MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு?!!(மருத்துவம் )
மோனோசோடியம் க்ளுட்டமேட் தொடர்பான ஆய்வுகள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் மருத்துவ நிபுணர்கள் சொல்வதைப் பார்ப்போம்…
MSG-க்கு ஆதரவான தகவல்கள் எதுவுமில்லையா?
‘‘உணவில் புரதங்களின் பகுதியாகவும், நொதிகள் மூலமாக செரிக்கப்பட்ட உணவுப் பொருட்களிலிருந்து பிரிக்கப்பட்டும் குளுட்டமேட்டை நாம் அன்றாடம் உட்கொள்கிறோம். குளுட்டமேட் தக்காளி, பன்றி இறைச்சி மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றில் மிகுதியாக உள்ளது. வேதியியல் அடிப்படையில் ஒத்த, மோனோசோடியம் குளுட்டமைட், குளுட்டமிக், குளுட்டமேட் போன்ற அமிலங்கள் யாவும் உடற்செயலியலில் ஒரே விதமான வளர்சிதை மாற்றங்களில் பங்கேற்கிறது.
எனவே, MSG பாதகமான ஒன்றாக இருந்தால், குளுட்டமேட் செறிவுள்ள மேற்கண்ட உணவுகளை உண்ணும் போதும் அதே பாதகங்களை உண்டாக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை. உதாரணமாக, குளுட்டமேட் செறிந்த தக்காளி சாதமோ அல்லது கறியையோ உண்ட யாரும் சீன உணவக நோய் வந்ததாக புகார் அளிக்கவில்லை.
ஒரு சிலர் MSG சேர்க்கப்பட்ட உணவை உண்டபின் ஒவ்வாமை ஏற்படுவதாக கருதலாம். ஆனால், ஆய்வு முடிவுகள் அவற்றை ஆதரிக்கவில்லை. எனினும் வெகு சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதுவும் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக உட்கொள்ளும்
போதுதான் ஏற்படுகிறது.
எனவே, MSG-ஆல் ஏற்படும் பாதிப்புகள் உணவிலுள்ள பிற காரணிகளால் கூட ஏற்படலாம். இருந்தபோதும் தற்போது MSG-ஐ தடை செய்யுமாறு வற்புறுத்தல்கள் ஆங்காங்கே ஒலிக்கத்தான் செய்கிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (US Food and Drug Administration) இந்த ஆய்வுகளை மேற்பார்வை செய்து MSG-ஐ உணவுகளில் சேர்க்க ஒப்புதல் அளித்து நடைமுறையில் உள்ளது.
விற்பனை செய்யப்படும் பொருட்களின் பெட்டிகளில் MSG-யின் அளவு குறிப்பிடப்பட வேண்டும் என்ற விதிமுறையுடன் MSG க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் இந்த அளவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதும், அளவு குறிப்பிடப்படுகிறதா என்பதும் கேள்விக்குறிதான்.
சம காலத்தில் வெளியான Olney என்பவரது ஆய்வு முடிவுகளும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. அவரது ஆய்வில் MSG-யை எலி மாதிரிகளின் மூளையில் செலுத்தியபோது அவை மூளை பாதிப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது. இந்த ஆய்வில் கவனத்தில் கொள்ளப்படாத குறைபாடாக, அளவுக்கு அதிகமான உப்பை ஓல்னீ தன்னுடைய ஆய்வில் பன்படுத்தினார்.
அதாவது, ஒரு கிராம் உடல் எடைக்கு நான்கு கிராம் உப்பு என்றளவில் அவர் பயன்படுத்தியிருந்தார். இது சாதாரண உணவு முறையில் உட்கொள்ளப்படும் அளவைவிட பல மடங்கு கூடுதலானது.
பொதுவாக அதை யாரும் ஒரு கிராமிற்கும் கூடுதலாக உட்கொள்வதில்லை. இந்த ஆய்வோடு ஒப்பீடு செய்து பார்த்தால் ஒவ்வொருவரும் 300 கிராம் அளவிற்கு அதை உட்கொள்ள வேண்டும். மேலும் அவரது ஆய்வு முடிவுகள் மற்ற உயர் விலங்கின மாதிரிகளில் ஒரே மாதிரியான முடிவுகளைத் தரவில்லை.
1970-ல் வெளிவந்த மற்றொரு ஆய்வில், 11 எலி மாதிரிகளுக்கு 150 கிராம் வரை ஆறு வாரங்களுக்கு MSG-யை கொடுத்தபோதிலும் எந்தவொரு பாதிப்பும் உண்டாகவில்லை என கூறப்பட்டது. இதுபோன்ற எதிரெதிர் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் முடிந்தபாடில்லை.’’
MSG ஆல் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் என்ன?
‘‘MSG என்கிற இந்த வேதிப்பொருளில் 78% குளுட்டமிக் அமிலமும், 22% சோடியமும் உள்ளது. இந்த வேதிப்பொருள் திரும்பத் திரும்ப உண்ணத் தூண்டும் தன்மையுடையது. இது சுவையைக் கூட்டுவதோடு, உடலுக்கு வரும் நோய்களையும் அதிகரிக்கிறது. இந்த MSG மூளை நரம்புகளைத் தேவையின்றித் தூண்டக்கூடிய தன்மையுடையது.
இது நரம்பியல் சார்ந்த பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைய வாய்ப்புள்ளது. மது, புகையிலையைப் போல உணவு அடிமைத்தனத்துக்கு நம்மை ஆளாக்கவும் இது காரணமாக இருக்கிறது. MSG சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை தினமும் 3 கிராம் அளவுக்கு மேல் எடுத்துக்கொள்வதால் பெரியவர்களுக்கு கழுத்துப்பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
MSG கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறைவதோடு, உடல் வளர்ச்சி தடைபட்டு உயரம் குறைகிறது. மேலும் இவ்வேதிப்பொருள் மூளையில் Arcuate nucleus என்கிற பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது.
மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படலாம். ஒவ்வாமை உள்ள சிலருக்கு இவ்வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உடல் வியர்க்க ஆரம்பித்துவிடுவது போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.’’
இதற்குத் தீர்வு என்ன?!
‘‘இதுநாள் வரை பல்வேறு நச்சுத் தன்மைகளுக்கான அறிகுறிகள் MSG-யோடு தொடர்புபடுத்தப்பட்டு இருந்தாலும் அது நச்சுத் தன்மையானதுதான் அல்லது பாதுகாப்பானதுதான் என்பதற்கு உறுதியான எந்தவித அறிவியல் சான்றுகளும் இல்லை. மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் நிறைய குறைபாடுகளும், குழப்பங்களும் உள்ளன.
மோனோ சோடியம் க்ளுட்டமேட் என்பது மிகப்பெரிய வர்த்தகம் ஆகிவிட்டதால் இதுகுறித்த வெளிப்படையான ஆய்வினை அரசே முன்னெடுக்க வேண்டும். அதுவரை அந்த குழப்பத்துக்குள் நாம் சிக்கிக் கொள்ள வேண்டாம். நாம் இதில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.
உடலில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு முதல் காரணம் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவையே. இதுபோன்ற பிரச்னைகளை வராமல் தடுப்பதற்கு, ரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி, சரியான நேரத்துக்குச் சரியான உணவை சாப்பிடவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
காலம் தவறிய உணவுப் பழக்கம், நெறிமுறையற்ற உணவுமுறை, அயல் நாட்டு உணவு வகைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாதல் போன்றவற்றால் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு நாமே வழி அமைத்துக் கொள்கிறோம்.
நம்முடைய மரபு சார்ந்த உணவுமுறைக்கு மாறாக நவீன உணவுக் கலாச்சாரத்தை நாடிப்போனதுதான் நமது ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிறழ்வுக்கு அடிப்படைக் காரணம். ரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை இவ்வளவு காலம் அறியாமையால் உண்ணப் பழகிவிட்டோம்.
இனிமேலாவது அவற்றைத் தவிர்க்கவும் குறைத்துக் கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் கொடுப்பதைத் தவிர்த்துவிட்டு, சிறு வயதிலிருந்தே நம் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் விதையுள்ள பழங்களை கொடுத்து வர வேண்டும். இதன் மூலம் திடமான, நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்த இளைய சமுதாயத்தை உருவாக்க முடியும்.’’
Average Rating