ராஜீவ்-லலித் சந்திப்பின் விளைவு!!( கட்டுரை)
ராஜீவ் காந்தி – லலித் அத்துலத்முதலி இடையேயான சந்திப்பு பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் குர்ஷித் ஆலம் கான், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், இந்திய – இலங்கை உறவு தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டனவெனவும் இலங்கை விரும்பும் பட்சத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும், ஆனால், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, இறுதியில் இலங்கை அரசாங்கமே காணவேண்டுமென்று இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ராஜீவ் காந்தி, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது பற்றி, பலமான முறையில் தனது கரிசனையை அத்துலத் முதலியிடம் குறிப்பிட்டதையும் குர்ஷித் ஆலம் கான், தன்னுடைய அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருந்தார். மறுபுறத்தில், இந்தப் பேச்சுவார்த்தையை லலித் அத்துலத்முதலி வெற்றியாகப் பார்த்தார். பேச்சுவார்த்தைகள், நட்புறவுடனும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக, ஜே.ஆரிடம் கருத்து வௌியிட்ட அத்துலத்முதலி, இந்திரா காந்தியைவிட, ராஜீவ் காந்தியின் அணுகுமுறை இலங்கைக்குச் சாதகமாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்தக் கொள்கை மாற்றத்தின் முதல் பலன், ராஜீவ் – அத்துலத்முதலி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதே இலங்கைக்குக் கிடைத்திருந்தது.
1985 ஜனவரி 10ஆம் திகதியன்று, ஜோர்தானிலிருந்து கொழும்புக்குப் பயணமாகிக்கொண்டிருந்த பொதி சுமக்கும் விமானமொன்று, அவசரமாகத் தரையிறங்க வேண்டிய நிலையொன்றின் காரணமாக, தென்னிந்தியாவின் திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. குறித்த விமானத்தில், ஜோர்தானிலிருந்து இலங்கைக்கு இரகசியமாக வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படைத்தளவாடங்கள் இருந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில் திலீப் பொப் குறிப்பிடுகிறார்.
ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக, எந்தத் தடையுமின்றி எரிபொருள் மீள்நிரப்பிய பின், குறித்த விமானம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடும் திலீப் பொப், அத்துலத்முதலியே இந்திரா காந்தியின் காலத்தில் இது சாத்தியமாகியிருக்காது என்று குறிப்பிட்டதாகவும் பதிவுசெய்கிறார். இலங்கை அரசாங்கத்தை அரவணைத்துப் போக, ராஜீவ் விரும்பியிருந்தார் என்பது இப்போது தௌிவாகியிருந்தது. ஆனால் அவர், ஜே.ஆரைச் சந்திப்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான அழைப்பையும், அவர் அத்துலத்முதலியூடாக அனுப்பி வைத்திருந்தார்.
ஜே.ஆரின் யுத்தப் பாதை
ராஜீவ் காந்தி, இலங்கை விவகாரத்தை நட்புறவுடன் அணுக விரும்பியதில் தவறில்லை. ஒப்பீட்டளவில் இளைஞரான அவர், புதியதோர் அரசியல் அணுகுமுறையை விரும்பியிருந்தார்.
ஆனால், அவருடைய அடிப்படை எண்ணம், பேச்சுவார்த்தை மூலம் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தான் இருந்தது. அதிலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை, அவர் கொண்டிருந்தார்.
மறுபுறத்தில், ஜே.ஆர்., இந்திரா காந்தியின் ஆதிக்கப் போக்கிலிருந்து மாறுபட்ட ராஜீவின் நட்புறவுப் போக்கை, தன்னுடைய அரசியலுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் இராஜதந்திர உபாயத்தையே கையாண்டார். இராணுவ ரீதியான வெற்றியே ஜே.ஆரின் இலக்காக இருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அவர் அதற்காகவே தயாராகியிருந்தார்.
ஜே.ஆரும், ஜே.ஆர். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், யுத்தம் மூலம் இனப்பிரச்சினையை வெற்றிகொள்வது பற்றி சூளுரைக்கத் தொடங்கியிருந்தனர். அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும், தன்னுடைய பேரினவாத அரசியலை சிறில் மத்யூ கைவிடவில்லை. தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டுமென, அவர் அனல் கக்கப் பேசிக்கொண்டிருந்தார். பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவும், இதற்கு விதிவிலக்கல்ல.
பிரிவினைவாதிகள் ஆபத்தானவர்கள், அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே, அவரது வீராவேசப் பேச்சாக இருந்தது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, யுத்த முழக்கம் செய்வது போல, நாடு தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறது, நாம் அவர்களைத் தோற்கடித்தே தீருவோம் என்று சூளுரைத்தார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1985 பெப்ரவரி இறுதியில், ஜே.ஆர். ஆற்றிய கொள்ளை விளக்க உரையொன்றில், நாடு இறுதி யுத்தத்துக்குத் தயாராகிவிட்டிருந்தது என்று முழங்கியிருந்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் யுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் முகமான பிரசாரங்கள், சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படத் தொடங்கின.
ராஜீவுக்கு, ஜே.ஆர் எழுதிய கடிதம்
இதேவேளை, இந்தியாவை இராஜதந்திர ரீதியில் சமாளித்துப் போகும் அவசியத்தையும் உணர்ந்த ஜே.ஆர்., 1985 மார்ச் 1ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். ஜே.ஆர் என்ற அரசியலில், பழுத்த “ஆசியாவின் நரியின்” இராஜதந்திர அறிவின் சாற்றை, அந்தக் கடிதத்தில் காணலாம்.
பொது நெறிமுறைகளையும் சம்பிரதாயங்களையும் கடந்து, தனிப்பட்ட உறவை உணர்த்தும் வகையில் “என் அன்புக்குரிய ராஜீவ்” என்று தனது கடிதத்தை ஆரம்பித்த ஜே.ஆர்., “நான் இந்தியாவினதும் அதன் மக்களதும் நண்பன், அதன் பாரம்பரியத்தை ரசிப்பவன், அம்மண் தந்த மிகச்சிறந்த புதல்வனின் வழியைப் பின்பற்றுபவன்” என்று குறிப்பிட்டதுடன் தொடர்ந்து ராஜீவின் பாட்டனாரும் இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கும் தனக்கும் இடையிலான நெருங்கிய உறவு பற்றிச் சிலாகித்து எழுதுகிறார்.
நேரு குடும்பத்தின் நண்பனாக தன்னை வர்ணித்த ஜே.ஆர்., இந்த நட்பு, ஜவஹர்லால் நேருவை 1939இல் அவருடைய இலங்கை விஜயத்தின் போது, தன்னுடைய வீட்டில் உபசரித்தது முதல் உருவானது என்றும் அது இப்போது, நேரு குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வரை தொடர்வதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
நேருவை தன்னுடைய நாயகர்களில் ஒருவராக வர்ணித்ததுடன், அவரும் இந்தியாவின் ஏனைய பல தலைவர்களும் விரும்பிய அஹிம்சை வழியையே தானும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய இந்திய விஜயத்தின் போது, நேருவின் அலஹாபாத் இல்லத்தில் தான் சில நாள்கள் விருந்தினராகத் தங்கியதைக் குறிப்பிட்ட ஜே.ஆர்., நேருவின் சிறைவாசத்தின் போது, தமக்கிடையே இருந்த கடிதத் தொடர்பையும் அந்தக் கடிதங்களின் நகல்களைத் தான் நேரு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தமையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
இந்த ஆலாபனைகளைத் தொடர்ந்து, அண்மைக்கால இலங்கை – இந்திய உறவின் நிலை பற்றிக் குறிப்பிட்ட ஜே.ஆர், துரதிர்ஷ்டவசமாக, நீங்களும் நானும் அறிந்த அண்மைக்காலப் பிரச்சினைகளால், எம் இரு நாடுகளிடையேயான உறவு பாதிப்படைந்துள்ளது என்று எழுதியதுடன், இந்த நிலையை மாற்றியமைக்கத் தான் விரும்புவதாகவும் இதுபற்றி தன்னுடைய அமைச்சரிடம் (அத்துலத் முதலியிடம்) சில நாள்கள் முன்னர் ராஜீவ் காந்தி குறிப்பிட்ட விடயங்கள் தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இதனால், ஏலவே எழுந்துள்ள முட்டுக்கட்டை நிலையை மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை எடுக்கும் ஊக்கம் பிறந்துள்ளதாகவும், அதற்காகத் தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்தச் சந்திப்புக்கு முன்பதாக, ராஜீவ் காந்தியின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, அவருடைய முக்கிய அதிகாரி ஒருவரை கலந்தாலோசனைக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட ஜே.ஆர், அதன் மூலமாக, ராஜீவின் மனநிலையைப் புரிந்துகொள்வதுடன், இருவரும் சந்திக்கும் போது, தற்போதுள்ள பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொது அணுகுமுறையொன்றைக் கையாள உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்தும், ராஜீவ் காந்தியின் அண்மையை பேச்சுகள் தொடர்பில் தன்னுடைய மகிழ்ச்சியைப் பதிவுசெய்த ஜே.ஆர்., அது, எதிர்கால உறவுகள் பற்றி தனக்குப் புதிய ஊக்கத்தைத் தந்திருப்பதாக எழுதியதுடன், தன்னுடைய அண்மைக்காலப் பேச்சுகளை, ஊடகங்கள் திரிபுபடுத்துவதாகக் கோடிட்டுக் காட்டியதுடன், அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய குழப்பங்களைக் களைவதற்காக, தான் அண்மையில் ஆற்றிய கொள்கைவிளக்க உரையின் மூலப் பிரதியை, குறித்த கடிதத்துடன் இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்ததாக, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய விடயத்தினுள் நுழைந்த ஜே.ஆர்., உலகின் பலபாகங்களிலும் பயங்கரவாதம் எனும் அசிங்கமான தலை உயர்வதாகத் தெரிவித்ததுடன், இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பஞ்சாப் ஆகிய பிராந்தியங்களில் எழுந்துள்ள பிரச்சினையுடன் ஒப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் பாரிய நிலப்பரப்பு அளவின் காரணமாக, ஒரு மூலையில் இடம்பெறும் பயங்கரவாதம், முழு நாட்டையும் பாதிப்பதில்லை என்பதை கோடிட்டுக் காட்டியவர், இலங்கை என்று சிறிய நிலப்பரப்பில் ஒரு இடத்தில் இடம்பெறும் பயங்கரவாதம், முழுநாட்டையும் ஆபத்தில் தள்ளுகிறது என்று குறிப்பிட்டார்.
அடுத்ததாக, சர்வகட்சி மாநாடு பற்றி எழுதிய ஜே.ஆர்., வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்த பிராந்திய சபை மற்றும் நாடாளுமன்றத்துக்கான இரண்டாவது அவை என்ற இரண்டே இரண்டு விடயங்கள் தொடர்பில் மட்டுமே, சர்வ கட்சி மாநாட்டில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் இணக்கம் காணப்பட முடியவில்லை என்று குறிப்பிட்டதுடன், அரசியல் தீர்வொன்றை எட்டும் வகையில், மாகாண சபைகளூடான அதிகாரப் பகிர்வு முறை பற்றி, தொடர்ந்தும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசத் தயாராக இருப்பதாக, தன்னுடைய கடிதத்தில் பதிவுசெய்தார்.
இறுதியாக, ஜே.ஆர் குறிப்பிட்ட விடயம் முக்கியமானது. நான் உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கையைத் தான் முன்வைக்கிறேன் என்று தொடங்கியவர், நாம் பயிற்சி முகாம்கள் பற்றிய பிரச்சினையை மறந்துவிடுவோம். தென்னிந்தியாவில், இலங்கைப் பயங்கரவாதிகளின் நடமாற்றம் பற்றி, அவர்களது திட்டமிடுதல்கள் பற்றி மறந்துவிடுவோம். நான் உங்களிடம் கேட்பதெல்லாம், அவர்கள் ஆயுதங்களுடன் இலங்கைக்கு வருவதைத் தடுக்குமாறு தான். அதேவேளை, இலங்கையர்கள் உங்கள் நாட்டில் தஞ்சம் பெறுவதைத் தடுக்கவும் முடியுமா என்று ஜே.ஆர் வினயமாக வேண்டினார். இதனை நாம் இணைந்துச் செய்வதற்கான பொதுத்திட்டமொன்றுக்கு இணங்க முடியுமானால், நான் யுத்தத்திலுள்ள இராணுவத்தை மீளப்பெற முடியும் என்பதோ, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை அதன் இயல்பு நிலைக்கு மீளக் கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்டார்.
உயிரையும் உடமைகளையும் பறிக்கும் இந்தப் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கையை, நீங்கள் நிச்சயம் செய்வீர்கள், அது உங்கள் அயலவனின் அமைதியாக வாழ்க்கை மீளத்திரும்ப உதவும் என்று எழுதிய ஜே.ஆர்., எல்லை கடந்த பயங்கரவாதம், இரண்டு நாட்டினதும் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு, இந்தப் பயங்கரவாதமே பிரதான முட்டுக்கட்டையாக இருப்பதாக, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் கருதுவதாகவும் பதிவுசெய்தார்.
இறுதியாக, எங்களுடைய பிரச்சினையைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இது தற்போது உங்களுடைய பிரச்சினையும் கூட. ஆகவே, உதவி செய்யுங்கள் என்று வினயமாக வேண்டி, தனது கடிதத்தை முடித்திருந்தார்.
பல விடயங்களைத் தொட்டுச் சென்றாலும், இந்தக் கடிதத்தில் மேவிநிற்கும் பொருள் ஒன்று தான். இன்று இலங்கையினதும் இந்தியாவினதும், உலகினதும் பெரும்பிரச்சினை பயங்கரவாதமாகும். அதனை இல்லாதொழிப்பதுதான், முதல் கடமை. அதையே இனப்பிரச்சினைத் தீர்வினதும் முதற்படியாக ஜே.ஆர். குறிப்பிட்டிருந்தார்.
இதில், ராஜீவ் காந்திக்கும் இணக்கம் இருப்பதாகவே தெரிந்தது. ஆனால், இருவரும் ஓர் இடத்தில் வேறுபட்டனர். ராஜீவ் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க விரும்பினார். ஜே.ஆரின் எண்ணம், யுத்த ரீதியான வெற்றியை நோக்கியே இருந்தது.
Average Rating