எந்த வலியையும் அலட்சியப்படுத்தாதீர்கள்!(மருத்துவம்)
‘வலி என்பது சாதாரண பிரச்னை அல்ல. உடலில் அல்லது உடல் உள்ளுறுப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் ஓர் அறிகுறிதான் வலி. மேலும் கவனம் தேவை என்பதையும் வலி உணர்த்துகிறது.
ஆனால், இந்த அடிப்படையை உணராமல் கடையில் விற்கப்படும் வலி நிவாரண மாத்திரையை/மருந்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்று விடுகிறோம். இது மிகவும் தவறு’’ என்கிறார் வலி மேலாண்மை மருத்துவரான விஜயராகவன்.வலியின் தன்மைகளையும், அதனை உடனடியாக கவனிக்க வேண்டிய அவசியம் பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.
‘‘தலைவலி, வயிற்றுவலி, தசைவலி, மூட்டு இணைப்புகளில் வலி மற்றும் உடல்வலி போன்றவை பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய வலிகள். இவற்றில், உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி, மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவலி, சைனஸ் தலைவலி மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படக்கூடியது என தலைவலிக்கு பல காரணங்கள் உண்டு.
இன்று இளைய தலைமுறையினரிடம் வயிற்றுவலி அதிகம் காணப்படுகிறது. சரியான நேரத்தில் சாப்பிடாததாலும், மோசமான உணவுப்பழக்கங்களாலும் வாயு உற்பத்தியாவதாலேயே வயிற்றுவலி உண்டாகி, அதுவே அல்சர் வரை கொண்டு சென்று விட்டுவிடுகிறது. இது வயதானவர்களுக்கு உறுப்பு பாதிப்புகளினால் வரக்கூடும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அடிவயிற்றுவலி, ஊட்டச்சத்து குறைபாட்டாலும் வயிற்றுவலி உண்டாகலாம். மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வயிற்றுவலிக்கு கருப்பை வலிக்கென்றே மாத்திரைகள் கொடுத்து குணமடையச் செய்ய வேண்டும்.
சிலருக்கு தசைவலி, தசைகூட்டுவலி போன்றவை தசைபிடிப்பு நோயினாலோ, தினசரி நடவடிக்கைகளால் கை, கால்களில் ஏற்படும் எலும்பு முறிவு, தசைப்பிறழ்வு, மூட்டுப்பிறழ்வு, மூட்டுகளில் ஏற்படும் விரிசல் போன்றவற்றாலோ ஏற்படுகிறது.
அசைவற்று ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்வது அல்லது தவறான நிலையில் உட்கார்வது, தவறான நிலையில் தூங்கும் முறை மற்றும் அதிகப்படியான இயக்கங்களால் கூட ஒருவருக்கு தசை கூட்டு வலி ஏற்படலாம். இதுபோன்ற வலியினை ஊட்டச்சத்து சப்ளிமென்ட் மாத்திரைகள் கொடுத்து நோயாளிகளுக்கு ஏற்படும் இந்த வலிகளைப் போக்கலாம்.
சில பெண்கள் அடிக்கடி உடல்வலி அல்லது உடல் அசதியாக இருப்பதாகச் சொல்வார்கள். இதை Fibromyalgia disorder என்று குறிப்பிடுவோம். உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மனத்தளர்ச்சியால் கூட உடல் வலி ஏற்படலாம். இவர்கள் உடல் வலிக்கென வலி மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். ஏசி அறைக்குள்ளேயே இருப்பதால் வெயில் உடலில் படாமல் வைட்டமின் ‘டி’
குறைபாட்டினாலும் உடல்வலி உண்டாகும்.
மேலும் நாள்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு கால் குடைச்சல், எரிச்சல், மரத்துப்போதல், கை, கால் வலி இருந்து கொண்டே இருக்கும். இதை டயாபட்டிக் நியூரோபதி என்று சொல்வோம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாததால் நரம்புகள் பலவீனமடைந்து, இந்த வலிகள் ஏற்படக்கூடும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய பிரத்யேகமான சத்து மாத்திரைகள் இருக்கிறது. அதை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையை சரி செய்து கொள்ளலாம்.
முழங்கால், தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டுவடங்களில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக ஊசிகள் மூலமாகவே சிகிச்சையளிக்கும் சிறப்பு வலி மேலாண்மை சிகிச்சைகள் இப்போது இருக்கின்றன.
Platelet Rich Plasma Therapy சிகிச்சை மூலம் பழைய நிலைக்கு அப்பகுதிகளில் திசுக்களை புதுப்பிக்கவும் முடியும். எல்லாவிதமான வலிகளுக்கும் மூல காரணம் கண்டுபிடித்து அதற்கான உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தும், சிகிச்சை முறைகள் செய்தும் வலிகளைக் குறைக்க முடியும்.
சில நாட்கள் மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, பின்னர் சிலவகைப் பயிற்சிகள் செய்வதன்மூலம் அறவே தவிர்க்கக்கூடிய சிகிச்சைகளும் வலி நிவாரண சிகிச்சையில் உண்டு. இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை கேள்விப்பட்டிருப்போம்.
இவர் முதலில் உடல்வலி காரணமாக சாதாரண மருத்துவ ஆலோசனைக்காகவே மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அதன்பிறகே, அந்த வலி புற்றுநோயின் அறிகுறி என்பது தெரிய வந்துள்ளது. எனவே, எந்த வலியாக இருப்பினும் அதனை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கான சமீபகால உதாரணம் இது. எனவே, மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்!’’
Average Rating