சிறப்பு தினங்கள்…!!(மருத்துவம்)
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் தொடங்கப்பட்ட ஓர் ஆண்டு நிகழ்வே தேசிய ஊட்டச்சத்து வாரம்(National Nutrition Week). இது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்தமாக தேசிய மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் ஆரோக்கியத்துக்கு, இன்றியமையாத ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதே ஊட்டச்சத்து வாரத்தைக் கொண்டாடுவதன் முதன்மையான நோக்கம்.
பிறந்த உடனும், இளம் பருவத்திலும் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்தை அளிப்பதனால் அவர்கள் வளர்ந்து, மேம்பட்டு, கற்று, விளையாடி பிற்காலத்தில் சமுதாய வளர்ச்சியில் பங்கேற்று நன்மை பயக்கின்றனர். ஆனால், ஊட்டச்சத்தின்மை அறிவுத் திறனையும், உடல் வளர்ச்சியையும், நோய்த்தடுப்பு ஆற்றலையும் பாதித்துப் பிற்கால வாழ்க்கையில் நோய் ஆபத்தைக் கூட்டுகிறது.
ஊட்டச்சத்தின்மை பல வகைகளில் காணப்படுகிறது. எந்த வகையான ஊட்டச்சத்துக் குறைபாடும் இல்லாமல் குழந்தைகள் திகழ்வதே இந்த ஊட்டச்சத்து வாரத்தை அனுசரிப்பதன் இறுதி நோக்கம். இருப்பினும் பல பிறந்த குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதில்லை என்பதே உண்மை நிலை. பிறந்த மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவூட்டல் பழக்கம் மூலமாக சரியான முறையில் குழந்தை நலம் பேணும் பின்வரும் வகைமுறைகளை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
* கர்ப்ப காலத்திற்கு முன்னும் பின்னும், பாலூட்டும்போதும் தாய்க்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கச் செய்ய வேண்டும்.
* பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டத் தொடங்குதல், ஆறு மாதத்துக்குத் தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், உடல்நலம் இல்லாத போதும் தாய்ப்பாலூட்டலைத் தொடர்தல் ஆகிய வழிகளில் தாய்ப்பாலூட்டுவதை உறுதிப்படுத்த தாயும் குடும்பமும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
* தாய்ப்பாலூட்டுவதை இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் தொடரும் வேளையில் ஆறு மாதத்துக்குப் பின் போதுமான அளவில் ஊட்டச்சத்து நிறைந்த பாதுகாப்பான கூடுதல் திட உணவை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கலாம்.
கூடுதல் உணவூட்டல்
6 மாதத்திற்குப் பின் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. கூடுதலாக வேறு உணவும் நீராகாரங்களும் தேவைப்படும். தாய்ப்பால் மட்டுமே பருகி வந்த குழந்தைக்குப் பிற உணவுப் பொருட்களையும் சேர்த்துக் கொடுப்பதையே கூடுதல் உணவூட்டல் என்று சொல்கிறோம். இது 6 மாதத்திலிருந்து 24 மாதங்கள் வரை தொடர்கிறது. தாய்ப்பாலை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்து கொடுக்கலாம். இதுவே குழந்தை வளர்ச்சியின் முக்கியமான காலகட்டம் என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
தண்டுவடக் காய தினம் : செப்டம்பர்-5
பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தோடு உலகத் தண்டுவடக் காய சங்கம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதியைத் தண்டுவடக் காய தினம்(Spinal Cord Injury Day) கடைபிடிக்கப்படுகிறது. காயம் பட்டவர்களுக்கு சமூகத்தோடு இணைந்த வாழ்வை அமைத்துக் கொடுப்பது, தண்டுவடக்காய தடுப்புத் திட்டங்களை ஊக்குவிப்பது போன்றவையே இந்த சிறப்பு தினத்தை அனுசரிப்பதன் நோக்கங்களாக இருக்கிறது.
காயம் அல்லது நோய் அல்லது சிதைவால் தண்டுவடத்துக்கு ஏற்படும் சேதத்தைத் தண்டுவடக் காயம் என்று சொல்கிறோம். தண்டுவடக் காயம் அடைந்தவர்கள் உடல், மன, சமூக, பாலுணர்வு மற்றும் பணிசார் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும் அது நோயாளிக்கும் அவருக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் பொருளாதாரப் பளுவை அதிகரிக்கிறது.
தண்டுவடக் காயத்தைப் பொறுத்த வரையில் நோய் வரும்முன் தடுப்பதே சரியான வழிமுறை. பெரும்பாலும் கவனக் குறைவு, பொறுப்பின்மை,
அலட்சியம் அல்லது மோசமான முடிவுகளே தண்டுவடக் காயத்துக்குக் காரணமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் பேர் வரை தண்டுவடக் காயத்தால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான தண்டுவடக் காயங்கள் சாலை விபத்து, விழுதல் அல்லது வன்முறை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. நாம் நினைத்தால் அதை தவிர்க்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
தண்டுவடக் காயத்தின் உடற்குறிகளும் அறிகுறிகளும்இயக்கம் மற்றும் உணர்விழப்பு, கடும் முதுகுவலி, கழுத்து அல்லது தலை வலி, சிறுநீர் அல்லது மலம் கழித்தலில் கட்டுப்பாடின்மை, நடக்கும்போது பிரச்னைகள் ஏற்படுவது, காயத்திற்குப் பின் சுவாசப் பிரச்னை, தசை அல்லது மூட்டு வலி ஏற்படுவது போன்ற இவை அனைத்தும் இதன் அறிகுறிகளாக இருக்கிறது. விழுதல், சாலை விபத்து, விளையாட்டில் காயம், தாக்குதல் மற்றும் வன்முறை, மூட்டழற்சி, எலும்புப்புரை, தொற்று (காசம்) போன்றவையே தண்டுவடக் காயம் ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்களாக இருக்கிறது.
வாகனம் ஓட்டும்போது அல்லது பயணம் செய்யும்போது சீட்பெல்ட்டை அணிவது, தண்ணீரில் குதிக்கும் முன் நீரின் ஆழத்தை உறுதிப்படுத்திக்கொள்வது, விளையாடும்போது பாதுகாப்பு சாதனங்களையும் சிறந்த காலணிகளையும் அணிவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, மது அருந்திக்கொண்டு இருப்பவர்களுடன் பயணம் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக தண்டுவடத்தில் ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கலாம்.
Average Rating