தெஹ்ரான் உடன்படிக்கை!!( கட்டுரை)
துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், முத்தரப்பு உச்சிமாநாடொன்றை, இம்மாதம் 7ஆம் திகதியன்று, தெஹ்ரானில் நடத்தினர். பல பார்வையாளர்களின் கருத்துப்படி, உச்சிமாநாட்டின் முடிவுகள், சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் விதியை, குறிப்பாக போராளிக் குழுக்களைத் தகர்த்தல் தொடர்பாகத் தீர்மானிக்க ஏதுவாய் இருந்தது எனக் கருதப்படுகின்றது. இது டமாஸ்கஸ் தொடர்பில் இந்நாடுகள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், அதனைத் தொடர்ந்து டமாஸ்கஸிலிருந்து ஆயுததாரிகள் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்தே, இட்லிப் நகர் தொடர்பான மாநாடு நடைபெற்றுள்ளது.
2017இல் இருந்து, ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையே, பரந்த ஒருங்கிணைந்த, சிரியா தொடர்பாக இணைந்து செயற்படும் ஒரு கூட்டமைப்பு, அங்காரா உடன்படிக்கை மூலம் எட்டப்பட்டிருந்தது. இவ்வுடன்படிக்கை, சிரியாவில் பயங்கரவாதத்துக்கும் ஏனைய போராளிக் குழுக்களுக்கு எதிராகச் செயற்படவும் அது தொடர்பான நெருக்கடிக் குறைப்பு பற்றிய முக்கிய முடிவுகளுடன், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது. அதன் பின்னரான தெஹ்ரானின் உச்சிமாநாடு, சிரிய இராணுவம் டமாஸ்கஸில் இராணுவச் செயற்பாட்டுக்கு தயாராக இருக்கும்போது நடைபெற்றிருந்ததுடன், அச்சந்தர்ப்பத்திலேயே மேற்கத்தேய அரசாங்கங்கள், சிரியாவில் அவற்றின் சொந்த நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன.
பனிப்போர் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, ஐக்கிய அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் (அப்போது சோவியத் ஒன்றியம்) ஏற்பட்ட முறுகல் நிலை, சிரிய உள்நாட்டு யுத்தத்தில் பாரிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. ஐ.அமெரிக்க, மேற்குலக நாடுகளின் ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் ஆயுதக்குழுவை முற்றாக அழித்தலும், ஜனநாயகப் பண்புகள் கொண்ட அரசு ஒன்றை சிரியாவில் அமைத்தல், அதன் மூலம் ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டைப் பதவியிலிருந்து நீக்குதல் என்பன கொள்கை எதிர்பார்ப்புகளாக இருக்கும் அதேவேளை, ஏனைய நாடுகள் இது தொடர்பில் வேறுபட்ட முன்னுரிமையையே அளிக்கின்றன. அகதிகள் பிரச்சினை, குர்திஸ் அரசாங்கம் அமைவது, சுன்னி – இஸ்லாமிய அமைப்புகளின் உள்நாட்டு ஊடுருவல்கள் தொடர்பான எச்சரிக்கைப் போக்கையே, துருக்கி கொண்டுள்ளது. ஈரானையும் சவூதி அரேபியாவையும் பொறுத்தவரை, குறித்த யுத்தமானது, தம்முள் யார் பிராந்திய வல்லரசு என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதுடன், ஷியா – சுன்னி அமைப்புகள் மத்தியில் கடுமையான பிரிவினவாதத்தைத் தூண்டவும், அவற்றின் வெளிவிவகாரக் கொள்கைகள் அமைகின்றனவென்றே கருதப்படுகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்யாவினது நேரடியானதும், அரசியல், இராணுவ, புலனாய்வு சார்ந்த முக்கியத்துவம், சிரிய அரசாங்கத்துடனான உறவுகள், குறித்த யுத்தத்தில் ஏனைய நாடுகள் தலையீடு செய்ய முடியாத ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளன. இது, நிறப் புரட்சியை தோற்கடிக்கவேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நோக்கும், பிராந்தியத்தில் சிரியா போன்ற நட்பு நாட்டை இழக்க முடியாது என்னும் தார்ப்பரியமும், குறித்த யுத்தம் எவ்வித முடிவுமின்றித் தொடர்வதற்கு வழிசமைக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த யுத்தமானது பனிப்போர் வீழ்ச்சியின் பின்னர் ரஷ்யாவின் இராணுவப் பலத்தை உலகுக்குக் காட்டும் மற்றுமொரு சந்தர்ப்பமாக அமைந்தமை, குறித்த யுத்தத்தில் ரஷ்யா வன்போக்கைக் கையாள்வதற்குக் காரணமாக அமைகின்றது.
இந்நிலையிலேயே, சிரிய விவகார ஆய்வாளர்களும் பார்வையாளர்களும், இந்த அங்காரா பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளை நம்புகின்றனர். இது குறித்த மூன்று நாடுகளும் இணைந்து எடுக்கும் முடிவுகள், சிரிய இராணுவ நடவடிக்கையின் பலனாக இட்லிப் பூரணமாக சிரியாவின் ஆட்சிக்குள் வரவும், அதனைத் தொடந்து டமாஸ்கஸ், அதனை அண்டிய முழுப் பிராந்தியத்தையும் சிரிய அரசாங்கம் ஆதிக்கம் செலுத்துவதை வலியுறுத்தும் எனவும் நம்புகின்றனர். ரஷ்யர்கள், தஹ்ரிர் அல்-ஷாமின் வீழ்ச்சியை தமது நேரடியான இராணுவத் தலையீட்டால் தீர்மானித்துள்ளனர். இவற்றுக்கிடையில் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதை, துருக்கி வலியுறுத்துகின்றது. அத்தோடு, தஹ்ரிர் அல் ஷாம் குழுவில் போர் நிறுத்தம், சமாதான முன்னெடுப்புகளுக்கு வழிவகுக்கும் காரணிகளை, அது குறிப்பாக ஆராய்கின்றது.
சிரியாவும் அதன் நட்பு நாடுகளும், டமாஸ்கஸ், இட்லிப் மீதான படையெடுப்பை மேற்கொள்கின்றமை, உண்மையில், இட்லிப்பில் சிரிய நெருக்கடி இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என்பதையே காட்டுகின்றது. மறுமுனையில் ஐ.அமெரிக்கக் கடற்படை, ரஷ்ய இராணுவ அணி ஆகிய இரண்டு பெரிய வல்லரசுகள், ஒரு பிராந்திய அல்லது உலகளாவிய இராணுவ மோதலுக்கு ஒரு தீர்வு காண எத்தனிக்கின்றமை, தமது சொந்த அரசியல் சார்ந்ததாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஐ.அமெரிக்காவின் ரஷ்யத் தலையீடு, ஈரானுக்கும் சிரியாவுக்கும் எதிரான தொடர்ச்சியான கண்டனங்களுக்குக் காரணம், இஸ்ரேலும் சவூதி அரேபியாவும், இந்த நிலைப்பாட்டை எடுக்க ஐ.அமெரிக்காவுக்கு அழுத்தம் வழங்கியமையே ஆகும், ஏனென்றால் ரஷ்யாவும் ஈரானும் சிரியாவும் குறித்த பிராந்தியத்தில் மேற்கத்தேய வல்லரசைத் தவிர்த்து, பிராந்திய போரொன்றில் வெற்றிபெற, இஸ்ரேலும் சவூதி அரேபியாவும் விரும்பவில்லை. மேலும், சிரியாவில் ஏற்படும் வெற்றி, ரஷ்யாவை பூகோளவியல் அரசியலில் ஐ.அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசாக்கும் என்பதையும் மேற்கத்தேய அரசாங்கங்கள் விரும்பவில்லை. இது தொடர்பிலேயே, ஐ.அமெரிக்க வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனின், டெல் அவிவ்-க்கான பயணத்தின்போது, ஐ.அமெரிக்காவின் கவனம் காணப்பட்டிருந்ததுடன், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அவரது சந்திப்பில் ஓர் உடன்பாடும் எட்டப்பட்டிருந்தது.
இவற்றின் மத்தியிலேயே தெஹ்ரான் உச்சிமாநாடு, வடமேற்கு சிரியாவில் கூட்டு நடவடிக்கையில் ஈரான், ரஷ்யா, துருக்கியத் தலைவர்கள் இடையே ஓர் உடன்படிக்கைக்கு வழிவகுத்துள்ளமை, குறித்த பிராந்தியத்தில் உலக வல்லரசுகளின் போட்டி நிலைமை, விரைவில் தணியப்போவதில்லை என்பதையே காட்டுகின்றது.
Average Rating