எது நல்ல ஷாம்பூ?(மகளிர் பக்கம்)
முற்காலத்தில் தலைமுடியை அலச சீயக்காய், பூந்திக் கொட்டை, நெல்லிக்காய், செம்பருத்தி இலை போன்றவற்றைக் கொண்டு தூள்களை தயாரித்து பயன்படுத்தினார்கள். அவை தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்கினாலும் முடியை மிகவும் வறட்சியடைய வைத்தது. அதன் பின்னர் சோப்பைக் கொண்டு தலைமுடியை அலச ஆரம்பித்தார்கள். அதன் பிறகு ஷாம்பூ வந்தது. இந்த சோப் மற்றும் ஷாம்பூக்கு இடையில் முக்கியமான வித்தியாசம் ஒன்றும் உள்ளது.
ஷாம்பூவில் Sequestering agents என்ற ஒரு வேதிப்பொருள் இருக்கும். அது Soap scum உருவாவதைத் தடுக்கும். அதாவது தலைமுடியை அலச சோப்பை உபயோகித்தால் சோப்புத் துகள்கள் தலையில் சேர்கிறது. இதனால் தலைமுடி பளபளப்பில்லாமல் பொலிவிழந்து போவதோடு, பொடுகுத் தொல்லையையும் ஏற்படுத்தும். அதை தவிர்ப்பதற்காகத்தான் ஷாம்பூவை தயாரித்தார்கள். ஷாம்பூ கடினமான தண்ணீரில் கூட நுரை வரவழைத்தது மற்றும் தலையில் சோப்பு துகள்களால் பொடுகு ஏற்படாமல் செய்தது.
ஒரு நல்ல ஷாம்பூ எப்படி இருக்க வேண்டும்?
* நல்ல வாசனை உடையதாக இருக்க வேண்டும்.
* ஒவ்வொருவரின் முடிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
* நிலைத்தன்மை (Consistency) உடையதாக இருக்க வேண்டும்.
* நச்சற்றதாக இருக்க வேண்டும்.
* எரிச்சல் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும்.
* முடியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
* மிக கடினமான தண்ணீரில் கூட நன்கு நுரைக்க வேண்டும்.
* தலைமுடியின் பளபளப்பை அதிகப்படுத்தி அதை மென்மையாக மாற்ற வேண்டும்.
* தலைமுடியை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்து, முடி பரட்டையாவதை தடுக்க வேண்டும்.
* முடியில் சிக்கு விழாமல் இருக்கச் செய்ய வேண்டும்.
* கொஞ்சமாக இருக்கும் முடியை அதிக புஷ்டியுடன் காண்பிக்க வேண்டும்.
* முடியின் நிறத்தை காக்க வேண்டும்.இப்படி, தலைமுடியை சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு பொருளாக மட்டுமல்லாமல், ஒரு அழகுபடுத்தும் பொருளாகவும் ஷாம்பூ பார்க்கப்படுகிறது. ஒரு ஷாம்பூவில் கிட்டத்தட்ட 20-30 பொருட்கள் உள்ளன. மார்க்கெட்டில் வெளியிடுவதற்கு முன்பு, வருடக்கணக்கில் உருவாக்கம் செய்யப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் ஒரு ஷாம்பூவின் தலையாய வேலை முடியை சுத்தம் செய்வதுதான். அதற்கு மிக முக்கியமான பொருள் Surfactants. அது அழுக்கிற்கும் முடிக்கும் உண்டான பிணைப்பை நீக்கி தண்ணீரில் எளிதாக கழுவிச் செல்ல உதவி செய்கிறது. அப்படி அழுக்கை நீக்கும்போது முடியையும் வறண்டு போகச் செய்கிறது. அதை தவிர்ப்பதற்காக Co-surfactants சேர்க்கப்படுகிறது. அதன் பின்பு நுரை நீண்ட நேரம் இருப்பதற்காக Foam-stabilizers / Foam boosters சேர்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நுகர்வோரும் ஒரு திக்கான ஷாம்பூவைத்தான் நல்ல ஷாம்பூவாக கருதுகிறார்கள். அதற்கு Thickeners சேர்ப்பார்கள். ஷாம்பூவில் முத்து போன்ற பளபளப்பை உண்டாக்க Opacifiers சேர்ப்பார்கள். பொடுகைப் போக்கும் ஷாம்பூ என்றால் Zinc-pyrithione சேர்ப்பார்கள்.
ஷாம்பூவை உபயோகிக்கும்போது மண் போன்று படியாமல் இருக்க Sequestering agents என்ற வேதிப் பொருளை சேர்க்கிறார்கள். அதன் பின்பு அந்த ஷாம்பூ, மார்க்கெட்டில் உள்ள மற்ற ஷாம்பூவை விட வித்தியாசமானது என்று சொல்லிக் கொள்வதற்காக பாதாம், முட்டை, வைட்டமின், எலுமிச்சை போன்றவைகள் சேர்க்கப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்துவார்கள்.
ஷாம்பூ பாட்டிலை திறந்த பின் அதில் கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க, Formaldehyde கொஞ்சம் சேர்ப்பார்கள். அதன் பின் வாசனையூட்டிகள், நிறமூட்டிகள் இன்னும் பல சேர்க்கப்படும். அதேபோல் ஒவ்வொருவரின் கூந்தலுக்கென்று ஒரு பிரத்யேகத் தன்மை உண்டு. எனவே, அதற்கேற்றவாறே நாம் ஷாம்பூவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சாதாரண ஹேர் ஷாம்பூ
எந்தவித வேதியியல் மாற்றமும் செய்யப்படாத முடி மற்றும் மிதமான எண்ணெய் பசை உடைய உச்சந்தலைக்கு இந்த வகை ஷாம்பூ சரியானது. நன்றாக சுத்தப்படுத்தும், கொஞ்சமாக கண்டிஷனிங் தன்மை இருக்கும்.
வறண்ட முடிக்கான ஷாம்பூ
Dry hair shampoo வேதியியல் மாற்றம் செய்யப்பட்ட அல்லது கடுமையான சேதத்திற்கு உட்பட்ட முடிக்கு உகந்தது. மிதமாக சுத்தப்படுத்தும். நன்றாக
கண்டிஷனிங் செய்யும்.
எண்ணெய் பிசுக்கு அதிகமுள்ள முடிக்கான ஷாம்பூ
இந்த வகை ஷாம்பூ அதிக எண்ணெய் பிசுக்குள்ள முடிக்கு உபயோகப்படுத்த வேண்டும். நன்றாக சுத்தப்படுத்தும். ஆனால், கண்டிஷனிங் செய்யாது.
எவரிடே ஷாம்பூ
தினமும் உபயோகிக்கச் சிறந்தது. இதில் எந்த வகை கண்டிஷனரும் சேர்க்கப்பட்டிருக்காது. இதை தினமும் உபயோகித்தால், தனியாக கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும்.
டீப் க்ளென்ஸிங் ஷாம்பூ (Deep Cleansing Shampoo)
இது ஆழமாக சென்று சுத்தப்படுத்தும். தினமும் தலைக்கு ஸ்ப்ரே, ஜெல் போன்றவைகளை உபயோகிப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டும். ஜெல், ஸ்ப்ரே போன்றவைகளை தொடர்ந்து உபயோகிக்கும்போது தலைமுடியில் அவை படிந்து முடியை மிகவும் டல்லாக, வறண்டதாக மற்றும் கடினமானதாக மாற்றிவிடும். இந்த வகை முடிக்கான ஷாம்பூ கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும். இதை வாரம் ஒரு முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
பேபி ஷாம்பூ
இது மிகவும் மிதமான ஷாம்பூ. எண்ணெய் சுரப்பு அவ்வளவாக இல்லாததால் இதை குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தலாம். இவ்வகை ஷாம்பூ மிதமாக இருந்தாலும், குழந்தைகளின் கண்களின் பட்டால் எரிச்சல் வராமல் இருப்பதற்காக Betaine என்ற பொருள் சேர்க்கப்படும். இது குழந்தையின் கண்களை கொஞ்சம் மரத்துப் போக வைக்கும்.
அதனால் இந்த ஷாம்பூ கண்களில் அடிக்கடி பட்டால் கண்களை பாதிக்கலாம். இது ஒரு No tear ஷாம்பூ என்பதால், நம் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்று நினைக்கக் கூடாது. பெரியவர்கள் இதை உபயோகித்தால் எண்ணெய் பசை முற்றிலும் போகாது. அதனால் இது பெரியவர்களுக்கு உகந்தது அல்ல.
2 in 1 ஷாம்பூ
இதில் ஷாம்பூவோடு ஸிலிக்கோன்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதனால் ஷாம்பூவை கழுவும்போது சிலிக்கோன் (Silicone) பாலிமர்கள் முடியில் படிந்து முடியை பளபளப்பாக்கும். முடி வறண்டு Static electricity உருவாவதை தடுக்கும்.
Professional ஷாம்பூ
இது சாதாரண மனிதர்கள் தினமும் உபயோகிப்பதற்கு உகந்தது அல்ல. இது ஒரு Hair Stylist, முடியை வெட்டிய பின்பு அல்லது ஒரு Styling Procedure செய்த பின்பு அல்லது ஒரு வேதியியல் சிகிச்சை செய்த பின்பு அல்லது ஹேர் டை உபயோகித்தபின் உபயோகிக்க தகுந்தது. சுருக்கமாகச் சொன்னால் சாதாரண ஷாம்பூவை விட இவ்வகை ஷாம்பூகள் மிகவும் அதிக கான்சென்ட்ரேட் (Concentrated chemical) சேர்க்கப்பட்டதாக இருக்கும்.
ஏதாவது Chemical treatment செய்த பின்னர், அந்த வேதிப்பொருளை முழுவதுமாக நீக்குவதற்காக பார்லரில் இதை உபயோகிப்பார்கள். ஆகையால் நீங்கள் பார்லர் சென்ற பிறகு அவர்கள் உபயோகப்படுத்தும் ஷாம்பூவை உங்களை விலை கொடுத்து வாங்கச் சொன்னால் அதை வாங்காதீர்கள். அந்தளவிற்கு கான்சென்ட்ரேடட் செய்யப்பட்ட ஷாம்பூவை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது.
எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை ஷாம்பூ உபயோகிக்கலாம்?
ஒவ்வொருவருடைய முடியின் நீளம், அவர்களது பாரம்பரியம், ஆண்/பெண், செலவு செய்யும் தகுதியை பொறுத்து ஷாம்பூ உபயோகம் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். ஆனால், நல்ல ஷாம்பூவைக் கொண்டு தினமும் தலைமுடியை சுத்தப்படுத்தி, ஈர தலையோடு முடியைக் கட்டாமல் நன்கு ஃபேன் காற்றில் உலர விட்டு, ஒழுங்கான கண்டிஷனரோடு உபயோகப்படுத்தினால் முடி பாதிக்கப்படாது.
இந்த Surfactants-ல் முக்கியமானது Sulphates. அவை நன்றாக தலைமுடியை சுத்தம் செய்யும்போது, சிலருக்கு முடியை ரொம்பவும் பரட்டையாக மாற்றி விடும். அதனால் உங்கள் முடிக்கு ஏற்ற ஷாம்பூவை உபயோகித்தாலும் கூட உங்கள் முடி ரொம்பவும் பரட்டையாக இருந்தால் Sulphate free shampoo-வை
உபயோகிக்கவும்.
ஷாம்பூவின் உட்பொருளை பற்றி படிக்கும்போது நாம் ஏகப்பட்ட ரசாயனங்கள் இருந்ததை அறிந்தோம். அதனால் ஷாம்பூவை தினமும் உபயோகித்தால் கூட ஒரு நிமிடம் ஒன்றரை நிமிடத்திற்கு மேல் தலையில் வைத்திருக்காதீர்கள்.
Average Rating