Medical Trends!!(மருத்துவம்)
டி.வி பார்ப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உண்டு. ஆனால், பிரச்னை டி.வியினால் அல்ல என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் இருப்பது, டி.வி. பார்த்துக் கொண்டே நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளுவது போன்ற மற்ற காரணிகளால்தான் உடல்பருமன் உள்ளிட்ட பல உபாதைகள் வருகின்றன.
மீனுக்கும் கண்ணுக்கும் என்ன கனெக்ஷன்?!
மீன் உணவுகளை அதிகமாக உண்பதால் ஆரோக்கியமான கண்களைப் பெற முடியும். குறிப்பாக மீன்களில் மிகுந்து காணப்படும் ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’டானது வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கம் மற்றும் கண்களில் ஏற்படும் கேட்ராக்ட் போன்றவற்றை குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மீன் உண்பதால் டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்கு, டயபடிக் ரெட்டினோபதியால் வரும் பார்வையிழப்பை தவிர்க்கலாம். இதுமட்டுமின்றி இன்று கம்ப்யூட்டரில் அதிகநேரம் பணிசெய்பவர்களுக்கு வரும் உலர் கண் நோய்க்கும் அருமருந்தாகிறது.
உறவுகளும் உளவியலும்
ஆரோக்கியமான உடல் மற்றும் உளவியலுக்கான சிறந்த மருந்து உறவுகளை பேணிக்காப்பது என்கிறார்கள் நிபுணர்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தோடு நல்ல தொடர்பில் இருப்பவர்கள், மற்றவர்களைக் காட்டிலும், அதிக சந்தோஷமாகவும், நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளோடும் இருக்கிறார்களாம்.
மகிழ்ச்சி…
மகிழ்ச்சியாக இருப்பவர்களின் உற்பத்தித்திறன் 12 சதவீதம் அதிகமாக இருப்பதையும், மகிழ்ச்சியற்றவர்களின் உற்பத்தித்திறன் 10 சதவீதம் குறைவாக இருப்பதும் வார்விக் பல்கலைக்கழக பொருளாதார வல்லுனர்களின் சமீபத்திய
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வாசமே… சுவாசமே…
நறுமணம் வீசும் மலர்கள் அல்லது மூலிகைகளை முகர்வதன் மூலம் விழிப்புணர்வையும், நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு முக்கியமான சந்திப்பு அல்லது தேர்வுக்குச் செல்வதற்குமுன் இதைச்செய்வதால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
வைட்டமின் ஏ மருந்து கொடுப்போம்
குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை, டைபாய்டு, போலியோ, அம்மை போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவர் ஆலோசனைப்படி போட்டுக் கொள்கிறோம். இதேபோல ‘வைட்டமின் ஏ’ மருந்தையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையால் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
மேலும் தட்டம்மை, வயிற்றுப்போக்கு உட்பட பிற குழந்தைப் பருவத் தொற்றுகளின் மூலம் உயிர் ஆபத்துகளையும் அதிகரிக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து குழந்தைகளின் உடல்நலனைப் பாதுகாக்கும் பொருட்டு இதுபோன்ற அரசு நடத்துகிற முகாம்களிலோ அல்லது உரிய மருத்துவரின் ஆலோசனைப்படியோ இந்த மருந்தினைக் கொடுக்கலாம்.
காஃபி இதயத்தைக் காக்கும்!
இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க காஃபி உதவுகிறது என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி என்பதை PLOS Biology ஆய்விதழில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் முதல் முறையாக பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளனர். நான்கு கோப்பை காஃபியில் இருக்கும் அளவிற்கு சமமான Caffeine என்கிற வேதிப்பொருள் உடலில் செலுத்தப்பட்டால், அது இதயத் தசைகளின் செல்களுக்குள் பி27 என்ற புரதத்தை செலுத்த உதவுகிறது. இந்தப் புரதம் இதயத்தின் திசுக்களிலுள்ள சேதாரத்தை சரிசெய்து தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த ஆய்வு எலிகளின் இதயத்தில் காஃபின் ஏற்படுத்தும் நல்ல விளைவைத்தான் ஆராய்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கற்றுக்கொள்!
‘ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்ட பின், 4 மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வதால், கற்றுக்கொண்ட வித்தையை மிகச்சிறப்பாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும்’ என்கிறது ஓர் ஆய்வு. உடற்பயிற்சியின் போது மூளையில் சுரக்கும் ஒரு ரசாயனமானது நினைவாற்றலை வளர்ப்பதே இதற்கு காரணம்.
ரத்த நாளத்தை அச்சடிக்கலாம்
தற்போது மாற்று உறுப்புக்காக காத்திருப்போரின் பட்டியல் நீண்டு வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து, வளர்த்து புதிய உறுப்பைப் பொருத்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு வரும்வரை அந்த உறுப்புகள் உயிருடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு அந்த உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் உயிர்ச்சத்துக்களை ரத்தத்தின் வழியே தருவதற்கு ரத்த நாளங்கள் அவசியமாகிறது. எனவே, இந்த புதிய கண்டுபிடிப்பு மாற்று உறுப்புக்காக
காத்திருப்போருக்கு பெரும் உதவியாக இருக்கும்.
தவறுகளை சரி செய்யும் யோகா உடை
யோகாசனம் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு எப்போதும் ஒரு குரு உடனிருந்து இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்யக்கூடாது என்று சொல்லித்தருவது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை. இதற்கு மாற்று வழியை உருவாக்கியிருக்கிறது Wearable X நிறுவனத் தயாரிப்பான Nadi X என்கிற யோகா உடை. இதனை அணிந்துகொண்டு யோகா செய்பவர் தவறு செய்யும்போது அதை சுட்டிக் காட்டி திருத்தும் பணியை செய்கிறது.
ஸ்கேனிங்கிலும் 3D
அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த நேக்கட் லேப்ஸ் என்கிற நிறுவனம், மனித உடலை முப்பரிமாணத்தில் பதிவு செய்யும் உலகின் முதல் முப்பரிமாண ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நமது உடலை 15 வினாடிகளில் ஸ்கேன் செய்து, முப்பரிமாண வடிவில் வழங்குவதுடன், நமது உடல் எடை, உடலிலுள்ள கொழுப்பின் சதவிகிதம், கொழுப்பற்ற பகுதியின் எடை போன்ற பல விதமான தகவல்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள செல்போன் செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதியை இக்கருவி பெற்றிருக்கிறது.
மனதில் உறுதி வேண்டும்…
பள்ளி வயது மாணவர்கள், சக முரட்டுத்தனமான மாணவர்களால் மிரட்டப்படுவதால் அவர்களுக்கு மனச் சோர்வு, பதற்றம் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த மாணவர்கள் தங்கள் மன உறுதியால் அந்த பாதிப்புகளில் இருந்து சில ஆண்டுகளிலேயே மீண்டுவர முடியும் என்கிறது லண்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. லண்டனில் 11 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முரட்டு மாணவர்களால் மிரட்டப்படும் சம்பவங்கள் பள்ளிகளில் நடக்காமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளைச் செய்வது அவசியம் என்பதையும் வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.
ஆஹா… அவகேடா!
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 1,000 பங்கேற்பாளர்களிடையே ஒவ்வொரு நாளும் அவகேடா உணவுகளை உண்ண வைத்து ஓர் ஆய்வு மேற்கொண்டிருந்தார்கள். இதில் அவகேடா எடை இழப்புக்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவகேடா பழத்தில் உள்ள கொழுப்புச் சத்தானது உடலில் உள்ள சேச்சுரேட்டட் கொழுப்புக்கு மாற்றாக செயல்பட்டு, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுவதாகவும் தெரிய வந்திருக்கிறது.
அம்மாக்கள் கவனத்துக்கு…
குழந்தைகளின் பசியை உணர்ந்து தாய்மார்கள் உணவு ஊட்ட வேண்டும். குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்திலும், நேரத்திற்கு சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்கிற கட்டாயத்தாலும், கதைளை சொல்லி பயமுறுத்தியும் உணவு கொடுக்கக் கூடாது. அவர்களின் உடல், மனத் தேவைக்கு மீறி இப்படி கொடுக்கப்படும் உணவால் எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் பருமன் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
Average Rating