இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கைதான் என்ன?(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 29 Second

வளர்ச்சி என்னும் கொள்கை திட்டங்களில் காணாமல் போகும் நீர் நிலைகளை காப்பது எப்படி? நீர் நிலைகள் மட்டுமல்ல, நிலம், வனம், கனிமவளம் போன்ற பிற இயற்கை வளங்களைக் காப்பது எப்படி? நீர்வளம் உள்ளிட்ட எல்லா இயற்கை வளங்களையும் தனி மனிதர்கள் காத்திட முடியாது. அரசு என்னும் வலுவான அமைப்பும் அதன் திட்டங்களும்தான் இயற்கை வளங்கள் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கின்றன. ஆக இயற்கை வளங்களை காக்கும் வல்லமை அரசிடமே உள்ளது.

அரசின் திட்டங்கள்தான் எவை? எதன் அடிப்படையில் அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன? இவை நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கேள்விகள். தற்போதைய நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை தானென்ன? இந்தியாவின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்புகள் எவை? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் கண்டறிந்தால் மட்டுமே நீர் வளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை காக்க முடியும்.

அரசமைப்புச் சட்ட வழிகாட்டு நெறிகள்

டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அரசமைப்பு சட்ட வரைவுக் குழு இந்திய அரசு சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகள் எத்தகைய வகையில் இருக்க வேண்டும் என்பதை நெறிப்படுத்தும் தனிப் பிரிவுகளை அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற செய்தது. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 48ஏ கூறுகிறது. இந்திய குடிமக்களின் வாழ்நிலையை உயர்த்துகின்ற வகையிலும், ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்கின்ற வகையிலும் அரசின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 47 கூறுகிறது.

பொது நலத்திற்கு ஏற்ற வகையில் இயற்கை வளங்கள் உள்ளிட்ட சமூக வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 39 கூறுகிறது. மேற்கூறிய வழி காட்டு நெறிகளின் அடிப்படையில்தான் தற்போதைய அரசு செயல்படுகின்றதா? சேலம்-சென்னை 8 வழிச் சாலைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மேற்கூறிய நெறிமுறைகளை பின்பற்றித்தான் கொண்டு வரப்படுகின்றனவா? நிச்சயமாகஇல்லை! உலகமய சந்தை பொருளாதாரக் கொள்கைகள் அடிப் படையிலேயே தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. உலகமய சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன? இந்தியாவில் உலகமய சந்தைப் பொருளாதாரம் எப்படி செயல்படுகின்றது?

சந்தைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி

இரண்டாம் உலக போரினால் நலிவுற்ற மேற்கத்திய நாடுகள் மீண்டும் எழுச்சி பெற 1944-ல் பிரட்டன்யூட்ஸ் என்னும் இடத்தில் மாநாடு ஒன்றைக் கூட்டினர். இந்த மாநாட்டில், நாடுகளுக்கு இடையிலான தடையற்ற சுதந்திர வர்த்தகத்தின் (Free Trade) மூலமே வளர்ச்சி பெற முடியும் என்றும், அத்தகைய தடையற்ற வர்த்தகம் நிலவ, தடைகளாக உள்ள சட்டங்கள், சுங்கவரி போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்து அதற்கு வசதியாக மூன்று அமைப்புகளை ஏற்படுத்தினர்.

அவை International Trade Organisation, International Reconstruction And Development Bank, (இதுவே உலக வங்கியாக உருமாறியது) மற்றும் International Monetary Fund.இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட கொள்கை களுக்கு உருவம் தர 1947-ல் காட் [General Agreement On Trade And Tariff (GATT)] என்னும் உடன்படிக்கை உருவானது. மேலும் தொழில்துறையில் அரசின் தலையீட்டை மறுக்கும் சுதந்திர வர்த்தகக் (Free Trade) கொள்கையை பின்பற்றவும் இந்த மாநாட்டில் முடிவானது.

இந்த மாநாட்டில் சுதந்திர இந்தியாவும் கலந்து கொண்டு உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக பல காட் மாநாட்டு பேச்சு வார்த்தைகள் உலக நாடுகளிடையே தொடர்ந்து நடந்து வந்தன. சோவியத் சிதைவு காலகட்டத்தில் உருகுவே நாட்டில் 1987-ல் துவங்கி 1994 வரை நடைபெற்ற 9-வது காட் சுற்று பேச்சு வார்த்தைதான் உலகமயமாக்கலின் துவக்கப்புள்ளி. இந்த பேச்சுவார்த்தையில்தான் உலக வர்த்தக நிறுவனத்தை (World Trade Organisation) ஏற்படுத்த முடிவானது.

இந்நிறுவனத்தின் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கைகள் என 90-களில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் இந்தியாவில் அறிமுகமாகின. சோவியத்தின் வீழ்ச்சி உலகில் ஒரே ‘வல்லரசாக’ அமெரிக்காவை மாற்றியது. இதன் காரணமாக சோஷலிச பொருளாதாரக் கொள்கைகள் பின் னுக்குத் தள்ளப்பட்டு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் (Market-Economy) கொள்கைகள் உலகெங்கும் பல நாடுகளில் பின் பற்றப்பட்டன.

இந்தியாவும் உலக வர்த்தக கழகமும்

1995 காட் சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா உறுப்பு நாடானது. இந்நிறுவனம் தன்னுடைய உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை/சீர்திருத்தங்களை பல ஒப்பந்தங்களாக வடிவமைத்தது. வேண்டிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு வேண்டாத ஒப்பந்தங்களை நிராகரிக்கும் உரிமை இந்த நிறுவனத்தின் உறுப்பு நாடுகளுக்கு இல்லை. உறுப்பு நாடாக வேண்டுமா? எல்லா ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்! இல்லையேல் வெளியேறு! – இதுதான் உலக வர்த்தக நிறுவனத்தின் தாரக மந்திரமாக இருந்தது.

பெருவாரியாக அமெரிக்கா வரைந்துள்ள இந்த ஒப்பந்தங்களில், உறுப்பினர்களாக உள்ள மூன்றாம் உலக நாடுகள் திருத்தங்களை மட்டுமே முன் வைக்கும் ஜனநாயக உரிமையை பெற்று இருந்தனர். இவ்வாறு 1995-ல் உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பு நாடான இந்தியா விவசாயம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இத்தகைய ஒப்பந்தங்களுக்கு இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகளில் கடும் எதிர்ப்பு இருந்ததால் இவற்றை பத்து ஆண்டுகளுக்குள் அதாவது, 2005-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றினால் போதும் என்று முடிவானது.

அதன் தொடர்ச்சியாக பல புதிய சட்டங்களும், கொள்கையும் இந்தியாவில் எவ்வித விவாதமும் இன்றி அறிமுகப்படுத்தப்பட்டன. உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை கோட்பாடுகள் உலக வர்த்தக நிறுவனத்தின் அடிப்படையான கோட்பாடுகள் என்று National Treatment மற்றும் Most Favoured Nation Treatment ஆகியவற்றை குறிப்பிடலாம். வர்த்தகத்தில் உறுப்பு நாடுகளை சரிசமமாக நடத்த வேண்டும் என்பதே National Treatment கோட்பாடு.

இதன்படி முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் போன்ற அமெரிக்க விவசாயியையும் நம்நாட்டில் கடன் தொல்லையில் சாகும் இந்திய விவசாயியையும் ஒன்றாகக் கருதவேண்டும், சலுகைகளும் சரிசமமாக இருக்க வேண்டும். உறுப்பு நாடுகளை சரிசமமாக நடத்த வேண்டும் என்று Most Favoured Nation Treatment கூறுகிறது. இதன்படி ஆப்பிரிக்க நாடுகளையும் அமெரிக்காவையும் வர்த்தக ஒப்பந்தத்தில் நாம் ஒன்றாக கருத வேண்டும். மேலும் அரசு மட்டுமே செயல்படுத்தும் துறை என்று இல்லாமல் தனியார் நிறுவனங்களும் எல்லா துறையிலும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதும் இந்த நிறுவனத்தின் முக்கிய கோட்பாடு.

இன்னும் பல கோட்பாடுகள் உள்ள பல அமைப்புகள் உள்ளன. உலகமய பொருளாதார கொள்கைகளை முழுவதுமாக இந்தியா ஏற்றுக் கொண்டு சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டன. உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் பல திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இதன் பாதிப்புகள் தானென்ன? முக்கியமாக இயற்கை வளங்கள் காக்கப்பட்டுள்ளனவா? மக்களுக்கானது என்கிற வகையில் வளங்கள்பயன்டுத்தப்பட்டுள்ளனவா? விவாதிப்போம்!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடமும் படமும்!!(கட்டுரை)
Next post உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்!!(அவ்வப்போது கிளாமர்)