அதிநவீன சிகிச்சைகளுடன் ஓர் அரசு மருத்துவமனை!!(மருத்துவம்)
தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கென சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டிடம் கட்டப்பட்டதும், அதன்பிறகு அரசு மருத்துவமனையாக அந்த கட்டடம் மாற்றப்பட்டதும் எல்லோருக்கும் நினைவிருக்கும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக உருவாக்கப்படுவதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. அந்த புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இப்போது எப்படி இயங்கி வருகிறது என்று ஒரு மதியவேளையில் ரவுண்ட்ஸ் வந்தோம்…முதலிலேயே நம்மை கவனிக்க வைக்கும் ஒரு விஷயம் மருத்துவமனையின் சுத்தம்.
நுழைவாயில் தொடங்கி வளாகத்தின் பகுதிகள் முழுவதும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதை உணர முடிகிறது. அரசு மருத்துவமனைகள் அழுக்கானது என்ற பொதுவான நம்பிக்கைகளுக்கு இங்கே இடம் இல்லை. மருந்து வாசனைகளோ, பினாயில் வாசனைகளோ இல்லை. உள்நோயாளிகளுக்கான கழிவறைகள், குளியல் அறைகளிலும் அத்தனை சுத்தம். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதிலும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். நோயாளியுடன் ஒரே ஒரு அட்டெண்டருக்கு மட்டுமே அனுமதி என்பதும் கண்டிப்புடன் இங்கு பின்பற்றப்படுகிறது.
மருத்துவமனை தொடர்பு அதிகாரியான டாக்டர் ஆனந்தகுமார், அதன் சிறப்புகள் பற்றி நம்மிடம் விவரித்தார். ‘‘அதிநவீன சிகிச்சைகள் கொண்டதாக மட்டும் இல்லாமல், ஒரு முன் உதாரண கனவு மருத்துவமனையாக, ஒரு நட்சத்திர விடுதியைப் போல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அதை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் தி.மு.க ஆட்சியின்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இதன் திறப்பு விழாவும் நடைபெற்றது. பின்னர் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்டடத்தை 21.02.2014 அன்று அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி திறந்து வைத்தார். இந்த வளாகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு முன், உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்து இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் உயர்தரக் கருவிகளையும் குறித்து ஆய்வு நடத்தப்பட்ட பின்னர்தான் இந்த மருத்துவமனை துவங்கப்பட்டது.
இம்மருத்துவமனையில் நரம்பு மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை பிரிவு, இதய மற்றும் இதய அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தக்குழாய் சிகிச்சை பிரிவு, ஆர்த்ரோஸ்கோபி மற்றும் ஸ்கேன் பிரிவு ஸ்தீரியோடக்ஸிஸ் (மண்டையோட்டில் துளை போட்டு மூளையில் உள்ள கட்டிகளை அகற்றுவது) பிரிவு, ஆஞ்சியோபிளாஸ்டிக் கார்டியாக் சிகிச்சை பிரிவு, மூளை ரத்தநாளங்கள் பாதிப்பு சிகிச்சை பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சை பிரிவு, மேலும் இம்மருத்துவமனையினுள் புதிதாக அம்மா முழு உடல் பரிசோதனை மையம், மகளிர் நல மையம், கை – முகம் சீரமைப்பு சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம் உட்பட 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் உள்ளன.
113 மருத்துவர்கள், 175 செவிலியர்கள், 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளார்கள். ஒரு மாதத்திற்கு இந்த மருத்துவமனையில் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. உள்நோயாளிகளுக்கான 6 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டு, நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்றவாறு உணவு வழங்கப்படுகிறது. நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்றவர்களுக்கு மருத்துவர் ஆலோசனையின் படியும் உணவியல் நிபுணர் மேற்பார்வையின் படியும் உணவுகள் வழங்கப்படுகிறது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இதயமாற்று அறுவை சிகிச்சை மற்றும் வால்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாஸ்குலார் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், எம்.சி.ஐ ஒப்புதல் அளித்து முதுகலைப்படிப்பிற்கு மருத்துவச் சீட்டுகள் இம்மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையாலும், தனியார் மருத்துவமனைகளாலும் காப்பாற்ற முடியாத நிலையில் இங்கு வந்த நோயாளிகளையும் உயர்தர சிகிச்சையின் மூலம் சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றியுள்ளோம்.
இம்மருத்துவமனையின் சிறப்பான மருத்துவம் இன்டெர்வென்ஷனல் ரேடியாலஜி. இச்சிகிச்சை முறையின் மூலம் தொடையில் துளைபோட்டு, ஆரம்பகட்ட நிலை நோய்களை அறுவைசிகிச்சை இல்லாமல் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். Arthroscopy சிகிச்சையில் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்து இந்தியாவிலேயே 3-வது சிறந்த அரசு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் ஸ்கேன் பிரிவில் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவி வருகிறோம். வழக்கமாக அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்ய டோக்கன் வழங்கப்பட்டு சிகிச்சை நடத்தப்படும். ஆனால், இங்கு வசதிகள் அதிகமாக உள்ளதால் டோக்கன் ஏதுமின்றி சிகிச்சை செய்யப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் ‘சிறுநீரகக் கல் மற்றும் அறுவை சிகிச்சை’ மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் அடுத்தகட்டமாக உயர்தர சிகிச்சைகள் வழங்குவதற்கு யோசனைகள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது வரை ஒருநாளில் 200 முதல் 500 வெளிநோயாளிகளும் 250 முதல் 300 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். யோகா மற்றும் நேச்சுரோபதி’ சிகிச்சையில் தினமும் 40 நோயாளிகள் பயன்பெறுகின்றனர்’’
என்கிறார். மருத்துவமனையின் உணவியல் நிபுணரான மீனாட்சி பஜாஜ், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் பற்றிக் கூறுகிறார்.
‘‘இங்குள்ள உள்நோயாளிகளுக்கு பொதுவான உணவு என்று எல்லோருக்கும் தருவதில்லை. இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் நோய்களை பொறுத்தும், உடல் நிலைபொறுத்தும் அவர்களுக்கு தேவையான உணவுகள் தயார் செய்து தரப்படுகிறது. முக்கியமாக இங்கு தயாராகும் உணவுகள் தரமாக தயாரிக்கப்படுகிறது. நோயாளிகளை தரம் பிரித்து ஊட்டச்சத்து வாரியாக அவர்களுக்கு உணவு தரப்படுகிறது. உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய், பழங்கள் எல்லாம் தரமானவை. உணவு தயாரிக்கும் முதல் அந்த உணவு பாதுகாப்பாக உள்நோயாளிகளுக்கு கொடுக்கும் வரை சுத்தம் சுகாதாரம் கடைபிடிக்கப்படுகிறது.
அதுபோல தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டு நோயாளியின் படுக்கைக்கே கொண்டு கொடுக்கப்படுகிறது. இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் என தனித்தனியாக உணவு தயாரிக்கப்பட்டு கொடுக்கும் போது அவர்கள் நோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்தோடு சேர்த்து இந்த உணவும் சேர்ந்து நோயிலிருந்து அவர்களை சீக்கிரத்தில் மீட்டெடுக்கச் செய்கிறது குறிப்பாக, அவர்களுக்கு மூன்று வேளை உணவும் அவர்களின் உடலுக்கு தேவையான கலோரிகள் அடிப்படையிலும் ஊட்டச்சத்து அடிப்படையிலும் வழங்கப்படுகிறது’’ என்கிறார்.
ரேடியாலஜி துறையின் அறுவை சிகிச்சை நிபுணரான பெரிய கருப்பன் நம்மிடம் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘மூளையில் ரத்தக்குழாய் பாதிப்பு, மூளை கட்டிகள், மூளை கேன்சர் போன்ற பாதிப்புகளுக்கு முன்புபோல் தலையை உடைத்து இந்த சிகிச்கசை அளிக்கப்படாமல் ஆஞ்சியோகிராம் முறையில் எளிதாக சிகிச்சைஅளிக்க கூடிய அதிநவீன கருவி இம்மருத்துவமனையில் உள்ளது. இதன் மூலம் மூளையில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அவருக்கு தொடை வழியாக சிறு துளை மூலம் டியூப் நுண்கருவி செலுத்தி எளிதாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் முலம் நோயாளிகள் மூன்றே நாட்களுக்குள் சிகிச்சையை முடித்துக் கொண்டு இயல்பான வாழ்க்கை முறைக்கு திரும்பலாம். இதுபோன்ற உயிர்காக்கும் சிகிச்சைகள் இலவசமாகவும், எளிதாகவும் அதிநவீன கருவிகள் கொண்டு செய்கிறோம். இந்த மருத்துவமனையில் மூளை சம்பந்தபட்ட சிகிச்சைகளுக்காக 7 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் மாதத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்கிறோம்.
10க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.’’‘ரத்த பரிசோதனை மையத்தில் நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதி நவீன கருவிகள் கொண்டு சோதனை செய்யப்படுவதால் அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் முடிவுகள் தரப்படுகிறது’’ என்கிறார் லேப் டெக்னீஷியனான சாய் மகேஸ்வரி.
இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மனோகரன். ‘பொதுவாக அரசு மருத்துவமனைகளில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் கஷ்டம். ஆனால், எங்களுடைய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி நாங்கள் செய்து வருகிறோம். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. ஒருவரின் இதயம் தானமாகப் பெறப்படும்போது, அரசு பொது மருத்துவமனைகளுக்குத்தான் அதை வழங்குவதில் முன்னுரிமை தரப்படும். அதன் பின்னர்தான், பிற மருத்துவமனைகள் கவனத்தில் கொள்ளப்படும்.
மந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில், முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை 2017-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் செய்யப்பட்டது. இதுவரை நாங்கள் மேற்கொண்ட இதய மாற்று அறுவை சிகிச்சையில், சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 11 வயதான பிரவீனுக்கு செய்யப்பட்ட ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட்தான் மிகவும் சவாலாக இருந்தது. இச்சிறுவனின் இதயம் மிகவும் வீங்கி காணப்பட்டது. 23 வயது இளைஞரிடம் இருந்து நல்ல நிலையில் உள்ள தானமாகப் பெற்ற ஹார்ட்டை, இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அனஸ்தீஷியா ஸ்பெஷலிஸ்ட், நர்ஸ் மற்றும் வார்ட் பாய் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாகப் பொருத்தினோம்.
தற்போது பிரவீன் முழு ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளான். மாதத்துக்கு ஒரு முறை அச்சிறுவனை, மருத்துவமனைக்கு வரவழைத்து இதய செயல்பாடு, உடல் நலம் என எல்லாவற்றையும் பரிசோதித்து, தேவையான மருந்து, மாத்திரைகளை இலவசமாக கொடுத்து வருகிறோம். அடுத்த கட்டமாக, நாங்கள் ஒரே சமயத்தில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் தயாராகி வருகிறோம்’’. திருவள்ளூரைச் சேர்ந்த புறநோயாளி சின்னப்பொண்ணு, தன்னுடைய மருத்துவ சிகிச்சை பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘எனக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்து திருவல்லிக்கேணி கோஷா(கஸ்தூர்பா காந்தி) மருத்துவமனையில் இருந்து என்னை இங்கு அனுப்பி வைத்தார்கள். இங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள் புற்றுநோய் சாதாரண நிலையில் இருக்கிறது. எனவே, அறுவைசிகிச்சை தேவையில்லை. நீங்கள் வீட்டிலிருந்து கொண்டே இங்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்கள். அதன் படி நான் தினமும் வீட்டிலிருந்தே வந்து கீமோ தெரபி சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறேன். இங்கு உள்ள மருத்துவர்கள் அன்பாகவும் நம்பிக்கையாகவும்
பேசுகிறார்கள். அரசாங்க மருத்துவமனை போலவே இல்லை. நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.’’குடும்ப நல மருத்துவர் ஜீனத் பேகம், பரிசோதனை நிலையம் செயல்படும் முறை பற்றி விளக்குகிறார். ‘‘உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து இந்த அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் பணியாற்றி வருகிறேன். இங்கு கோல்ட், டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், முழு ரத்த பரிசோதனை(சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு), சிறுநீரகம், கல்லீரல் ரத்த பரிசோதனை,
இசிஜி, டிஜிட்டல் எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்டு(வயிறு), கர்ப்பப்பை வாய் பரிசோதனை(Pap Smear), எக்கோ கார்டியோகிராம், தைராய்டு மற்றும் ப்ராஸ்டேட் பரிசோதனைகள், டிஜிட்டல் மேமோகிராம், டெக்ஸா ஸ்கேன், எலும்பின் உறுதித்தன்மை (வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ், பிடிஎச்(Para Thyroid Hormone) எனப் பலவிதமான பரிசோதனைகள் வல்லுனர்களால் சிறப்பாக செய்யப்படுகின்றன.
இதற்காக, ரூ.1000 முதல் ரூ.3000 வரை கட்டணமாக செலுத்த வேண்டும். வெளியூர்களில் நிறைய பேர் வருவதால் மாலை 3 மணிக்குள் மெடிக்கல் ரிப்போர்ட்டை தயார் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கிறோம். இதற்காக Slims என்ற சாப்ஃட்வேர் பயன்படுத்துகிறோம். இதன்மூலம், மெடிக்கல் ரிப்போர்ட் மிஷினில் இருந்து நேரடியாக கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு, உடனடியாக பிரின்ட்-அவுட் கொடுக்கப்படுகிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது. மெடிக்கல் ரிப்போர்ட் அடிப்படையில், யாருக்காவது உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டால், அவர் குணமாகும் வரை, உணவு, மருந்து, மாத்திரைகளை இலவசமாக கொடுத்து சிகிச்சை தருகிறோம்’’ என்கிறார்.
Average Rating