100 ஆண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ முடியும்!!( மருத்துவம்)

Read Time:9 Minute, 2 Second

நம்பிக்கை தரும் 103 வயது ஸ்ரீனிவாசன்

சமீபத்தில் செய்தித்தாளில் வெளிவந்த அந்த செய்தி நம்மை ஆச்சரியப்படுத்தியது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவர் ஒருவர், எலும்பு முறிவு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகியிருந்தது பற்றிய தகவல் அது.

நூறாண்டுகள் வாழ்வது எல்லாம் நம்முடைய ஆசையாகவும், வெற்று வாழ்த்தாகவோ மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது இன்றைய வாழ்விலும் சாத்தியம்தான் என்ற நம்பிக்கையை அளித்த செய்தியும் கூட. அடையாறில் உள்ள அவரது இல்லத்தின் முகவரியைத் தேடிப்பிடித்து சந்தித்தோம்…

இடுப்பு மூட்டு எலும்பு அறுவை சிகிச்சை செய்த பிறகும் எழுந்து உட்கார்கிறார், நடக்கிறார். கண்ணாடி அணியாமலேயே செய்தித்தாள் வாசிக்கிறார். நம்மைக் கண்டதும் அன்போடு வரவேற்று அவருடன் இருக்கும் செவிலியரையும், பிசியோதெரபிஸ்ட் மற்றும் அவரின் உறவினரை யும் அழைத்து நாற்காலி போடச் சொல்கிறார்.

கேட்கிற கேள்விகளுக்கு நிதானமாக பதில் தருகிறார். சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்பதையும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மொழி பெயர்ப்பு பணி செய்திருக்கிறார் என்பதையும் பெருமையுடன்குறிப்பிடுகிறார்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்….

‘‘என்னுடைய பிறந்த தேதி 14-12-1915. பிறந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். Intermediate electrical engineering படித்திருக்கிறேன். ஆங்கிலேய நிறுவனத்தில் ஆரம்ப கால பணி, இரண்டாம் உலகப்போரின்போது டிஃபன்ஸ் ஆபீசர் பணி, இறுதியில் இந்திய ரயில்வே பணி. மனைவி சரஸ்வதி அரசு பள்ளி ஆசிரியை. தன்னுடைய 80 வயதில் இறந்துவிட்டார். எனக்கு 4 மகன்கள். தங்களின் வேலை காரணமாக வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் இருக்கிறார்கள்.

என்னுடைய நல்ல பழக்கங்களை அவர்களையும் கடைபிடிக்க வைத்திருக்கிறேன். அவர்களும் ஆரோக்கியமாகவும், நல்ல தொழிலிலும் சிறப்பாக இருக்கிறார்கள். இவைகள்தான் என் உயிருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான காரணம். துணைக்கு செவிலியரும், பிசியோதெரபிஸ்ட்டும் இருக்கிறார்கள்.’’

உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் பற்றிச் சொல்லுங்கள்…

‘‘நான் ஆஞ்சநேயரின் தீவிர பக்தன். இன்று வரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு 2 மணி நேரம் மூச்சு பயிற்சி செய்வேன். பிறகுதான் மற்ற வேலைகளெல்லாம் தொடங்குவேன். அதை இன்று வரை தவறாமல் செய்து வருகிறேன். புகை, மது என எந்த தீய பழக்கமும் இல்லை. வெளியிடத்தில் உணவு சாப்பிடுவதில்லை. குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளாக ஹோட்டல் உணவை சாப்பிட்டதே இல்லை.

உணவு விஷயத்தில் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் இருப்பேன். வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் நானே சமைத்து சாப்பிடுவேன். முக்கியமாக எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் நானே சரி செய்து கொள்வேன்.

எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ள மாட்டேன். மருந்து, மாத்திரைகள் நான் சாப்பிட்டது கிடையாது. ஊசி போட்டுக் கொண்டதும் இல்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு முன்புவரை நானேதான் சமைத்து சாப்பிட்டேன். இன்னும் கொஞ்ச நாளில் எழுந்து நடக்க தொடங்கியவுடன் மீண்டும் நானே சமைத்து சாப்பிடுவேன்.

55 வயதுக்குப்பிறகு இரவு உணவை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இரவில் தூங்கச் செல்லும்போது உடலுக்கு உணவு தேவை இல்லை என்பது என்னுடைய கருத்து. அதனால், மாலை 6 மணிக்குள் பழம் மற்றும் பால் சாப்பிடுவேன். என்னுடைய 95 வயது வரையிலும்
இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவேன். இப்போது தூக்கம் குறைந்துவிட்டது. தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்கிறேன்.’’

மூச்சுப்பயிற்சியை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

‘‘நான் சிறுவனாக இருக்கும்போது இமயமலையிலிருந்து தமிழகத்திற்கு ஒரு ரிஷி வந்தார். அவர் இங்கு உள்ளவர்களுக்கு மூச்சுப்பயிற்சி தந்தார். நான் அவரிடம்தான் மூச்சுப்பயிற்சி கற்றுக் கொண்டேன்.

அன்று முதல் இன்று வரை இந்த பயிற்சியை விடாமல் செய்கிறேன். நான் பெற்ற பலனை எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே இலவசமாக பத்துக்கும் மேற்பட்டோருக்கு மூச்சுப்பயிற்சியை கற்றுத்தருகிறேன்.’’

இன்றைய இளைய சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டோம்…‘‘வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். தினமும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுபோல எல்லோரும் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட வேலையில் சின்சியராக இருக்க வேண்டும்.’’

ஸ்ரீனிவாசனுக்கு இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை அளித்த லட்சுமி நாதனிடம் பேசினோம்…

‘‘வயது முதிர்வு காரணமாக எலும்பு பலவீனமாக இருக்கும். ஸ்ரீனிவாசனுக்கும் அந்த பிரச்னைதான். அதனால் கீழே தவறி விழுந்தபோது இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. தற்போது அவருக்கு செயற்கை மூட்டு பொருத்தி இருக்கிறோம். அவர் இன்னும் கொஞ்ச நாளில் நடக்க தொடங்கிவிடுவார்.

இதில் நாங்கள் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம், அவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் என முதுமை காரணமாக ஏற்படும் எந்த நோயும் இல்லை. எலும்பு முறிவைத் தவிர மற்றபடி இன்றுவரை ஆரோக்கியமாக இருக்கிறார். இதற்கு அவருடைய உணவுப் பழக்க வழக்கமும் முறையான வாழ்க்கை முறையுமேகாரணம் என நம்புகிறேன்’’.

உடன் இருந்து பணிவிடை செய்யும் செவிலியர் சூர்யாவிடம் பேசினோம்…

‘‘இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவரை கவனித்துக் கொள்வதற்காக வந்திருக்கிறேன். ஒரு வயது முதிர்ந்தவர் போல மனத்தளர்ச்சியோ, உடல் தளர்ச்சியோ இல்லை. உற்சாகமாகவே இருக்கிறார்.

நம்பிக்கை நிறைந்த, ஆரோக்கியமான ஒரு முதியவருக்கு பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நடுத்தர வயதுடையவர் போல நடந்து கொள்கிறார். இந்த வயதிலும் அதிகாலையில் எழுந்துவிடுகிறார். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருக்கிறார். நிறைய வாழ்வியல்அனுபவங்களையும், அறிவுரைகளையும் கூறுகிறார்’’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்னீசியம் ஏன் முக்கியமானது?( மருத்துவம்)
Next post 75 ரயில் விபத்துகளில் 40 பேர் பலி !!(உலக செய்தி)