கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களால் நமக்குத் தற்காலத்தில் பல புதிய டயட் முறைகள் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மத்தியதரை டயட். ஆங்கிலத்தில் இதை Mediterranean diet என்பார்கள். யெஸ், அதேதான். மத்தியதரைக் கடல் நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளில் உருவான டயட்தான் இது. அங்கிருந்து ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் அமெரிக்க கண்டத்துக்கும் பரவி அப்படியே நம் நாட்டுக்கும் தற்போது வந்துள்ளது. பல ஆண்டுகளாகவே இது அந்த நாடுகளில் வழக்கில் இருந்திருந்தாலும் சென்ற நூற்றாண்டின் பாதியில்தான் திடீரென மீண்டும் புகழ்பெறத் தொடங்கியது.
சரி இந்த டயட்டில் என்ன ஸ்பெஷல். ஆலிவ் ஆயில்தான் இந்த டயட்டின் ஹீரோ. கொஞ்சம் தாராளமாகவே இதில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அது போலவே, கனோலா ஆயிலுக்கும் முக்கிய இடம் உள்ளது. அசைவ உணவுகளில் மீன் மட்டும் கொஞ்சம் அளவாக வாரம் இருமுறை வரை எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு. பிற இறைச்சிகளுக்கு குறிப்பாக சிவப்பு இறைச்சிகளுக்கு மாதம் இரண்டு முறைதான் அனுமதி. பால் பொருட்கள் சாப்பிடலாம். ஆனால் அதுவும் அளவாகவே இருக்க வேண்டும். சீஸுக்குப் பதிலாகத்தான் ஆலிவ் ஆயில். எனவே, அதைத் தவிர்க்க வேண்டும்., மிக முக்கியமாக காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ்கள்தான் அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
உப்பு மற்றும் சர்க்கரையை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக கீரைகள், மசாலா பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை கட்டாயமாக எடுக்க வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். தினசரி அரை மணி நேரம் நடைப் பயிற்சி. அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த டயட் எடைக்குறைப்புக்கான சிறப்பு டயட் அல்ல. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மிகச் சிறந்தது. இந்த டயட் இருப்பவர்களுக்கு இதய நோய்களுக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட ஆயுள் உத்தரவாதம் உண்டு. உப்பு, சர்க்கரை குறைவாகப் பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களும் நெருங்காது என்கிறார்கள்.
உணவு விதி 11
‘நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு’ என்று ஒரு பழமொழி உள்ளது. இது ஒரு முக்கியமான உணவு விதி. நொறுங்கத் தின்றால் என்பதன் பொருள் அளவுக்கு அதிகமாக என்பது இல்லை. அப்படி உண்டால் நூறு வருடங்கள் அல்ல அதில் பாதிகூட கிடைக்காது. எந்த உணவை உண்டாலும் நன்கு மென்று உண்ண வேண்டும் என்பதே அந்த முதுமொழியின் பொருள். ஒரு வாய் உணவை சராசரியாக 15-30 விநாடிகள் வரை மெல்ல வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். செரிமானம் என்ற செயல்பாடு மெல்லுதலில் இருந்தே தொடங்குகிறது. நீங்கள் அப்படியே விழுங்கினால் வயிற்றுக்குத்தான் கூடுதல் வேலை. எனவே, அரக்கப் பறக்க உண்ணாமல் நன்றாக மென்று விழுங்குங்கள்.
எக்ஸ்பர்ட் விசிட்
நவீன வாழ்க்கையின் தகவல் தொடர்பு பெருக்கம் உருவாக்கிய விஷயங்களில் முக்கியமானது டயட் மாற்றங்கள். உலகம் முழுதும் இருந்து பல்வேறு விதமான டயட் முறைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்க அது என்னவென்று தெரியாமலே பலரும்பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது சரியா என்று விளக்குகிறார் இந்தியாவின் புகழ் பெற்ற உணவியல் நிபுணர் சுபி ஹுசைன்.வெயிட் லாஸுக்கு தற்போது பலவகையான டயட் முறைகள் உள்ளன. குறிப்பாக, வணிகரீதியான டயட் ஆலோசனைகள் இப்போது பல தரப்பினராலும் சொல்லப்படுகின்றன. வெயிட் லாஸ் டயட் என்பது உங்கள் உடலின் சத்துத் தேவையைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். இப்படியான, வணிக டயட்கள் எல்லோருக்கும் பொதுவானவை. உங்கள் உடலின் தனித்துவமான சத்துமானத் தேவையை அவற்றால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, உங்கள் உடல்வாகு எப்படி உள்ளது? உங்கள் எடை குறைப்பு திட்டம் என்ன? எப்படியான சத்து தேவை என்பதற்கு ஏற்ப டயட்டைத் திட்டமிடுங்கள்.
அதே போல, லோ கலோரி டயட் இருக்கும்போது கவனமாக இருங்கள். உங்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான ஆற்றலை வழங்கச் சாத்தியமான டயட்டை மட்டுமே மேற்கொள்ளுங்கள். தினசரி வேலை செய்வதற்கு எனர்ஜி இல்லாதபட்சத்தில் அந்த டயட் நீங்கள் நினைப்பதற்கு மாறான விளைவுகளை உருவாக்கலாம்.தினசரி தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்ளாதபோது, உடலில் ஏற்படும் சத்துமானக் குறைவால் உடல் பாதிப்படையத் தொடங்குகிறது. அதை முதலில் வெளிப்படுத்துவது உங்கள் சருமம்தான். டயட் இருக்கிறேன் பேர்வழி என்று நோயாளி போன்ற தோற்றத்துக்குச் சென்றுவிடாதீர்கள். சருமப் பொலிவை மங்கச் செய்யும் டயட் உங்கள் இயற்கையான பொலிவை பாதிப்பதாகவே இருக்கும். சருமம் இதனால் தன்னுடைய வலுவை இழக்கும். திடீரென ஒரேயடியாக நீங்கள் கணிசமான எடையை இழந்தால் உங்கள் சருமம் கருமையாகும். குறிப்பாக, இது உங்கள் கண்களைச் சுற்றிலும் நன்கு தெரியும்.
சில வகை டயட்களால் ஏற்படும் முதல் உடலியல் பிரச்சனை என்பது சத்து மானக் குறைபாடுதான். ஏதேனும் ஒருவகை சத்து உடலில் சேர்வதைத் தடுக்கும் ஆரோக்கியமற்ற டயட் முறை சத்துக்குறைபாட்டைத்தான் முதலில் உருவாக்கும். பிற்பாடு இது சில நோய்களுக்கும் அடித்தளமிடும்.உடனடியாக எடை குறைய வேண்டும் என்று சிலவகையான டயட்களை மேற்கொள்ளும்போது அப்போதைக்கு எடை நன்கு குறைந்தாலும் அந்த டயட்டில் இருந்து நீங்கள் வெளியேறும்போது முன்பு இருந்ததைவிடவும் எடை அதிகமாகிவிட வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த டயட் இருந்தாலும் தகுந்த உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி உங்களுக்கு அது ஏற்றதா என்பதைப் பரிசோதியுங்கள்.
மீனில் பார்மாலின் கலப்படம்
சமீபத்தில் நாட்டையே அதிரவைத்திருக்கும் கலப்படங்களில் இதுதான் டாப். மத்தியதர வர்க்கத்தினருக்கு மீன் தான் வார விடுமுறை விருந்தாய் இருந்து வந்தது. இப்போது அதிலும் பார்மாலின் என்ற வேதிப் பொருள் கலப்படம் உள்ளது என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள். பார்மாலின் என்பது உடலில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களைப் பரவாமல் கட்டுப்படுத்தும் வேதிப்பொருள். மருத்துவக் காரணங்களுக்காகவும் இறந்த பின் உடலை பதப்படுத்தும் எம்பால்மிங் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த பார்மாலினை மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக தெளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. செரிமானக் கோளாறுகளில் தொடங்கி குடல் புற்றுநோய் வரை பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நஞ்சு இது. பார்மாலின் கலப்பை பரிசோதனைக்கூடங்களில் வைத்துதான் கண்டறிய முடியும். வீட்டில் மீன் வாங்கும்போது ஒரு துண்டினை பூனைக்குப் போட்டுப் பார்க்கலாம். பார்மாலின் கலப்பு இருந்தால் பூனை அதைத் தீண்டாது என்கிறார்கள்.
தேன்… தேன்… தேன்…
ஆதிகாலம் முதலே இரண்டு உயிர்களுக்குத் தேன் மிகவும் தேவையான உணவாய் இருந்து வருகிறது. ஒன்று குரங்கு; இன்னொன்று கரடி. அந்தக் குரங்கு இப்போது மனிதனாகிவிட்டது. அதனால், தேனில் தொடங்கிய இனிப்புக்கான தேடல் ஸ்வீட் சிரப்பில் வந்து நிற்கிறது. ஆனால், கரடியோ இன்றும் கைப்பிடித் தேனுக்காக காடு, மலை எல்லாம் தேடி அலைந்துகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் நாமும் ‘தேன்… தேன்… தேன் உனை தேடி அலைந்தேன்’ என்று விஜயைத் தேடும் திரிஷா போல் தேனுக்காகத் தேடித் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தோம். விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலங்களில் தேன்தான் மனிதனின் அடிப்படை உணவுகளில் ஒன்று. பிற்பாடு கோதுமையை உடைத்து, கோழி முட்டை அல்லது வாத்து முட்டையுடன் தேனைக் கலந்து உண்டு வந்திருக்கிறான். இனிப்பான பழங்களில் தொடங்கி நெருப்பில் வாட்டிய இறைச்சித் துண்டுகள் வரை சகலத்தையும் தேனில் குழைத்தும் ஊறவைத்தும் மாய்ந்து மாய்ந்து உண்டிருக்கிறார்கள் ஆதி மனிதர்கள்.
Average Rating