வானவில் சந்தை(மகளிர் பக்கம்)
சென்ற வாரம் சிறிய கார்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் அவ்வகைமைக் கார்களுக்கு அடுத்தகட்ட நகர்வான செடான் (Sedan) வகைக் கார்களைப் பார்க்கலாம். செடான் வகைக் கார்கள், எஞ்சின் இருக்கும் முன்பகுதி (பானட்), பயணிகள் அமர்ந்து செல்லும் நடுப்பகுதி (கேபின்) மற்றும் பொருட்களை வைக்கும் பின்பகுதி (பூட்) ஆகியவற்றைக் கொண்டிருப்பவை. அதனாலேயே ஒரு முழுமையான தோற்றத்தைக் கொடுப்பவை. இவற்றோடு பார்க்கையில் ஒரு சிறிய கார், இன்னும் வளர வேண்டிய ஒரு சிறுவனைப் போலத் தோற்றமளிக்கிறது.
இந்திய நகரச் சூழலில், நான்கு மீட்டர் நீளத்திற்குள் இருப்பதாலேயே, நிறுத்துமிட வசதி கருதி பலரும் சிறிய கார்களை விரும்புகின்றனர். ஓரளவு நிறுத்துமிட வசதி இருப்பவர்கள் மட்டுமே செடான் வாங்க முடியும் என்ற நிலையே இருக்கிறது. இவர்களுக்காகவே அடக்கமான செடான் (Compact Sedan) வகைக் கார்கள் இருக்கின்றன. சற்றே பெரிய சிறிய கார்கள்! நிறுத்துமிடமும் அதிகம் தேவைப்படாது. அந்த வகை செடான்களை முதலில் பார்ப்போம்.
அடக்கமான செடான்களில், சிறிய கார்களிலிருந்தே ‘வளர்ந்தவற்றைப்’ பார்க்கலாம். அதாவது, ஏற்கனவே இருக்கும் சிறிய கார்களில் பூட் வசதியைக் கூடுதலாகக் கொண்டவை. இவை பெரும்பாலும் பார்ப்பதற்கு அந்தந்த சிறிய கார்களைப் போலத்தான் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, சென்ற இதழ் கட்டுரையில் ஹுண்டாயின் ஐ 10 கிராண்ட் (i10 Grand) சிறிய காரைப் பார்த்தோம். அதே காரில் பூட் வசதியைச் சேர்த்தால் எக்சென்ட் (Hyundai Xcent) என்ற செடானாகி விடுகிறது! ரூ. 5.6 லட்சத்திலிருந்து ரூ.8.6 லட்சம் வரை விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் கிடைக்கிறது.
அதேபோலவே மிகவும் பிரபலமான மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட், செடானாக மாற்றப்பட்டு ஸ்விஃப்ட் டிசையர் (Suzuki Swift Desire) என்று விற்கப்படுகிறது. ரூ. 5.5 லட்சத்திலிருந்து ரூ.9.4 லட்சம் வரையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் ஆட்டோமாடிக் கியர் வசதியுடனும் கிடைக்கிறது. ஃபோர்ட் ஃபிகோவின் செடான் வகை ஃபிகோ ஆஸ்பைர் ( Ford Figo Aspire) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் கிடைக்கும் இவை ரூ. 5.8 லட்சத்திலிருந்து ரூ.8.9 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன. புகழ்பெற்ற ஹோண்டாவின் சிறிய காரான ப்ரியோவின் செடான் ஹோண்டா அமேஸ் (Honda Amaze)என்று விற்கப்படுகிறது.
ரூ. 5.8 லட்சத்திலிருந்து ரூ.9.1 வரையிலான விலைகளில் விற்கப்படும் இவை பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கின்றன. டாடாவின் சிறிய காரான டியா கோவிலிருந்து உருவான செடான் டிகோர் (Tata Tigor). இதன் பெட்ரோல் மாடல் ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 6.6 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ. 5.8 லட்சத்திலிருந்து ரூ. 7.3 லட்சம் விலைகளிலும் விற்கப்படுகின்றது. பெட்ரோல் மாடலில் மட்டும் ஆட்டோமாடிக் கியர் வசதி கிடைக்கிறது. ஃபோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற போலோ சிறிய காரிலிருந்து உருவான செடான் மாடல் அமியோ (Volkswagen Ameo).
இவற்றில் பெட்ரோல் மாடல் ரூ. 5.7 லட்சத்திலிருந்து ரூ.7.6 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ. 6.7 லட்சத்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றது. டீசலில் மட்டுமே ஆட்டோமேடிக் கியர் வசதி கிடைக்கிறது. டொயோடாவின் சிறிய காரான ஈடியோஸ் லிவாவின் செடான் மாடல் பிளாட்டினம் ஈட்டியோஸ் (Toyota Platinum Etios) என்ற பெயரில் விற்கப்படுகின்றது. ஏழு லட்சம் ரூபாயிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை பெட்ரோல் மாடலும், எட்டு லட்ச ரூபாயிலிருந்து ஒன்பது லட்சரூபாய் வரை டீசல் மாடலும் விற்கப் படுகின்றன.
மேற்கண்ட அடக்கமான செடான்கள் அல்லாத முழுமையான செடான்களை பார்க்கலாம். அதில் ஆரம்ப நிலை செடான்களில் (சுமார் எட்டு லட்ச ரூபாயிலிருந்து பதினைந்து லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுபவை) ஹூண்டாயின் வெர்னா (Hyundai Verna), ஹோண்டாவின் சிட்டி (Honda City), மாருதி சுசுகியின் சியாஸ் (Maruti Suzuki Ciaz), டொயோடாவின் யாரிஸ் (Toyota Yaris), ஸ்கோடாவின் ராபிட் (Skoda Rapid), ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ (Volkswagen Vento) ஆகிய செடான்கள் குறிப்பிடத்தக்கவை.இவற்றில், ஹுண்டாய் வெர்னாவும் ஹோண்டா சிட்டியும் பல வருடங்களாக பல மாடல்களைக் கடந்து வந்திருக்கின்றன. மற்றவை ஒப்பீட்டளவில் சில வருடங்களாகத்தான் இந்தியச் சந்தையில் உள்ளன. அதிலும் டொயோட்டாவின் யாரிஸ் சந்தைக்குப் புதியது.
இந்த வகைமையில் மிகவும் பிரபலமான ஹோண்டா சிட்டி, பெட்ரோல் மாடலில் ஒன்பது லட்சத்திலிருந்து பதினாலு லட்சம் ரூபாய் வரையிலும், டீசல் மாடல் ரூ. 11.3 லட்சத்திலிருந்து ரூ. 14.1 லட்சம் வரையிலான விலையிலும் விற்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் கியர் வசதி கிடைக்கின்றது. ஹூண்டாயின் வெர்னா, ரூ. 7.8 லட்சத்திலிருந்து பதிமூன்று லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுகின்றது. பெட்ரோல், டீசல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் கியர் வசதி உண்டு. எட்டு லட்ச ரூபாயிலிருந்து பனிரெண்டு லட்ச ரூபாய் வரையில் விற்கப்படும் மாருதி சுசுகியின் சியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கின்றது.
பெட்ரோல் மாடலில் மட்டுமே ஆட்டோமாடிக் கியர் வசதி கிடைக்கும். டொயோடாவின் யாரிஸ், ரூ. 8.7 லட்சத்திலிருந்து ரூ. 14 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. ஆட்டோமேடிக் கியர் வசதியுண்டு. ஸ்கோடா ராபிட் ரூ. 8.5 லட்சத்திலிருந்து ரூ. 14 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் வசதியுடனும் கிடைக்கின்றது. ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ ரூ.8.4 லட்சத்திலிருந்து ரூ. 13.8 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் வசதியுண்டு.இவற்றைத் தாண்டி வேறு வகைமைக் கார்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
Average Rating