கூந்தல் உதிர்கிறதா? (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 32 Second

பல பேர் தலையில் எண்ணெய் தேய்ப்பதே இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை. இதனால் சிறு வயதிலே முடி உதிர்வு ஏற்பட்டு இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று அதிகம் செலவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய்களைக் கொண்டு எளிமையான முறையில் கூந்தல் மற்றும் உடல் நலத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து கூறுகிறார் சித்த மருத்துவரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் துணை மருத்துவ கண்காணிப்பாளருமான ராதிகா மாதவன்.

“தலைமுடி என்பது ஒரு மனிதனின் தோற்றம் மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்தின் முக்கிய வெளிப்பாடு. ஒரு நாளைக்கு சராசரியாக 0.41 மிமீ வரை ஒரு முடிவளரும், 100-150 முடிகள் வரையில் உதிரும். தலை முடியில் க்யூட்டிக்கிள் என்கிற வெளி அடுக்கு, கார்ட்டெக்ஸ் என்கிற நடுப்பகுதி,மெடுலா என்கிற உள்ளடுக்கு என மூன்று அடுக்குகள் உள்ளன. இதில் க்யூட்டிக்கிள் என்பது தலை முடியின் வெளிப்புறத் தோற்றம். இது தலைமுடியின் நிறம், பளபளப்பு, வடிவம் போன்றவற்றை பிரதிபலிக்கும்.

நாம் பாரம்பரியமாக தலை முடிக்கு உபயோகப்படுத்தி வந்த நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும், நெடுங்காலமாக பின்பற்றிய எண்ணெய் குளியல் முறைகளையும் தவிர்த்து சில ஒவ்வாத ரசாயனங்களை தலைக்கு பயன்படுத்துவதாலும், கடினமான அல்லது கூர்மையான சீப்பு முதலிய உபகரணங்களை அடிக்கடி உபயோகிப்பதாலும், தூய்மையின்றி பிறர் பயன்படுத்திய சீப்புகளை பயன்படுத்துவதாலும் காற்று மாசு போன்றவற்றிலிருந்து கூந்தலை சரியாக பராமரிக்காததாலும் அதிகமாக பாதிப்படையும் பகுதி இந்த க்யூட்டிக்கிள்தான்.

நாம் தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்ததும், சித்த மருத்துவத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதுமான தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கொண்டு முடியை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை காணலாம்.தேங்காய் எண்ணெயில் உள்ள ட்ரைகிளசரைடு எனும் எண்ணெய் தன்மை உள்ள கொழுப்புச் சத்து “மெக்கானிக்கல் டேமேஜ்” என்று சொல்லக்கூடிய முடியின் கட்டமைப்பு பாதிப்பை சரிசெய்ய உதவும். கார்ட்டெக்ஸ் என்னும் முடியின் நடுப்பகுதிதான் கெராட்டின் என்கிற புரோட்டின் நிறைந்த பகுதி.

இன்று பலரும் தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், ஸ்மூத்தனிங் முதலியவற்றை செய்து கொள்கிறார்கள். இதனால் வெப்பம் தலைமுடியில் படும்போது புரோட்டின் பாதிப்படைகிறது. தேங்காய் எண்ணெயில் லாரிக் ஆசிட் உள்ளதால் புரோட்டினை அதிகம் உள் இழுத்து தலைமுடியின் புரதக் குறைபாட்டை சரிசெய்து கூந்தல் கட்டமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இந்த எண்ணெய் நீர்ச்சத்து அதிகமாக உட்புகாமலும் பாதுகாக்கிறது. உப்புத் தண்ணீரால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்னையையும் தேங்காய் எண்ணெயில் உள்ள ட்ரைகிளசரைடு சரி செய்யும்.

மேலும் இயற்கையாக தேங்காய் எண்ணெய்க்கு நோய் எதிர்ப்புத் திறன் உண்டு. அதற்கு வைரஸ் தடுப்பு, பாக்டீரியா தடுப்பு, பேன் தடுப்பு முதலிய தன்மைகள் இருப்பதால் தலைமுடியை பொடுகு மற்றும் பல்வேறு பாதிப்புகளிலிருந்து காக்கிறது.தேங்காய் எண்ணெயை தலையின் அனைத்து பகுதிகளின் மயிர்க்கால்களிலும் பரவும் விதமாக தேய்க்க வேண்டும். இதனால் தேங்காய் எண்ணெயில் உள்ள புரதச்சத்து தலைமுடியில் முறையாக சேர்கிறது. தலைமுடிக்கு மூன்று சுழற்சி முறை இருக்கிறது.

1. அனாஜென் – இது வளர்ச்சி பருவம்.
2. கெட்டாஜென் – முடியின் நுண் அறைகள் மறு உற்பத்தியாகும் பருவம்.
3. டெலாஜென் – உதிர்வு பருவம்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற நம் பாரம்பரிய எண்ணெய்களை பயன்படுத்தும்போது அனாஜென் பருவத்தை தக்க வைத்து முடி உதிராமல் பாதுகாக்கும். வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. தேங்காய் எண்ணெயை தேங்காய்ப்பாலில் இருந்து தயாரிப்பது ஒருமுறை. கொப்பரைத் தேங்காய் மூலமாக செக்கிலிருந்து தயாரிப்பது மற்றொரு முறை. கொப்பரையுடன் கறிவேப்பிலை, வெல்லம் போன்றவற்றை சேர்த்து ஆட்டுவதால் நெடுநாட்கள் கெடாமலும் வாசனையுடனும் இருக்கும்.

திலம் என்ற சொல் எள்ளை குறிக்கும். தைலம் என்கிற சொல் திலத்திலிருந்து பிறந்தது. சித்த மருத்துவத்தில் எள் மற்றும் எள் எண்ணெயின் மருத்துவப்பயன் அளப்பரியது. நல்லெண்ணெய் பல்வேறு கூந்தல் தைலங்களில் சேர்க்கப்படுவது மட்டும் இன்றி எண் ணெய்க் குளியலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது கூந்தலின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு இல்லாமல் புத்துணர்ச்சியும் கிடைக்கும், விழிகளுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடல் வலிமை முதலியவற்றையும் தருகிறது.

நல்லெண்ணெயில் விட்டமின் ஈ, விட்டமின் பி, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. குறிப்பாக ஆண்களுக்கு ‘ஆன்ட்ரோஜென் அலோபேசியா’ என்று சொல்லக்கூடிய முடி உதிர்வு பிரச்னையை நல்லெண்ணெய் தடுக்கும். இயற்கையாகவே புறஊதாக் கதிரிலிருந்து 30 சதவீதம் வரை முடியை பாதுகாக்கும். வாதத்தை தன்னிலைப்படுத்தும்.மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சலால் ஏற்படும் முடிஉதிர்வு பிரச்னையை நல்லெண்ணெயை தலையில் நன்றாக மர்த்தனம் (மசாஜ்) செய்து குளிப்பது மூலம் தீர்க்கலாம்.

இதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.நல்லெண்ணெயில் மர்த்தனம் செய்து குளிப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டுவதோடு காது நோய், தலைவலி, தோல் தொடர்பான நோய்களும் தீரும். கூந்தல் மற்றும் சருமம் பளபளப்புடன்காணப்படும். எண்ணெய்க் குளியலுக்குப் பின் தலைக்கு சீகைக்காய் தேய்த்து குளிப்பதினால் தலையில் உள்ள தேவையற்ற எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி தலைமுடி பொலிவடையும்.வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் நலம். நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் இன்னும் சில இயற்கை மூலிகைகள் சேர்த்து மருத்துவரின் ஆலோசனையின்படி பயன்படுத்தினால் வேறு சில நோய்களின் காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறவர்களுக்கு இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் ராதிகா மாதவன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியானது அடுத்த ஆடியோ! இதை கேளுங்கள் யார் குற்றவாளி என்று தெரியும்!!(வீடியோ)
Next post ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!(அவ்வப்போது கிளாமர்)