அழகுக் குறிப்புகள்!!(மகளிர் பக்கம்)
அந்தக் காலங்களில் சமச்சீரான உணவு எடுத்துக்கொண்டு நல்ல உடல் உழைப்போடு ஆரோக்கியமாக இருந்தார்கள். சூழ்நிலையும் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது நம் சூழல் வேறு. கொஞ்ச தூரம் நடந்தாலே காற்று மாசினால் நம் சருமம் பாதிக்கப்படுகிறது. அதனால் நம் அழகைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும். அதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றிச் சொல்கிறார்
ப்யூட்டிஷியன் கீதா அசோக். “சிவப்பு நிறம் என்பதோ, வசீகரமாக இருப்பது மட்டுமோ அழகல்ல. ஆரோக்கியமாக இருப்பதுதான் உண்மையான அழகு. பளீரென்ற கண்கள், வெண்மையான பற்கள், பளபளக்கும் தோல் இதெல்லாம் முகப்பொலிவைக் கூட்டும். உடல்நலத்தோடு இருந்தாலே முகம் அழகாக இருக்கும். காரணம் முகம் தான் உடல்நலத்தின் கண்ணாடி. ஆரோக்கியமாக பராமரிக்கப்படும் முகம் அனைவரையும் கவரும். நமது அழகைப் பாதுகாப்பதில் உணவுப் பழக்கம், ஃலைப் ஸ்டைல் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேக்கப் எல்லாம் அடுத்தக்கட்டம் தான்.
அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே முழுவதுமாக தவிர்த்து விடுகின்றனர். உணவை தவிர்க்கும்போதோ, இவ்வாறு உணவு முறையில் மாற்றம் கொள்ளும்போதோ வயதான தோற்றம் உண்டாகலாம். இவர்கள் இந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை இரண்டு வருடங்கள் பின்பற்றினால் தலைமுடி கொட்டிப்போதல், கண்களில் குழி விழுதல், கண்களைச் சுற்றிக் கருவளையம், இளநரை போன்ற காரணங்களால் இருபது, இருபத்தி ஐந்து வயதிலேயே நாற்பது வயதைப் போல தோற்றம் அளிப்பார்கள். உடல் சுருக்கம் மற்றும் மார்பகம் தளர்ந்து போதல் போன்றவையும் ஏற்படலாம். அதனால் உணவைத் தவிர்ப்பதை விட்டு முறையான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்துள்ள சமச்சீர் உணவு, தண்ணீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள்.அதுபோல் தினமும் ஒரு ஆரஞ்சை சாப்பிட்டால் ப்யூட்டிஷியனிடம் செல்ல வேண்டாம். அதிலுள்ள வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தண்ணீர், சூரிய ஒளி, அழகு சாதனப்பொருட்களால் நம் உடம்பில் ஏற்படும் மாசுக்களை வெளியேற்றக் கூடிய எதிர்ப்புச் சக்தியைத் தரவல்லது.
வைட்டமின் ஏ, கே, டி போன்ற சத்துக்களையும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். ஜூஸ், இளநீர் இதெல்லாம் எடுத்துக் கொண்டாலும் தண்ணீர் தேவையான அளவு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ஜூஸ், இளநீர், பழரசங்கள் போன்றவை நம் உடலுக்குத்தேவையான எனர்ஜி கொடுக்கும். ஆனால் ஹைட்ரேஷனுக்கு (Hydration) தண்ணீர் அவசியம். தண்ணீர்தான்நம் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றக் கூடியத் தன்மை கொண்டது. நச்சுப்பொருட்கள் வெளியேறும் போது முகம் இயல்பாகவே பொலிவாக மாறும்.
சுத்தம்
அழகை பராமரிப்பதில் உணவை அடுத்து சுத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. நம் உடம்பில் 4 வாரங்களுக்கு ஒரு முறை பழைய செல்கள் இறந்து புது செல்கள் உற்பத்தியாகும். தலையில் நாள்தோறும் புது செல்கள் உருவாகும். உதிர்ந்த செல்களை நீக்கினால்தான் புது செல்கள் நன்கு வளர்ச்சிஅடையும். அதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது அவசியம். மண்டையோடு சுத்தமாக இல்லாமல் போனால் தலையில் பொடுகு அதிகரிக்கும். அதனால் முடி கொட்டும். பொடுகை சொறியும்போது முகத்தில் உதிர்ந்தால் சிலருக்கு முகத்தில் பொரி பொரியாக ஏற்படும். பொடுகினால் ஏற்படும் அந்த மாற்றம் முக அழகைக்கெடுக்கும். தலை சுத்தமாக இல்லாவிட்டால் முக அழகு பாதிக்கப்படும். தலைமுடி சுத்தத்தைப் பேணுவது போல் சருமத்தையும் பராமரிப்பதும் அவசியம்.
சருமப் பராமரிப்பு
அதற்கு நம் சருமம் எப்படிப்பட்டது என்று நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது எண்ணெய்ப் பசை கொண்ட சருமமா? உலர்ந்த சருமமா அல்லது சென்ஸிடிவ்வான சருமமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரும் அழகு சாதனப்பொருட்களோ, நம் தோழிகள் பயன்படுத்தும் அழகுப்பொருட்களோ நமக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சருமம் மாறுபடும். நம் சருமத்துக்குத் தகுந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதனால் நமது குடும்ப மருத்துவரிடமோ, ப்யூட்டிஷியன்களிடமோ சென்று நம் சருமம் எப்படிப்பட்டது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறை யாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். நம் சௌகரியம் தான். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம்.
கிளன்சிங்
காய்ச்சாத பால் எடுத்து அதனுடன் கிளிசரின் பத்து சொட்டு, எலுமிச்சைச் சாறு ஐந்து சொட்டு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகம், கழுத்து மற்றும் கைகள் என அழுந்தித் துடைக்க வேண்டும். இது ஓர் எளிமையான சிறந்த கிளன்சிங் முறை.
ஸ்க்ரப்
நன்கு பழுத்த பப்பாளிப்பழம் அல்லது அன்னாசிப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை மிக்ஸியில் விட்டு தண்ணீர் விடாமல் அரைத்து அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைப் பொடி, கால் ஸ்பூன் சர்க்கரை கலந்து அந்தக் கலவையை முகம், கழுத்து, கை போன்ற இடங்களில் வட்டவட்டமாகத் தேய்க்க வேண்டும். இதனால் நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. இதனை குளிப்பதற்கு முன்னால் நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டுப் பின்னர் குளிக்கலாம். பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் உள்ள என்ஸைம்கள் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டவை. வாரம் இரண்டு முறை இந்த ஸ்க்ரப்பை செய்து கொள்ளலாம்.
ஃபேஸ் பேக்
முகப்பொலிவைக் கூட்டுவதற்காக முகம் மற்றும் கழுத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக் போடலாம். வீட்டிலேயே எளிமையாக ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். அதற்கு முதலில் மேரிகோல்டு வாட்டர் தயாரிக்க வேண்டும்.
மேரி கோல்டு வாட்டர் தயாரிக்கும் முறை
மினரல் வாட்டர் -– 1 லிட்டர்
கிளிசரின் –- 30 மில்லி
சாமந்திப் பூ -– இரண்டு கை கொள்ளும் அளவு.
மினரல் வாட்டரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி அதில் சாமந்திப் பூவையும் கிளிசரினையும் போட்டு 24 மணி நேரத்திற்கு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் அந்த நீரை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் 15 நாட்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இரவில் படுக்கும்போது அந்த நீரை பஞ்சில் தொட்டு முகம், கழுத்துபோன்ற பகுதிகளை அழுந்தி துடைக்கலாம். இந்த வாட்டர் சிறந்த டோனராக செயல்படும். அடைப்பட்டிருக்கும் முகத்துவாரங்கள் திறந்து எண்ணெய் பசை மற்றும் அழுக்கு ஆகியவற்றை நீக்கும்.
மேரி கோல்டு வாட்டரைப் பயன்படுத்தி ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறை
அதி மதுரப்பொடி – அரை தேக்கரண்டி,
அரிசி மாவு – அரை தேக்கரண்டி, (ஜப்பானீஸ் டெக்னிக்),
சர்க்கரை – ஒரு சிட்டிகை,
லைம் ஆயில் (அரோமா ஆயில்) – 3 சொட்டுக்கள்,
ஜெர்ரேனியம்,ஆயில் (அரோமா ஆயில்) – 3 சொட்டுக்கள்.
இவை அனைத்தையும் மேரிகோல்டு வாட்டர் போட்டு கலந்து முகம், கழுத்துப் போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவ வேண்டும். இந் தஃபேஸ்பேக்கை பயன்படுத்த முகச்சுருக்கங்கள் குறையும். இப்படி எளிமையான முறையில் நம் அழகை பாதுகாக்கலாம்.
Average Rating