இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்!! (மகளிர் பக்கம்)
மனிதர்களின் பேராசையால் இன்று அலைவுறுகின்றன யானைகள். யானை என்றாலே பார்க்கும் அனைவருக்கும் ஒரு குஷி தானாகப் பற்றிக் கொள்ளும். அதன் நீண்ட தும்பிக்கையும், மிகப் பெரிய கால்களும், அதன் உருவ அமைப்பும் பார்க்கவே பரவசம்தான். ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழி யானை குறித்து சொல்லப்பட்டாலும், மனிதர்களால் கழுத்தில் வலியக் கட்டப்பட்ட மணியோடு, யானை என்ற அந்த பிரம்மாண்ட விலங் கினை கோவில்களில் அடைத்து வைப்பதும், வீதிகளில் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுவதுமாக யானைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. இத்தனைக்கும் யானைகள் சமூகத்தில் ஒரு சாராரால் தெய்வமாக வணங்கப்படுகின்றன.
யானைகள் தனித்த சமூக வாழ்க்கை முறை கொண்ட விலங்குகள். யானைக் கூட்டத்தை பெண் யானைதான் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்லும்.அந்த வகையில் யானைகள் தாய்வழிச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவை. யானைகளுக்கு பொருத்தமான வாழ்விடம் காடுகளே. நாம் அவைகளை நம் தேவைகளுக்கு இஷ்டப்படி பயன் படுத்துகிறோம். அடிப்படையில் கூடி வாழும் விலங்குகளான யானைகளை தனிமைப்படுத்துவதே பெருந் தவறு.பொதுவாகக் காட்டில் பல்வேறு வகையான உணவு வகைகளை உண்டு வாழ்ந்த யானைகளுக்கு ஒரே மாதிரியான உணவைக் கொடுத்து பழக்கப்படுத்துவதே சித்ரவதைதான். இதில் யானைகளை இனப்பெருக்க காலத்தில் தனிமைப்படுத்துவதும் மிகப்பெரும் கொடுமை.
யானைகள் உணவிற்காகவும், உறைவிடத்திற்காகவும் காட்டில் மிகப்பெரிய வாழிடம் தேவைப்படும் விலங்கினம். அதற்கேற்ப அவை இடம் மாறிக் கொண்டே இருக்கும்.. குறிப்பாக டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை யானைகள் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கும், மூணாறில் இருந்து நீலகிரிக்கும் இடம் பெயரும் காலம். தென்தமிழகத்தில் இந்த 2 இடங்கள் உள்பட 20 யானைகள் இடம்பெயர்வு மையங்கள் உள்ளன.மேலும் காட்டில் வாழும்போது யானைகள் தமது கழிவுகளின் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகின்றன..
இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து காடுகள் பல்கிப் பெருகவும் காரணமாகிறது. 1980 வனப் பாதுகாப்பு சட்டத்தில் யானைகள் கடக்கும் வழித்தடத்தில் சாலைகளோ, வீடுகளோ அமைக்கக்கூடாது என்பது உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை எவரும் கடைபிடிப்பதில்லை, யானைகள் வழக்கமாக பயணிக்கும் பகுதியை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றை வனத்திற்குள் விரட்டவும், சரணாலயத்தில் கொண்டு விடவும் முயற்சி செய்கிறோம்.யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் வளர்ச்சிப் பணிகள், காடுகளில் அழிக்கப்படும் மரங்கள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு, தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
மனிதன்-யானை எதிர்கொள்ளல் குறித்து நாம் கவலையோடும் அக்கறை யோடும் விவாதிக்க வேண்டும். கூடவே கும்கி யானைகள் குறித்தும் எதிர்மறையான கருத்துக்களே அதிகம் உலவுகிறது. எனக்குத் தெரிந்து தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு யானை கொடூர வில்லனாக சித்தரிக்கப்பட்டது ‘கும்கி’ படத்தில்தான்.குழந்தைகளிடம் இத்திரைப்படம் அபாயமான உளவியல் தன்மையையே உருவாக்கியது. இதற்கு யானைகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட அந்தக் கால படங்களே பரவாயில்லை.நகரத்தில் திரியும், கோவில்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் யானைகள் காடுகளில் வாழ்ந்தால் எவ்வளவு சிறப்பு… சிந்திப்போம்!
Average Rating