்த எலும்பு மஜ்ஜைதான்(Bone marrow) செய்கிறது. ஏறத்தாழ 500 பில்லியன் செல்களை ஒரு நாளில் தயாரிக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். எலும்பு மஜ்ஜையின் இந்த முக்கிய செயல்பாடு பாதிக்கப்படும்போது லுக்கேமியா, லிம்போமா போன்ற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எலும்பு மஜ்ஜையின் செயல்பாடு இன்றியமையாதது. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கும்போது உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வது போல எலும்பு மஜ்ஜையையும் மாற்றிக் கொள்ள முடியும்.
கொடையாளர்
ஒரு குடும்ப உறுப்பினருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர் அல்லாத நோயாளிக்கோ ரத்த முதல்நிலை செல் அல்லது மஜ்ஜை மாற்றம் செய்ய விருப்பமாக இருக்கும் ஒரு தன்னார்வலரே மஜ்ஜை அல்லது ரத்த முதல்நிலை செல் கொடையாளர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு தகுந்த கொடையாளர் கிடைத்தால் ரத்த முதல்நிலை செல், மஜ்ஜை அல்லது தொப்புள்கொடி மாற்று சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.
நோயாளிகளுள் 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமே குடும்பத்திற்குள் தகுந்த கொடையாளர் கிடைக்கிறார். எனவே, 70 விழுக்காட்டினர் தங்கள் நோய் குணமாக, கிடைக்கக் கூடிய உறவற்ற ஒரு கொடையாளரையே உலகப் பதிவேட்டின் மூலம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எலும்பு மஜ்ஜை, ரத்தம் அல்லது தொப்புள் கொடியில் முதல்நிலை செல்கள் காணப்படுகின்றன.
கொடை அளிப்பதற்கு வேண்டிய ரத்த முதல்நிலை செல்களுக்கான மூன்று சாத்தியக் கூறுகள் உள்ளன. முதல் நிலை செல்கள் : இடுப்பில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இடுப்பில்தான் அதிக அளவில் ரத்த முதல்நிலை செல்கள் காணப்படுகின்றன. புற ரத்தம் : இது ரத்த ஓட்டத்தில் இருந்து சேகரிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு சில முதல்நிலை செல்களே ரத்தத்தில் காணப்படும்.
கொடை அளிப்பதற்கு சில நாட்களுக்கு முன் கொடையாளருக்கு வளர்ச்சிக் காரணிகள் எனப்படும் இயக்குநீர் போன்ற பொருள் கொடுக்கப்படும். இது முதல் நிலை செல் வளர்ச்சியைத் தூண்டி ரத்த ஓட்டத்தில் அது கலக்க உதவும். தொப்புள் கொடி ரத்தம் : இது பிறந்த குழந்தையின் நச்சுக்கொடி அல்லது தொப்புள் கொடியில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இது உறைய வைக்கப்பட்டு தேவைப்படும்போது மாற்றத்திற்கென அளிக்கப்படுகிறது.
யார் கொடையாளர் ஆக முடியும்?
மஜ்ஜை தேவைப்படும் எந்த ஒரு நோயாளிக்கும் கொடை அளிக்க முன்வரும் 18 முதல் 60 வயதுடைய நல்ல உடல்நலத்தோடு இருப்பவரே மஜ்ஜை கொடையாளர் ஆக முடியும். 18 வயதுக்கு மேற்பட்ட நல்ல உடல்நலத்தோடு எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கும் ஒரு கர்ப்பிணி தொப்புள் கொடி ரத்தத்தைக் கொடை அளிக்கலாம். இதற்காக இவர் கர்ப்ப வலி ஏற்படும் முன்னரே பெயரைப் பதிவு செய்ய வேண்டும். உலக எலும்பு மஜ்ஜைக் கொடையாளர் பதிவேட்டில் ஏற்கெனவே 30 மில்லியன் கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், 40% நோயாளிகள் தங்களுக்கு பொருத்தமான ஒரு கொடையாளரை உலகப் பதிவேட்டில் இருந்து பெற முடியாத காரணத்தால் இன்னும் அதிகமான கொடையாளர்கள் தேவைப்படுகின்றனர்.
Average Rating